மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வாரம் சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டதான “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையையும் மற்றும் பொருளாதார “திறப்பு” கொள்கைகளையும் சீனா பின்பற்றியிருக்குமானால், அங்கும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் “பேரழிவை” ஏற்படுத்தியிருக்கும்.
கணிதவியலாளர்கள் குழு தயாரித்த அறிக்கை இவ்வாறு முடிக்கிறது: “நோய்தொற்று பரவல் குறித்த மிகுந்த நம்பிக்கைக்குரிய அனுமானங்களின் கீழ், அதன் பரவல் விகிதம் பெரிதும் குறைத்து மதிப்பிடப்பட்ட சூழ்நிலையில் கூட, மேற்கத்திய நாடுகளின் சில பொதுவான கட்டுப்பாடு மற்றும் தடுப்பு உத்திகளை சீனா ஒரு நேரத்தில் ஏற்றிருந்தால், சீனாவில் நாளாந்த புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை நூறாயிரக்கணக்கில் உயரக்கூடும், மேலும் அவற்றில் 10,000 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் கடுமையான நோயறிகுறிகளை கொண்டிருக்கும்.”
இதற்கு நேர்மாறாக, நோய்தொற்றுக்கள் வெடித்துப் பரவும் தற்போதைய சூழ்நிலையில், சனிக்கிழமையன்று சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை வெறும் 23 ஆக இருந்தது, அதற்கு முன்னைய நாள் 25 இல் இருந்து குறைந்திருந்தது.
“2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஓரிரு நாட்களுக்குள் நாடு முழுவதுமாக நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை உச்சத்தை விஞ்சக்கூடும் என்றும், அது சீனாவின் மருத்துவ அமைப்பில் பேரழிவுகர தாக்கத்தை ஏற்படுத்தி, தேசத்திற்குள் பெரும் பேரழிவை ஏற்படுத்தும்” என்றும் அந்த அறிக்கை எச்சரித்திருந்தது.
சீனாவின் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்கள் 127,764 மற்றும் இறப்புக்கள் 5,697 இல் பெரும்பாலானவை, 2020 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் வூஹானில் வெடித்த அறியப்படாத கடுமையான சுவாச நோயுடன் அதிகாரிகள் போராடிக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தன, இவை பின்னர் வெற்றிகரமாக அடக்கப்பட்டது. அதன் பின்னர் சீனாவில் நிகழ்ந்த அடுத்தடுத்த நோய்தொற்று வெடிப்புக்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து பாதிக்கப்பட்ட நபர்கள் நாட்டிற்குள் நுழைந்ததன் விளைவாலேயே ஏற்பட்டன.
தங்கள் மாதிரியாக்கத்திற்காக, கணிதவியலாளர்கள் நன்கு அறியப்பட்ட தொற்றுநோயியல் மாதிரியைப் பயன்படுத்தி, சீனா குறிப்பிட்ட சில நாடுகளின் கொள்கையைப் பின்பற்றியிருந்தால், தொற்றுக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுகின்றனர். சீனாவில் மக்கள் தொகை அடர்த்தி, தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் தடுப்பூசி செயல்திறன் மற்ற நாடுகளில் உள்ளதைப் போலவே இருக்கும் என்ற பழமைவாத அனுமானத்தின் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.
இவ்வாறு கணக்கிடப்பட்ட புள்ளிவிபரங்கள் 'நம்பத்தகுந்த குறைந்த வரம்பு' ஆகும். சீனாவின் மிக அதிக மக்கள்தொகை அடர்த்தி, குறைந்த தடுப்பூசி விகிதம் மற்றும் குறைந்த செயல்திறன் கொண்ட தடுப்பூசிகள் ஆகியவற்றின் காரணமாக நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அங்கு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதே இதன் அர்த்தமாகும்.
முடிவுகள் திகைப்பூட்டுவதாக உள்ளன. அமெரிக்காவை ஒரு குறிப்பு நாடாக எடுத்துக் கொண்டால், சீனாவில் நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 637,000 ஐ தாண்டும் என அது எதிர்பார்க்கிறது. யாங்சூவில் சமீபத்திய கோவிட்-19 வெடிப்பின்போது தீவிர நோய்தொற்றுக்களின் விகிதத்தை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில், சீனா அமெரிக்கக் கொள்கைகளைப் பின்பற்றியிருந்தால், தினசரி தீவிர நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அங்கு 22,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை முடிவு செய்தது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இஸ்ரேல் போன்ற மற்ற குறிப்பு நாடுகளுக்கான முடிவுகளும், இதேபோன்ற உச்சபட்ச நாளாந்த நோய்தொற்றுக்களையும் மற்றும் தீவிர நோய்தொற்றுக்களையும் கொண்டிருந்தன. இங்கிலாந்துக்கான குறைந்த மதிப்பீட்டின் படி பார்த்தால் கூட, அங்கு நாளாந்தம் அண்ணளவாக 10,000 தீவிர நோய்தொற்றுக்கள் உருவாவது உட்பட, நாளாந்தம் புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கைகள் இன்னும் 275,000 என்றளவிற்கு நூறாயிரங்களில் பதிவாகின்றன.
