மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் ஜனாதிபதி காஸிம் யோமார்ட் டோகாயேவ் இன் தொடர்ச்சியான ஆட்சி, பெரும் சவாலாக விளங்கும் திரவ எரிவாயுவின் (LPG) விலை உயர்வுக்கான வெகுஜன எதிர்ப்பு அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
வியாழன் அன்று, கசாக் அரசாங்கம் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக இராணுவத்தை அணிதிரட்டியது. நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியின் 'தெருக்களை சுத்தப்படுத்தும்' 'பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில்', டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும், 2,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சமூக ஊடக செயலியான டெலிகிராமில் உள்ள தகவல்கள் அரசின் நடவடிக்கையால் சமீபத்திய நாட்களில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் மரணம் மற்றும் டஜன் கணக்கானவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன.
••••
கஜகஸ்தானில் உள்ள அரசியல் நெருக்கடி, ஜனவரி 2 ம் தேதி எரிவாயு விலை உயர்வுகளுக்கு எதிராக வெகுஜன ஆர்ப்பாட்டங்களுடன் தொடங்கி, மத்திய ஆசியா முழுவதும் புவிசார் அரசியல் மற்றும் சமூக பதட்டங்களின் மையப்புள்ளியாக மாறிவிட்டது.
கிரெம்ளினின் ஆதரவுடன், ஜனாதிபதி காஸிம் யோமார்ட் டோகாயேவ்இன் அரசாங்கம் அசாதாரண வன்முறை மூலம் எதிர்ப்புகளை ஒடுக்கி, நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியை ஒரு போர் மண்டலமாக மாற்றியுள்ளது.
நாடு முழுவதும் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஜனாதிபதி டோகாயேவ் துருப்புக்களுக்கு 'எச்சரிக்கை இல்லாமல் சுட' உத்தரவிட்டுள்ளார். கசாக் அரசாங்கத்தால் மறுக்கப்பட்ட அறிக்கைகள், குறைந்தது 164 பேர் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன. நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் 4,000 பேர் கைது செய்யப்பட்டதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு 'தெருக்களை சுத்தப்படுத்தும்' 'பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை' இன்னும் நடந்து வருகிறது.
கடந்த வாரம் 95 சதவீத மக்களால் இணையத்தை அணுக முடியாததாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இணைய முடக்கம் தகவல்தொடர்பு மட்டுமின்றி உணவு விநியோகத்தையும் சீர்குலைத்து, உணவுப் பற்றாக்குறையைத் தூண்டி மற்றும் வங்கிகளில் மக்கள் குவிவது அதிகரித்தது.
வியாழன் அன்று, கஜகஸ்தானுக்கு கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பின் (CSTO) கட்டமைப்பிற்குள் 2,500 ரஷ்ய துருப்புக்கள் அனுப்பப்பட்டன. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு 1992 இல் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டதிலிருந்து முதல் இராணுவத் தலையீடு இதுவாகும். அதன் கூட்டணி உறுப்பினரான பெலாருஸ் மற்றும் பிற நாடுகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான துருப்புக்கள் வந்துள்ளன.
ரஷ்ய செய்தித்தாள் Nezavisimaya Gazeta இன் படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷ்யாவின் ஆண்டின் முக்கிய விடுமுறைக் காலமான கடந்த வாரம் முழுவதும் தொலைபேசியில் செலவழித்து இந்த தலையீட்டைத் திட்டமிட்டார். பல ரஷ்ய செய்தி நிறுவனங்கள் எதிர்ப்புகளை 'படுகொலைகள்' என்று கண்டித்துள்ளன, அதே நேரத்தில் கிரெம்ளின் அவை 'வெளித்தலையீட்டின்' விளைவு என்று கூறுகிறது.
