முன்னோக்கு

உலகளாவிய பெருந்தொற்றும் முதலாம் உலகப் போரும்: ஆளும் வர்க்கம் மரணத்தை தேர்ந்தெடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் அடிக்கடி உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றை முதலாம் உலகப் போருடன் ஒப்பிட்டு வருகிறது.

மே 2020 இல் WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் எழுதியவாறு, ஓர் உலகளாவிய பெரும்பிரளய வெடிப்பாக உச்சத்தை எட்டிய சம்பவங்களை சங்கிலித் தொடர் போல தொடங்கி வைத்த நிகழ்வான ஜூன் 28, 1914 இல் ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பெர்டினான்ட் (Franz Ferdinand) படுகொலை போலவே, இந்த பெருந்தொற்றும் ஒரு 'தூண்டுதல் நிகழ்வு' ஆகும். “அந்த படுகொலை வரலாற்று நிகழ்வுபோக்கை வேகப்படுத்தியது,” நோர்த் விவரித்தார், “என்றாலும், அதற்கு முன்னரே எளிதில் பற்றிக் கொள்ளக்கூடியதாக இருந்த சமூக பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மீது அது செயல்பட்டது. இதையே இந்த பெருந்தொற்றுக்கும் கூற முடியும்.”

ஜூலை 2020 இல் சோசலிச சமத்துவக் கட்சி நிறைவேற்றிய ஒரு தீர்மானம் பின்வருமாறு விளக்கியது, 'முதலாம் உலகப் போர் தொடங்கியபோது,” 'அது ஒப்பீட்டளவில் விரைவாக முடிந்துவிடும் என போர்வெறியர்கள் அனைவராலும் கருதப்பட்டது. ஆனால் அந்த மோதல் மேலும் மேலும், ஆண்டுக்கு ஆண்டு, நீண்டு சென்று கொண்டிருந்தது, ஏனென்றால் அரசுக் கொள்கையை ஆணையிட்ட முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள், அந்த மோதலில் அவர்களின் புவிசார் மூலோபாய நலன்களை அடைவதற்கு மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் உயிர்களைத் தியாகம் செய்வது ஏற்றுக் கொள்ளக்கூடிய விலையாக கருதினார்கள்.'

இந்த பெருந்தொற்றின் இரண்டாம் ஆண்டு நிறைவடைய இருக்கின்ற நிலையில், பாரிய மரணங்களோ கண்கூடாகவே முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கையில், முதலாம் உலகப் போருடனான இந்த ஒப்பீடு துயரகரமாகவும் கொடூரமாகவும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வருகிறது.

அக்டோபர் 29, 2021 வெள்ளிக்கிழமை அன்று உக்ரைனின் ககோவ்காவில் உள்ள மருத்துவமனையின் பிணவறையில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவரின் உடலை மருத்துவப் பணியாளர்கள் ஒழுங்கமைக்கின்றனர் (AP Photo/Evgeniy Maloletka)

ஏற்கனவே, இந்த பெருந்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை முதலாம் உலகப் போரின் இறப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது. அந்த போரின் நான்காண்டுகளில் மொத்தம் உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கை 9 மில்லியனுக்கும் 11 மில்லியனுக்கும் இடையே மதிப்பிடப்படுகிறது. அப்பாவி மக்களின் இறப்பு எண்ணிக்கை 6 மில்லியனுக்கும் 13 மில்லியனுக்கும் இடையே மதிப்பிடப்படுகிறது, இது மதிப்பிடப்படும் மொத்த இறப்பு எண்ணிக்கையை 15 மில்லியனுக்கும் 24 மில்லியனுக்கும் இடையே கொண்டு வருகிறது.

ஒப்பிட்டுப் பார்த்தால், உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை இப்போது உலகம் முழுவதும் 5.2 மில்லியனுக்கு நெருக்கத்தில் நிற்கிறது. ஆனால் இந்த புள்ளிவிபரம் யதார்த்தத்தைக் குறைத்துக் காட்டுகிறது என்பது நமக்குத் தெரியும். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீட்டுத் துறை, கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை (“அதிகப்படியான இறப்புகள்') 12.1 மில்லியனுக்கும் அதிகம் என்றும், ஏறக்குறைய அது 17.5 மில்லியனாக இருக்கலாம் என்றும் மதிப்பிடுகிறது.

