அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு, இலங்கை தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு சோசலிச கொள்கைகளுக்காகப் போராட வேண்டும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கைத் தொழிலாளர்களின் வளர்ந்து வரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் அலையானது ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்துடனும் முழு முதலாளித்துவ வர்க்கத்துடனும் ஒரு அரசியல் மோதலை நோக்கி வேகமாக நகர்கிறது.

டிசம்பர் 8, 2021 அன்று பாராளுமன்றச் சந்தியில் ஊதிய உயர்வுக்கான தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த போராட்டம் (WSWS Media)

கோவிட்-19 வைரஸால் தூண்டப்பட்ட உலகளாவிய நெருக்கடி, இலங்கைப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்து, அரசாங்கம் மற்றும் அதன் பெருவணிக பங்காளிகளால் சுமத்தப்பட்டுள்ள சகிக்க முடியாத சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாளர்களையும் ஏழைகளையும் தள்ளியுள்ளது.

இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பத்து இலட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சமீப வாரங்களாக நாடு முழுவதும் இந்த சமூக அமைதியின்மை தீவிரமடைந்துள்ளது.

 டிசம்பர் 8 அன்று, 5 மில்லியனுக்கும் அதிகமான அரச ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை நடத்திய அதே வேளை, பல்லாயிரக்கணக்கான அரச சுகாதார ஊழியர்கள் மாகாண அளவிலான தொடர் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தைத் தொடங்கினர். ஊதிய அதிகரிப்பு வேலை நிலைமைகளில் முன்னேற்றத்தையும் அவர்கள் பிரதானமாக கோரினர்.

அதே நாளில், 500க்கும் மேற்பட்ட இலங்கை மின்சார சபை (இ.மி.ச.), துறைமுகம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், கூட்டாக மத்திய கொழும்பில், இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 டிசம்பர் 13 அன்று, அகரபதன தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான 12 தேயிலைத் தோட்டங்களில் உள்ள சுமார் 10,000 தொழிலாளர்கள் வேலைச் சுமை அதிகரிப்பு மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ஒரு வார வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர்.

 டிசம்பர் 14 அன்று, சுமார் 16,000 தபால் ஊழியர்கள் ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தினர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு சமாந்தரமாக, பல்லாயிரக்கணக்கான ஏழை கிராமப்புற விவசாயிகள் உரம் மற்றும் பிற விவசாய மானியங்களைக் கோரி ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்த போராட்டங்களைத் தொடர்கின்றனர்.

இந்த ஆண்டு நடந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களின் அளவை பார்த்தால் அது இரண்டு தசாப்த காலத்தின் பின்னரான அதிகளவான எண்ணிக்கை ஆகும். 1980 ஜூலையில் தொழிற்சங்கங்களால் அரச ஊழியர்களின் பொது வேலைநிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் இந்தளவு போராட்டங்கள் காணப்படவில்லை.

டிசம்பர் 08, 2021 அன்று தனியார்மயமாக்கலுக்கு எதிராக கோட்டை ரயில் நிலையத்தில் துறைமுகம், மின்சாரம் மற்றும் பெட்ரோலியத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் (WSWS Media)

இந்த ஆண்டு வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் என்ற இன எல்லைகளுக்கு அப்பால் தொழிலாளர்களை ஒன்றிணைத்துள்ளதுடன், இது வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக நிலைமைகளைப் பாதுகாப்பதற்கான பொதுவான வர்க்க உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

எவ்வாறாயினும், இந்த போராட்டங்களும், தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பும், போர்க்குணம் மட்டும் போதாது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். முதலாளித்துவ அமைப்பு மற்றும் அரசுடன் பிணைந்துள்ள தொழிற்சங்கங்கள், அத்தகைய எந்தப் போராட்டத்தையும் எதிர்க்கின்றன, மேலும் அதைத் தடுக்க எல்லாவற்றையும் செய்கின்றன.

