அமெரிக்காவும் நேட்டோவும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ரஷ்ய கோரிக்கைகளை நிராகரித்து உக்ரைன் நெருக்கடியை அதிகப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன்கிழமை ஜேர்மன், பிரெஞ்சு, உக்ரேனிய மற்றும் ரஷ்ய அதிகாரிகளுக்கு இடையேயான நெருக்கடி பேச்சுக்கள் பாரிஸில் தொடங்கிய நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென் உக்ரேனில் நேட்டோவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ரஷ்ய கோரிக்கைகளை நிராகரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ரஷ்யா ஒரு படையெடுப்பிற்கு தயாராகி வருவதாகக் கூறி, நேட்டோ கூட்டணி, கிழக்கு ஐரோப்பாவிற்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்புவதன் மூலம் ஒரு போர் நெருக்கடியைத் தூண்டி வருகிறது மற்றும் உக்ரேனின் தீவிர வலதுசாரி ஆட்சி ஆயுதம் ஏந்த வேண்டும் என கோருகிறது. அது உக்ரேனுக்கு மிகப்பெரியளவில் ஏவுகணைகளையும் பிற ஆயுதங்களையும் அனுப்பியுள்ளது, மேலும் மாஸ்கோவை விமானத்தில் சில நிமிடங்களில் சென்றடையக்கூடிய வகையில் உக்ரேனில் ஏவுகணை தளங்களை தயார் செய்து வருகிறது. ஆகையால் உக்ரேன் நேட்டோ கூட்டணியில் சேர அனுமதிக்கப்படாது என்றும், ரஷ்யா மீதான தாக்குதல்களுக்கு தொடக்கப் புள்ளியாக பயன்படுத்தப்படாது என்றும் எழுத்துபூர்வ உத்தரவாதத்தை மாஸ்கோ கோரியது.

வாஷிங்டனில், ஜனவரி 26, 2022, புதன்கிழமை அன்று நடந்த வெளியுறவுத்துறை சுருக்கக் கூட்டத்தின் போது, வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென் ரஷ்யா மற்றும் உக்ரேனைப் பற்றி பேசுகிறார். (Brendan Smialowski/Pool via AP)

பிளிங்கென் இதை திட்டவட்டமாக மறுத்தார். “எந்த மாற்றமும் இல்லை. எந்த மாற்றமும் இருக்காது,' உக்ரேன் மற்றும் ஜோர்ஜியா போன்ற முன்னாள் சோவியத் குடியரசுகளை நேட்டோவில் சேர அனுமதிக்கும் அமெரிக்க-நேட்டோ திட்டங்களைப் பற்றி அவர் கூறினார். 'உக்ரேனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மாநிலங்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டணிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உட்பட, நாங்கள் நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் உத்தேசித்துள்ள முக்கிய கொள்கைகள் உள்ளன என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்,' என்று அவர் தொடர்ந்தார்.

இந்த கொள்கை ஜனாதிபதி ஜோ பைடெனால் நேரடியாகத் தீர்மானிக்கப்பட்டது என்றும், அவர் மாஸ்கோவின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதிலைத் தயாரிப்பதில் “அந்தரங்கமாக ஈடுபட்டார்” என்றும் பிளிங்கென் கூறினார். “நீங்கள் அறிந்தபடி, கூட்டாளிகள் மற்றும் பங்காளர்களிடமிருந்து கருத்துக்கள், உள்ளீடுகள் மற்றும் யோசனைகளைப் பெற்றதன் பேரில் கடந்த வாரங்களில் அவருடன் மீண்டும் மீண்டும் அதை மதிப்பாய்வு செய்தோம்” என்றும் கூறினார்.

இந்தக் கொள்கை ஜனாதிபதி ஜோ பைடெனால் நேரடியாகத் தீர்மானிக்கப்பட்டது என்று பிளிங்கென் மேலும் கூறினார், அவர் மாஸ்கோவின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதிலை வடிவமைப்பதில் 'மிகவும் ஈடுபாடு கொண்டவர்' என்று கூறினார். 'கடந்த சில வாரங்களாக நாங்கள் அவருடன் பலமுறை விவாதித்தோம், உங்களுக்குத் தெரியும், கூட்டாளிகள் மற்றும் கூட்டாளர்களிடமிருந்து கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுள்ளோம்.'

அமெரிக்க அதிகாரிகள் ரஷ்ய-உக்ரேன் எல்லைகளுக்கு 50,000 துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களை அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர், வாஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, ஆனால் போர் அச்சுறுத்தல்களுடன் ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிடுவதாக பிளிங்கென் ஒப்புக்கொண்டார்.

ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையை பகிரங்கமாக மறுத்த பின்னர், பைடெனின் கடிதம் 'ஒரு முறையான பேச்சுவார்த்தை ஆவணம் அல்ல' என்று பிளிங்கென் ஒப்புக்கொண்டார். ... வெளிப்படையான பரிந்துரைகள் எதுவும் இல்லை. அவர்கள் தீவிரமாக இருந்தால், கூட்டுப் பாதுகாப்பை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது பற்றிய பகுதிகளையும் சில யோசனைகளையும் அவர் முன்வைக்கிறார்.” வாஷிங்டன் தனது ஆவணத்தை “இரகசியப் பேச்சுக்களுக்கு” அனுமதிக்காது, ரஷ்யாவையும் வெளியிட வேண்டாம் என்று வலியுறுத்தினார். “ரஷ்யாவும் அதே கருத்தைக் கொண்டிருக்கும் மற்றும் எங்கள் திட்டத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்” என்றும் கூறினார்.

பிளிங்கெனின் கருத்துக்கள் நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க்கால் பெரிதும் எதிரொலிக்கப்பட்டது, அவர் உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் மோல்டோவாவை ஊக்கப்படுத்தியதுடன், “ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பதை” வலியுறுத்தினார். “எங்கள் ஸ்தாபக உடன்படிக்கைக்கு நாங்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறோம், மேலும் எங்கள் கூட்டு பாதுகாப்பு உறுதிமொழி, பிரிவு 5 இல் பொதிந்துள்ளது” என்றும் கூறினார்.

தேசிய இறையாண்மையை பாதுகாப்பதன் பேரில், ஏகாதிபத்திய சக்திகள் மிகுந்த பொறுப்பற்ற, ஆத்திரமூட்டும் மூலோபாயத்தை பின்பற்றுகின்றன. இந்த கருத்துக்களின் அர்த்தம் என்னவென்றால், உக்ரேன் நேட்டோவில் இணைந்தால், மற்றும் தீவிர வலதுசாரி, ரஷ்ய-எதிர்ப்பு அசோவ் படையணி போன்ற உக்ரேனிய ஆயுதப்படையினர் ரஷ்யாவுடன் போரைத் தூண்டினால், அனைத்து நேட்டோ சக்திகளும் ரஷ்யாவுடன் போருக்குச் செல்வதற்கு சட்டபூர்வமாகக் கட்டுப்பட்டிருப்பதாகக் கூறுவதற்கு நேட்டோ ஒப்பந்தத்தின் 5வது பிரிவை உக்ரேன் பயன்படுத்தலாம். உண்மையில், உலகப் போரின் இந்த ஆபத்து சந்தேகத்திற்கு இடமின்றி உக்ரேன் போன்ற நாடுகள் நேட்டோவில் சேரக்கூடாது என்ற உத்தரவாதத்திற்கான ரஷ்யாவின் கோரிக்கையில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் ரஷ்ய பாராளுமன்றத்தில் பேசுகையில், ரஷ்ய ஆளும் வட்டாரங்கள் முழுவதும் பரவி வரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை வெளிப்படுத்தினார். “ஒட்டுமொத்த அமைப்பும் வெறித்தனமாக உள்ளது,” என்பதை லாவ்ரோவ் ஒப்புக்கொண்டார், என்றாலும் பைடெனின் ஆவணத்தை வெளியிட வேண்டாம் என்ற அமெரிக்க கோரிக்கைகளை மாஸ்கோ ஒருவேளை மதிக்கும் என்று அவர் வலியுறுத்தினார். இருப்பினும், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ பிரச்சாரத்தின் பேரழிவு தரும் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலான தாக்கங்களை லாவ்ரோவ் தெளிவுபடுத்தினார்.

“நமது எல்லைகளில் அதிகரித்து வரும் ஆத்திரமூட்டும் இராணுவ சூழ்ச்சிகளையும், நேட்டோ வளையத்திற்குள் உக்ரேனை அவர்கள் இழுப்பதையும், அதை கொடிய ஆயுதங்களை ஏந்தச் செய்வதையும் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு எதிராக நேரடி ஆத்திரமூட்டல்களை அவர்கள் தூண்டுவதையும் ஒருவர் கவனிக்க வேண்டும்,” என்று லாவ்ரோவ் கூறினார். “இந்தச் சூழலில், சந்தேகத்திற்கு இடமின்றி எங்களுக்கு உரிமையுள்ளதான எங்கள் சொந்த மண்ணில் நடத்தப்படும் இராணுவப் பயிற்சிகளை நிறுத்த வேண்டும் என்று எங்களிடம் விடுக்கப்படும் கோரிக்கைகள் குறிப்பாக இழிவானவை” என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க டாலர் பரிவர்த்தனைகளுக்கான உலகளாவிய SWIFT நிதி அமைப்புக்கான ரஷ்யாவின் அணுகலை வாஷிங்டன் நிறுத்தக்கூடும் என்று எதிர்பார்த்து -ஈரானுக்கு முன்பு செய்தது போல- லாவ்ரோவ் கூறினார்: 'டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க நாங்கள் செயற்கடுகிறோம் - அமெரிக்கர்கள் எங்களுக்கு தீவிரமாக உதவுகிறார்கள்.' ஏனென்றால் அவர்கள் இந்த நாணயத்தின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், ரஷ்யாவிற்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் கிட்டத்தட்ட அனைத்தையும் செய்கிறார்கள். லாவ்ரோவ், ரஷ்யா 'தேசிய நாணயங்களில் பணம் செலுத்துவதற்கான மாற்றத்தை' இலக்காகக் கொண்டுள்ளது, அதன் மூலம் அமெரிக்க டாலரை தவிர்க்க முடியும் எனக் கருதுகிறது என்று லாவ்ரோவ் கூறினார்.