பெருந்தொற்று அதன் மூன்றாம் ஆண்டை விரைவில் தொடங்க உள்ளது. முதலாம் உலகப் போரின் மூன்றாம் ஆண்டு 1916 கோடையில் தொடங்கியது. அந்த போரின் முதல் இரண்டாண்டுகளில், ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மன் படைகளின் நாசகரமான தாக்குதல்கள் மற்றும் பாரீஸின் புறநகர் பகுதிகளில் நடந்த முதல் மார்ன் போர் (First Battle of the Marne) உட்பட தொடர்ச்சியாக கொடூரமான பல இரத்தக்களரிகள் இருந்தன, அவற்றில் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஆனால் அந்த போர் மூன்றாம் ஆண்டில் நுழைந்தபோது, மரணங்களின் அளவு அதிகரித்தது. கிழக்கு முகப்பில், 1916 ஜூன் மற்றும் செப்டம்பருக்கு இடையில் ஒரு தரப்பில் ரஷ்ய ஆயுதப்படைகளும் மறுதரப்பில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரிய படைகளும் சம்பந்தப்பட்ட புரூஸிலோவ் தாக்குதலில் (Brusilov Offensive) 2.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். மேற்கு முகப்பில், ஜூலை 1 மற்றும் நவம்பர் 18, 1916 க்கு இடையே 140 நாட்கள், ஜேர்மனிக்கு எதிராக நடந்த பிரிட்டிஷ்-பிரெஞ்சு தாக்குதலான ஸொம் போரில் (Battle of Somme) பலியான 310,000 க்கும் அதிகமானவர்கள் உட்பட 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

பெப்ரவரி 1916 இல் பிரான்சுக்கு எதிராக தொடங்கப்பட்டு 302 நாட்கள் நடந்த ஒரு ஜேர்மன் தாக்குதலான வேர்டன் போர் (Battle of Verdun) தொடங்கி ஐந்து மாதங்களுக்குப் பின்னர் ஸொம் போர் தொடங்கப்பட்டது. அந்த இரத்தக்களரியான படுகொலையில் பலியான 300,000 க்கும் அதிகமானவர்கள் உட்பட ஒரு மில்லியன் பாதிக்கப்பட்டனர். “ஒரு சதுர யாருக்கு அதிகபட்ச உயிரிழப்புகளைக் கொண்ட போர்க்களமாக வேர்டன் போர் விரும்பத்தகாத மதிப்பைப் பெற்றது, அனேகமாக அந்த எண்ணிக்கை அதற்கு முன்னர் அறிந்திராத எண்ணிக்கையாக இருக்கலாம்,” என்று வரலாற்றாளர் Alistair Horne அவரின் மகிமையின் விலை: வேர்டன் 1916 நூலில் (The Price of Glory: Verdun 1916) குறிப்பிடுகிறார்.

சடலங்கள் மில்லியன் கணக்கில் குவிந்து கிடந்ததால், மனித உயிருக்கு சுத்தமாக மதிப்பில்லை என்று தோன்றியது. ஜேர்மன் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் Erich von Falkenhayn அவரின் டிசம்பர் 1915 “கிறிஸ்துமஸ் நினைவுக்குறிப்பில்' வேர்டனில் நடத்தப்பட்டதன் நோக்கத்தை, அதாவது 'பிரான்ஸை மரணத்திற்காக இரத்தம் சிந்தச் செய்யும்' நோக்கத்தை விவரித்தார். Falkenhayn இன் ஆபரேஷன் ஜட்ஜ்மென்ட் நடவடிக்கை (Unternehmen Gericht) பலவீனப்படுத்துவதற்கான போர் மூலோபாயத்தை (materialschlacht) நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இரண்டு தரப்பிலும் பாரியளவில் காயமடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது என்றாலும், எந்த தரப்பில் அதிகம் பேர் காயமடைந்தார்களோ அவர்களுடைய எதிர்தரப்பினர் அந்த போரை ஜெயித்து விட்டதாக கருதப்பட்டது.

மனித வாழ்க்கை மீதான அதே அலட்சியம் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் தரப்பிலும் வெளிப்படுத்தப்பட்டது. விச்சி பிரான்சின் தலைவராக பின்னர் ஆக இருந்த ஜெனரல் பிலிப் பெத்தானின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்ட ஒரு பிரெஞ்சு கர்னல், வேர்டனில் ஜேர்மன் பீரங்கிப்படையால் கொல்லப்படுவதற்குப் படைப்பிரிவுகளை அனுப்புவதற்காக எழுதிய குறிப்புகளை ஹார்ன் பின்வருமாறு நினைவுகூர்கிறார்: “உங்களுக்குத் தியாகம் செய்யும் பணி கொடுக்கப்பட்டுள்ளது; அவர்கள் தாக்க விரும்பும் மரியாதைக்குரிய பதவி இங்கே உள்ளது. ஒவ்வொரு நாளும் நீங்கள் காயமடையலாம். … அவர்கள் விரும்பும் நாளில், அவர்களின் கடைசி ஆளாக கூட நீங்கள் படுகொலை செய்யப்படலாம், சாக வேண்டியது உங்கள் கடமை.”

சர்வதேச தொழிலாள வர்க்கம் இன்று அதேபோன்றவொரு நிலைமையை எதிர்கொண்டுள்ளது. கடந்த பல மாதங்களாக ஆளும் வர்க்க கொள்கையில் ஒரு கொலைபாதக மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலுமான அரசாங்கங்கள் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பாசாங்குத்தனத்தைக் கூட கைவிட்டு வருகின்றன. இதற்கான சமிக்ஞையைப் பைடென் ஜூலையில் வழங்கினார், அப்போது அவர், அமெரிக்கா 'ஒரு கொடிய வைரஸிடம் இருந்து நம் விடுதலையை அறிவிக்கிறது… நாம் நம் வாழ்வை வாழலாம், நம் குழந்தைகள் பள்ளிக்குத் திரும்பலாம், நம் பொருளாதாரம் மீண்டும் சீறி எழுந்து வருகிறது,” என்று அறிவித்தார்.

வைரஸில் இருந்து 'விடுதலை' என்பது நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புக்கள் குறையும் என்பதை அர்த்தப்படுத்தவில்லை, மாறாக பாரியளவிலான மரணங்களைத் தடுக்க எந்த குறிப்பிடத்தக்க முயற்சியும் இருக்காது என்பதை அர்த்தப்படுத்தியது. இதே கொள்கை ஐரோப்பாவிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது, நியூசிலாந்து மற்றும் ஆசிய-பசிபிக்கின் பிற நாடுகள் உட்பட ஓர் அகற்றும் மூலோபாயத்தைப் (elimination strategy) பின்தொடர்ந்த நாடுகள் அவற்றின் போக்கை மாற்றிக் கொள்ள அந்நாடுகள் மீது பெரியளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் அகற்றுவதற்கும் அவசியமான அடைப்புகள், நோய்தொற்றின் தடமறிதல், பரிசோதனை மற்றும் பிற அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளும் படிப்படியாக கைவிடப்பட்டுள்ளன.

இதன் விளைவுகள் கணிக்கக்கூடியதாகவும் பேரழிவுகரமாகவும் இருந்தன. தடுப்பூசி மூலம் மட்டுமே வைரஸைத் தடுத்து விடலாம் என்ற கூற்று, உலகளவில் புதிய நோயாளிகளின் பாரிய அதிகரிப்பால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில், ஒவ்வொரு நாளும் 4,200 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். நிலைமை இன்னும் கடுமையாக மோசமடையக்கூடும் என்று எச்சரித்து செவ்வாய்கிழமை உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டது. ரஷ்யா உட்பட ஐரோப்பிய பிராந்தியத்தில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை இந்த வசந்த காலத்தில் 2.2 மில்லியனை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது — அதாவது, அடுத்த நான்கு மாதங்களில் ஐரோப்பாவில் மட்டும் மேலும் 700,000 உயிரிழப்புகளை உலக சுகாதார அமைப்பு அனுமானிக்கிறது.

மீண்டும்: இப்போதிருந்து வசந்த காலத்திற்குள், கோவிட்-19 ஆல் ஐரோப்பாவில் 700,000 பேர், அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக 5,000 க்கும் அதிகமானவர்கள் இறப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எதிர்நோக்குகிறது. அடுத்த நான்கு மாதங்களில் எதிர்பார்க்கப்படும் இறப்பு எண்ணிக்கை 10 மாத கால வேர்டன் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

ஜேர்மனியோ அல்லது ஐரோப்பிய அரசாங்கங்களில் எதுவொன்றுமோ இந்த பிரளயத்தைத் தடுக்க எதுவும் செய்யப் போவதில்லை. 'அடைப்புகள், அனைத்து பள்ளிகள் மற்றும் வணிகங்களின் மூடல்கள் அல்லது ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை நாங்கள் சட்டத்திலிருந்து நீக்கியுள்ளோம்,” என்று சுதந்திர ஜனநாயகக் கட்சி உறுப்பினர் மார்கோ புஸ்மான் அறிவித்தார், இவர் தான் சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) ஓலாஃப் ஷொல்ஸ் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் நீதித்துறை மந்திரியாக இருக்கப் போகிறார்.

அமெரிக்காவில், ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் அதிகமானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 90,000 ஆக உள்ளது, அதிகரித்தும் வருகிறது. இப்போது அமெரிக்காவில் இந்த பெருந்தொற்றின் மையமாக விளங்கும் மிச்சிகனில், கடந்த இரண்டு நாட்களில் 17,000 க்கும் அதிகமான புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர், 280 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இப்போது மிச்சிகனில் புதிய நோயாளிகள் எண்ணிக்கை மொத்த பெருந்தொற்று காலத்தின் எந்தவொரு தருணத்திலும் இருந்ததை விட அதிகமாக உள்ளது, அதுவும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் 'தடைமீறிய' நோய்தொற்றுக்கள் அதிக சதவீதத்தில் உள்ளன.

அமெரிக்காவில் தற்போது அண்மித்து 800,000 ஆக உள்ள கோவிட்-19 இன் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 2022 வசந்தகாலத்திற்குள் 1 மில்லியனைக் கடந்து விடக்கூடும். 2021 இல், இந்தாண்டு முடிய இன்னும் ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்கள் இருக்கும் போதே, ஏற்கனவே மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 2020 இன் இறப்பு எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

மிகவும் அச்சமூட்டும் வகையில், அமெரிக்க குழந்தைகள் நல ஆணையம் (American Academy of Pediatrics - AAP) குழந்தைகளிடையே நோய்தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருவதாக இந்த வாரம் அறிவித்தது. நவம்பர் 18 உடன் முடிவடைந்த வாரத்தில் அங்கே 141,905 புதிய கோவிட்-19 குழந்தை நோயாளிகள் இருந்தனர், இது முந்தைய வாரத்தின் 122,000 ஐ விட அதிகமாகும். 18 வயதிற்குட்பட்ட 150 க்கும் அதிகமான குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள், குழந்தைகளிடையே மொத்த இறப்பு எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் அரசியல் ஸ்தாபகமும் ஊடகமும் எதுவும் செய்ய முடியாது அல்லது செய்யவியலாது என்று அறிவித்துள்ளன. ஆளும் வர்க்கத்தின் இந்த மனிதப்படுகொலை, உண்மையில் குற்றகர கண்ணோட்டம், ஒபாமாவின் கீழ் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறைகான முன்னாள் உதவி செயலரும் ஹார்வர்ட் கென்னடி அரசுப் பள்ளியின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை திட்டத்தின் தலைமை ஆசிரியருமான ஜூலியட் கெய்ம் (Juliette Kayyem) எழுதி நேற்று அட்லாண்டிட் இதழில் வெளியான ஒரு கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டது.

'இந்த பெருந்தொற்று ஒரு சிணுங்கலுடன் முடிவடைகிறது' என்ற தலைப்பிலான அக்கட்டுரையில், ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கெய்ம் ஒப்புக் கொள்கிறார், ஆனால் இந்த போர் முடிந்து விட்டதாக அறிவித்து நகர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வலியுறுத்துகிறார்.

அப்பழுக்கற்ற தாராளவாத நற்சான்றுகளுடன் கெய்ம் பின்வருமாறு கூறுகிறார்: 'இந்த அச்சுறுத்தல் இன்னும் இருந்தாலும், நாடு மீட்புக் கட்டத்துக்குள் தள்ளப்பட வேண்டும் —தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களால் மட்டுமே அந்த அழுத்தத்தை வழங்க முடியும்.' 'ஒரு நெருக்கடி எப்போது முடிகிறது என்ற கேள்வி, அந்தோனி பௌஸியோ அல்லது வேறெந்த விஞ்ஞானத்துறை நிபுணரோ முடிவு செய்யக்கூடிய ஒரு புறநிலை விஷயம் அல்ல. நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற்கும் பெருந்தொற்றுக்கு முந்தைய நடைமுறைகளை மீண்டும் தொடங்குவதை ஊக்குவிப்பதற்கும் இடையே உள்ள ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரசம் என்ன? முதலாளிமார்களும் பள்ளிக் கல்வித்துறை மாவட்டங்களும் தங்கள் கொள்கைகளை மிகவும் ஆபத்தை-வெறுப்பவர்களது எதிர்ப்பார்ப்பின் மீதா அல்லது அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்களது எதிர்பார்ப்பின் மீதா யாரை அடிப்படையாக கொண்டு கொள்கைகளை அமைக்க வேண்டும்? என்பதையும் அப்பெண்மணி சேர்த்துக் கொண்டார்.

'நம் முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ளலாமா — நம்மை எதிர்கொண்டிருக்கும் அகநிலையான, அரசியல்ரீதியான, விஞ்ஞானப்பூர்வமற்ற மதிப்புகளின் நியாயமான இயல்பை ஏற்றுக் கொள்ளலாமா என்பதே' 'இப்போது அமெரிக்கா எதிர்கொண்டுள்ள விருப்பத்தெரிவாகும்,” என்று கெய்ம் அவர் கட்டுரையை நிறைவு செய்கிறார்.

இதன் அர்த்தம் என்ன? உண்மையில் சொல்லப் போனால், அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 1,000 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு 'புறநிலை விஷயம்' ஆகும். ஆனால் 'நெருக்கடி முடிந்துவிட்டது' என்று தீர்மானிப்பது, விஞ்ஞானத்தாலும் புறநிலை உண்மையாலும் தீர்மானிக்கப்படப் போவதில்லை, மாறாக முற்றிலும் அரசியல் அடிப்படையில் தீர்மானிக்கப்படப் போகிறது என்று கெய்ம் பிரகடனம் செய்கிறார். ஆனால் இந்த அரசியல் முடிவுகளை யார், யாருடைய நலன்களுக்காக எடுக்கிறார்கள்? விஞ்ஞானமும் புறநிலை யதார்த்தமும் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கக்கூடாது என்றால், வேறெது தீர்மானிக்கும் காரணிகளாக இருக்க வேண்டும்? இந்த முடிவு ஆளும் வர்க்கத்தாலும் அதன் அரசியல் அமைப்புக்களாலும், பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பரிசீலனைகளின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்பதே தவிர்க்க முடியாத முடிவாக வருகிறது.