தொற்றுநோய் உருவாக்கிய சுகாதார நெருக்கடி, உணவுப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் பெரும் விலை அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மீதான வெகுஜன கோபத்திற்கு பிரதிபலிக்கும் வகையில், தொழிற்சங்கங்கள் இந்த ஆண்டு தொழில்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. விரைவில் வேலைநிறுத்தங்களைக் காட்டிக்கொடுத்த தொழிற்சங்கங்கள், அரசாங்கம் அல்லது பெரும் வணிகர்களுடன் இழிவான பேரம் பேசலில் இறங்கின.

ஜூலை 12 அன்று, ஊதிய அதிகரிப்புக்கான தங்கள் தசாப்தகால கோரிக்கையின் பேரில் 250,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 100 நாள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். சம்பள உயர்வை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்தது.

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் உட்பட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள், ஆசிரியர்களின் கோபத்தை திசை திருப்ப பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன. பின்னர் அவர்கள் அரசாங்கத்துடன் உடன்பாட்டுக்குச் சென்று, வேலைநிறுத்தத்தை நிறுத்திவிட்டு, முதலில் கோரப்பட்ட சம்பள உயர்வில் மூன்றில் ஒரு பங்கை ஏற்றுக்கொண்டனர். அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அக்டோபர் 21 முதல், கோவிட்-19 தொற்றுநோயில் இருந்து பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறக்க தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டன.

இந்த ஆண்டு, சுகாதாரப் ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் அல்லது சுகாதார ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் கீழ் தனித்தனியாக அழைப்புவிடுக்கப்பட்ட, குறைந்தபட்சம் 30 வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றுள்ளனர். ஜூன் மாதம், தொழிற்சங்க கூட்டமைப்பானது அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த ஒரு அற்ப கொடுப்பனவை ஏற்றுக்கொண்டதுடன் ஊதிய உயர்வுக்கான நீண்டகால கோரிக்கையை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது.

டிசம்பர் 8 அன்று, ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த இலங்கை அரச உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம், ஆரம்பத்தில் 18,000 ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பை கோரியது. ஆனால் அது, ஜனாதிபதி இராஜபக்ஷவிடம், 'அரசாங்கத்தின் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு' தனது சம்பளக் கோரிக்கையை வெறும் 10,000 ரூபாயாகக் குறைத்துக்கொள்வதாகக் கூறியது. நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, திறைசேரியில் பணம் இல்லை என அறிவித்து தொழிற்சங்கத்தின் புதிய கோரிக்கையை முற்றாக நிராகரித்தார்.

அதேபோன்று, தனியார் துறை சார்ந்த தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட கம்பனிகளும் சுதந்திர வர்த்தக வலய கம்பனிகளும் முன்னெடுத்த சம்பள வெட்டு, வேலை வெட்டு மற்றும் உயர் உற்பத்திக் கோரிக்கைகளை ஆதரித்தன.

துறைமுகம், மின்சாரம் மற்றும் பெட்ரோலியத் தொழிலாளர்கள் டிசம்பர் 08, 2021 அன்று ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர் (WSWS Media)

இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் இராஜபக்ஷ அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது பொருளாதார நெருக்கடியை இடைவிடாமல் சுமத்துவதற்கு வசதி ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. அரசாங்கத்திடமும் பெருவணிகத்திடமும் அடிமைத்தனமாக வேண்டுகோள் விடுக்கும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களால் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, ஊதியத்தை உயர்த்தவும், நிலைமைகளை மேம்படுத்தவும், தனியார்மயமாக்கலை நிறுத்தவும் நிர்ப்பந்திக்க முடியும் என்ற மாயையை ஊக்குவித்து வருகின்றன.

எவ்வாறாயினும், அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதுடன் சமரசத்திற்கு வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக 3.6 சதவீதமாக சரிந்தது, இந்த மாதம் அந்நிய செலாவனி கையிருப்பு சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துபோயுள்ளது, மேலும் அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையின் விளிம்பில் உள்ளது.

