பேர்லினில் அங்கேலா மேர்க்கெலின் 16 ஆண்டுகால ஆட்சியின் ஒரு இருப்புநிலை மதிப்பீடு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

8ம் தேதி புதன் அன்று, அங்கேலா மேர்க்கெலின் சான்சிலர் பதவி 16 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. 5,860 நாட்கள் பதவியில் இருந்த பின்னர், அவர் தனது சக கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய (CDU) அதிபர் ஹெல்முட் கோலின் சாதனையை 10 நாட்களில் தவறவிட்டார். 1949 முதல் மற்ற ஆறு ஜேர்மன் சான்சிலர்களின் பதவிக்காலம் மிகவும் குறைவாகவே இருந்தது. மேர்க்கெலின் கீழ் ஜேர்மன் அரசியலின் அச்சு மேலும் வலது பக்கம் நகர்ந்திருப்பதை, அவரது சான்சிலர் பதவிக்காலத்தின் இருப்புநிலை மதிப்பீடு பற்றிய ஒரு புறநிலை ஆய்வு காட்டுகிறது.

இராணுவத்தின் தீப்பந்த அணிவகுப்புடன் மேர்க்கெல் சான்சிலர் பதவியிலிருந்து விடைபெறுகிறார் (Foto: Bundesregierung/Steins)

சமூக ரீதியாக, ஜேர்மனி 1930 களில் இருந்து எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு ஆழமாக பிளவுபட்டுள்ளது. மேர்க்கெல் பதவியேற்றபோது 5,000 ஆக இருந்த DAX பங்குக் குறியீடு இப்போது 15,000 புள்ளிகள் வரை உயர்ந்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அவரது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் மக்கள் தொகையில் பாதிப் பகுதியினரை விட சராசரியாக 50 மடங்கு அதிக சொத்து வைத்திருந்த பணக்காரர்களான 10 சதவீதமானோர், இப்போது 100 மடங்கு அதிகமாக தங்கள் சொத்துக்களை வைத்திருக்கின்றனர்.

மறுபுறம், இவ்வளவு குறைந்த கூலிக்கு இவ்வளவு காலம் பாரியளவிலான தொழிலாளர்கள் வேலை செய்ததில்லை. ஒரு முழுநேர வேலை கூட வாழ்க்கையை தக்கவைக்கப் போதுமானதாக இருக்கவில்லை. 2019 ஆம் ஆண்டில், ஜேர்மனியின் ஐந்தில் ஒரு குழந்தைகளும் மற்றும் ஆறில் ஒரு குடிமக்களும் வறுமையில் வாடுகின்றனர். இது மொத்தம் 13.2 மில்லியன் மக்களாகும். வறுமையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. பொருளாதார கூட்டுழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பில் (OECD) அங்கத்துவம் வகிக்கும் 26 நாடுகளில், ஜேர்மனி இந்த விஷயத்தில் கடைசி இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதைவிட, பாழடைந்த உள்கட்டமைப்பு, உடைந்த பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள், வீழ்ச்சியடைந்த ஓய்வூதியங்கள் மற்றும் கட்டுப்படியாகாத வீட்டு வாடகை மற்றும் அதிகரிக்கும் வெப்பமூட்டும் செலவை மக்கள் சந்திக்கின்றனர்.

உள்நாட்டு அரசியலிலும், நாடு மேர்க்கலின் கீழ் வலது பக்கம் நகர்ந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD), முதல் முறையாக நாடாளுமன்றத்தினுள் (Bundestag) நுழைந்தது. அப்போதிருந்து, இது அகதிகள் தொடர்பாகவும் மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளை தீர்மானிப்பதுடன் மற்றும் மற்ற அனைத்து கட்சிகளாலும் விரும்பப்படுகிறது.

ஆறு ஆண்டுகளாக மத்திய இரகசிய சேவையின் தலைவரான ஹென்ஸ் ஜியோர்க் மாஸன் ஜேர்மனிக்கான மாற்றீட்டின் ஒரு அனுதாபியாக இருந்தார். அவர் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) ஒரு 'சமத்துவ, ஜனநாயக மற்றும் சோசலிச சமூகத்திற்கான' கோரிக்கையின் அடிப்படையில் அரசியலமைப்பை மீறுவதால் இரகசிய சேவையின் கண்காணிப்பில் இருப்பதாக அறிவித்தார். பிஸ்மார்க் மற்றும் ஹிட்லரின் ஆட்சியில் போலவே சோசலிச அரசியல் மீண்டும் ஒடுக்கப்படுகிறது.