எவ்வாறாயினும், சுரங்க நகரமான ஷனாவோஷென் இல் தொடங்கிய எதிர்ப்புக்கள் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளின் வெளிப்பாடாக இருந்தாலும்,, கடந்த செவ்வாய்கிழமை அல்மாட்டி நகரில் தொடங்கிய வன்முறையான மோதல்கள் அரசு எந்திரம் மற்றும் ஆளும் வர்க்கத்திற்குள்ளான மோதலில் இருந்து தோன்றியதாக தெரிகிறது. ஒரு தரப்பு தற்போதைய ஜனாதிபதி ஜோமார்ட் டோகாயேவ்வை மையமாகக் கொண்டுள்ளது. மறுதரப்பில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நர்சுல்தான் நாசர்பயேவின் குடும்பம் மற்றும் கூட்டாளிகள் உள்ளனர்.
1991 முதல் 2019 வரை கஜகஸ்தானை ஆட்சி செய்த மற்றும் கஜகஸ்தானில் முதலாளித்துவ மறுசீரமைப்பை மேற்பார்வையிட்ட முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவ அதிகாரியான 81 வயதான நாசர்பயேவ் தற்போது 1 பில்லியன் டாலர் நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். பின்னர் அவர் இன்னொரு முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவாதியான டோகாயேவ் இடம் ஜனாதிபதி பதவியை கையளித்தார். இருப்பினும், நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் பெரும் பங்குகளை வைத்திருக்கும் நாசர்பயேவ் மற்றும் அவரது குடும்பம், நாட்டின் அரசியலை கட்டுப்பாட்டிலும் அதன் பொருளாதாரத்தின் பெரும் பகுதியிலும் முக்கிய பங்கு வகிப்பதாக இன்னும் கருதப்படுகின்றது.
செவ்வாயன்று, டோகாயேவ் பாதுகாப்பு குழுவின் தலைவர் பதவியில் இருந்து நாசர்பயேவை நீக்கி தன்னை அவரது வாரிசாக அறிவித்தார். டோகாயேவ் மேலும் நசர்பயேவ்வின் பல குடும்ப உறுப்பினர்களை செல்வாக்குமிக்க பதவிகளில் இருந்து நீக்கியதோடு, நசர்பயேவ் இன் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான கரீம் மாசிமோவ் இனை பாதுகாப்பு சேவைகள் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். வெள்ளிக்கிழமை, மாசிமோவ் கைது செய்யப்பட்டு, தேசத்துரோக குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். டோகாயேவ் அரசாங்கத்தையும் பதவி நீக்கம் செய்து, தனது நெருங்கிய கூட்டாளிகள் பலரை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு எந்திரத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமித்தார்.
ஜேர்மன் செய்தி இதழான Der Spiegel இடம் பேசுகையில், மத்திய ஆசிய நிபுணர் அர்க்காடி டுப்நோவ் பின்வருமாறு கூறினார். “நாசர்பயேவ் இன் நிலை எப்படி இருந்தாலும், அவருடைய வம்சமும் அவரது வட்டமும் உள்ளது. மேலும் அவர்கள் பாதுகாப்புப் படைகளின் சில பகுதிகளை வெளிப்படையாகக் கட்டுப்படுத்துகிறார்கள். [நாசர்பயேவை அகற்றிய பின்னர்] டோகேவ் உடனடியாக கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். குழப்பமான, ஒழுங்கமைக்கப்படாத, பொதுமக்கள் எதிர்ப்புக்களுக்குப் பதிலாக, மூன்றாவது சக்தி ஒன்று தெருக்களில் தோன்றியது. இது எனது பார்வையில் பாதுகாப்புப் படைகளின் தலைமையிலுள்ள ஒருவரால் இயக்கப்பட்டது”.
கஜகஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அப்பகுதி முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது. பரப்பளவின் அடிப்படையில், கஜகஸ்தான் உலகின் ஒன்பதாவது பெரிய நாடும், பரந்த கனிம வளங்களையும் கொண்டுள்ளது. பல எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்கள் நாடு வழியாக செல்கின்றன, மேலும் நாட்டின் மூலப்பொருட்களின் பெரும் முக்கிய பெறுநராக சீனா உள்ளது.
