மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஓமிக்ரோன் வகை அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் பரவி வருகின்ற வேளையில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) நேற்று அந்நாட்டில் அதிர்ச்சியூட்டும் வகையில் 288,579 புதிய கோவிட்-19 நோயாளிகளை அறிவித்தது, இது எப்போதையும் விட இரண்டாவது அதிகபட்ச நாளாந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையாகும்.
இந்த பெருந்தொற்றின் இந்த புதிய கட்டத்திற்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் நேற்று மதியம், பொய்கள், திரித்தல்கள் நிறைந்த, ஒன்றுக்கொன்று முரண்பாடான மற்றும் சிறிதும் யதார்த்தத்தை அங்கீகரிக்காத உரை ஒன்றை வழங்கினார். இந்த வைரஸ் பரவலை அர்த்தமுள்ள வகையில் குறைக்கும் ஒரேயொரு உறுதியான எந்த முன்மொழிவையும் அவர் முன்வைக்கவில்லை.
இந்த பெருந்தொற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் ஒரு பிரச்சினை என்ற சொல்லாடலைச் சுற்றியே இருந்த பைடெனின் மொத்த உரையும், ஓரளவிலான உண்மையை, —அதாவது, தடுப்பூசி செலுத்தப்படாதவர்களுக்கு ஆபத்து அதிகம் என்பதை—தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதிகளவில் தடுப்பூசியை ஊக்குவிப்பதற்கு அப்பாற்பட்டு வேறெந்த கூடுதல் பொது சுகாதார நடவடிக்கைகளும் தேவையில்லை என்பதாகவும் முற்றிலும் ஒரு தவறான வாதத்திற்குள் திருப்ப முயல்வதாக இருந்தது.
“நீங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தால், நீங்கள் கவலைப்படுவதற்குக் காரணம் உண்டு,” என்று கூறிய பைடென், “நீங்கள் நோய்வாய்ப்படுவதற்கு அதிக ஆபத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டால், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் உட்பட நீங்கள் மற்றவர்களுக்கும் அதைப் பரப்பக்கூடும். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முடிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் அல்லது இறப்பதற்கும் கூட குறிப்பிடத்தக்களவில் அதிக ஆபத்து உள்ளது,” என்றார்.
ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 'கவலைப்படுவதற்கு அதிக, அதிக காரணம் இல்லை. கடுமையான நோய்க்கு எதிராக நீங்கள் அதிகபட்ச பாதுகாப்பு பெற்றிருக்கிறீர்கள்,” என்று தெரிவித்தார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் உள்ள கோவிட்-19 நோயாளிகள் 'பெரிதும் கடுமையாக நோய்வாய்ப்பட வாய்ப்பில்லை' மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 'கடுமையான நோய் மற்றும் மரணத்தில் இருந்து பாதுகாக்க' பட்டிருக்கிறார்கள் என்றார்.
இந்த வாதத்தை ஒருவர் உண்மையென்று ஏற்றுக் கொண்டாலும் கூட, அமெரிக்க மக்களில் வெறும் 61 சதவீதத்தினருக்கு மட்டுமே 'முழுமையாக தடுப்பூசி' செலுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். ஃபைசர் அல்லது மொடேர்னாவின் இரண்டு தவணை தடுப்பூசிகளோ அல்லது ஜோன்சன் & ஜோன்சனின் ஒரு தடுப்பூசியோ செலுத்தப்பட்டவர்களே இப்போது 'முழுமையாக தடுப்பூசி' செலுத்தப்பட்டவர்களாக வரையறுக்கப்படுகிறது. முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படாதவர்களில் பெரும் பெரும்பான்மையினர் குழந்தைகளாவர் (5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளில் 16.7 சதவீதத்தினருக்கு மட்டுமே ஒரேயொரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது), மேலும் ஐந்து வயது வரையிலான மழலைகளுக்குத் தடுப்பூசியே இன்னும் வரவில்லை.
ஆனால் இதுவே கூட, நிலைமையின் ஆழத்தைக் குறைத்துக் காட்டுகிறது. தற்போதிருக்கும் தடுப்பூசிகளையே தட்டிக்கழிக்க ஓமிக்ரோன் வைரஸிற்கு வீரியம் இருக்கிறது என்பது 'முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டு' இருக்கிறார்கள் என்பது மூன்றாவது, அதாவது 'பூஸ்டர்' மருந்து செலுத்தி இருக்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. அமெரிக்க மக்களில் வெறும் 18 சதவீதத்தினருக்கு மட்டுமே பூஸ்டர் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஓமிக்ரோன் வகைக்கு எதிராக பாதுகாப்பாக இருக்க மூன்றாவது மட்டுமல்ல, மாறாக நான்காவது தவணை மருந்து அவசியப்படுவதாகவும் கூட இப்போது விவாதிக்கப்படுகிறது, இதை இப்போது இஸ்ரேல் 60 வயதினருக்கும் அல்லது மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தி நான்கு மாதங்களுக்கு மேல் ஆனவர்களுக்கும் அங்கீகரித்துள்ளது.
அமெரிக்க மக்களைத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், அவர்களின் பூஸ்டர் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வதே பைடெனின் முக்கிய செய்தியாக இருந்தது. “பூஸ்டர் மருந்துகள் செலுத்தப்பட்டவர்கள் பெரிதும் பாதுகாப்பாக உள்ளனர்,” என்று கூறிய அவர், “அவர்களுடன் இணையுங்கள், எங்களுடன் இணையுங்கள்,” என்றார்.
தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் மற்றும் பூஸ்டர் மருந்து செலுத்தப்படாதவர்கள் அனைவரும் இன்று அவரின் ஆலோசனையைப் பின்பற்றினாலும் கூட, தடுப்பூசிகளின் ஆற்றல் முழுமையாக செயலுக்கு வர இரண்டு வாரங்களாவது ஆகும். இதற்கிடையில், இந்த வைரஸ், தற்போதைய விகிதத்திலேயே, மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும். இது எப்படி இருக்கிறதென்றால், கட்டிடம் எரிந்து கொண்டிருக்கும் போது அங்கிருப்பவர்களை மதிய உணவை முடித்து விட்டு, பின் அருகிலிருக்கும் ஹார்ட்வேர் கடைக்குச் சென்று தீயணைப்பான் வாங்கி வருமாறு கூறுவதற்குச் சமமாக உள்ளது.
அனைத்திற்கும் மேலாக, ஒட்டுமொத்தமாக இந்த பிரச்சினையைப் பைடென் பொய்களின் அடிப்படையில் சித்தரிக்கிறார் — அதாவது புதிய நோயாளிகளின் பாரியளவிலான அதிகரிப்பு குறித்து தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் மட்டுமே கவலைப்பட வேண்டியிருப்பதாக கூறுகிறார்.
மில்லியன் கணக்கானவர்களுக்கு நோய்தொற்று ஏற்படும் என்பதை பைடென் தவிர்க்கவியலாமல் ஒப்புக் கொண்டார். “முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் சிலருக்கும் கோவிட் ஏற்படுவதை நாம் காண்போம், நிறைய எண்ணிக்கையிலும் இருக்கலாம். ஒவ்வொரு அலுவலகத்திலும் ஓமிக்ரோன் தொற்று ஏற்பட்ட நோயாளிகள் இருக்கலாம், இங்கே வெள்ளை மாளிகையில் கூட இருக்கலாம், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியிலும் இருக்கலாம்,” என்றார். ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தீவிரமாக நோய்வாய்ப்படுவது 'பெரிதும் சாத்தியமில்லை' என்று பைடென் வாதிட்டார்.
ஆனால் வைரஸ் தனிநபர்களை அல்ல, சமூகத்தை இலக்கு வைக்கிறது. புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை மில்லியன்களில் இருந்தால், தீவிர நோய்கள் மற்றும் இறப்புகளின் ஒரு சிறிய சதவீதமே கூட ஒரு பேரழிவை உண்டாக்க முடியும்.
