மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கோவிட்-19 இன் புதிய ஓமிக்ரோன் வகை ஐரோப்பிய ஒன்றியத்தில் வேகமாக மேலோங்குமென ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (ECDC) நேற்று எச்சரித்தது. இப்போது ஐரோப்பாவில் அதிக நோயாளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் டெல்டா வகையை விட கவலைப்படுத்தும் ஓமிக்ரோன் வகை அதிகமாக பரவும் என்று அது குறிப்பிட்டது.
“கவலைப்படுத்தும் டெல்டா வகையை விட இது கணிசமான அதிகரிப்பு அனுகூலத்தைக் கொண்டிருக்கலாம் என்று தென் ஆபிரிக்காவில் இருந்து வரும் ஆரம்ப புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. விஷயம் இவ்விதமாக இருந்தால், கவலைப்படுத்தும் ஓமிக்ரோன் வகை அடுத்த ஒரு சில மாதங்களிலேயே ஐரோப்பிய ஒன்றியம் / ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தில் மொத்த SARS-CoV-2 நோய்தொற்றுக்களில் பாதியை விட அதிகமாக உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது என்பதை கணித உத்தேச மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. கவலைப்படுத்தும் டெல்டா வகையை விட ஓமிக்ரோனின் அதிகரிப்பு அனுகூலம் அதிகம் என்பதாலும், ஐரோப்பிய ஒன்றியம்/ ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தில் அதன் பரவல் அதிகமாக இருக்கும் என்பதாலும், மொத்த SARS-CoV-2 நோய்தொற்று எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கவலைப்படுத்தும் ஓமிக்ரோன் வகை குறுகிய காலத்திலே ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது,” என்று ECDC குறிப்பிட்டது.
இந்த அறிவிப்பு பெரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது, ஏனென்றால் ஓமிக்ரோன் வகை தற்போதிருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகளையே கணிசமானளவுக்கு எதிர்க்கக்கூடும் என்பதை அதன் மரபணு ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. “கவலைப்படுத்தும் ஓமிக்ரோன் வகையின் தடித்த புரதத்தில் பல்வேறு உருமாற்றங்கள் இருப்பது, நோய்தொற்று அல்லது தடுப்பூசியால் ஏற்பட்ட எதிர்ப்புச் சக்தியின் சமப்படுத்தும் நடவடிக்கைகளைப் பெரிதும் குறைத்து விடலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது,” என்று ECDC அறிவித்தது.
மாடர்னா மருந்து நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஸ்டீபன் பன்செல் பைனான்சியல் டைம்ஸிடம் கூறிய இதேபோன்ற எச்சரிக்கைகளைத் தொடர்ந்து ECDC இன் இந்த அறிக்கை வந்துள்ளது. “[செயல்திறன்] ஒரே மாதிரியாக கொண்ட எந்த உலகமும் இல்லை என்று நினைக்கிறேன்… டெல்டா [வகையிலும்] இவ்வாறு தான் இருந்தது,” என்று கூறிய பன்செல், ஓமிக்ரோன் வகைக்கு எதிராக தடுப்பூசிகளின் வீரியம் குறித்து குறிப்பிடுகையில், “சடரீதியான குறைவு ஏற்படுமென நினைக்கிறேன்,” என்று கூறியதுடன், “நான் பேசிய விஞ்ஞானிகள் அனைவரும்… 'இது நல்ல விதத்தில் இருக்காது' என்றே கூறுகிறார்கள்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
ஆனால் ஐரோப்பா எங்கிலுமான அரசாங்கங்களோ, டெல்டா வைரஸ் அக்கண்டத்தையே சீரழித்துக் கொண்டிருக்கின்ற போதும் கூட, வைரஸ் பரவலைத் தடுக்க அவசியமான முக்கிய சமூக இடைவெளி நடவடிக்கைகளைக் கூட நிராகரித்து, கிட்டத்தட்ட முழுமையாக தடுப்பூசிகள் மீதே தங்கியுள்ளன. இது ஒரு பேரிடருக்கு வழி வகுக்கிறது, ஏனென்றால் ஐரோப்பாவில் நூறு மில்லியன் கணக்கானவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதோடு, இந்த வைரஸின் ஆரம்ப திரிபை விட டெல்டா வகை வைரஸ் தடுப்பூசிகளை அதிகமாக எதிர்த்து நிற்கிறது. ஏற்கனவே ஐரோப்பா அண்மித்து 3 மில்லியன் நோய்தொற்றுக்களையும், ஒவ்வொரு வாரமும் கோவிட்-19 இன் 30,000 மரணங்களையும் காண்கிறது.
