மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க பணவீக்கம் நான்கு தசாப்தங்களில் இல்லாதளவில் அதன் அதிகபட்ச மட்டங்களுக்கு அதிகரித்து வருகையில், ஜனவரியிலும் விலை உயர்வுகள் தொடர்ந்து அதிகரித்தன. இப்போது 7.5 சதவீதமாக உள்ள ஆண்டு பணவீக்க விகிதம், உழைக்கும் குடும்பங்களின் வரவு-செலவு கணக்கைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது, உணவுப் பொருட்கள், எரிவாயு, வெப்பமூட்டுவதற்கான எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய தேவைகள் கூர்மையாக அதிகரித்து வருவதை இவர்கள் முகங்கொடுக்கிறார்கள்.
இதே போக்கு உலகெங்கிலும் நடந்து வருகிறது. ஐரோப்பிய மண்டலத்தில், பணவீக்கம் 1997 இல் பதிவு செய்யத் தொடங்கியதற்குப் பின்னர் அதன் அதிகபட்ச மட்டமாக அது 5.1 சதவீதத்தை எட்டியது.
இந்தளவிலான பணவீக்கமானது, நிஜமான அர்த்தத்தில் பெரும்பாலான தொழிலாளர்களின் சம்பளங்கள் கூர்மையாக வீழ்ந்து வருவதை அர்த்தப்படுத்துகிறது. அமெரிக்காவில் வருடாந்தர சம்பள அதிகரிப்பு அமெரிக்க புள்ளிவிபர ஆணையத் தகவல்படி 2021 இல் வெறும் 4.5 சதவீதமாக இருந்தது. தொழிற்சங்கங்கள் தற்போதைய பணவீக்க விகிதத்தை விட வெகுவாக குறைந்த சம்பள உயர்வுகளில் சிக்க வைக்கும் பல ஆண்டுகளுக்கான ஒப்பந்தங்களைத் தொடர்ச்சியாக கையெழுத்திட்டு இருப்பதால், தொழிற்சங்கத்தில் இணைந்துள்ள தொழிலாளர்களின் நிஜமான கூலிகள் சராசரியாக வெறும் 3.3 சதவீதம் அதிகரித்தது, இது தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களுக்கான விகிதத்தை விட குறிப்பிட்டளவு குறைவாகும்.
குறிப்பாக பண்டங்களின் விலை அதிகரிப்பு மலைப்பூட்டுகிறது. எரிபொருள் விலை குறியீடு வருடாந்தர அடிப்படையில் 27 சதவீதம் அதிகரித்தது, அதேவேளையில் உணவுப் பொருட்களின் விலை உயர்வோ 7 சதவீதம் அதிகரித்தது. இறைச்சி, உணவுக் கோழி மற்றும் முட்டை விலைகள் 12.2 சதவீதம் அதிகரித்தது, குழாய்வழி இயற்கை எரிவாயு 23.9 சதவீதம் அதிகரித்தது மற்றும் மின்சாரம் 10.7 சதவீதம் அதிகரித்தது. எரிவாயு 40 சதவீதம் அதிகரித்தது. ஒரு கடுமையான குளிர்காலத்திற்கு மத்தியில், அமெரிக்காவின் மத்திய மேற்கில் இன்னும் அதிகமாக விலைகள் உயர்ந்தன, இயற்கை எரிவாயு 31.1 சதவீதம் அதிகரித்தது. வினியோக சங்கிலி பிரச்சினைகள் புதிய கார் விலைகளை 12.2 சதவீதம் அதிகரிக்க இட்டுச் சென்றது, பயன்படுத்தப்பட்ட கார் விலைகள் மிகவும் அதிகமாக 40.5 சதவீதம் அதிகரித்தது.
கடனுக்கான ஜப்தி இடைநிறுத்த காலம், மாதாந்திரம் 300 டாலர் குழந்தைக்கான வரிச்சலுகை, திண்டாடும் தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் உட்பட மிச்சமீதி பெருந்தொற்று உதவிகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விலை உயர்வுகள் வருகின்றன. சலுகைகள் திரும்பப் பெறப்படுவதால் இது மில்லியன் கணக்கான குழந்தைகளை மீண்டும் வறுமைக்குள் கொண்டுச் செல்ல அச்சுறுத்துகிறது.