நிதியமைச்சர் பசில் இராஜபக்ஷ, அடுத்த வருடத்தில் வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு ஏற்படும் என அண்மையில் எச்சரித்திருந்த போதிலும், அரசாங்கம் நாட்டில் 'பஞ்சத்திற்கு' இடமளிக்காது என மக்களுக்கு உறுதியளித்தார். உண்மையில், இலங்கையில் ஒரு மூலையில் பாரிய பட்டினி நிலவுகிறது, பலர் ஏற்கனவே பசியுடன் உள்ளனர். இந்த மோசமான நிலைமைகள் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதியாகும். எந்த நாட்டிற்கும் தேசிய ரீதியில் தப்பிக்கும் பாதை கிடையாது.

இராஜபக்ஷ ஆட்சியானது பெருவணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலாபங்களை அதிகரிப்பதை உறுதிப்படுத்துவதற்கு இயன்ற அனைத்தையும் செய்து வருகின்ற அதேவேளை, தனது பாரிய வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதை பேணுவதாக சர்வதேச நிதி வழங்குனர்களுக்கு உறுதியளிக்கின்றது.

அக்டோபரில், இராஜபக்ஷ அரசாங்கம் விலைக் கட்டுப்பாடுகளை அகற்றத் தொடங்கி, பரவலான பணவீக்கத்தைக் கட்டவிழ்த்து விட்டது. நவம்பரில் விலைக் குறியீடு 9.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிட்டால், 12 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயர்வாகும். இந்த கொடூரமான சமூகத் தாக்குதல்களுக்கு நேர் மாறாக, அரசாங்கம் பெருவணிக மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரிய வரி குறைப்புக்கள் மற்றும் பிற சலுகைகளையும் வழங்கியுள்ளது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அனைத்து வரலாற்று சாதனைகளையும் முறியடித்து 292 பில்லியன் ரூபாய்கள் கூட்டு லாபத்தை ஈட்டியுள்ளன.

மக்களின் உயிர்வாழ்வு இழக்கப்படக் கூடியவை என்பதே அரசாங்கத்தின் முழுக் கொள்கை ஆகும். இது தொற்றுநோய்க்கான அதன் குற்றவியல்தனமான அலட்சியப் பிரதிபலிப்பில் இது வெளிக்காட்டப்பட்டுள்ளது. அது, மிகக் குறைவாக மதிப்பிடப்படும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கோவிட்-19 வைரஸினால் கிட்டத்தட்ட 15,000 மரணங்கள் மற்றும் 577,000க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுத்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடுகளிலும் பெருமலவில் தலைதூக்கும் ஓமிக்ரோன் மாறுபாடு, இப்போது இலங்கையிலும் உள்ளது. கொழும்பானது மிகவும் வேகமாகப் பரவக்கூடிய ஒமிக்ரோன் மாறுபாட்டை முற்றாக அலட்சியம் செய்து, அதன் கொலைகாரத்தனமான 'வைரஸுடன் வாழவேண்டும்' என்ற கொள்கைகளுடன் தொடர்கிறது.

தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் அதிகரித்து வரும் போர்க்குணத்திற்கு இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிரதிபலிப்பு, ஒரு கொடூரமான அரச ஒடுக்குமுறைக்கு விரைவாகத் தயாராகும் அதேவேளை, இந்தப் போராட்டங்களைத் தடம் புரட்டுவதற்கு தொழிற்சங்கங்களைப் பயன்படுத்துவதும் ஆகும்.

இந்தத் தயாரிப்பில், ஒரு மில்லியன் அரசுத் தொழிலாளர்களை பாதிக்கும் கொடூரமான அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் திணிப்பும், வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு கடுமையான அபராதம் விதித்தல் மற்றும் நீண்டகால சிறைத்தண்டனை விதித்தல் ஆகியவற்றுடனான தடையும் அடங்கும். தொழிற்சங்கங்கள் எதுவும் இந்த கொடூரமான சட்டத்தை எதிர்க்கவில்லை.