ஜேர்மனியில் நேற்று 73,486, பிரிட்டனில் 53,945, பிரான்ஸ் 49,610, நெதர்லாந்து 23,043, செக்சியா 21,126 மற்றும் பெல்ஜியத்தில் 20,409 என நோய்தொற்றுக்கள் உச்சபட்ச எண்ணிக்கையிலோ அல்லது அதற்கருகிலோ உள்ளன. அனைத்திற்கும் மேலாக, இந்த இலையுதிர் காலத்தில் குறைந்த நோய்தொற்று விகிதங்களைக் கண்டிருந்த தெற்கு ஐரோப்பாவின் பகுதிகளில் நோய்தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன, இத்தாலி 16,806 நோயாளிகளையும் மற்றும் ஸ்பெயின் 14,500 நோயாளிகளையும் அறிவித்துள்ளன. இறப்பு எண்ணிக்கை ரஷ்யாவில் கிட்டத்தட்ட அதிகபட்ச மட்டங்களில் உள்ளது, ஜேர்மனி இந்த வாரம் பல நாட்களாக 400 க்கும் அதிகமான நாளாந்த இறப்புக்களைக் கண்டது.
எவ்வாறிருப்பினும் இந்த பெருந்தொற்றின் இன்னும் அதிக கடுமையான தீவிரப்பாட்டை அச்சுறுத்தும் விதத்தில், ஏற்கனவே மேற்கு ஐரோப்பா எங்கிலும் டஜன் கணக்கான ஓமிக்ரோன் வகை நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். நெதர்லாந்தில் குறைந்தபட்சம் 16 உறுதி செய்யப்பட்ட நோயாளிகளும், பிரிட்டனில் 9, பிரான்சில் 8, டென்மார்க் மற்றும் ஜேர்மனியில் 4, ஸ்பெயினில் 2, ஸ்வீடன், நோர்வே, செக்சியா, ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் இத்தாலி ஒவ்வொன்றிலும் ஒரு நோயாளிகள் உள்ளனர்.
டேனிஷ் நகரமான அல்போர்கில், 1,600 பேர் கலந்து கொண்ட மூடிய அரங்கில் நடந்த மார்ட்டீன் ஜென்செனின் இசை நிகழ்ச்சியில் இருந்த ஒருவருக்கு ஓமிக்ரோன் வகை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதால், இது பெரும்பரவல் நிகழ்வாக ஆகியிருக்குமோ என்ற பயத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு டேனிஷ் அதிகாரிகள் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அந்த இசை நிகழ்ச்சி நடந்த அல்போர்க் சபை மற்றும் கலாச்சார மையத்தின் இயக்குனர் நிக் ஹோல்ம் கூறுகையில், அவரின் பணியாளர்கள் கடுமையாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியதாக தெரிவித்தார். “நாங்கள் எங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறோம். இந்த விஷயத்தில், ஒரு செல்லுபடியாகும் கொரோனா நுழைவனுமதி சீட்டு இல்லாமல் யாரும் வரவில்லை,” என்றார். இது, ஓமிக்ரோன் வகை இப்போதிருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகளில் இருந்தே நழுவிவிடக்கூடும் என்பதை மீண்டும் அடிக்கோடிடுகிறது.
ஓமிக்ரோன் வகை உருவெடுப்பதற்கு முன்பே கூட, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையில் மார்ச் மாத வாக்கில் ஐரோப்பாவில் கோவிட்-19 ஆல் 700,000 பேர் உயிரிழக்கலாம் என்று எச்சரித்தது. இந்த புதிய வகை வைரஸுடன் சேர்ந்து, ஐரோப்பாவில் இந்த குளிர்காலத்தில் கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கை மில்லியன்களை எட்டக்கூடும்.
