ஓமிக்ரோன் உலகம் முழுவதும் பரவி வருவதால், பேரழிவு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

SARS-CoV-2 இன் ஓமிக்ரோன் மாறுபாட்டினால் சர்வதேச அளவில் நோய்தொற்றுக்களும் மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்ப்பும் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அதன் தீவிரமான உலகளாவிய அச்சுறுத்தல் ஒவ்வொரு நாளும் தெளிவாகிறது. உலகளவில், சராசரி நாளாந்த புதிய நோய்தொற்றுக்கள் இப்போது 620,106 ஆக உள்ளது, இது கடந்த மாதத்தில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக அதிகரித்துள்ளது. சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனம், உண்மையில் ஒவ்வொரு நாளும் அண்ணளவாக 3.3 மில்லியன் மக்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம், அதிலும் உலகளவில் போதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் பெரும்பாலானவர்கள் கண்டறியப்படவில்லை என்று மதிப்பிடுகிறது. இந்த நோய்தொற்றுக்களில் பெரும்பாலானவை டெல்டா மாறுபாட்டினால் உருவானவை என்றாலும், ஓமிக்ரோன் உலகளவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அல்லது வரவிருக்கும் வாரங்களில் ஒட்டுமொத்தமாக அதிகரிப்பதற்கு அச்சுறுத்துகிறது.

நவம்பர் 19, 2020, LA இல், பிராவிடன்ஸ் ஹோலி கிராஸ் மருத்துவ மையத்தில் ஒரு கோவிட் நோயாளியை டாக்டர் ரஃபிக் அப்து மற்றும் சுவாச சிகிச்சை நிபுணர் பாபு பரம்பன் ஆகியோர் பரிசோதித்தனர் [Credit: AP Photo/Jae C. Hong, File]

அக்டோபர் முதல் தொற்றுநோயின் உலகளாவிய மையமாக இருக்கும் ஐரோப்பா முழுவதும், புதன்கிழமை 430,968 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் உத்தியோகபூர்வமாக பதிவாகின. இங்கிலாந்தில் 78,339, பிரான்சில் 65,713, ஜேர்மனியில் 55,650, ரஷ்யாவில் 28,363, ஸ்பெயினில் 27,140, மற்றும் இத்தாலியில் 23,190 என்ற எண்ணிக்கைகளில் இந்நாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 250,000 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. ஐரோப்பா முழுவதிலும், உண்மையில் உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் பாரிய நோய்தொற்றுப் பரவல் மற்றும் இறப்புக்களின் காரணமாக முறிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில், ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை ஓமிக்ரோன் நோய்தொற்றுக்கள் இரட்டிப்பாகும் படுமோசமான சூழ்நிலை நிலவுகிறது, மேலும் கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் மக்கள் நோய்தொற்றால் பாதிக்கப்படலாம் என்று முன்கணிப்புக்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக தணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படாத நிலை கோவிட்-19 வெடித்துப் பரவி, ஏராளமான மாணவர்களையும் கல்வியாளர்களையும் பாதிக்க அனுமதித்துள்ள நிலையில், இலையுதிர்கால அரையாண்டு கல்விக் காலம் நாடு முழுவதுமான பள்ளிகளை அழித்துவிட்டது. இந்த நிலையில் பணியாளர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் ஓய்வு பெற்ற கல்வியாளர்களை நியமித்து ஜோன்சன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தமை, ஓய்வுபெற்ற பிரிவினரிடையே நோய்தொற்றுக்களும் இறப்புக்களும் பெரிதும் அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

வைரஸ் மாறுபாடுகளை வலுவாக கண்காணிக்கும் திட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில், ஓமிக்ரோன் ஏற்கனவே நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களிடையே பாரியளவில் மறுதொற்றுக்களை உருவாக்கி வருகிறது. ஒட்டுமொத்தமாக, கடந்த மாதத்தில் மட்டும் மறுதொற்றுக்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. அண்டை நாடான நோர்வேயில், நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லாவிட்டால், ஒருசில வாரங்களுக்குள் ஒவ்வொரு நாளும் 100,000 க்கும் அதிகமானோர் ஓமிக்ரோன் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று முன்கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, டெல்டா மாறுபாட்டின் எழுச்சி, நாட்டின் பெரும்பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது, குறிப்பாக வடகிழக்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாளாந்தம் சராசரியாக 121,585 பேர் நோய்தொற்றுக்குள்ளாவது உத்தியோகபூர்வமாக பதிவாகிறது, மேலும் நாடு முழுவதும் நாளாந்தம் சராசரியாக 1,170 பேர் இறக்கின்றனர்.

நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சியில், ஓமிக்ரோன் மாறுபாடு தற்போது ஒட்டுமொத்த புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்களில் குறைந்தது 13 சதவீதத்தைக் கொண்டுள்ளது, நோய்தொற்றுக்கள் அதிர்ச்சியூட்டும் அளவில் கடுமையாக அதிகரித்து வருகிறது. நியூயோர்க் மாநிலத்தில் புதன்கிழமை 18,276 புதிய நோய்தொற்றுக்கள் உத்தியோகபூர்வமாக பதிவாகியுள்ளன, இது ஒரே நாளில் நிகழ்ந்த 40 சதவீத அதிகரிப்பாகும் என்பதுடன், ஜனவரி 14 க்குப் பின்னர் பதிவான உச்சபட்ச நாளாந்த எண்ணிக்கையாகும். நியூயோர்க் நகரில், பரிசோதனை நேர்மறை விகிதம் சமீபத்தில் டிசம்பர் 9 முதல் 12 தேதிகளுக்கிடையிலான வெறும் மூன்று நாட்களில் 3.9 இல் இருந்து 7.8 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மூன்று பெரும் நோய்தொற்று எழுச்சிகளை எதிர்கொண்டு, அமெரிக்காவின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான புளோரிடா, ஓமிக்ரோன் மாறுபாட்டின் அதிவேக பரவலுக்கு மத்தியில் நோய்தொற்றின் நான்காவது எழுச்சியை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது. Walt Disney World இன் தாயகமான புளோரிடாவின் ஆரஞ்சு மாகாணத்தில் கழிவு நீர் பற்றிய ஆய்வு, மாதிரிகளில் காணப்படும் அனைத்து கோவிட்-19 மாறுபாடுகளில் கிட்டத்தட்ட 100 சதவீதம் ஓமிக்ரோன் வகையாக உள்ளது எனக் கண்டறிந்துள்ளது.

வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் நெருங்குகையில், மிகவும் தீவிரமான மற்றும் கொள்கைபிடிப்புவாத விஞ்ஞானிகள், நோய்தொற்றுக்கள், மருத்துவமனை அனுமதிப்புகள் மற்றும் இறப்புக்களின் தொடர்ச்சியான அலைகள் உருவெடுக்கும் என்று அதிகரித்தளவில் தெளிவான எச்சரிக்கைகளை விடுக்கின்றனர்.

மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் இயக்குநர் டாக்டர் மைக்கேல் ஓஸ்டர்ஹோம், தொற்றுநோய் பற்றிய தனது வாராந்திர போட்காஸ்ட் பதிவில், “ஓமிக்ரோன் மூலம் ஒரு வைரஸ் பனிப்புயல் உண்மையில் உலகில் இறங்குவதை நாம் காணப் போகிறோம்” என்று எச்சரித்துள்ளார். ஓமிக்ரோன் மாறுபாடு தற்போதைய டெல்டா மாறுபாட்டின் எழுச்சியுடன் இணைந்து பேரழிவை ஏற்படுத்த அச்சுறுத்துகிறது, அதிலும் குறிப்பாக தடுப்பூசி போடப்படாதவர்களிடையே அது நிகழ வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

