மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலக சுகாதார அமைப்பின் (WHO) நிறைவேற்றுக் குழுவின் 150 வது அமர்வில் தனது வெளிப்படையான கருத்தை வழங்குகையில், பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவெடுப்பதற்கு நிலைமைகள் ஏற்றதாக இருந்த நாடுகள் கூட்டாக செயல்பட்டிருந்தால், தொற்றுநோயின் போக்கை மாற்றும் சக்தியை அவை கொண்டிருந்திருக்கும் என்று எச்சரித்தார்.
40 க்கும் மேற்பட்ட நாடுகளில் BA.2 எனக் குறிப்பிடப்படும் ஒமிக்ரோனின் துணைமாறுபாட்டால் சுமார் 8,000 புதிய நோய்தொற்றுக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த வாரம் பொது இயக்குநர் தனது கருத்துக்களை வெளியிடுகிறார். சில விஞ்ஞானிகள் இதை “திருட்டுத்தனமான ஓமிக்ரோன்” என்றும் குறிப்பிடுகின்றனர், காரணம் BA.2 ஐ மரபணு வரிசைமுறை அடிப்படையில் மட்டுமே உறுதிப்படுத்த முடிகிறது என்பதே. இதன் விளைவு, சரியான நிகழ்வு இன்னும் அனுமானத்தின் பேரில் உள்ளது, ஆனால் இன்னும் இது குறைவாக பரவுவதாக கருதப்படுகிறது. நவம்பரில் தென்னாபிரிக்காவில் BA.1 துணை மாறுபாடு வெடித்து பரவியபோது, இது முதலில் கண்டறியப்பட்டது. இதன் புவியியல் சார்ந்த துல்லியமான தோற்றுவாய் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் இதுவும் முதன்முதலில் தென்னாபிரிக்காவில் தான் கண்டறியப்பட்டது.
ஓமிக்ரோன் திரிபு (BA.1), B.1.1.529 என்றும் குறிப்பிடப்படுகிறது, S மரபணு விலக்கத்தை அல்லது S மரபணு இலக்கு தோல்வியை வெளிப்படுத்துகிறது. பரவலாக பயன்படுத்தப்படும் PCR பரிசோதனையால் மூன்று இலக்கு மரபணுக்களைக் கொண்ட ஒரு மரபணுவை கண்டறிய முடியவில்லை, இதன் பொருள் நோய்தொற்று பாதிப்பு இருக்கையில் PCR பரிசோதனைகள் இந்த இலக்கை கண்டறிவதில் தோல்வியடையுமானால், ஓமிக்ரோன் மாறுபாட்டால் தான் நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்ற அனுமானங்கள் உருவாக்கப்படுகின்றன. டிசம்பர் 2020 இல் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்திய ஆல்பா மாறுபாடு இந்த தன்மையை பரவலாக்கியது, PCR பரிசோதனை மூலம் அதன் பரவலைக் கண்காணிக்க S மரபணு தோல்வி பயன்படுத்தப்பட்டது. BA.2 துணைமாறுபாடு இந்த S மரபணு விலக்கத்தை தவிர்ப்பதானது, அதை கண்காணிப்பதை மிகவும் கடினமாக்குகிறது.
டென்மார்க்கின் முன்னணி பொது சுகாதார கல்விச்சாலை Statens Serum Institute (SSI) இன் சமீபத்திய அறிக்கையின்படி, BA.1 மாறுபாட்டை விட 1.5 மடங்கு அதிக வேகத்துடன் BA.2 மாறுபாடு பரவுகிறது. “ஆரம்ப கணக்கீடுகள் BA.1 ஐ விட ஒன்றரை மடங்கிற்கு மேலாக அதிக தொற்றுந்தன்மையுடன் BA.2 தீவிரமாக பரவுவதை சுட்டிக்காட்டுகின்றன,” என்றும், குழந்தைகள் மத்தியில் அதிக வேகமாக பரவுவதாகவும் இது குறிப்பிட்டுள்ளது.
ஓமிக்ரோன் ஏற்கனவே குழந்தைகளை கடுமையாக தாக்கியுள்ளது. தென்னாபிரிக்காவில் இருந்து வெளிவந்த சமீபத்திய அறிக்கை, குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது டெல்டா அலையை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகமாக இருப்பதைக் காட்டியுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயதானவர்களை விட மிக அதிக விகிதத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்தில், 6 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட விகிதம் கடந்த குளிர்காலத்தில் 2.3 மடங்கு அதிகமாக இருந்தது.
BA.1 ஐ போல, புதிய துணை மாறுபாடும் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் அளவிற்கு மருத்துவ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, இருந்தாலும் பரந்தளவிலான முன்னைய நோய்தொற்றுக்களும், பெரும்பகுதி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதும் இந்த துணை மாறுபாடுகளின் வீரியத்தைக் குறைப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மையான ஒப்பீடுகள் செய்யப்படுவதற்கு முன்பாக, வைரஸின் வீரியம் மற்றும் தடுப்பூசி செயல்திறன் பற்றிய தரவுகள் இன்னும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
SSI இல் உள்ள தொற்றுநோயியல் நிபுணரும் பொது சுகாதார மருத்துவ நிபுணருமான Dr. Tyra Grove Krause, “இது தற்போது பெருவாரியான நோய்தொற்றுக்களை உருவாக்கும் ஓமிக்ரோன் மாறுபாடாகும். [ஜனவரி 2022 இன்] மூன்றாவது வாரத்தில் பரவிய ஒட்டுமொத்த கோவிட்-19 நோய்தொற்றுக்களில் 99 சதவீதத்திற்கு மேற்பட்டவை ஓமிக்ரோனால் ஏற்பட்டிருப்பதாக நாங்கள் மதிப்பிடுகிறோம், மேலும் இது அதிக வேகமாக பரவுவதாக தரவு காட்டுகிறது, ஆனால் டெல்டாவுடன் ஒப்பிடுகையில் தீவிர நோய் வெடிப்புக்களின் அபாயம் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், தடுப்பூசி போடப்பட்ட மற்றும் போடப்படாத மக்களிடையே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அபாயத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதை நாம் காண முடிகிறது. அதாவது, தடுப்பூசி போடப்பட்டவர்கள் ஓமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டாலும் கூட மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
டென்மார்க்கில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுபவர்களின் தற்போதைய ஏழு நாள் சராசரி தொற்றுநோயின் போதான உச்சபட்ச எண்ணிக்கையாக 822 ஐ நெருங்குகிறது, ஆனால் ஜனவரி ஆரம்பத்தில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதிப்புக்கள் குறைந்து வருகின்றன. இருப்பினும், டாக்டர் எரிக் ஃபீகல்-டிங்கின் கூற்றுப்படி, டென்மார்க் நீண்டகால பராமரிப்பு தனியார் மருத்துவமனைகளை நம்பியிருப்பதால், தீவிர சிகிச்சைப் பிரிவு அனுமதிப்புக்களை எண்ணுவது உண்மையான புள்ளிவிபரத்தை குழப்பலாம். ஜனவரி 26, 2022 அன்று புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை தொற்றுநோய் காலத்தின் உச்சபட்சமாக 43,719 ஆக இருந்தது. தினசரி இறப்புக்களைப் பொறுத்தவரை, பொதுவாக குறைவாக இருந்தாலும், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னர் மேல்நோக்கி உயர்ந்து, தற்போது ஏப்ரல் 2020 முதல் அலையின் போதான எண்ணிக்கையை விஞ்சியுள்ளது.
டென்மார்க்கில் அதிக தொற்றும்தன்மை கொண்ட BA.2 மாறுபாடு ஆதிக்கம் செலுத்துவதால், தற்போதைய நோய்தொற்று அலை பிப்ரவரி வரை நீடிக்கலாம். இருப்பினும், தற்போது உலகளவில் 98 சதவீத நோய்தொற்றுக்களுக்கு காரணமாகவுள்ள BA.1 இன் இடத்தை BA.2 பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது இங்கிலாந்து, சிங்கப்பூர், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் பரவி வருகிறது, அங்கு அது அசல் வீரியத்தைக் காட்டத் தொடங்குகிறது.
மொத்தத்தில், ஓமிக்ரோன் மாறுபாட்டின் மூன்று துணை வரிசைகள் உள்ளன. BA.3 பாதிப்பால் சில நூறு நோய்தொற்றுக்கள் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில் அது இன்னும் செயலற்றிருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த மூன்றையும் வேறுபடுத்துவது அவற்றின் தனித்துவமான பிறழ்வுகளின் எண்ணிக்கை தான், மேலும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா மாறுபாடுகளிலிருந்தும் இது வேறுபடுத்துகிறது.
டிசம்பர் 2019 இல், சீனாவின் வூஹானில் முதன்முதலில் தோன்றிய காட்டு-வகை மாறுபாட்டின் பரிணாம வளர்ச்சியை பார்க்கையில், ஓமிக்ரோன் பெற்றோர் எனக் குறிப்பிடப்படும் ஒரு முன்னோடி மாறுபாடு பெரும்பாலும் மார்ச் 2021 இல் தோன்றியிருக்கலாம். என்றாலும், ஏன் நவம்பர் 2021 இல் ஓமிக்ரோன் வெளிப்பட்டது என்பது இன்னும் அறியப்படவில்லை. இந்த நிகழ்வுகள் WHO பொது இயக்குநரின் எச்சரிக்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. டாக்டர் வில்லியம் ஹாசெல்டைன், Forbes பத்திரிகைக்கான ஒரு விஞ்ஞான பங்களிப்பாளராக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: SARS-CoV-2 புதிய வகை மாறுபாடுகளை தொடர்ந்து உருவாக்குவதில் மட்டும் மிகப்பெரிய அளவிலான திறனைக் கொண்டிருக்கவில்லை, மாறாக அவற்றின் எண்ணிக்கையிலும் அவற்றின் உயிரியல் பண்புகளிலும் நம்மை ஆச்சரியப்படுத்தும் மாறுபாடுகளை கொண்டுள்ளது.”