அதிகரித்து வரும் இந்த பணவீக்கம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கம் இந்த பெருந்தொற்றுக்குக் காட்டிய விடையிறுப்பில் நடைமுறைப்படுத்திய கொள்கைளின் ஒரு துணைவிளைவாகும், பங்கு மதிப்புகளுக்கு முட்டுக் கொடுப்பதற்காக நிதிச் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியதும் அதில் உள்ளடங்கும். முதலாளித்துவ அரசாங்கங்கள் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வரும் பயனுள்ள பொது சுகாதார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த மறுப்பதால், வினியோகச் சங்கிலிகள் சிக்கலுக்கு உள்ளாகி இருப்பது, பணவீக்க அழுத்தங்களை இன்னும் கூடுதலாக அழுத்துகிறது.
பங்குச் சந்தை அதிகரிப்பின் விளைவாக, எலொன் முஸ்க், ஜெஃப் பெஸோஸ், பில் கேட்ஸ் உட்பட உலகின் 10 மிகப் பெரிய செல்வந்தர்களின் நிகர செல்வவளம் இந்த பெருந்தொற்றின் போது 1.5 ட்ரில்லியன் டாலருக்கு இரண்டு மடங்கு அதிகரித்தது. இவர்கள் நாளொன்றுக்கு 1.3 பில்லியன் டாலர் சேர்த்துள்ளனர், அதேவேளையில் ஆசிரியர்களும் குழந்தைகளும் கோவிட்-நோய்தொற்று ஏற்பட்ட பள்ளிகளுக்கும், இந்த செல்வந்தர்களின் இலாபத்திற்காக தொழிலாளர்கள் அதேயளவுக்கு ஆபத்தான தொழிற்சாலைகளுக்கும் அனுப்பப்படுகின்றனர்.
பெருநிறுவன இலாபங்களும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. ஃபோர்டு மற்றும் ஜிஎம் இரண்டுமே மிகப் பெரியளவில் இலாபமடைந்தன, ஃபோர்டு 2021 நிகர வருவாயில் 17.9 பில்லியனை அறிவிக்கிறது, ஜிஎம் முன்பில்லாத அதிகபட்ச அளவாக 10 பில்லியன் டாலர் அறிவித்தது. இந்த அதிகரிப்புகள், வாகன ஆலைகளில் ஆயிரக் கணக்கானவர்கள் கோவிட்-19 ஆல் நோய்வாய்ப்பட்டும் பல தொழிலாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் நடந்திருந்தன.
கச்சா எண்ணெய் பேரலுக்கு 90 டாலரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் ஏழாண்டின் அதிகபட்சமாக உள்ள நிலையில், எக்ஸான்மொபில், ஷெல், BP மற்றும் மாரத்தான் ஆகியவை 2021 இன் நிகர இலாபமாக 73 பில்லியன் டாலர் சம்பாதித்தன, அவற்றின் உயர்மட்ட பங்குதாரர்களை இன்னும் அதிகமாக செழிப்பாக்க பங்குகள் வாங்கி விற்பதில் பத்து பில்லியன் கணக்கான தொகைகளைச் செலவிட்டு வருகின்றன. அதேநேரத்தில், 30,000 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு 'இறுதி' சம்பள முன்மொழிவாக ஆண்டுக்கு 2-3 சதவீதத்தை ஏற்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.
பாரியளவில் பணக்காரர்களுக்குக் கையளிக்கப்பட்ட செல்வவளத்தைத் திரும்ப பெற இன்னும் அதிக மூர்க்கமாக தொழிலாளர்களைச் சுரண்ட வேண்டியுள்ளது.
நிஜமான சம்பளங்களை வெட்டுவதன் மூலம் விலையுயர்வுக்கான விலையைத் தொழிலாளர்கள் செலுத்துவதை உறுதிப்படுத்த, தொழிற்சங்கங்கள் பணவீக்கத்தை விட மிகவும் குறைவான சம்பள உயர்வுகளைக் கொண்ட பல ஆண்டு ஒப்பந்தங்களைத் தொடர்ச்சியாக திணித்துள்ளன.
வேர்ஜினியாவில் வொல்வோ ட்ரக் தொழிலாளர்கள் விஷயத்தில், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் விற்றுத் தள்ளப்பட்ட ஆறாண்டு கால ஒப்பந்தத்திற்கு உடன்பட்டது, அது அதிகபட்ச சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கான வருடாந்தர சம்பள உயர்வுகளை 2 சதவீதத்திற்குக் குறைவாக வைத்தது. தற்போதைய பணவீக்க விகிதம் 7.5 சதவீதமாக இருக்கையில், இது ஒப்பந்த காலம் வரையில் நிஜமான சம்பளங்களில் அண்மித்து 30 சதவீத வெட்டை அர்த்தப்படுத்துகிறது.