அதன் பொருளாதார மற்றும் புவி மூலோபாய முக்கியத்துவம் காரணமாக, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிரான அமெரிக்க போர் உந்துதலின் மையப் புள்ளியாகவும் கஜகஸ்தான் மாறியுள்ளது. நாசர்பயேவ் மற்றும் டோகாயேவ் ஆகிய இருவரின் கீழும், கஜகஸ்தான் ரஷ்யாவுடன் ஒப்பீட்டளவில் நெருக்கமான உறவுகளைத் தொடர்ந்தது. இருப்பினும், கஜகஸ்தானில் உள்ள தன்னலக்குழு, செவ்ரோன் மற்றும் எக்ஸோன் மொபைல் போன்ற முக்கிய அமெரிக்க நிறுவனங்களுடனான பொருளாதார ஒத்துழைப்புடன் இந்த சூழ்நிலையை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது. கூடுதலாக, கஜகஸ்தானின் தலைநகரான அஸ்தானா, மற்றொரு நேட்டோ உறுப்பு நாடான துருக்கியுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது.
கஜகஸ்தானில் ஏற்பட்ட கொந்தளிப்பு மின்னணு நாணயங்களில் (cryptocurrencies) ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி Nikkei Asia பின்வருமாறு குறிப்பிட்டது:
முன்னதாக முன்னணி மின்னணு நாணய வர்த்தக மையமாக இருந்த அண்டை நாடான சீனா, மே 2021 இல் செயல்பட தடை விதித்த பின்னர், பல மின்னணு நாணய உற்பத்தியாளர்கள் மலிவான மின்சார விலையைப் பயன்படுத்த கஜகஸ்தானுக்கு வந்தனர்.Cambridge Center for Alternative Finance இன் கருத்தின்படி, ஆகஸ்டு வரையிலான உலகளாவிய கணனிக்கணிப்பீட்டு விகிதத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கஜகஸ்தான் 18% பொறுப்பாக இருந்தது.
ஒரு நீடித்த இணைய முடக்கம், கஜகஸ்தானில் உள்ள பிட்காயின் உற்பத்தியாளர்களை கடையை மூட அல்லது வேறு இடத்திற்கு செல்ல கட்டாயப்படுத்தலாம். 'இந்த இயக்குபவர்கள் பிட்காயின்களில் தாக்கத்தை ஏற்படுத்தி விற்பனை சங்கிலியைத் தூண்டிவிடலாம் என ஊகிப்பதாக' ஒரு பெரிய ஜப்பானிய மெய்நிகர் நாணய பரிமாற்றத்தின் தலைவர் கூறினார்.
குறிப்பாக சீனா, நெருக்கடியின் சாத்தியமான புவிசார் அரசியல் தாக்கங்கள் குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. சீனாவின் ஒரே இணைப்பு-ஒரே பாதை (Belt-and-Road) முன்முயற்சிக்கு கஜகஸ்தான் முக்கியமானதாகும். மேலும் பெய்ஜிங் கஜகஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது.
வெள்ளியன்று, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், டோகாயேவினால் எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கு தனது முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார். அஸ்தானாவிற்கு சீனா பொருளாதார மற்றும் பிற உதவிகளை வழங்க முடியும் என அவருக்கு உறுதியளித்தார். குறிப்பாக, நெருக்கடியில் எந்தவொரு வெளிப்புற தலையீடு குறித்து ஜி எச்சரித்தார்.
சீன அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு போர் ஆதரவுப் பத்திரிகையான குளோபல் டைம்ஸிடம் பேசிய சீன ஆய்வாளர்கள், கஜகஸ்தானில் நடந்த நிகழ்வுகளை 'வண்ணப் புரட்சி' என்று விவரித்துள்ளனர். அதே நேரத்தில் சீனாவின் மேற்கு எல்லைகளில் நிலைமையை சீர்குலைக்க அமெரிக்கா தலையிடக்கூடும் என்றும் அது எச்சரித்துள்ளது. கஜகஸ்தான், சீனாவின் வீகர் மக்கள் தொகையில் அதிகமாக வாழும் ஜின்ஜியாங் பிராந்தியத்தின் எல்லையாக உள்ளது. எல்லையின் இருபுறமும் உள்ள வீகர் மக்கள் நீண்டகால பொருளாதார மற்றும் குடும்ப உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளனர். சீன வீகர்களின் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எனக் கூறப்படுபவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செயல்திட்டத்தில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.