பேரழிவுகரமான முடிவுகளுடன் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் அமுல்படுத்தப்பட்டுள்ள “வைரஸூடன் வாழும்” கொள்கையை சீனா ஏற்கக்கூடாது என்று கணிதவியலாளர்கள் முடித்தனர். இந்த புள்ளிவிபரங்கள் சீனா அதன் பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்தை கைவிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய எச்சரிக்கை மட்டுமல்ல, மாறாக பெரும்பாலும் அனைத்து அரசாங்கங்களாலும் பின்பற்றப்படும் கொலைகாரக் கொள்கைகள் மீதான குற்றச்சாட்டாகும்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வின் அடிப்படையில், மற்ற நாடுகளுக்கான நாளது தேதி வரையிலான புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை ஆய்வில் கருதப்பட்டவை பின்வருமாறு:
அமெரிக்காவில் 47,837,599 நோய்தொற்றுக்கள் மற்றும் 771,919 இறப்புக்கள்.
இங்கிலாந்தில் 10,146,919 நோய்தொற்றுக்கள் மற்றும் 144,775 இறப்புக்கள்.
பிரான்சில் 7,388,196 நோய்தொற்றுக்கள் மற்றும் 116,427 இறப்புக்கள்.
ஸ்பெயினில் 5,131,013 நோய்தொற்றுக்கள் மற்றும் 87,955 இறப்புக்கள்.
இஸ்ரேலில் 1,342,439 நோய்தொற்றுக்கள் மற்றும் 8,189 இறப்புக்கள்.
கணிதவியலாளர்கள் அவர்களது மதிப்பீடுகளை தலைகீழாகச் செய்திருந்தால், அதாவது அனைத்து குறிப்பு நாடுகளும் சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை ஏற்றிருந்தால், அந்நாடுகளின் நாளாந்த நோய்தொற்றுக்கள் மற்றும் மொத்த நோய்தொற்றுக்கள் மற்றும் மொத்த தீவிர நோய்தொற்றுக்கள் கணக்கிடப்பட்டிருந்தால், இந்த ஐந்து நாடுகளில் ஏற்பட்டுள்ள ஒரு மில்லியனுக்கு அதிகமான இறப்புக்களில் பெரும்பாலானவை நிகழ்ந்திருக்காது.
சீனாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவாக கூட்டு மக்கள்தொகை கொண்ட இந்த ஐந்து நாடுகளின் ஒட்டுமொத்த கூட்டு இறப்பு எண்ணிக்கை சீனாவின் தற்போதைய இறப்பு எண்ணிக்கை 5,697 ஐ விட குறைவாக இருந்திருக்கும் என எதிர்பார்ப்பது நிச்சயமாக நியாயமானதாக இருக்கும். அமெரிக்காவில் ஒவ்வொரு வாரமும் இந்த எண்ணிக்கை வரம்பு மீறுகிறது.
சந்தேகத்திற்கு இடமின்றி, குற்றவியல் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையின் விளைவுகள் வாஷிங்டன், இலண்டன், பாரிஸ், மாட்ரிட் மற்றும் டெல் அவிவ் ஆகிய தலைநகரங்களில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் கணக்கிடப்பட்டன, ஆனால் அவை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதில் சந்தேகமில்லை. அரசாங்கங்களின் முன்னுரிமை நிதிய மற்றும் பொருளாதார உயரடுக்கின் கோரிக்கைகளுக்கு ஏற்ப “திறப்பது”, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உழைக்கும் மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை விட இலாபத்தை முன்னிலைப்படுத்துவது.
டெல்டா மாறுபாட்டை விட அதிக தொற்றும் தன்மை கொண்டதாகவும், கொடியதாகவும் தோன்றும் புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டின் வெளிப்பாட்டினாலும் துல்லியமாக பயங்கரமான எண்ணிக்கைகளில் இறப்புக்கள் நிகழும் என்றாலும் தற்போது அதே அரசாங்கங்கள் அதே குற்றவியல் அலட்சியத்தைக் காட்டி பதிலிறுக்கின்றன.