பொலிஸ் மற்றும் இரகசிய சேவைகளின் அதிகாரங்கள் பாரியளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அரசு எந்திரம் வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்களில் சிக்கியுள்ளது. விரிவான ஆயுதக் கிடங்குகள் தோண்டி எடுக்கப்பட்ட பின்னரும், கொலைப் பட்டியல்களும், வன்முறை சதித்திட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும், மாவட்டத் தலைவர் வால்டர் லூப்க கொலை செய்யப்பட்டு மற்றும் ஹால நகரில் ஒரு யூத ஆலயம் தாக்கப்பட்ட பின்னரும் அதன் தலைவர்கள் சுதந்திரமாக திரிகின்றனர்.

புகலிட உரிமை நடைமுறையில் ஒழிக்கப்பட்டு, ஜேர்மனியின் தலைமையின் கீழ் ஐரோப்பா ஒரு கோட்டையாக மாறிவிட்டது. பல்லாயிரக்கணக்கான அகதிகள் மனிதாபிமானமற்ற முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது மத்தியதரைக் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களில் யாரும் ஐரோப்பிய மண்ணை அடைய முடியாதுள்ளது.

வெளியுறவுக் கொள்கையில், நாஜி ஆட்சி வீழ்ச்சியடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மனி மீண்டும் ஒரு பெரும் சக்தி, போர்க் கொள்கையை பின்பற்றுகிறது. சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) தலைவர் ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழ், “ஜேர்மனி, ஆப்கானிஸ்தானிலும் பால்கனிலும் தனது இராணுவக் கட்டுப்பாட்டு கலாச்சாரத்திலிருந்து வெளிவர முதல் அடிகளை எடுத்து வைத்தது. அங்கேலா மேர்க்கலின் கீழ், ஜேர்மனி ஐரோப்பாவில் அதன் தலைமைப் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறது' என்று Der Spiegel இதழ் எழுதுகிறது.

இந்த 'தலைமைப் பாத்திரம்' என்றால் என்ன என்பதை முதலில் கிரீஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் தொழிலாளர்கள் உணர்ந்தனர். வங்கிகள் சுயமாக உருவாக்கிய திவால்நிலையிலிருந்து காப்பாற்றிய பின்னர், ஜேர்மன் அரசாங்கம் ஒரு மிருகத்தனமான சிக்கனத் திட்டத்தை அவர்கள் மீது திணித்தது.

ஜேர்மனியின் ஏகாதிபத்திய நலன்களை உலகளவில் செயல்படுத்துவதற்காக, இராணுவச் செலவு பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டக் கூடிய அதிகரிப்பின் பங்கினால் மேர்க்கெலின் பதவிக்காலத்தில் 33 பில்லியன் டாலர்களில் இருந்து 53 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. உக்ரேனில் மேற்கத்திய சார்பு ஆட்சிக்கவிழ்ப்பு, ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ கட்டமைத்தல் மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்கள் ஆகியவற்றின் மூலம் அணுசக்தி வல்லரசுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவு திட்டமிட்டமுறையில் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது. மூன்றாவது, அணுசக்தி உலகப் போர் ஒரு உண்மையான ஆபத்தாக உள்ளது.

மேர்க்கெலின் கீழ் வலதுபுறம் நோக்கிய அரசியல் திருப்பம், கொரோனா வைரஸ் தொற்றுநோயில் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது. பெருநிறுவன இலாபங்களுக்காக அவரது அரசாங்கம் மில்லியன் கணக்கானவர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் தியாகம் செய்தது. கொரோனா வைரஸ் உதவித்தொகையினால் பங்கு விலைகள் பில்லியன் கணக்கான டாலர்களுக்கு உயர்ந்து புதிய சாதனையை எட்டியபோது, 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் 100,000 க்கும் அதிகமானோர் இறந்துபோயுள்ளனர்.