பெய்ஜிங் சந்தேகத்திற்கு இடமின்றி கஜகஸ்தானில் எந்த அமைதியின்மையும் விரைவில் தனது எல்லையில் பரவக்கூடும் என்றும், குறிப்பாக கஜகஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் இனப் பதட்டங்களுக்கு மேலும் எரியூட்டும் வகையில் அமெரிக்கா தலையிடக்கூடும் என்றும் அஞ்சுகிறது.
இதுவரை, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் பிரதிபலிப்பை ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்திவைத்துள்ளன. உக்ரேன் மீது ரஷ்யாவிற்கு எதிராக நடந்து வரும் ஆக்கிரமிப்புப் பிரச்சாரத்திற்கு மாறாக, கஜகஸ்தானில் அதன் இராணுவத் தலையீட்டைத் தொடர்ந்து ரஷ்யாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் பற்றி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கவலை எழுப்பினர், ஆனால் அதைக் கண்டிக்கவில்லை.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, “எந்தவொரு மனித உரிமை மீறல்களுக்கும் மற்றும் கசாக் நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்கான காரணங்களை வழங்கும் முடிவுகளுக்கும் உலகம் நிச்சயமாக கவனம் செலுத்தும். மேலும் ஒரு சமாதான தீர்மானத்திற்கு ஆதரவாக, சர்வதேச மனித உரிமைகளை பாதுகாக்க நாம் CSTO கூட்டு அமைதிகாக்கும் படைகளையும் மற்றும் சட்ட அமுலாக்கத்தையும் நிலைநிறுத்துமாறு நாங்கள் அழைக்கிறோம். திங்களன்று தொடங்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுக்கும் புட்டினுக்கும் இடையிலான உக்ரேன் தொடர்பான பேச்சுவார்த்தையில் கஜகஸ்தானில் நிலைமை தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
ஏகாதிபத்திய சக்திகளின் பிரதிபலிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க காரணி என்னவென்றால், சோவியத்துக்குப் பிந்தைய தன்னலக்குழுக்களைப் போலவே, குறிப்பாக ஒமிக்ரோனின் எழுச்சி மற்றும் அமெரிக்காவில் தொற்றுக்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டங்களின் நிலைமைகளின் கீழ் கஜகஸ்தானிலும் அதற்கு அப்பாலும் தொழிலாள வர்க்கத்தின் சாத்தியமான ஒரு பரந்த இயக்கம் பற்றி ஆழ்ந்த அச்சம் கொண்டுள்ளனர். கஜகஸ்தானின் எண்ணெய் வயல்களில் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ள செவ்ரோன் மற்றும் எக்ஸோன் மொபைல் போன்ற பெருநிறுவனங்களின் பொருளாதார நலன்களுக்கு இந்த அமைதியின்மையால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்தும் அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.
ரஷ்யாவின் இராணுவத் தலையீடு, மத்திய ஆசியாவில் அதன் செல்வாக்கை உயர்த்தும் அதேவேளையில், 'ஜோ பைடெனும் அவரது குழுவினரும் எவ்வளவு கடினமாக இருந்தாலும், தற்போதைய பயங்கரத்தை கட்டாயம் பார்த்துக் கொள்ளவேண்டும் என வாஷங்டனை தளமாக கொண்ட Politico இதழ் எழுதியது. ”பிரிட்டிஷ் நிதி மூலதனத்தின் ஊதுகுழலான பைனான்சியல் டைம்ஸ், டோகாயேவின் சாதகமான சுயவிவரத்தை வெளியிட்டது. “நாடு எதிர்ப்புக்களால் உலுக்கப்பட்டு வரும் நிலையில், தலைவர் ஸ்திரத்தன்மையை நாட வேண்டும் மற்றும் அவரது முன்னோடியான நாசர்பயேவின் மரபுக்கு அப்பால் செல்ல வேண்டும்” என்று அது குறிப்பிட்ட்டது.