இலங்கையின் ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் மேல்மாகாணத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள தாதிகள், துணை மற்றும் இடைக்கால சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஜனவரி 26 அன்று வேலை நிறுத்தம் செய்தனர். சுமார் 1,000 பேர் கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் அருகில் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்கு வெளியே கூட்டமொன்றை நடத்தினர்.

ஜனவரி 26 அன்று கொழும்பில் சுகாதார ஊழியர்களின் பேரணி [Source: Facebook]

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் சம்பள முரண்பாடுகளை சரிசெய்தல், போக்குவரத்து கொடுப்பனவுகள் மற்றும் திடீர் கடமை அழைப்பு கொடுப்பனவுகள் - 3,000 ரூபாயிலிருந்து ($US15) 10,000 ரூபாயாக – அதிகரிக்கப்ட வேண்டும் மற்றும் மேலதிக நேர ஊதியம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பதவி உயர்வு நடைமுறைகளை கோருகின்றனர்.

ஒரு நாள் வேலைநிறுத்தம், கடந்த நவம்பரில் சுகாதார தொழில் வல்லுநர்களின் சம்மேளனம் (சு.தொ.வ.ச.) அழைப்பு விடுத்திருந்த மாகாண ரீதியான தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும். 15 தொழிற்சங்கங்களின் கூட்டணியான சு.தொ.வ.ச., பெப்ரவரி 7 ஆம் தேதிக்கு முன்னர் தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், சுகாதார ஊழியர்களின் காலவரையற்ற தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் பங்கேற்பது, இலங்கைத் தொழிலாளர்களின் அதிகரித்துவரும் போர்க்குணத்தின் மற்றொரு அறிகுறியும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியின் பாகமும் ஆகும்.

கடந்த ஆண்டு நூறாயிரக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அனைத்து நுகர்வுப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

'வைரஸுடன் வாழ்வது' என்ற அரசாங்கத்தின் குற்றவியல்தனமான இலாப உந்துதல் கொள்கைகளின் கீழ், விரைவாக பரவும் ஓமிக்ரோன் மாறுபாட்டுடன் கோவிட்-19 நோய்த்தொற்றுகள், மருத்துவமனை அனுமதிகள் மற்றும் மரணங்களும் நாடு முழுவதும் பரவ அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஏனைய துறைகளில் உள்ள அவர்களது தொழிற்சங்க சகாக்களைப் போலவே, சு.தொ.வ.ச. ஆனது அதிகரித்து வரும் பணவீக்கம், இடுப்பு உடையும் வேலைச் சுமைகள் மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு மத்தியில், சம்பளம் தேக்கத்துக்கு எதிராக சுகாதார ஊழியர்களின் ஆழ்ந்த கோபத்தைக் கலைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் சுமார் 30 வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்கள் அதே கோரிக்கைகளை மீண்டும் முன்வைத்து, பின்னர் இந்த நடவடிக்கைகளை ஒத்திவைக்கின்றன அல்லது வெளிப்படையாக காட்டிக்கொடுக்கின்றன.

போராடுவதில் சுகாதார ஊழியர்களின் உறுதிப்பாட்டை எதிர்கொண்டு, சு.தொ.வ.ச. கடந்த ஆண்டு ஆசிரியர்கள் நடத்திய 100 நாள் தேசிய இனையவழி கற்பித்தல் பகிஷ்கரிப்பு ஒரு 'முன்மாதிரி' என்று கூறுகிறது. அதாவது, அதிகரித்த அழுத்தம் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை வழங்க அரசாங்கத்தை நெருக்கக்கூடும் என்று காட்ட முனைகிறது.

சுகாதார ஊழியர்கள் சுகாதார அமைச்சகத்திற்கு வெளியே கூடி உள்ளனர் [Source: Facebook]

சு.தொ.வ.ச. தலைவர் ரவி குமுதேஷ், 'வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே தொழிற்சங்கங்கள் தீர்வைப் பெற முடியும் என்பதை சமீபத்திய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேலைநிறுத்தத்தில் இருந்து எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது,' என்று ஊடகங்களிடம் கூறினார்.

தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுத்ததாகக் கூறி சு.தொ.வ.ச. தலைவர்கள் பொய் சொல்கிறார்கள். 100 நாள் இணையவழி கற்பித்தல் வேலைநிறுத்தத்தின் போது, ஆசிரியர்களின் அதிகரித்து வரும் எதிர்ப்பைக் கலைக்கும் வகையில், ஆசிரியர் சங்கங்கள் மாகாண மற்றும் தேசிய அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்தின. உண்மையில், அவர்களின் கோரிக்கைகள் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களால் நிராகரிக்கப்பட்டதாலும் தொழிற்சங்கங்களால் தொடர்ந்து காட்டிக் கொடுக்கப்பட்டதாலும் ஆசிரியர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டம் இரண்டு தசாப்தங்களாக நீடித்தது.