சீனா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, நிகரகுவா மற்றும் கியூபா ஆகியவற்றுடனான ரஷ்யாவின் கூட்டணிகளை சுட்டிக்காட்டி, அவர் இவ்வாறு முடித்தார்: “மேற்குலகம், பொருளாதாரத் தடைகள், ஊடகங்களின் கொடூரத்தனம், உளவுத்துறை ஆத்திரமூட்டல்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் மூலம் தனிப்பட்ட கொள்கை கொண்ட எதிர்ப்பாளர்களை தண்டிக்க, குறிப்பாக எங்களையும் சீனாவையும் தண்டிக்க முயற்சிக்கிறது.”

அதன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் மூலம், சீன அரசாங்கமும் உக்ரேனை நேட்டோவில் சேர்க்கும் முயற்சிகளை விமர்சித்தது. “உலகின் மிகப்பெரிய இராணுவக் கூட்டணியாக உள்ள நேட்டோ, காலாவதியான பனிப்போர் மனநிலையையும் கருத்தியல் சார்பையும் கைவிட வேண்டும், மற்றும் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநிறுத்துவதற்கு உகந்த விஷயங்களைச் செய்ய வேண்டும்,” என்று ஜாவோ கூறினார். அனைத்து நாடுகளும் “ஒன்றுக்கு ஒன்று நியாயமான பாதுகாப்புக் கவலைகளை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.

கிழக்கு ஐரோப்பாவில் வெடித்துள்ள முன்னோடியில்லாத போர் நெருக்கடியானது, 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதிலிருந்து நடந்து வரும் 30 ஆண்டுகால ஏகாதிபத்திய போர் மற்றும் சூழ்ச்சியின் இறுதி விளைவு ஆகும். முன்னாள் சோவியத் ஒன்றிய எல்லை முழுவதும் மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் கணிசமான ரஷ்யர்களை அல்லது ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினரைக் கொண்டிருந்த பல சுதந்திரமான தேசிய அரசுகளின் தோற்றமானது பிராந்தியத்தை நேட்டோவிற்குத் திறந்து வைத்தன. நேட்டோ கிழக்கு ஐரோப்பிய நாடுகளை தன்னுடன் சேர்த்துக் கொண்ட அதேவேளை, முன்னாள் சோவியத் குடியரசுகளில் வலதுசாரி, ரஷ்ய-எதிர்ப்பு போக்குகளை தொடர்ந்து தூண்டிவிட்டன.

இது ரஷ்யாவையும், அதன் சோவியத்துக்கு பிந்தைய முதலாளித்துவ ஆட்சியையும் தீர்க்க முடியாத இக்கட்டான குழப்பத்தில் வைத்துள்ளது. கடந்த மாதம், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், 2014 இல் நேட்டோ ஆதரவுடன் கூடிய தீவிர வலதுசாரி சதி மூலம் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்ட உக்ரேனிய ஆட்சியின் ரஷ்ய-எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் “இனப்படுகொலைக்கான முதல் அடியெடுப்பாக” இருக்கலாம் என்ற தனது கவலையை வலியுறுத்தினார்.

இந்த ஆபத்து இருப்பதை அங்கீகரிக்க, புட்டினின் திவாலான ரஷ்ய தேசியவாதத்தை ஒருவர் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. உக்ரேனிய ஆட்சி மட்டுமல்லாது, 2008 இல் ஒரு சுருக்கமான போரைத் தூண்டிய ரஷ்ய அமைதி காக்கும் படையினர் மீது அமெரிக்க ஆதரவுடன் தாக்குதலை நடத்திய ஜோர்ஜிய ஆட்சியும், அத்துடன் ரஷ்ய சார்பு இன சிறுபான்மையினரைக் கொண்ட அனைத்து பால்டிக் நாடுகளும், தொடர்ந்து மாஸ்கோவுடனான வெளிப்படையான மோதலின் விளிம்பில் உள்ளன. எவ்வாறாயினும், ரஷ்யாவைச் சுற்றிலும் மற்றும் அந்நாட்டிற்குள்ளும் இன மோதல்களைத் தூண்டுவதற்கு வேலை செய்தும், நாட்டை துண்டாடுவதற்கு மற்றும் அதை அரை காலனித்துவ நிலைக்குக் குறைப்பதற்கு அச்சுறுத்தியும் நேட்டோ சக்திகள் பதிலளிக்கின்றன.