மேர்க்கெலின் அரசாங்கம், பணியிடங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவதற்கும் விஞ்ஞானிகளால் வலுவாகப் பரிந்துரைக்கப்பட்டாலும் கூட, இலாப ஓட்டத்தை குறைக்கக்கூடிய பிற பூட்டுதல் நடவடிக்கைகளை விதிக்க மறுத்துவிட்டது. தற்போது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வேண்டுமென்றே பாரிய தொற்றினை ஏற்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட கொள்கை பாலர் பாடசாலைகளிலும் மற்றும் பள்ளிகளில் நடைபெறுவதால், இதன் நீண்டகால சுகாதார விளைவுகள் கணக்கிட முடியாதவையாகும்.

ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் முடிவு

மேர்க்கலின் சான்சிலர் பதவியைப் புரிந்து கொள்ள, ஒருவர் 16 ஆண்டுகள் அல்ல 32 ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். முன்னாள் கிழக்கு ஜேர்மனியான ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (GDR) முடிவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஆகியவற்றுடன் அங்கேலா மேர்க்கெலைப் போல மிக நெருக்கமாக தொடர்புடைய அரசியல் பிரமுகர் வேறு யாரும் இல்லை.

கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் ஸ்ராலினிச ஆட்சியின் முடிவு, அது அடிக்கடி சித்தரிக்கப்படுவது போல, ஜனநாயகப் புரட்சிகளின் விளைவு அல்ல. மாறாக 1920களில் ஸ்ராலினின் எழுச்சியுடன் சோவியத் ஒன்றியத்தில் தொடங்கிய எதிர்ப்புரட்சியின் இறுதி விளைவாகும்.

1917 இல் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சமூகமயமாக்கப்பட்ட சொத்து உறவுகள், அரசிலிருந்த ஆட்சியின் ஸ்ராலினிசச் சீரழிவு இருந்தபோதிலும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்கு ஐரோப்பாவிற்கும் ஜேர்மனிக்கும் விரிவடைந்தது. அவை விரைவான தொழில்துறை வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் பரந்த அளவிலான கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளின் உருவாக்கத்திற்கான அடிப்படையை வழங்கின. இதனால் முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கமும் பயனடைந்தது. இவ்வாறான ஒரு சமூக மாற்றீட்டின் இருப்பு, மேற்கு அரசாங்கங்களை சமூக விட்டுக்கொடுப்புகளை செய்ய கட்டாயப்படுத்தியது.

முதலாளித்துவ மறுசீரமைப்புக்கான முன்னெடுப்பு இறுதியாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்திலிருந்தே வந்தது. அது 1985ல் மிக்கையில் கோர்பச்சேவை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. இடது எதிர்ப்பின் தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி 1930களில் ஏற்கனவே இத்தகைய வளர்ச்சி பற்றி எச்சரித்திருந்தார். தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை தூக்கி எறியவில்லை என்றால், அதிகாரத்துவம் முதலாளித்துவ சொத்து உறவுகளை மீட்டெடுப்பதன் மூலம் அதன் சலுகைகளை பாதுகாக்கும் என்று அவர் எழுதினார்.

இது 1990 இல் உறுதிப்படுத்தப்பட்டது. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில், சோசலிச ஐக்கிய கட்சியின் (SED - ஸ்ராலினிசக் கட்சி) சர்வாதிகாரம், மக்களின் ஜனநாயக ஆட்சியால் மாற்றப்படவில்லை. மாறாக மேற்கு ஜேர்மன் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சர்வாதிகாரத்தால் மாற்றப்பட்டது. இவை முதலாளித்துவ சுரண்டலை அறிமுகப்படுத்தி, அரச சொத்துக்களை சூறையாடி, 8,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நிர்மூலமாக்கி, மில்லியன் கணக்கானவர்களை வேலையின்மையிலும் வறுமையிலும் தள்ளியது. பேர்லின் சுவரின் இடிப்புக்கு பின்னர், ஸ்ராலினிச சோசலிச ஐக்கிய கட்சி, ஜனநாயக சோசலிசக் கட்சி (PDS) என மறுபெயரிடப்பட்டது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட 'ஜனநாயக எதிர்ப்பு', உடனடியாக முதலாளித்துவ அடிப்படையில் ஜேர்மனியை ஒன்றிணைப்பதற்குத் தயாராக பல்வேறு 'வட்டமேசை' பேச்சுவார்த்தைகளில் ஒன்றாக கூடியது.

நவம்பர் 4, 1989 அன்று கிழக்கு பேர்லினில் SED ஆட்சிக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டம் (Bundesarchiv Bild183-1989-1104-437)

சோசலிச சமத்துவக் கட்சியன் (Sozialistische Gleichheitspartei) முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகம் (Bund Sozialistischer Arbeiter- BSA) மட்டுமே அந்த நேரத்தில் தொழிலாளர் குழுக்களை உருவாக்கவும் சோசலிச அடிப்படையில் ஆட்சியை தூக்கிவீசவும் அழைப்பு விடுத்தது. 'ஒருபுறத்தில் முதலாளித்துவ ஜனநாயகம் அல்லது மூலதனத்தின் சர்வாதிகாரம், மறுபுறத்தில் புரட்சி, தொழிலாளர் ஜனநாயகம் மற்றும் சோசலிசம்' ஆகியவற்றிற்கு வெளியே தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கிச் செல்ல வழியில்லை எனக் குறிப்பிட்ட துண்டுப்பிரசுரங்களை நவம்பர் 4, 1989 அன்று கிழக்கு பேர்லினில் சோசலிச ஐக்கிய கட்சி ஆட்சிக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் சோசலிச தொழிலாளர் கழகம் அதிக எண்ணிக்கையில் விநியோகித்தது.

முதலாளித்துவ மறுசீரமைப்பு, கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தை தவிர சீனாவையும் பாதித்தது. அங்கு கம்யூனிஸ்ட் கட்சி, அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் முதலாளித்துவத்தை அறிமுகப்படுத்தியமை, எல்லா துறைகளிலும் பிற்போக்கான விளைவுகளை ஏற்படுத்தியது.

இது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் குழப்பத்திற்கும், நோக்குநிலை இன்மைக்கும் வழிவகுத்தது. 1970களின் பிற்பகுதியிலிருந்து சமூக சீர்திருத்தக் கொள்கைகளில் இருந்து ஏற்கனவே விலகியிருந்த சமூக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இப்போது வெளிப்படையாகவே தொழிலாளர்களின் கசப்பான எதிர்ப்பாளர்களாக மாறிவிட்டன. இது பிரிட்டிஷ் தொழிற் கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயர் மற்றும் அவரது ஜேர்மனிய சகாவான ஹெகார்ட் ஷ்ரோடர் மூலம் மிகத் தெளிவாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவம் அதன் சொந்த வெற்றியைப் பாராட்டியபோது, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கும் அதன் கட்டுப்பாடற்ற செழுமைப்படுத்தலுக்கும் இனி எந்த தடையும் இல்லை என்று நம்பியது.

ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் உலக மேலாதிக்கத்தை இராணுவ பலத்தால் என்றென்றும் பாதுகாக்க முடியும் என்று கற்பனை செய்த ஒரு 'ஒற்றை துருவ தருணம்' பற்றி ஆவேசப்பட்டனர். அப்போதிருந்து, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா போன்ற முழு நாடுகளும் பிராந்தியங்களும் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டதோடு, மேலும் உலகம், மூன்றாம் உலகப் போரை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், அங்கேலா மேர்க்கெல் ஜேர்மனியின் முன்னணி அரசியல்வாதியாக உயர்ந்தார்.

மேர்க்கலின் அரசியல் ஏற்றம்

மேர்க்கெல், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் சிறந்த கல்வியைப் பெற்ற மற்றும் ஒப்பீட்டளவில் கவலையற்ற இருப்பைக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர். அவர்கள் இப்போது முதலாளித்துவத்தின் அறிமுகத்தை உற்சாகமாக வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் அதிலிருந்து சிறந்த தொழில்முறை வாய்ப்புகளை எதிர்பார்த்தனர்.