இம்மாத தொடக்கத்தில், ஆழமடைந்துவரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி இராஜபக்ஷ திடீரென பாராளுமன்றத்தை டிசம்பர் 12 முதல் ஜனவரி 18 வரை ஒத்திவைத்தார். இலங்கையின் பெருவணிகமான டெயிலிஎப்டி (Dailyft) பத்திரிகை இந்த முடிவை ஆதரித்தது. இந்த ஒத்திவைப்பு, 'தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலைக்கு சிறப்பாக பிரதிபலிக்கும் வகையில் ஒரு இருப்பு கணக்கெடுப்பை செய்து, அதிக ஸ்திரத்தன்மைக்காக உறுதியான நடவடிக்கைகளை எடுத்துரைக்க...” ஜனாதிபதியை அனுமதிக்கும் என்று அது அறிவித்தது. தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலை மற்றும் உறுதியான நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது… [அதிக ஸ்திரத்தன்மைக்கு]. ஆளும் உயரடுக்கால் கோரப்படும் 'அதிக ஸ்திரத்தன்மை' என்பது தொழிலாள வர்க்கத்தை ஈவிரக்கமற்ற முறையில் ஒடுக்குவதே ஆகும்.

அவரது ஜனாதிபதி காலம் முழுவதும், இராஜபக்ஷ தனது நிர்வாகத்தின் இராணுவமயமாக்கலை முடுக்கிவிட்டார். சம்பள அதிகரிப்பு, பொது சுகாதாரம் மற்றும் கல்வி அல்லது விவசாயிகளுக்கான உர மானியங்களுக்கு அரசாங்கத்திடம் 'பணம் இல்லை' என்று கொழும்பு வலியுறுத்துகின்ற அதே நேரம், பாதுகாப்பு செலவினங்களை ஆடம்பரமாக உயர்த்துகிறது.

அதே சமயம், தொழிற்சங்கங்களும் போலி-இடது குழுக்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க ஒரு 'பரந்த முன்னணி' தேவை என்று கூறி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற எதிர் முதலாளித்துவக் கட்சிகளுடன் தொழிலாளர்களை கட்டிப்போடும் முயற்சிகளைத் தொடர்கின்றன.

தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகளை நசுக்குவதில் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இந்தக் கட்சிகள், இராஜபக்ஷ ஆட்சியுடன் எந்த அடிப்படை வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை, அவர்கள் அதிகாரத்தில் இருந்தால் இதேபோன்ற சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவார்கள்.

தொழிலாள வர்க்கம் பிரமாண்டமான ஆபத்துக்களை எதிர்கொள்வதுடன் அது அரசியல் விஷயங்களைத் தன் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முதலாவதாக, தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களின் சொந்தப் பிரதிநிதிகளைக் கொண்ட நடவடிக்கைக் குழுக்களை அவசரமாக உருவாக்க வேண்டும்.

இரண்டாவதாக, தொழிலாளர்கள் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு கன்னையிலிருந்தும் மற்றும் அவர்களது போலி-இடதுகளின் பிடியில் இருந்தும் விலகி, இராஜபக்ஷ ஆட்சிக்கும் முதலாளித்துவ இலாப முறைமைக்கும் எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

அனைத்து வெளிநாட்டு கடன் மீள் செலுத்தலும் நிராகரிக்கப்பட வேண்டும். ஒரு சிலரின் இலாப நலன்களுக்காக அல்ல, பெரும்பான்மையினரின் தேவைகளுக்கு சேவை செய்ய பொருளாதாரம் மேலிருந்து கீழாக மறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அனைத்து பெரிய நிறுவனங்கள், தோட்டங்கள் மற்றும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த, தொழிலாளர்கள் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டி, சர்வதேச சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும். அத்தகைய போராட்டத்தை சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே நடத்த முடியும். தேசிய தீர்வு என்பது கிடையவே கிடையாது. ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் மீதான தாக்குதலின் மூலகாரணம், கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரப்படுத்தப்பட்ட உலகளாவிய முதலாளித்துவத்தின் நெருக்கடியே ஆகும்.

இந்த சர்வதேச போராட்டத்தை ஒழுங்கமைக்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியில் சேர வேண்டும். இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்னோக்கு ஆகும். எமது வேலைத் திட்டத்தைப் படித்து, இந்தப் போராட்டத்தில் எங்களுடன் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading