இலங்கை அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராகப் போராடுவதற்கு தேவையான சோசலிச கொள்கைகள் பற்றி சோ.ச.க. கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கை, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும் இணைந்து, ஒரு வெற்றிகரமான இணையவழிப் பகிரங்க கூட்டத்தை நடத்தின. இக் கூட்டத்தில், இலங்கை முழுவதிலும், அதேபோல், இந்தியா மற்றும் மத்திய கிழக்கில் இருந்தும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் கலந்து கொண்டனர். 'இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிக்கன வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகப் போராடுவது எவ்வாறு?' என்ற தலைப்பில் நடந்த இந்தக் கூட்டத்தின் வீடியோவை, இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர் மற்றும் அது முன்னூறுக்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோ.ச.க. துணை தேசிய செயலாளர் தீபால் ஜயசேகர, அரசாங்கத்தின் கொடூரமான சமூக தாக்குதல்களுக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்கள் முன்னுள்ள பிரதான சவால் ஒரு சோசலிச அரசியல் முன்னோக்குடன் தங்களை ஆயுதபாணியாக்குவதாகும் என்று சுட்டிக்காட்டினார்.

சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் சமன் குணதாச பிரதான அறிக்கையை முன்வைத்தார். பொருளாதார நெருக்கடியின் சுமையை மக்கள் மீது எவ்வாறு சுமத்துவது என்பதுதான் அனைத்து இலங்கை முதலாளித்துவக் கட்சிகளினதும் முக்கிய அக்கறையாக இருக்கின்றது. ஆனால் சோ.ச.க. உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காக எவ்வாறு போராடுவது என்பது பற்றி ஆலோசிக்கவே இந்தக் கூட்டத்திற்கு அழைப்புவிட்டுள்ளது என அவர் கூறினார்.

இலங்கை சோ.ச.க. கூட்டம்

அரசாங்கம் 'வரலாற்றின் மிகவும் சவாலான காலகட்டத்தை' எதிர்கொண்ட போதிலும், 'பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் அத்தகைய சவால்களை சமாளிப்பதற்கும் தேவையான எல்லா பலத்தையும் கொண்டுள்ளது' என, நிதி அமைச்சர் பசில் இராஜபக்ஷ தனது வரவு செலவுத்-திட்ட உரையில் பிரகடனம் செய்ததை குணதாச சுட்டிக்காட்டினார்.

கொழும்பு அரசாங்கம், பெருவணிக நிறுவனங்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பதற்காக, தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கின்றது என்பதே, இந்த கருத்தின் அர்த்தமாகும் என, குணதாச தெரிவித்தார். இது, முதலாளிகளுக்கு வரி விடுவிப்புக்களை வழங்கும் அதே வேளை, தொழிலாளர்களுக்கு ஊதிய முடக்கம் மற்றும் பொது சுகாதாரம், சமுர்த்தி (ஏழைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட நலன்புரி கொடுப்பனவு), நீர் வழங்கல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் கிராமப்புற வீடுகளுக்கான ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைப்பதை உள்ளடக்கியதாகும்.

கோவிட்-19 தொற்றுநோயின் மோசமான பொருளாதார தாக்கத்திற்கு விடையிறுக்கும் வகையில், உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கினரால் இதேபோன்ற வர்க்கப் போர் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். இலங்கையின் கடனில் சிக்கியுள்ள பொருளாதாரம் இப்போது எத்தியோப்பியா, ஈராக் மற்றும் துனிசியாவுடன் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக குணதாச குறிப்பிட்டார்.“இந்த நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது திணிக்க பாதீடு முன்மொழிகிறது. 2020 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.7 சதவீதத்தை தாண்டிய வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை அடுத்த ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.8 சதவீதமாகக் குறைப்பதற்காக அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது பாரிய தாக்குதலை நிச்சயமாக உள்ளடக்கும்,” என அவர் கூறினார்.

அரசாங்கத்தின் முக்கிய இலக்கு பொதுத்துறை ஆகும், அந்த துறை 'தாங்க முடியாத சுமை' என்ற நிதியமைச்சரின் அறிவிப்பை மேற்கோள் காட்டிய குணதாச, கொழும்பின் பிரதிபலிப்பானது பெரிய அளவிலான அரச துறை வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் மற்றும் ஒரு பரந்த தனியார்மயமாக்கல் வேலைத்திட்டத்தை உள்ளடக்கியதாகும், என தொடர்ந்தார்.

ஆயிரக்கணக்கான தொழிற்சாலை தொழிலாளர்கள் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, டொலர் கையிருப்பை அதிகரிப்தற்காக ஏற்றுமதி-உற்பத்தி தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தன. வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணவரவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, நோயிலிருந்து பாதுகாப்பின்றி கொழும்பு அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர், என்று பேச்சாளர் கூறினார்.

குணதாச ஒரு கேள்வியை முன்வைத்தார்: 'தொழிலாள வர்க்கம் இத்தகைய கொடூரமான தாக்குதல்களை எதிர்கொண்டபோது, [தொற்றுநோய் காலத்தில்] பெருநிறுவனங்கள் மற்றும் பெருவணிகங்கள் உட்பட முதலாளித்துவ வர்க்கத்திற்கு என்ன நடந்தது.?'

பெருவணிக நிறுவனங்களுக்கு பாரியளவிலான சலுகை நிதிகளை வழங்குமாறும், அதேபோல் மேலதிக வரி குறைப்புக்களையும் மற்றும் ஏனைய சலுகைகளையும் வழங்குமாறும் ஜனாதிபதி இராஜபக்ஷ, மத்திய வங்கிக்கு எவ்வாறு கட்டளையிட்டார், என்பதை அவர் விபரமாக விளக்கினார். 'தொழிலாளர்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட சமூக செல்வம் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது,' என்று அவர் கூறினார்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் இந்த சிக்கன நடவடிக்கை தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, என்று குணதாச கூறினார். இலங்கையிலும் உலகெங்கிலும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் வெடித்ததை அவர் சுட்டிக்காட்டினார். இராஜபக்ஷ, அவரது உலகளாவிய சமதரப்பினரின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப, அதிகரித்து வரும் சமூக எதிர்ப்புக்களுக்குப் பதிலடி கொடுப்பதற்காக சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்பினார்.

குணதாச, இலங்கையின் எதிர்க் கட்சிகளின் வகிபாகத்தை ஆய்வு செய்தார். 'முதல் பார்வையில், இந்த கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிப்பது போல் தெரிகிறது, ஆனால் அவர்கள் பேசுவதை நீங்கள் உற்று நோக்கினால், அவர்கள் அரசாங்கத்தின் திட்டத்தை செயல்படுத்த சிறந்த வழிகள் குறித்தே அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுகிறார்கள்.”

பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அதிக கடன்களை பெறுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தன.

மக்கள் விடுதலை முன்னணி, இந்த நெருக்கடியை அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடியின் விளைவு என்று பொய்யாகக் கூறிக்கொண்டு, இந்தப் பிரச்சினைகளின் மூலவேர் முதலாளித்துவ அமைப்புமுறையே என்ற உண்மையை மூடிமறைத்தது.

போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி, முதலாளித்துவக் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு 'பரந்த இடது முன்னணிக்கு' அழைப்பு விடுத்ததன் மூலம், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் பொறியை அமைத்துக் கொண்டிருந்தது.

'இந்த குழுக்கள் அனைத்தும் பிற்போக்கு தேசியவாத வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை' என்று பேச்சாளர் கூறினார். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாத்து தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும், என அவர் மேலும் கூறினார்.

அத்தகைய ஒரு போராட்டத்தைத் தொடங்குவதற்கு, ஒவ்வொரு வேலைத் தளங்களிலும் உள்ள தொழிலாளர்கள், அவர்களது வேலைத் தராதரங்கள் அல்லது பிற செயற்கையான பிளவுகளைக் கடந்து, தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து பிரிந்து, சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி, சோசலிசக் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்காகப் போராட வேண்டும் என்று குணதாச தெரிவித்தார்.

“அத்தகைய அரசாங்கம் முதலாளித்துவ சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். உழைக்கும் மக்கள் தனியார் இலாபத்திற்காக அன்றி, தங்கள் உழைப்பின் சாதனைகளை நேரடியாக சமூகத் தேவைக்காகப் பயன்படுத்த வேண்டும். சமூகத்தின் வளங்கள் உழைக்கும் மக்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்,' என்று அவர் வலியுறுத்தினார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) தலைமையிலான போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும், உலக சோசலிச வலைத் தளத்தால் தொடங்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றுநோய் பற்றிய உலகளாவிய தொழிலாளர் விசாரணைக்கு ஆதரவளிக்குமாறும் பார்வையாளர்களுக்கு அழைப்புவிடுத்து, குணதாச தனது உரைய நிறைவுசெய்தார்.

கேள்வி-பதில் நிகழ்ச்சியுடன் கூட்டம் நிறைவு பெற்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் விவசாயிகளின் போராட்டங்களை ஒன்றிணைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த குணதாசா, இரு நாடுகளிலும் உள்ள ஏழை விவசாயிகளை ஒன்றுதிரட்ட சோசலிச மற்றும் சர்வதேச கொள்கைகளின் அடிப்படையில் இந்திய மற்றும் இலங்கை தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த சுதந்திர இயக்கத்தின் அவசியத்தை விளக்கினார்.

இந்திய ஸ்ராலினிச கட்சிகளின் தலமையில் உள்ள தொழிற்சங்கங்கள் உட்பட, இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தேசியவாத தொழிற்சங்கங்கள், அத்தகைய ஒரு ஒருங்கிணைந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கின்றன, என அவர் கூறினார். தெற்காசிய பிராந்தியத்தில் இந்த முன்னோக்கிற்காக போராடும் ஒரே கட்சி ட்ரொட்ஸ்கிசவாத சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

தென்னிந்தியாவில் இருந்து, ஜாதி அடிப்படையிலான கட்சிகளின் பங்கு பற்றி, ஒருவர் கேட்ட கேள்விக்கு கூட்டத்திற்கு தலைமைதாங்கிய ஜயசேகர பதிலளித்தார். இந்தக் கட்சிகளின் முக்கியப் பாத்திரம், பெரும்பான்மையான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் இழப்பில், சம்பந்தப்பட்ட சாதிகளில் ஒரு சிறிய உயரடுக்கிற்கு சலுகைகளைப் பெற்றுத் தரும் அதே வேளை, தொழிலாளர்களைப் பிளவுபடுத்துவதே அவர்களின் நடவடிக்கை என்று ஜயசேகர விளக்கினார்.

இந்தியா உட்பட பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள ஏகாதிபத்திய-சார்பு முதலாளித்துவ வர்க்கம், 'ஜனநாயகப் புரட்சியின் போது தீர்க்கப்படாத பிரச்சனைகளான விவசாயிகளின் பிரச்சினைகள், மற்றும் சாதிய ஒடுக்குமுறை போன்றவற்றை தீர்ப்பதற்கு இலாயக்கற்றவை ஆகும்' என்று அவர் தொடர்ந்தார். ஏனைய அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்று திரட்டிர சோசலிச கொள்கைகளுக்காகப் போராடுவதன் மூலம் இப்பிரச்சினைகளை தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

Loading