அக்டோபரில், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் தங்கள் உறுப்பினர்களை விற்றுத்தள்ளின. முதலில் கோரப்பட்ட சம்பள உயர்வில் மூன்றில் ஒரு பங்கை வழங்கும் அரசாங்கத்தின் 'சலுகையை' ஏற்றுக்கொண்டு, பின்னர் அதை 'வெற்றி' என்று போலித்தனமாகப் பாராட்டின. அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில், பாடசாலைகளை உடனடியாக மற்றும் ஆபத்தான முறையில் மீண்டும் திறப்பதற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. மற்ற தொழிற்சங்கங்களைப் போலவே, சு.தொ.வ.ச.வும் இந்த துரோகத்தை ஆதரித்தது.

அரசாங்கம் மற்றும் அதன் பெருவணிகக் கொள்கைகளுக்கு எதிராக, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக முன்னெடுக்கப்படும் அரசியல் போராட்டம் இல்லாமல், தொழிலாள வர்க்கம் தனது சமூக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பதே ஆசிரியர்களின் போராட்டத்தின் படிப்பினை ஆகும். சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளுடனும், அவர்களது சர்வதேச வர்க்க சகோதர, சகோதரிகளுடனும் ஆசிரியர்களை ஒன்றிணைப்பது அவசியமாக இருந்தது.

ஆசிரியர்கள் ஒரு அற்ப ஊதிய உயர்வை வென்றதால், அரசாங்கம் கற்பிப்பவர்களுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் இடையே சம்பள முரண்பாடுகளை உருவாக்கியுள்ளதாகவும், அரசாங்கம் சம்பள முரண்பாட்டை சரிசெய்து சுகாதார நிபுணர்களின் 'பெருமையை' மீட்டெடுக்க வேண்டும் என்று சு.தொ.வ.ச. தலைமை இப்போது அறிவிக்கிறது.

2021 அக்டோபரில் கொழும்பில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் [Source: WSWS Media]

அதே நேரம், ஆசிரியர்கள் தொற்றுநோய்களின்போது வேலை செய்யவில்லை, ஆனால் சுகாதார தொழில் வல்லுநர்கள், தங்கள் சேவையைத் தொடர்ந்தனர், எனவே அவர்கள், சம்பள உயர்வுக்கு தகுதியானவர்கள் என்று சு.தொ.வ.ச. அதிகாரிகள் உறுப்பினர்களிடம் கூறுகிறார்கள். இது ஆசிரியர்களுக்கு எதிராக சுகாதாரப் பணியாளர்களை நிறுத்துவதற்கும் அவர்களின் வர்க்க ஒற்றுமையைத் தடுப்பதற்குமான ஒரு கேவலமான முயற்சியாகும்.

ஜனவரி 26 அன்று சுகாதார அமைச்சகத்திற்கு வெளியே வேலைநிறுத்தம் செய்தவர்களிடம் பேசிய சு.தொ.வ.ச. தலைவர்கள், சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தவும் 'தீர்வு' காணவும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

'திரு. அமைச்சரே, பயப்பட வேண்டாம்,” என்று சு.தொ.வ.ச. தலைவர் குமுதேஷ் அறிவித்தார். 'உங்கள் முதுகெலும்பை நேராக்குங்கள், எங்களுடன் கலந்துரையாடலுக்கு வாருங்கள்... தீர்வுகளை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும்.'

இது அரசாங்கத்திற்குச் சொல்லும் செய்தியைத் தவிர வேறொன்றுமில்லை: நீங்கள் எங்களுடன் உட்கார்ந்து பேசினால், சுகாதாரப் ஊழியர்களின் எதிர்ப்பை ஒடுக்க தொழிற்சங்கங்கள் வழிவகை செய்யும். கடந்த ஆண்டு, சு.தொ.வ.ச. அதிகாரிகள் அமைச்சர் மற்றும் அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்து, சில வெற்று வாக்குறுதிகளின் அடிப்படையில், போராட்ட நடவடிக்கையை முடக்கினர்.

கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுகாதார சேவையை விரிவுபடுத்துமாறு சுகாதார ஊழியர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளனர். சுகாதார தொழிற்சங்கங்கள் முன்பு இந்தக் கோரிக்கைகளை ஏற்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், தற்போது அவை முற்றாகக் கைவிடப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து இலங்கை தொழிற்சங்கங்களும் அரசாங்கத்தின் இலாபம் சார்ந்த 'வைரஸுடன் வாழ்வது' என்ற கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன.