1954 இல் பிறந்து கிராமப்புற உக்கர்மார்க் (Uckermark) நகரில் உள்ள ஒரு பாதிரியார் குடும்பத்தில் வளர்ந்த மேர்க்கெல், 35 வயது வரை அரசியலில் தோன்றவில்லை. அவர் ஒரு இயற்பியலாளராக ஒரு வெற்றிகரமான கல்வி வாழ்க்கையைப் பெற்றிருந்ததுடன், மாநில இளைஞர் அமைப்பான FDJ இல் உறுப்பினராக இருந்தார். மேலும் பலமுறை வெளிநாட்டில் கல்விக் கூட்டங்களுக்கும், மேற்கு ஜேர்மனிக்கும் ஒருமுறை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். ஆட்சிக்கு எதிரான நடவடிக்கை பற்றி அவர்மீது சிறு சந்தேகம் கூட இருந்திருந்தால் இது சாத்தியமாக இருந்திருக்காது.

எவ்வாறாயினும், பின்னர் அவர் தனது தந்தையின் பாதுகாப்பில் உள்ள குடியுரிமை ஆர்வலர்களை சந்தித்தார். அந்த நேரத்தில், பாரம்பரியமாக அரசு விசுவாசமான லூத்தரன் தேவாலயம், உத்தியோகபூர்வ கட்டமைப்புகளுக்கு வெளியே அரசியல் விவாதங்கள் சாத்தியமான ஒரே சுதந்திரமான இடத்தை வழங்கியது. பதிலுக்கு, தேவாலயம் சோசலிச ஐக்கிய கட்சி ஆட்சிக்கான எதிர்ப்பு குறுகிய வரம்புகளுக்குள் இருப்பதை உறுதி செய்தது. அதன் முன்னணி பிரதிநிதிகள் பலர் பின்னர் ஸ்டாசி (அரசு பாதுகாப்பு) க்கு தகவல் கொடுப்பவர்களாக மாறினர்.

அங்கேலா மேர்க்கெலின் முதல் அரசியல் ஆதரவாளர்களுக்கும் இதுவே உண்மை. எடுத்துக்காட்டாக, ஜேர்மன் ஜனநாயகக் குடியரசில் மேர்க்கெலின் தந்தை ஹோர்ஸ்ட் காஸ்னருடன் (Horst Kasner) நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றும் அரசியலுக்காக அங்கேலாவை 'கண்டுபிடித்த' 1965 முதல் 1989 வரை அதிகாரபூர்வமற்ற ஸ்டாசி ஒத்துழைப்பாளராக பணியாற்றிய ஜனநாயக விழிப்புணர்வு (Demokratischer Aufbruch) அமைப்புத் தலைவர் வொல்ஃப்காங் ஷ்னூர் (Wolfgang Schnur) இவ்வாறான ஒருவராவார்.

1990 இல் கடைசி GDR பிரதம மந்திரி Lothar de Maizière மற்றும் அவரது செய்தித் தொடர்பாளர் Angela Merkel (Bundesarchiv Bild 183-1990-0803-017)

1989 டிசம்பரில், பேர்லின் சுவர் ஏற்கனவே இடிந்து விழுந்த பின்னர், ஒரு திடீர் அரசியல் எழுச்சி ஏற்பட்டபோதுதான் மேர்க்கெல் தானே ஜனநாயக விழிப்புணர்வு அமைப்பில் சேர்ந்தார். மார்ச் 1990 இல் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக விழிப்புணர்வு அமைப்பு 0.9 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த போதும், மேர்க்கெல் ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் கடைசி பிரதம மந்திரி லோதர் டி மஸியரின் (Lothar de Maizière - CDU) செய்தித் தொடர்பாளராக ஆனார். இந்த நிலையில், அவர் ஜேர்மன் மீண்டும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதுடன் மற்றும் மாஸ்கோவில், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் முடிவை உறுதிப்படுத்திய “Two Plus Four Treaty” பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொண்டார்.

ஜேர்மன் ஒன்றிணைந்த பின்னர், சான்சிலர் ஹெல்முட் கோல் அவரை தனது அரசாங்கத்தில் கொண்டு வந்தார். அவர் முதலில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சராகவும் பின்னர் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருந்தார். 1998 மத்திய தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியிடம் கோல் தோற்றபோது, மேர்க்கெல் தனது ஆசான்களிடம் இருந்து கற்றுக்கொண்ட பின்கதவு உடன்பாடுகள் மற்றும் கபடச்செயல்களை நிரூபித்தார். அவர் ஒரு நன்கொடை ஊழலைப் பயன்படுத்தி, கோல் மற்றும் அவரது பட்டத்து இளவரசர் வொல்ஃப்காங் ஷூபிள வை அரியணையில் இருந்து அகற்றி 2000 இல் CDU இன் தலைவராகப் பொறுப்பேற்றார்.