கோவிட்-19 தொற்றுநோய் ஏகாதிபத்திய போர் சதித்திட்டத்தை பெரிதும் தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நேட்டோ நாட்டிலும், மில்லியன் கணக்கானவர்களின் தேவையற்ற மரணங்களுக்கு வழிவகுத்த வெகுஜன தொற்று கொள்கைகள் மீது சமூக கோபம் அதிகரித்து வருகிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் அதிகரித்து வரும் நிலையில், நேட்டோ சக்திகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள், உள் வர்க்கப் பதட்டங்களை வேறுவழியின்றி வெளிப்புறமாகத் திசைதிருப்ப முனைகின்றன, மற்றும் ஒரு அணுவாயுத வல்லரசான ரஷ்யாவுடன் பொறுப்பற்ற முறையில் போரைத் தூண்டுகின்றன.

ஐரோப்பிய சக்திகள் அமெரிக்க/நேட்டோ போர் உந்துதலுக்கு இணங்கி அதற்கு தயாராகி வருகின்றன. டென்மார்க் பால்டிக் கடலுக்கு பீரங்கிக் கப்பலையும், மற்றும் லித்துவேனியாவிற்கு நான்கு F-16 ரக போர் விமானங்களையும் அனுப்புவதற்கு உறுதியளித்துள்ளது, அதே நேரத்தில் ஸ்பெயின் கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறது. பிரான்ஸ் ருமேனியாவுக்கு துருப்புக்களை அனுப்புகிறது, மேலும் ஜேர்மனி உக்ரேனிய இராணுவத்தை வலுப்படுத்த உதவும். சமூக ஜனநாயகக் கட்சி பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டினா லாம்பிரெக்ட், “நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம் என்பதற்கான மிகத் தெளிவான சமிக்ஞையாக” உக்ரேனுக்கு 5,000 போர் தலைக்கவசங்களை அவர் அனுப்பியதை புகழ்ந்து கொண்டார்.

பேர்லின் அதிகரித்தளவில் ஆக்கிரோஷமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பெயெர்பொக், பிளிங்கெனையும் ஸ்டோல்டென்பேர்க்கையும் ஆதரித்து “எங்கள் ஒற்றுமை தான் எங்களின் வலிமையான ஆயுதமாக உள்ளது,” என்று போதும், SPD தலைவர் Lars Klingbeil, “[புட்டின்] உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டைத் தாக்கும் தருணத்தில், அவர் அரசியல் ரீதியாக ஆனால் புவியியல் ரீதியாகவும் எல்லையைக் கடக்கும் தருணத்தில், சந்தேகத்திற்கு இடமில்லாத தெளிவான பதில் உள்ளது. அதாவது, அனைத்து தெரிவுகளும் மேசையில் உள்ளன” என்று அச்சுறுத்தியுள்ளார்.

கசப்பான போட்டிகளும் முரண்பட்ட நிதிய மற்றும் வணிக நலன்களும் உள்ளன —அதாவது அமெரிக்கா சீர்குலைக்க விரும்பும் Nord Stream 2 குழாய்வழித் திட்டம் மூலம் மலிவான ரஷ்ய எரிவாயுவை ஜேர்மனி பெற முயல்கிறது— அனைத்து நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளும் ரஷ்யாவை சுற்றி வளைப்பதற்கான கொள்கைகளையும், அதை அரை காலனித்துவ நிலைக்கு குறைப்பதையும் மற்றும் தொற்றுநோயை அவர்கள் கையாளும் விதம் குறித்து எழுந்து வரும் சமூக கோபத்தை வெளிப்புறமாக திசைதிருப்புவதையும் ஆதரிக்கின்றன.

உலகப் போரின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைத் தவிர்க்க, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு போர் எதிர்ப்பு இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, கோவிட்-19 பாரிய நோய்தொற்று கொள்கைகளுக்கு எதிராக, எந்த முதலாளித்துவ வர்க்கக் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து முற்றிலும் சுயாதீனமானதும் மற்றும் சர்வதேச சோசலிச மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டதுமான ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குள் கட்டியெழுப்ப வேண்டும்.

Loading