மூன்று துணை வரிசைகளைப் பற்றி குறிப்பிடுகையில், டாக்டர் ஹாசெல்டைன் இவ்வாறு விளக்கமளித்தார்: “இந்த மூன்றும் 39 பிறழ்வுகளைப் பகிர்ந்து கொள்கின்றன, அதை நாம் உத்தேசமாக ‘ஓமிக்ரோன் பெற்றோர்’ என்று சேர்த்துக் கொள்கிறோம். ஓமிக்ரோன் பெற்றோர் ஓமிக்ரோன் குடும்பமாக பிரிந்தன: அதாவது, BA.1, இது கூடுதல் 20 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது (13 தனித்துவமானவை); BA.2, இது கூடுதல் 27 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது (10 தனித்துவமானவை); BA.3, இது கூடுதல் 13 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது (1 தனித்துவமானது) என்ற வகையில். குறிப்பிடத்தக்க வகையில், தென்னாபிரிக்காவில் அனைத்து குடும்ப வகைகளும் ஒரே நேரத்தில் கண்டறியப்பட்டன, இருப்பினும் அவை பல மாதங்களுக்கு முன்பாக ஒரு மாறுபாட்டிலிருந்து வேறுபட்டிருக்கலாம். மக்கள்தொகையில் ஒரே நேரத்தில் தோன்றும் இத்தகைய மிகவும் வேறுபட்ட மாறுபாடுகளுக்கு இது ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டாகும்.”
பெரும்பாலான பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் புரதத்தில் அமைந்துள்ளன, இதை மனித ACE2 ஏற்பியுடன் இணைத்து செல்லுக்குள் நுழைவதற்கு அது பயன்படுத்துகிறது, இதனால் அது தன்னை இனப்பெருக்கம் செய்ய முடியும். ஸ்பைக்கில் உள்ள இந்த பிறழ்வுகள், பெரிய அளவிற்கு, அதன் பரவும் தன்மை மற்றும் நோயெதிர்ப்பை தவிர்க்கும் பண்புகளை தீர்மானிக்கிறது. உதாரணமாக, BA.1, டெல்டாவை விட மூன்று மடங்கு அதிகமாக பரவக்கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் தடுப்பூசி-தவிர்க்கும் திறன் ஒரு பூஸ்டரைப் பெறுவதற்கான முக்கியத்துவத்தை உருவாக்குகிறது. BA.2 இன் அதிகப்படியான மற்றும் தனித்துவமான பிறழ்வுகள் நிஜ உலக அமைப்பில் மேலதிக ஆய்வு தேவைப்படுவதைக் குறிக்கின்றன.
GISAID வைரஸ் தரவுத்தளத்தின்படி, அமெரிக்கா முழுவதும் ஓமிக்ரோன் நோய்தொற்றுக்களின் சுனாமி தொடர்ந்தாலும், அரிசோனா, டெக்சாஸ், கலிஃபோர்னியா, நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் உட்பட நாட்டின் 22 மாநிலங்களில் தற்போது BA.2 துணைமாறுபாட்டின் தாக்கம் உள்ளது. ஓமிக்ரோனால் உருவாகியுள்ள மறுநோய்தொற்றின் அதிக விகிதங்களைக் கருத்தில் கொண்டு, BA.2 விரைவில் எழக்கூடிய இரண்டாவது அலையாக இருக்கலாம் என்றே விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர்.
SSI இன் தலைமை மருத்துவரும் வைரஸ் ஆராய்ச்சியாளருமான டாக்டர் ஆண்டர்ஸ் ஃபோம்ஸ்கார்ட், “நீங்கள் முதலில் BA.1 ஓமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்படலாம், பின்னர் உடனடியாக BA.2 மாறுபாட்டாலும் பாதிக்கப்படலாம்” என்று கூறினார். நோர்வேயில் உருவான பல நோய்தொற்றுக்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. அவர் மேலும், “BA.2 ஆல் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய உலகின் கண்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கின்றன. அது ஏன் டென்மார்க்கிற்கு வந்து இங்கேயே அதிகம் பரவுகிறது என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை” என்று கூறினார். இது மிகுந்த தொற்றும்தன்மை உள்ளதாக இருப்பதைத் தவிர, “மக்களிடம் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகம் எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதானது நன்றாக தொற்று ஏற்பட அனுமதிக்கிறது. இதுபற்றி எங்களுக்கு இன்னும் தெரியவில்லை” என்று ஃபோம்ஸ்கார்ட் எச்சரித்தார்.