34 மாநிலங்களின் புள்ளிவிபரங்களைப் பகுத்தாராய்ந்த ABC News இன் ஒரு சமீபத்திய பகுப்பாய்வு, இந்தாண்டு ஏப்ரலில் இருந்து நவம்பர் வரையிலான திடீர் நோய்தொற்று அதிகரிப்பால் 16,700 பேர் இறந்திருந்ததாகவும், அம்மாநிலங்களின் மொத்த இறப்புகளில் 20 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பதையும் கண்டறிந்தது. இந்த எண்ணிக்கையை ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருத்திப் பார்த்தால், இதன் அர்த்தம் அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 300 பேர் இறக்கிறார்கள் என்றாகிறது. இந்த இறப்புகள் எல்லாம் தற்போதைய ஓமிக்ரோன் வகை அதிகரிப்பதற்கு முன்னர் ஏற்பட்டவை, இந்த ஓமிக்ரோன் வகையோ தடுப்பூசிகளையே அதிகளவில் எதிர்க்கக் கூடியவை.
இந்த வைரஸ் எவ்வளவு வேகமாக பரவினாலும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்ற நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காகவே பைடெனின் உரை கட்டமைக்கப்பட்டிருந்தது. பெற்றோர்களை வேலைக்கு அனுப்ப வேண்டியிருப்பதால், குறிப்பாக பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த அவர் வலியுறுத்தினார்.
“நம் K-12 பள்ளிகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும்,” என்று கூறிய அவர், “விஞ்ஞானம் தெளிவாகவும், சரியாக உள்ளது. பள்ளிகளில் கோவிட்-19 இல் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது நமக்குத் தெரியும். … குழந்தைகள் எந்தவொரு இடத்தில் இருந்தால் பாதுகாப்பாக இருப்பார்களோ அதேயளவுக்கு பள்ளிகளிலும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்,” என்றார்.
இது மற்றொரு பொய். கிடைத்திருக்கும் புள்ளிவிபரங்களின்படி, மிச்சிகன் மாநிலம் உள்ளடங்கலாக, பள்ளிகள் தான் பரந்த சமூக வெடிப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இந்த விஷயத்தைக் குறித்த ஒவ்வொரு தீவிர ஆய்வும் பள்ளிகளை மூடுவதால் பாரியளவில் கோவிட்-19 இன் சமூக பரவல் குறைவதை எடுத்துக் காட்டுகிறது.
இலையுதிர் காலத்தில், டெல்டா வகையின் அதிகரிப்புக்கு மத்தியில், பள்ளிகளை மீண்டும் திறந்ததால், அது குழந்தைகளிடையே நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புக்களைக் கூர்மையாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பாதி பேர் கடந்த நான்கு மாதங்களில் பாதிக்கப்பட்டவர்கள்.
தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஓமிக்ரோன் வகையின் பரவலால், குழந்தைகளின், குறிப்பாக ஐந்து வயதுக்குக் குறைந்த மழலைகளின், இவர்களுக்குத் தடுப்பூசி இல்லை என்கின்ற நிலையில், அங்கே மருத்துமனை அதிகரிப்புகள் கூர்மையாக அதிகரித்துள்ளது. தங்கள் குழந்தைகளுக்குக் கோவிட்-19 ஏற்படும் என்று பயப்படும் பெற்றோர்களுக்காக பைடென் கூறுகையில், “நீங்கள் ஒரு விஷயம் செய்யலாம், செய்ய வேண்டும், என்னவென்றால் நீங்களும், உங்களைச் சுற்றி இருப்பவர்களும், முழுமையாக தடுப்பூசியும் பூஸ்டர் மருந்தும் செலுத்திக் கொள்ளுங்கள்,” என்று மட்டும் கூறினார்.
ஆனால், பைடென் அவரே ஒப்புக் கொண்டதைப் போல, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களும் பூஸ்டர் செலுத்திக் கொண்டவர்களும் கூட இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகலாம் என்பது, அவர்கள் தங்களின் மழலை குழந்தைகளுக்கு நோயை ஏற்படுத்தி விட முடியும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது.
மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இந்த விடுமுறை காலங்களில் பயணிக்கவும் குழுக்களாக ஒன்று கூடவும் ஏற்பாடு செய்துள்ள அவர்களின் திட்டங்களில் எந்த மாற்றங்களும் செய்ய வேண்டாம் என்றும் பைடென் அறிவுறுத்தினார். “உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் பாதுகாப்பாக விடுமுறைகளைக் கொண்டாடலாம் என்றால், சில அமெரிக்கர்கள் ஆச்சரியப்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும்,” என்றார். “ஆமாம் என்பது தான் பதில்… நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால், குறிப்பாக ஒரு பூஸ்டர் மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், நீங்கள் திட்டமிட்டவாறு இந்த விடுமுறைகளைச் சௌகரியமாக கொண்டாடுங்கள்,” என்றார்.
தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் இந்த வைரஸைப் பரப்ப முடியும் என்பதால், மீண்டும், இதன் அர்த்தம் என்னவென்றால் விடுமுறைகளில் 'முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்' பயணித்தாலும் மற்றும் ஒன்றுகூடினாலும் கூட, மில்லியன் கணக்கானவர்களின் வீடுகளும் மற்றும் விமானங்களும் ஓமிக்ரோனுக்கான 'மிகப்பெரும் பரப்பும்' இடங்களாக ஆகக்கூடும். விடுமுறைகளில் ஒன்றுகூடுமாறு மக்களைப் பைடென் ஊக்கப்படுத்துவது 'வெறுமனே தவறான தகவல் வழங்குதல் என்பது மட்டுமல்ல. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சமூக படுகொலை,” என்று தொற்றுநோயியல் நிபுணர் செத் ஜெ. பிரின்ஸ் கருத்துரைத்தார்.
இந்த பெருந்தொற்றின் ஆரம்ப காலமான மார்ச் 2020 ஐ விட இன்று நாடு எவ்வளவோ நல்ல நிலையில் இருப்பதாக பைடென் வாதிடுவது அனேகமாக எல்லா பொய்களிலும் மிகப்பெரிய பொய்யாகும். மார்ச் 2020 இல், கோவிட்-19 ஆல் 1,000 இறப்புகளுக்கும் குறைவாக இருந்தது. இன்றோ, 800,000 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அப்போது நாளாந்த இறப்பு எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்தது; இன்றோ அது 1,200 க்கும் அதிகமாக உள்ளது.
தற்போதைய மட்டங்களிலும் கூட சுகாதார கவனிப்பு உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருப்பதாக கூறும் பைடெனின் வாதத்தைப் பொறுத்த வரையில், ஓமிக்ரோன் வகையின் அதிகரிப்பு ஏற்கனவே அமெரிக்காவில் பரிசோதனை மற்றும் நோயின் தடம் அறியும் செயல்திறனை மூழ்கடித்துள்ளது, விரைவு பரிசோதனை கருவிகள் பற்றாக்குறையில் உள்ளன, பரிசோதனை மையங்களில் வரிசைகள் நிற்கின்றன. அமெரிக்க மருத்துவ அமைப்புமுறை இந்த இரண்டாண்டு கால பெருந்தொற்றில் பாரியளவில் தரங்குறைந்துள்ளது, அதன் மருத்துவப் பணியாளர்களோ களைத்து போயிருக்கிறார்கள், அவர்களில் பலர் மன-அழுத்த நிலைகுலைவுக்குப் பிந்தைய (post-traumatic stress disorder - PTSD) நிலையில் உள்ளனர்.