பணப்பற்றாக்குறையில் உள்ள இராஜபக்ஷ அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினதும் கோரிக்கைகள் எதனையும் வழங்கத் தயாராக இல்லை. பொருளாதாரச் சரிவை மற்றும் கடன் தவணை தவறலின் விளிம்பில் தள்ளாடுவதை எதிர்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் பெருவணிகங்களுக்கான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை நெருக்குவதற்கே முன்னுரிமை கொடுத்துள்ளது. கோவிட்-19 ஆல் உருவாக்கப்பட்ட பேரழிவுகரமான சுகாதார அவசரநிலை இருந்தபோதிலும், அரசாங்கம் 2021 ஆம் ஆண்டிற்கான சுகாதார செலவினங்களை 28 பில்லியன் ரூபாவாலும் இந்த ஆண்டு 6 பில்லியனாலும் குறைத்துள்ளது.

சுகாதாரத் துறை ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள், தொழிலாள வர்க்கம் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு அடிபணியாமல் தங்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது. எவ்வாறாயினும், இந்த போராட்டத்தை மேம்படுத்த, அவர்களுக்கு ஒரு அரசியல் வேலைத்திட்டம் அவசியமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியால் முன்நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அமைக்கப்பட்ட, சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழு (சு.ஊ.ந.கு.), அத்தகைய வேலைத் திட்டத்திற்காகப் போராட சுகாதார ஊழியர்கள் மத்தியில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது.

கடந்த வாரம் சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழு 'சுகாதார நிபுணர்களின் மாகாண ரீதியான ஆர்ப்பாட்டங்களும் சுகாதார ஊழியர்கள் எடுக்க வேண்டிய பாதையும்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது:

“அரசாங்கத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களின் உறுதியை சுகாதாரப் ஊழியர்களின் நடவடிக்கைக் குழு பாராட்டினாலும், போர்க்குணம் மட்டும் போதாது என்பதை அது வலியுறுத்துகிறது…

“ஒரு பேச்சுவார்த்தை மேசையில் அரசாங்கத்துடன் அமர்ந்து பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்று தொழிலாளர்களை நம்ப வைக்க, தொழிற்சங்கங்கள் தங்களின் கட்டளைப்படி அனைத்தையும் செய்கின்றன. தொழிற்சங்கங்கள் கடந்த ஆண்டு சுகாதாரத் துறை போராட்டங்கள் தங்கள் கோரிக்கைகளுக்கான தொழிலாளர்களின் ஒன்றிணைந்த தாக்குதலாக அபிவிருத்தியடைவதை தடுத்து, நேரடியாக அரசாங்கத்திற்கு இவ்வாறுதான் உதவின.

'சுகாதார ஊழியர்கள் தங்களை தராதர அடிப்படையில் பிரிக்கும் தொழிற்சங்கங்களின் இந்த பிற்போக்கு பாத்திரத்தை நிராகரித்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களுடனும் அவர்களின் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடனும் ஐக்கியப்பட வேண்டும்.'

சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழுவை விரிவுபடுத்தவும், ஒவ்வொரு சுகாதார நிறுவனத்திலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பவும் அழைப்பு விடுத்து, அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிரான அரசியல் போராட்டம் இல்லாமல், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பதை கடந்த ஆண்டு போராட்டங்கள் எடுத்துக் காட்டுவதாக அறிக்கை கூறியது.

சோசலிச மற்றும் சர்வதேச கொள்கைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி, என கூறிய அறிக்கை, மேலும் உலக சோசலிச வலைத் தளம் முன்னெடுக்கும் தொற்றுநோய் தொடர்பான உலகளாவிய தொழிலாளர் விசாரணையை ஆதரிக்கவேண்டும் என சுகாதார ஊழியர்களை வலியுறுத்தியது.

சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பல மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம் செய்யும் சுகாதார ஊழியர்களுடன் பேசினர்.

தொழிற்சங்கங்களின் துரோகத்தை எடுத்துக்காட்டி, கம்பளை வைத்தியசாலையைச் சேர்ந்த ஆய்வக தொழில்நுட்ப நிபுணர் ஒருவர், “தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை கடுமையாக ஏமாற்றுகின்றன. எமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் உறுதியளித்த போதிலும், உண்மையான பிரச்சினைகளைக் கைவிட்டு, தமது பிற்போக்குத்தனமான இலக்குகளை முன்வைத்து எம்மை ஏமாற்றிவிட்டன” என்றார்.

தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்க முயற்சிப்பதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் இடைக்கால சுகாதார அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார். “தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பிரிவை மற்றொரு பிரிவினருக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் அவர்கள் அரசாங்கத்திற்கு உதவுகிறார்கள். தொழிலாளர்கள் ஒரு பொதுவான போராட்டத்தில் ஒன்றுபடுவதற்கான அனைத்து வழிகளையும் அடைப்பதே அவர்களின் நோக்கம் ஆகும்,” என அவர் தெரிவித்தார்.

Loading