வியாழனன்று, T-cell நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் அந்தோனி லியோனார்டி ஓமிக்ரோன் விளைவிக்கக்கூடிய நீண்டகால சேதம் பற்றி, “ஓமிக்ரோனின் காரணமான வரவிருக்கும் நோய்தொற்று அலை உலக மக்கள்தொகையில் குறைந்தது பாதியை பாதிப்புக்குள்ளாக்கும். 10 சதவீதம் பேருக்கு லோங் கோவிட் இருந்தால், அதுபற்றி நாம் #MassDisablingEvent நிகழ்ச்சியில் பார்க்கிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார். லோங் கோவிட் பாதிப்பு பற்றி டாக்டர் லியோனார்டி பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார், இது நரம்பியல் சிதைவு, தன்னுடல் எதிர்ப்பு சக்தியைத் தாக்குதல் மற்றும் பிற உறுப்புகளுக்கு சேதம் விளைவித்தல் போன்றவற்றை விளைவிக்கும் என்கிறார்.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு (WSWS) அளித்த சமீபத்திய பேட்டியில், டாக்டர் லியோனார்டி ஓமிக்ரோன் மாறுபாட்டின் கடுமையான ஆபத்துக்கள் பற்றி வலியுறுத்தினார், ஓமிக்ரோன் பாதிப்பால் எந்த பிரிவு வயதினரையும் விட உச்சபட்ச மருத்துவமனை அனுமதிப்பு விகிதத்தை எதிர்கொள்ளும் தடுப்பூசி போடப்படாத ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஏற்படவுள்ள ஆபத்துக்கள் பற்றி குறிப்பாக எச்சரித்தார். மேலும், ஓமிக்ரோனின் அசாதாரண தொற்றும் தன்மையால், முன்னைய மாறுபாடுகளை விட ஒரு புதிய மற்றும் அபாயகரமான மாறுபாடு மிக வேகமாக உருவெடுக்கக்கூடிய நிலைமைகளையும் அது உருவாக்குகிறது என்றும் அவர் எச்சரித்தார்.

ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்களால் செயல்படுத்தப்பட்ட தொற்றுநோய்க் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்தவரான மருத்துவர் டெனிஸ் டெவால்ட் புதன்கிழமை, “2020 இல் நோய்தொற்றின் முதல் மூன்று வாரங்களில் வூஹான் இருந்தது போல் எங்கள் மருத்துவமனைகள் இருக்கும் என்றே நான் எதிர்பார்க்கிறேன்,” என்றும், “ஆனால் எங்கள் சுகாதாரப் பணியாளர்கள் சிறந்த தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அணிய மாட்டார்கள்” என்றும் ட்வீட் செய்துள்ளார்.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து SARS-CoV-2 ஐ ஒழிப்பதற்காக தொடர்ந்து வாதிட்டு வரும் டாக்டர் மல்கோர்சாடா காஸ்பெரோவிச், “கோவிட்-19 உடன் வாழும்” கொள்கையை தென் கொரியா முடித்துவிட்டதாகக் குறிப்பிட்டு ஒரு இடுகையை மீண்டும் பதிவு செய்தார். அவர்கள் அவ்வாறு செய்ததற்கு “‘கோவிட்-19 உடன் வாழும்’ கொள்கை வேலை செய்யாததே காரணம். வேலை செய்த மற்றும் வேலை செய்யக்கூடிய ஒரே கொள்கையாக தொற்றுநோயை ஒழிக்கும் உத்தி மட்டுமே உள்ளது. எனவே, கிரகத்தின் ஒவ்வொரு பகுதியும் நோய்தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தை தொடங்குவதற்கான உச்சபட்ச நேரம் இதுதான். #EndThePandemic.” என்று தனது கூர்மையான கருத்தையும் அவர் சேர்த்து பதிவிட்டிருந்தார்.

உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்த எச்சரிக்கைகளை எதிரொலித்தது. WHO இன் கோவிட்-19 க்கான சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபாரோ, Sky News க்கு பேட்டியளிக்கையில், “ஜனவரி 2020 முதல் இந்த தொற்றுநோய் குறித்து நான் கண்காணித்தும் வேலை செய்தும் வருகிறேன், மேலும் இங்கிலாந்தைப் பற்றி மட்டுமல்லாது உலகத்தைப் பற்றியும் இன்றிரவு அதிகம் கவலைப்பட்டதைப் போல நான் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை.” என்று அறிவித்தார்.

சமூக கூட்டங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டுமா என்று அப்போது கேட்கப்பட்டதற்கு, “இது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது. அதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு வாரத்தில் எட்டு மடங்காகவும், இரண்டு வாரங்களில் 40 மடங்காகவும், மூன்று வாரங்களில் 300 முதல் 400 மடங்காகவும் தீவிரமடையும் என்பதே. மேலும் நான்கு வாரங்களில் 1,000 மடங்கு அளவிற்கு தீவிரமடையும்” என்று அப்பட்டமாக அவர் பதிலளித்தார்.

இந்த வரவிருக்கும் பேரழிவிற்கு பதிலிறுப்பாக, உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், கோவிட்-19 இன் பரவலைத் தடுப்பதற்கு தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த பிடிவாதமாக மறுக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்துப் பள்ளிகளிலும் தொலைதூரக் கற்றலுக்கு மாறுதல் மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் வருமானப் பாதுகாப்பு வழங்கி அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுதல் உள்ளிட்ட அவசரகால பூட்டுதல்களைப் பயன்படுத்துவதையும் அவை நிராகரிக்கின்றன.

புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) இயக்குநர் டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி மற்றும் வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் ஜெஃப்ரி ஜியண்ட்ஸ் ஆகியோரிடம், “மொத்தத்தில், சாராம்சமாக, மீண்டும் சிறிது பூட்டுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? முதலாளிகளும், பள்ளிகளும் நாம் பார்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா, அல்லது அவர்கள் ஏற்கனவே அதிகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்களா?” என்று ஒரு நிருபர் கேட்டார்.

டாக்டர் வாலென்ஸ்கி பூட்டுதல்கள் குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்காத அதேவேளை, தடுப்பூசிகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் அது தொடர்பான கேள்வியை புறக்கணித்தார். பொது சுகாதாரத்தில் எந்தவித அனுபவமும் இல்லாத பன்முக கோடீஸ்வரரும், பூட்டுதல்களை கடுமையாக எதிர்த்தவரும் மற்றும் தடுப்பூசி மட்டும் அணுகுமுறையை மேம்படுத்தியவருமான Zients, “ஒரு வருடத்திற்கு முன்னர் நாம் இருந்ததை விட மிகவும் வித்தியாசமான மற்றும் வலுவான இடத்தில் இருக்கிறோம். எனவே பூட்டுதல்களுக்கு அவசியமில்லை” என்று கூறுகிறார். மேலும், “நமது குழந்தைகளை தொடர்ந்து எப்படி பள்ளிக்கு அனுப்புவது மற்றும் வணிகங்களை எவ்வாறு திறந்து வைத்திருப்பது என்பது பற்றி எங்களுக்குத் தெரியும், எனவே நாம் நமது பொருளாதாரத்தை எந்த வகையிலும் மூடப் போவதில்லை. நாம் நமது பள்ளிகளையும் நமது வணிகங்களையும் தொடர்ந்து திறந்து வைத்திருக்கப் போகிறோம். அடுத்த கேள்வி என்ன” என்று மேலும் கேட்டார்.