மறுபுறம், 2002 கூட்டாட்சித் தேர்தலில், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) பவேரிய சகோதரக் கட்சியான கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தின் (CSU) தலைவரான எட்முண்ட் ஸ்டோய்பரிடம் அவர் சான்சிலர் வேட்பாளர் பதவிக்கான போட்டியிலிருந்து விலக வேண்டியிருந்தது. ஸ்டோய்பர் அத்தேர்தலில் பின்னர் சான்சிலரான ஹெகார்ட் ஷ்ரோடரிடம் தோற்றார்.

அடுத்த ஆண்டு லைப்சிக் இல் நடைபெற்ற கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி மாநாட்டில், மேர்க்கெல் கட்சியின் தலைமைப் பதவியை தனக்கு உறுதிப்படுத்திக்கொண்டார். இது நவ-தாராளவாதத்தின் கொண்டாட்டமாக இருந்தது. கட்சி அதன் முந்தைய சமூகக் கொள்கையில் இருந்து தீவிரமான விலகல் முடிவு செய்தது. இது சுகாதாரக் கொள்கைக்கு ஒவ்வொருவரும் கட்டணம் செலுத்தல் மற்றும் தீவிரமான வரிச் சீர்திருத்தம் ஆகியவை சமூக சமப்படுத்தலின் அனைத்து வழிமுறைகளையும் தகர்க்க வேண்டும் என்றது. இதற்கு எதிராக கட்சி மாநாட்டில் பேசிய கோலின் நீண்டகால தொழிலாளர் அமைச்சர் நோபேர்ட் புளூம் கொந்தளித்தபோது கூக்குரல் எழுப்பப்பட்டது. ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் போர் தயாரிப்புகளுக்கும் மேர்க்கெல் ஆதரவு தெரிவித்தார்.

இருப்பினும், அத்தகைய சமூக மோதல் போக்கு பாரிய எதிர்ப்பைத் தூண்டும் என்பதை அவர் விரைவாக உணர்ந்தார், மேலும் தீவிரமான திட்டங்கள் அனைத்தும் மேசையிலிருந்து மறைந்துவிட்டன. அதற்குப் பதிலாக மேர்க்கெல், எதிர்க் கட்சித் தலைவராக, ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி, 'நிகழ்ச்சி நிரல் 2010' ஐ உருவாக்கி நிறைவேற்ற உதவினார். பாராளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் அவைகளில் சமூக நலன்புரி மற்றும் வேலைவாய்ப்புச் சட்டத்தில் பாரிய 'சீர்திருத்தங்களை' அறிமுகப்படுத்திய ஹார்ட்ஸ் IV உட்பட இந்த சட்ட மாற்றங்களுக்கு கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் ஒப்புதல் அளித்தது.

மேர்க்கெல் சான்சிலர் பதவியில் இருந்தபோதும் இதுவே அவரது விருப்பமான அணுகுமுறையாக இருந்தது.

மேர்க்கலின் பதவியில் இருந்த நேரம் பற்றிய பல வர்ணனைகள் அவரது அமைதியான மற்றும் நடைமுறைரீதியான பாணியைப் பாராட்டுகின்றன. 'Tagesschau' செய்தி நிகழ்ச்சி அவரை 'ட்ரம்ப், புட்டின் அல்லது ஏர்டோகன் போன்ற ஜனரஞ்சக நபர்களுக்கு மாறான ஒருவர்' என்று அழைக்கிறது. Frankfurter Allgemeine Zeitung அவர் ஒரு 'தொலைநோக்கானவர்' அல்ல, மாறாக 'நெருக்கடி நிர்வாகி' என்று எழுதியது. “நடுவர் பாத்திரமும், சிறிது சிறிதாக முன்னோக்கிய கொள்கையும் அவருக்குப் போதுமானதாக இருந்தது. பாரிய திட்டமான ஒரு ‘வரலாற்று செயல்திட்டம்’ அவருக்கு உரிதயல்ல. அனைத்துவிதமான கருத்தியல்களும் அவருக்கு சந்தேகத்திற்குரியவை” என அது மேலும் எழுதியது.