இறுதியாக, இந்த ஒட்டுமொத்த நிலைமையும் முன்கூட்டியே எதிர்நோக்கப்பட்டவில்லை மற்றும் எதிர்நோக்கக் கூடியதாக இருக்கவில்லை என்று பைடென் வாதிட்டார். “இது இந்தளவுக்கு வேகமாக பரவும் என்று யாரும் எதிர்பார்த்ததாக நான் நினைக்கவில்லை,” என்றார். ஜனாதிபதி அமெரிக்க மக்களை முட்டாள்களாக நினைக்கிறார். விஞ்ஞானிகளும் தொற்றுநோயியல் நிபுணர்களும், அத்துடன் உலக சோசலிச வலைத் தளமும், ஓராண்டுக்கும் மேலாக, தொடர்ந்து இந்த வைரஸ் பரவுவதானது புதிய இன்னும் தொற்றக்கூடிய திரிபுகள் பரிணமிக்க வழிவகுக்கும் என்று எச்சரித்து வந்துள்ளனர்.
இந்த பொய்கள் மற்றும் பொய்மைப்படுத்தல்கள் அனைத்தும் ஒன்றே ஒன்றுக்காக செய்யப்பட்டன: வோல் ஸ்ட்ரீட்டுக்காக. இலாபத்திற்கும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் முடிவில்லா செல்வ வள குவிப்புக்கும் குழிபறிக்கும் எந்த நடவடிக்கைகளும் எடுக்க மாட்டோம் என்று பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கு உறுதிப்படுத்துவதே பைடெனின் பணியாக உள்ளது. அவர் கருத்துக்களுக்கு வோல் ஸ்ட்ரீட் உற்சாகமுடன் விடையிறுத்தது, நேற்று டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி குறியீடு நேற்று 560 புள்ளிகள் (1.6 சதவீதம்) அதிகரித்தது.
இந்த தருணத்தில், சந்தைகளில் விற்றுத்தள்ளல் ஏற்படுவது தான் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஏதோ தீவிரமாக செய்யப்படுகிறது என்பதற்கான மிகவும் நம்பகமான அறிகுறியாகும். ஆனால் இதற்கு தொழிலாள வர்க்கத்தின் தலையீடு அவசியப்படுகிறது. “கோவிட்-19 உடன் வாழும்' பைடெனின் கொள்கை, ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும் மீண்டும் மீண்டும் பின்பற்றப்படுகின்ற இது, நிராகரிக்கப்பட வேண்டும்.
தொழிலாள வர்க்கம் 'பூஜ்ஜிய கோவிட்' கொள்கைக்காக, அதாவது, இந்த வைரஸை அகற்றுவதும் மற்றும் முடிவாக முற்றிலும் ஒழிப்பதற்குமான கொள்கைக்காக, போராட வேண்டும். அத்தகைய ஒரு மூலோபாயம் நம்பகமானதே என்பது சீனா விஷயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது, அது 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இறப்புகளை 5,000 க்கும் குறைவாக மட்டுப்படுத்தி வைத்துள்ளது. இந்த கொள்கை அமெரிக்காவிலும் பிரதான முதலாளித்துவ நாடுகளிலும் நிகாரிக்கப்படுகின்றன ஏனென்றால் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவது மற்றும் பள்ளிகளை மூடுவது, அத்துடன் பாரிய பரிசோதனை, நோயின் தடம் அறிதல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் உட்பட அதை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான பொது சுகாதார நடவடிக்கைகள் பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் நலன்களுக்கு எதிராக செல்கின்றன.
இதனால் தான், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளைக் கோரவும் மற்றும் அமுலாக்கவும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்கி, ஆளும் உயரடுக்கு மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு புரட்சிகர இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், இந்த மூலோபாயத்திற்கான போராட்டத்தைத் தொழிலாள வர்க்கம் கையிலெடுக்க வேண்டும்.
மேலும் படிக்க
- ஓமிக்ரோன் வகை உலகெங்கிலும் அதிகரிக்கின்ற நிலையிலும் அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன
- பைடென் நிர்வாகம் பொய்யுரைக்கிறது: ஓமிக்ரோன் அச்சுறுத்தல் குறித்து விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்
- அமெரிக்காவில் ஓமிக்ரோன் மேலோங்கிய வகையாக எழுச்சியடைகையில், பைடென் "தடுப்பூசி மட்டுமே போதும்" மூலோபாயத்தை இரட்டிப்பாக்குகிறார்