ஆனால் இந்த கடுமையான சூழ்நிலைகள் இருந்தாலும், ஐரோப்பா எங்கிலுமான அரசாங்கங்கள் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க மறுக்கின்றன. அதற்கு நேரெதிராக, அவை இக்கண்டத்தில் ஏற்கனவே 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இறப்பதற்கு இட்டுச் சென்றுள்ள 'உயிர்களை விட இலாபங்களே' கொள்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
'ஓமிக்ரோன் வகை இருந்தாலும், எங்கள் தற்போதைய மூலோபாயத்தில் எந்த மாற்றமும் இல்லை,' என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் செவ்வாயன்று Sud Ouest பத்திரிகைக்குத் தெரிவித்தார். இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளான பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுதல் போன்ற பொது அடைப்பு நடவடிக்கைகளை அவர் நிராகரித்தார். 'முதல்நிலை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல்' ஆகியவை தான் அவசியம் என்றவர் தெரிவித்தார்.
முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசிகளைத் தவிர வேறெந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று வலியுறுத்தி, ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சி (PSOE)—பொடெமோஸ் அரசாங்கம் ஸ்பெயின் மக்களுக்கு ஒரு 'சமாதானச் செய்தியை' வெளியிட்டுள்ளது. 'தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான நமது பொறுப்பு மற்றும் ஒற்றுமையுணர்வு, முகக்கவசங்களைப் பயன்படுத்துவது மற்றும் அவ்விதத்தில் நம் ஆரோக்கியத்தையும் நம் சக மனிதர்களின் ஆரோக்கியத்தையும் காப்பாற்றுவது என இந்த பெருந்தொற்று முழுவதும் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதையே நாம் செய்ய வேண்டும்,” என்றது அறிவித்தது.
வங்கிகளுக்குப் பெருநிறுவன இலாபங்கள் பாய்வதை மெதுவாக்குவதும், இந்த வைரஸ் பரவலைத் தடுக்க சர்வதேச அளவில் மக்களின் எந்தவொரு பரந்த ஒருங்கிணைந்த சமூக அணிதிரள்வையும் தவிர்ப்பதுமே இந்த சமூகப் படுகொலைக் கொள்கையின் நோக்கமாகும்.
ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் எதிர்வினையும் குற்றத்தன்மையில் குறைந்ததில்லை. ஜேர்மனியில் நேற்று 73,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு, அண்மித்து 400 பேர் இறந்த போதும் கூட, பல பிராந்தியங்களின் மருத்துவமனைகள் அதிக சுமையில் உள்ள நிலையில், ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்தில் இருந்து நோயாளிகளை மற்ற ஐரோப்பிய நாடுகளின் தீவிர கண்காணிப்புப் பிரிவுக்கு மாற்ற வேண்டியிருந்த போதும் கூட, அங்கே எந்த ஆழமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நேற்று ஜேர்மன் மாநில முதலமைச்சர்களின் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் முற்றிலும் போதுமானதாக இல்லை. அக்கூட்டத்தில், தற்காலிக சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (CDU), அவரை அடுத்து அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒலாஃப் ஷொல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி) மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் தடுப்பூசி போடப்படாதவர்கள் தொடர்பில் வருவதற்கான சில கூடுதல் கட்டுப்பாடுகளுக்கும், சில்லறை விற்பனையில் 2ஜி விதியை (தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அல்லது நோயிலிருந்து மீண்டவர்கள்) அறிமுகப்படுத்துவதற்கும் மற்றும் பள்ளிகளில் கட்டாய முகக்கவசம் அணிவதை மீண்டும் கொண்டு வருவதற்கும் மட்டுமே உடன்பட்டனர். புத்தாண்டு நிகழ்வுகளில் தனிப்பட்டரீதியில் பட்டாசுகள் வெடிப்பதற்குத் தடை விதித்துள்ளனர்.