மார்கரெட் தாட்சர் அல்லது டொனால்ட் ட்ரம்பின் கருத்தியல் வெறி மற்றும் மூர்க்கத்தனம் இல்லாமல் மேர்க்கெல் சமாளித்தார். ஏனெனில் அவர் தனது வலதுசாரி கொள்கைகளை சமூக ஜனநாயகக் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் இடது கட்சி (SED/PDS இன் வாரிசு) ஆகியவற்றின் உதவியுடன் நிறைவேற்றினார். இதனால் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு வெளிப்படையான மோதலை அவரால் தவிர்த்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அவரது நான்கு முறை ஆட்சியில் சமூக ஜனநாயகக் கட்சியுடன் ஒரு பெரிய கூட்டணியில், மூன்று முறை ஆட்சி செய்தார். 2009 முதல் 2013 வரை மட்டுமே அவர் தாராளவாத ஜனநாயகக் கட்சியுடன் (FDP) ஒரு கூட்டணியை உருவாக்கினார். பின்னர் தாராளவாத ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்குத் தேவையான 5 சதவீத தடையை பூர்த்தி செய்யத் தவறியதால், நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டது.

மேர்க்கெல் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுடனான அதன் நெருங்கிய உறவுகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சமூக தாக்குதல்களைத் முன்தள்ள பயன்படுத்தினார். 2010ல் சான்சிலர் மாளிகையில் அப்போதைய IG Metall தொழிற்சங்க தலைவர் பேர்தோல்ட் ஹூபருக்கு (Berthold Huber) மேர்க்கெல் நடத்திய பிறந்தநாள் விழா இழிவுக்குரியதாகும். அதற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களில் தொழிற்சங்க சகாக்களைத் தவிர, பல பெரிய நிறுவனங்களின் தலைவர்களும் இருந்தனர்.

2008 நிதிய நெருக்கடியின் போது, மேர்க்கெலும், அப்போதைய SPD நிதி மந்திரி பீர் ஸ்டெய்ன்புரூக்கும் நலிவடைந்த வங்கிகளுக்கு பில்லியன்களை வழங்க நன்கு ஒத்திகை செய்யப்பட்ட குழுவைப் போல் ஒன்றாக வேலை செய்தனர். வங்கிகளுக்கு வழங்கப்பட்ட பணம் சமூக வெட்டுகளினால் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிழிந்தெடுக்கப்பட்டது. இப்போது புதிய அதிபரான முன்னாள் நிதியமைச்சர் ஓலாஃப் ஷொல்ஸுடன் கொரோனா வைரஸ் நெருக்கடியிலும் இதேபோல் மீண்டும் செய்யப்பட்டது.

சமூக ஜனநாயகக் கட்சியுடன், பசுமை கட்சியினரும் மேர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்துடன் இன்னும் நெருக்கமாக இணைந்தனர். பாடன் வூட்டெம்பேர்க் மற்றும் ஹெஸ்ஸ மாநிலங்களில், அவர்கள் நீண்ட காலம் ஒன்றாக ஆட்சி செய்தனர். மத்திய அரசில், அவர்கள் 2017இல் கூட்டணி ஒப்பந்தம் ஒன்றைப் பற்றி பேசிமுடித்தபோதும், மூன்றாவது கூட்டணிக் கூட்டாளியான தாராளவாத ஜனநாயகக் கட்சி கடைசி நொடியில் வெளியேறியதால் அது தோல்வியடைந்தது.

மேர்க்கெலின் பதவியைப் பாதுகாப்பதில் இடது கட்சியும் முக்கிய பங்கு வகித்தது. மத்திய மற்றும் மாநில மட்டங்களில், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் எப்போதும் அவ்வாறு செய்ய மறுத்ததால், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்துடன் இணைந்து ஆட்சி செய்யவில்லை என்றாலும், அது மேர்க்கெலின் அரசாங்கத்தின் சமூகத் தாக்குதல்கள் மற்றும் இராணுவவாதத்தை நடைமுறையில் ஆதரித்து அதற்கு அரசியல் ஆதரவையும் அளித்துள்ளது.