'அதிக சகிப்புத்தன்மை' கொண்ட அவரும் மற்றவர்களும் துல்லியமாக எத்தனை மரணங்களை 'ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரசம்' ஆக கருதுகிறார்கள்? 10,000? 100,000? அவரின் 'அகநிலையான, அரசியல்ரீதியான, விஞ்ஞானபூர்வமற்ற … நியாயமான மதிப்புகளின் இறுதி கணக்கீடு என்ன? என்று ஒருவர் திருமதி. கெய்மைக் கேட்கலாம்.

இதுவொரு அரக்கத்தனமான கொள்கை, இதை செயல்படுத்துபவர்களும் மற்றும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் அரசியல்ரீதியான குற்றவாளிகள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. மாணவர்களைத் திரும்ப வகுப்பறைகளுக்கும் தொழிலாளர்களை மீண்டும் பாதுகாப்பற்ற வேலையிடங்களுக்கும் அனுப்புவது, முடிவின்றி பீரங்கி குண்டுகளும் எந்திரத் துப்பாக்கி குண்டுகளும் பாயும் அலைக்குள் சிப்பாய்களை அனுப்புவதில் இருந்து எவ்வாறு வேறுபட்டது? விளைவு ஒன்று தானே.

இந்த பெருந்தொற்று, ஒரு 'தூண்டுதல் நிகழ்வாக' இருந்து, உலக முதலாளித்துவ நெருக்கடியின் அடியிலுள்ள செயல்முறைகள் மற்றும் போக்குகளை துரிதப்படுத்துகிறது. பாசிச இயக்கங்கள் மேலுயர்வது, இந்த பெருந்தொற்று பரவுவதன் மீதிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான கோரிக்கையின் மிகவும் அச்சுறுத்தும் வெளிப்பாடாகும். எவ்வாறாயினும், கெய்மின் கட்டுரை எடுத்துக்காட்டுவதுபோல, முழு ஆளும் வர்க்கமும் இந்த அடிப்படை நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கிறது.

இந்த பெருந்தொற்றின் இரண்டாம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் கோவிட்-19 பெருந்தொற்று மீது உலகளாவிய தொழிலாளர் விசாரணையைத் தொடங்கி உள்ளன. கடந்த இரண்டாண்டுகளாக அரசாங்கங்களாலும் ஊடகங்களாலும் ஊக்குவிக்கப்பட்ட அனைத்து பொய்களையும் ஆராய்ந்து மறுத்தளிப்பதும், பாரியளவில் மரணத்தை உருவாக்கிய ஒரு கொள்கைக்கு பொறுப்பானவர்கள் மீது குற்றஞ்சாட்டி அம்பலப்படுத்துவதும், இந்த வைரஸை அகற்ற என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொழிலாளர்களுக்குக் கற்பிப்பதும், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் சமூக நனவை உயர்த்துவதும் இந்த விசாரணையின் பணியாக இருக்கும்.

முதலாம் உலகப் போருடன் ஓர் இறுதி ஒப்பீடு என்பது மிக முக்கியமானதாக இருக்கும். அந்தப் போர் இறுதியில் தொழிலாள வர்க்க தலையீட்டின் மூலம், 1917 ரஷ்ய புரட்சியில் உச்சத்தை எட்டி, ஐரோப்பா எங்கிலும் புரட்சிகர போராட்டங்களின் ஓர் அலை மூலமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதேபோல், இந்த பெருந்தொற்று கொள்கையில் மாற்றம் என்பது, உலகளவில் நோயை அகற்றுவதற்கான ஒரு மூலோபாயத்திற்கு அழைப்பு விடுக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய சமூக மற்றும் அரசியல் இயக்கத்தின் மூலம் மட்டுமே அடையப்படும்.

கடந்த இரண்டாண்டுகளின் அனுபவத்தில் வெளிப்பட்டவாறு, வர்க்க நலன்களின் தர்க்கம், அதுபோன்ற கோரிக்கைகள் ஆளும் உயரடுக்குகளுடனும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையுடனும் தொழிலாள வர்க்கத்தை ஒரு மோதலில் நிறுத்துகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.

Loading