கூடுதலாக, மேற்கத்திய ஊடகங்கள் சீனாவின் பூஜ்ஜிய கோவிட் மூலோபாயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அழுத்தம் கொடுக்கின்றன - முதலாவதாக, உலகப் பொருளாதாரம் சார்ந்திருக்கும் சீனாவின் மிகப்பெரிய உற்பத்தி ஏற்றுமதித் தொழில்களை சீர்குலைக்கும், இரண்டாவதாக அது 'வைரஸுடன் வாழ்வது' என்ற கொலைகாரக் கொள்கையை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது என்பதை மிக எளிதாக அடையாளம் காணக்கூடியது.
அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களில் அதிகரித்தளவில் வெளிவரும் கட்டுரைகளும் கருத்துக்களும், பாரிய பரிசோதனை மற்றும் தொடர்புத் தடமறிதல், பயண வரம்புகள் மற்றும் பொது சுகாதாரக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் ஏற்படும் அசௌகரியங்களை கவனத்தில் கொண்டு பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை இழிவுபடுத்த முயற்சிக்கின்றன. அரசாங்கத்தின் கொள்கைக்கு சீனாவிற்குள் பரந்த மக்கள் ஆதரவு இருப்பதை ஒப்புக் கொண்டாலும், கட்டுரைகள் பிரதானமாக உயர்-நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து வரும் மட்டுப்படுத்தப்பட்ட புகார்களையே மையப்படுத்துகின்றன. அதேநேரத்தில், மற்ற கட்டுரைகள் கட்டுப்பாடுகளின் பொருளாதார தாக்கத்தை தாக்குகின்றன.
சீனாவை மறைமுகமாக விமர்சித்த, அமெரிக்க வெளியுறவு செயலர் அன்டனி பிளிங்கன், கடந்த வார இறுதியில் தென்னாபிரிக்கா ஒமிக்ரோன் மாறுபாட்டை விரைவாக கண்டறிந்ததற்காகவும், மேலும் “உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் வகையில், இந்த தகவலை உலகிற்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதற்காகவும்” பாராட்டினார். வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கோவிட்-19 வெளிப்பட்டது என்ற பொய்யை இன்னும் மேம்படுத்தி, அமெரிக்கா சீனாவின் “வெளிப்படையற்ற தன்மையை” மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
உண்மையில், சீன விஞ்ஞானிகள் நோய்க்கு காரணமான வைரஸையும் அதன் முழு மரபணு வரிசையையும் மிக விரைவாக அடையாளம் கண்டுள்ளனர். சீன சுகாதார அதிகாரிகள் மற்ற நாடுகளை எச்சரிப்பதற்காக இந்த தகவலை உடனடியாக உலக சுகாதார அமைப்புக்கு (WHO) வழங்கினர். வைரஸின் மிகவும் பரவக்கூடிய மற்றும் கொடிய தன்மை பற்றியும், அதை அடக்குவதற்கு சீனாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் நன்கு அறிந்திருந்தன.
ட்ரம்ப் நிர்வாகம் வாரக்கணக்கில் இதன் ஆபத்துக்களை வேண்டுமென்றே புறக்கணித்ததுடன், குறைத்து மதிப்பிட்டது, அதன் விளைவாக அமெரிக்காவில் வைரஸ் தோன்றியவுடன் மிக விரைவாக பரவியது. பொது சுகாதாரத்தின் மீதான மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பெருவணிகத்தின் அழுத்தத்தின் கீழ் இந்த நடவடிக்கைகளை நீக்கியது -பைடென் அரசாங்கத்தால் தொடரப்பட்ட ஒரு கொள்கை- போர்க்காலத்தின் போது மட்டுமே தவிர்க்க முடியாததற்கு இணையாக, பயங்கரமான இறப்புக்களை விளைவித்துள்ளது.
ஒமிக்ரோன் மாறுபாடு விவகாரத்தில் தென்னாபிரிக்காவின் அதிவிரைவான பதிலையும் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மையையும் பிளிங்கன் புகழ்ந்தாலும், உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான அரசாங்கங்களுடன் சேர்ந்து பைடென் நிர்வாகமும், ஒமிக்ரோன் மாறுபாட்டின் சாத்தியமான விளைவுகளை மீண்டும் குறைத்து மதிப்பிடுகிறது. தென்னாபிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தவிர, தேவையான பொது சுகாதார நடவடிக்கைகள் எதுவும் செயல்படுத்தப்படாத முடிவானது, தற்போதைய நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் அலைகளை மட்டுமே துரிதப்படுத்தும்.