உதாரணமாக, இடது கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் டீட்மார் பார்ட்ஷ், பெரும் கூட்டணியின் பெரும் அதிகாரக் கொள்கையை வெளிப்படையாக வரவேற்றார். 'அமெரிக்காவை நோக்கிய பயந்து அடிபணிந்து போவதை நிறுத்த வேண்டிய நேரம் இது. ஜேர்மனி உலகில், ஐரோப்பிய கட்டமைப்பில், தன்னம்பிக்கையுடன் ஒரு பாத்திரத்தை வகிக்க விரும்புகிறது' என்று அவர் 2017 இல் அறிவித்தார்.

பெப்ரவரியில் சான்சிலர் அலுவலகத்தில் மேர்க்கெல் (AP photo/Markus Schreiber, pool)

புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தின் முழுமையான மண்டபத்தில், இடது கட்சியின் உறுப்பினர்கள், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்தவ சமூக ஒன்றியம், சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் மேர்க்கெலைக் கௌரவிக்கும் வகையில் எழுந்து நின்று கைதட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) பிரதிநிதிகள் மட்டுமே இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

'போக்குவரத்து விளக்கு' கூட்டணி

நேற்று பதவியேற்ற புதிய அரசாங்கம், மேர்க்கெலின் வலதுசாரி கொள்கைகளை நேரடியாக பின்பற்றுகிறது. 'போக்குவரத்து விளக்கு' கூட்டணிக் கட்சிகளான சமூக ஜனநாயகக் கட்சி, தாராளவாத ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி அனைத்தும் மேர்க்கெலின் 16 ஆண்டுகால பதவியில் ஏதோ ஒரு வகையில் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றின.

எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கத்துடன் வெளிப்படையான மோதலின்றி மேர்க்கெல் தனது வலதுசாரிக் கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய நிலைமைகள் முடிந்துவிட்டன. ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு முடிவிற்குவந்து மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் நிலவிய குழப்பங்கள் குறையத் தொடங்குகிறது. தொழிலாளர்கள் மீண்டும் தைரியம் அடைந்துள்ளனர். எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் உலகம் முழுவதும் பெருகி வருகின்றன. அமெரிக்காவில் வொல்வோ ட்ரக்ஸ் மற்றும் ஜோன் டீர் போன்றவற்றில் எதிர்ப்பு அல்லது தொழிற்சங்கங்களுக்கு எதிரான வெளிப்படையான கிளர்ச்சி பெருகி வருகின்றன.

ஜேர்மனியில், இரயில்வே, மருத்துவமனைகள், பொதுத்துறை மற்றும் ஏராளமான உலோக நிறுவனங்களில் இந்த ஆண்டு தொழில்துறை நடவடிக்கைகளும் எதிர்ப்புக்களும் நடந்துள்ளன. கொலைகார கொரோனா வைரஸ் கொள்கைகள் மீதான கோபம் மற்றும் ஊதிய வெட்டுக்கள், அதிகரித்து வரும் வேலை அழுத்தம் மற்றும் பணிநீக்கங்களுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகின்றன. இது தாமதமாக அல்ல விரைவிலே போக்குவரத்து விளக்கு கூட்டணியுடன் வெளிப்படையான வர்க்க மோதல்களுக்கு வழிவகுக்கும்.

நாடாளுமன்றத்தில் போக்குவரத்து விளக்குக் கூட்டணிக்கு மிகவும் அங்கத்துவம் குறைக்கப்பட்ட, பெயரளவில் இடது கட்சியைத் தவிர இடதுபுறத்தில் எந்தக் கட்சியும் இல்லாதுள்ளதுடன் மற்றும் வளர்ந்து வரும் எதிர்ப்பைத் திசைதிருப்ப முடியாதுள்ளது. சமூக ஜனநாயகக் கட்சியுடனும் பசுமைக் கட்சியுடனும் சேர்ந்து நான்கு மாநிலங்களை ஆளும் இடது கட்சி, போக்குவரத்து விளக்குக் கூட்டணியின் கொள்கையை முழுமையாக ஆதரிக்கிறது. தொழிலாள வர்க்கம் ஒரு புதிய நோக்குநிலையைத் தேடும். இது ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காக போராடும் சோசலிச சமத்துவக் கட்சியை (Sozialistische Gleichheitspartei) கட்டிமைப்பதை மிக அவசரமான அரசியல் பணியாக ஆக்குகிறது.

Loading