மறுபுறம் கால்பந்தாட்ட போட்டிகள் அல்லது இசை நிகழ்ச்சிகள் போன்ற மிகப்பெரிய நிகழ்ச்சிகள் நடத்த இன்னமும் அனுமதிக்கப்படும். அவற்றில் அதிகபட்சம் 5,000 (!) பேர் அரங்கத்திற்குள்ளும், திறந்தவெளியாக இருந்தால் 15,000 (!) பேர் என்ற வரம்பு மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
அதிவலது கட்சியான AfD இல் இருந்து இடது கட்சி வரையில் ஜேர்மன் நாடாளுமன்ற கீழ் அவையில் உள்ள அனைத்து கட்சிகளும் பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை மூடுவதை விடாப்பிடியாக நிராகரிக்கின்றன. விரைவில் ஆட்சியில் அமர உள்ள “போக்குவரத்து விளக்கு' கூட்டணி கட்சிகள் (சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி) “தேசியளவிலான தொற்றுநோய் நிலைமையை' முடிவுக்குக் கொண்டு வந்தன, அவ்விதத்தில் அவை நாடெங்கிலுமான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சட்டரீதியான அடித்தளத்தைத் தகர்த்துள்ளன.
இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே பள்ளிகள் மற்றும் வணிகங்களைத் திறந்து வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ள மற்றும் பொது முடக்கத்தை எதிர்க்கும் தொழிற்சங்கங்களால் அக்கட்சிகள் ஆதரிக்கப்படுகின்றன. “பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்போது வெகுஜன நிகழ்வுகள் நடைபெறுவது சரியல்ல. கல்வி நிறுவனங்கள் திறந்திருப்பதை உறுதி செய்ய அனைத்தும் செய்யப்பட வேண்டும்,” என்று கல்வித்துறை மற்றும் விஞ்ஞானத்துறையின் தொழிற்சங்கம் (GEW) செவ்வாய்கிழமை ட்வீட்டரில் எழுதியது.
தொழிற்சங்கங்கள் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கங்களின் அனைத்து போலி-இடது கட்சிகளிடம் இருந்து தொழிலாளர்களைப் பிரிக்கும் ஆழ்ந்த வர்க்கப் பிளவை இந்த பெருந்தொற்று எடுத்துக்காட்டுகிறது. முதலில் கூறப்பட்டவை நிதி மூலதனத்தின் நலன்களுக்கான கொள்கைகளைத் திறந்து விட அழுத்தமளிக்கின்ற அதேவேளையில், பரந்த பெரும்பான்மை மக்களோ கடுமையான பொது முடக்க நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். செவ்வாய்கிழமை RTL தொலைக்காட்சியின் “Trendbarometer” நிகழ்ச்சியிலும் மற்றும் ntv இலும் வெளியிடப்பட்ட விபரங்களின்படி, ஜேர்மன் மக்களில் 65 சதவீதத்தினர் —குறிப்பிடத்தக்க அளவுக்கு முந்தைய வார 61 சதவீதத்தை விட அதிகமானவர்கள்— ஒரு பொது 'முடக்கத்திற்கு' ஆதரவாக உள்ளனர். அனைத்திற்கும் மேலாக இந்த புள்ளிவிபரம் ஓமிக்ரோன் வகை பரவலாக அறியப்படுவதற்கு முன்பு சேகரிக்கப்பட்டதாகும்.
அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமலாக்கி உயிர்களைக் காப்பாற்ற, இந்த சூழ்நிலையைத் தொழிலாள வர்க்கம் அதன் சொந்த கரங்களில் எடுத்து, ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையீடு செய்ய வேண்டும். இதைச் செய்ய, அது அனைத்து பள்ளிகள் மற்றும் வேலையிடங்களிலும் சாமானிய பாதுகாப்புக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும், அவை விஞ்ஞானப்பூர்வமாக அவசியமான அவசர நடவடிக்கைகளைத் தொடங்கி இந்த வைரஸ் பரவலை அகற்றும் ஓர் உலகளாவிய மூலோபாயத்தின் அடிப்படையில் இந்த பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும்.
மேலும் படிக்க
- கோவிட்-19 கொள்கைகள் காரணமாக டெட்ராய்ட் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேறினர்
- வாஷிங்டன் போஸ்ட் கோவிட்-19 மூடிமறைப்புக்கு அழைப்பு விடுக்கிறது
- ஜேர்மனியின் கொரோனா வைரஸ் நெருக்கடி தீர்வுக் குழுவுக்கு இராணுவ ஜெனரல் தலைமை தாங்குகிறார்
- பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முடிவுக்கு கொண்டுவருவது “மிகப்பெரிய பேரழிவாக” இருக்கும் என சீன ஆய்வு எச்சரிக்கிறது