இதேபோல், ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் (NIAID) இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபவுசி, வியாழனன்று, ஓமிக்ரோன் “சில வாரங்களில்” ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக இருக்கும் என்பதுடன், அது விரைவில் மருத்துவமனைகளை மூழ்கடிக்கும் என்பதை ஒப்புக்கொண்டார். வாலென்ஸ்கியைப் போலவே, இவரும் தடுப்பூசி மட்டும் அணுகுமுறையை மேம்படுத்தியதோடு, தணிப்பு நடவடிக்கைகள் குறித்து பெயரளவில் பிரச்சாரம் செய்தார், இவர் “நாங்கள் அதைச் செய்தால், உங்கள் சமூகத்தில் உள்ள வணிகங்கள் தொடர்பாக நாங்கள் அனைத்து வகையான பூட்டுதலையும் செயல்படுத்த வேண்டியிருக்கும் என்பதை நான் நம்பவில்லை” என்று கூறுகிறார். விமானப் பயணத்தில் உள்ள கடுமையான ஆபத்துக்களும், மற்றும் லோங் கோவிட், மருத்துவமனை அனுமதிப்புக்கள் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும் வெடித்துப் பரவக்கூடிய நோய்தொற்றுக்களின் நன்கு அறியப்பட்ட அபாயங்களும் ஒருபுறமிருக்க, மக்களுக்கு தடுப்பூசி போடப்படாத நிலையில் கூட, விடுமுறை நாட்களில் குடும்பக் கூட்டங்களுக்கும் டாக்டர் ஃபவுசி ஒப்புதல் அளித்தார்.

பெருநிறுவன ஊடகங்கள், பொதுமக்களை உணர்விழக்கச் செய்வதிலும், சமூகம் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வைத் தடுப்பதிலும் தங்கள் பங்கை கடமை உணர்வுடன் செய்து வருகின்றன. வியாழன் இரவில் ABC News இல், ஓமிக்ரோனின் அதிவேக பரவல் பற்றியும், மற்றும் மருத்துவமனைகளில் அதிகரித்துவரும் மோசமான நிலைமைகளையும் விவரித்த ஒரு பகுதியைத் தொடர்ந்து, பொது சுகாதாரத்திற்கான பிரவுன் பல்கலைக்கழகப் பள்ளியின் தலைவர் டாக்டர் ஆஷிஷ் ஜா, விடுமுறை பயணத் திட்டங்களுக்கு தனது ஒப்புதலை வழங்கினார்.

“கிறிஸ்துமஸ் தினத்தன்று, குடும்பத்துடன் பாதுகாப்பாக கூடுவது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். தடுப்பூசி போடக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதே முக்கியம் என்று எனக்கு தோன்றுகிறது, அதற்கு மக்கள் ஊக்கமளிக்கப்படுகிறார்கள். மேலும், முதுமை மற்றும் பிற காரணங்களால் அதிக ஆபத்துள்ள நபர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு விரைவான பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்” என்று ஜா கூறினார்.

ஜா பிரவுன் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் எமிலி ஓஸ்டரின் நெருங்கிய கூட்டாளி ஆவார், அவர் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பாக, 2020 இலையுதிர்காலத்தில் இருந்து பாதுகாப்பற்ற பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முன்னணி ஆதரவாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். வியாழனன்று, “பெரும்பாலான மக்கள் தடுப்பூசி நிலை பற்றி பொருட்படுத்தாமல் ஓமிக்ரோன் தொற்றுக்குள்ளாகப் போகிறார்கள். தொற்று அவ்வளவு அதிகமாக உள்ளது” என்று இழிவான முறையில் ட்வீட் செய்தார்.

டாக்டர்கள் லியோனார்டி, டெவால்ட், காஸ்பெரோவிச் மற்றும் பிற கொள்கைபிடிப்புவாத விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளுக்கும், மற்றும் பைடென் நிர்வாகம் மற்றும் பெருநிறுவன ஊடகங்களுடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் அறிவிப்புகளுக்கும் இடையிலான அப்பட்டமான முரண்பாடு நாளுக்கு நாள் கூர்மையாகிறது.

விஞ்ஞானம் மற்றும் பொது சுகாதாரத்தின் கொள்கைகள், கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு தேவையில்லாமல் நோய்தொற்றுக்களும், பாதிப்புக்களும் மற்றும் இறப்புக்களும் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான அடிப்படை நடவடிக்கைகளை கூட செயல்படுத்த மறுக்கும் நிதிய தன்னலக்குழுவின் நலன்களுடன் ஒத்துப்போகவில்லை. இந்த விஞ்ஞானபூர்வ நடவடிக்கைகளைச் செயல்படுத்தி, தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு திறனுள்ள ஒரே சமூக சக்தியாக இருப்பது சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே.

Loading