கெல்லாஹ் தொழிலாளர்கள் மீது 3 சதவீத வருடாந்தர சம்பள உயர்வுகள் வழங்கும் ஐந்தாண்டு கால ஒப்பந்தம் சுமத்தப்பட்டது, இது இந்த ஒப்பந்த காலம் வரையில் நிஜமான சம்பளங்களில் 20 சதவீத வெட்டுக்குச் சமமாகும். நாபிஸ்கொ தொழிலாளர்கள் மீது வெறும் 2 இல் இருந்து 2.5 சதவீத சம்பள உயர்வுகள் உட்பட நான்காண்டு கால உடன்படிக்கை சுமத்தப்பட்டது. தற்போதைய பணவீக்க விகிதத்தில், நான்காண்டுகளுக்கு, செலவு அதிகரிப்பால் அவர்கள் சம்பள தொகையில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு விழுங்கப்படுவதைத் தொழிலாளர்கள் காண்கிறார்கள்.
டேனா வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தி தொழிலாளர்கள் முன்முடிவான சம்பள உயர்வுகளைக் கொண்ட நான்கரை ஆண்டு கால உடன்படிக்கையைக் கண்டனர், அது விலை உயர்வுகளால் விரைவில் அரிக்கப்படும்.
பணவீக்கம் அதிகரிக்கையில் நிஜமான சம்பளங்களில் பெரும் வெட்டுக்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் நீண்ட கால ஒப்பந்தங்களைத் திணிக்க, தொழிற்சங்கங்கள், பைடென் நிர்வாகம் மற்றும் முதலாளிகளுடன் சேர்ந்து சதி செய்கின்றன. இந்த அயோக்கியத்தனத்திற்கு கைமாறாக, பைடென் நிர்வாகம் வெளிநாடுகளில் போர் மற்றும் உள்நாட்டில் சிக்கன நடவடிக்கைகளுக்கான ஆளும் வர்க்கத்தின் திட்டநிரலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பலையைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் இந்த தொழிற்சங்கங்களை வலுப்படுத்தி வருகிறது.
விற்றுத் தள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், வாக்கெடுப்புகளில், வொல்வோ, டானா மற்றும் ஜோன் டீர் ஆலைகளைப் போலவே, அதிகரித்தளவில் 90 சதவீத வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டு வருகின்றன. டீர் அலையில், நிர்வாகம் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஓர் ஒப்பந்தத்தை மீளமர்த்தத நிர்பந்திக்கப்பட்டது, இது வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் போன்ற வணிக பத்திரிகைகளிடம் இருந்து கோபமான மற்றும் மிரட்சியான ஒரு விடையிறுப்பைத் தூண்டியது, “சம்பள உயர்வு சுழற்சி' குறித்து ஜேர்னல் எச்சரித்திருந்தது. சம்பளக் கோரிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக சமீபத்தில் விவாத நடவடிக்கைகள் நடந்துள்ளன, வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்க வட்டி விகிதங்களைக் கூர்மையாக அதிகரிப்பது போன்றவை இடம் பெற்றிருந்தது.
அமெரிக்காவில் தொழிற்சங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கான சராசரி சம்பள உயர்வுகள் தேசியளவில் சராசரி சம்பள உயர்வுகளை விட குறைவாக வைக்கப்பட்டுள்ளன என்ற உண்மை மிகப் பெரும் முக்கியத்துவம் பெறுவதுடன், தொழிற்சங்கங்களின் பாத்திரம் மாறியிருப்பதைக் குறித்து உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முன்வைத்த மதிப்பீட்டை ஊர்ஜிதப்படுத்துகிறது.
1937 இல் எழுதுகையில், ரஷ்ய புரட்சியாளரும் நான்காம் அகிலத்தின் நிறுவுனருமான லியோன் ட்ரொட்ஸ்கி எழுதுகையில், தொழிற்சங்கங்களின் தலைவர்கள் 'தொழிலாளர்களின் மீதான தாக்குதல்களில் முதலாளித்துவ வர்க்கத்தின் வருவாயைப் பாதுகாத்தால்'; அவை வேலைநிறுத்தங்களுக்கு எதிராக, சம்பள உயர்வுகளுக்கு எதிராக, வேலைவாய்ப்பின்மை உதவிகளுக்கு எதிராக போராடினால், பின்னர் நாம் தொழிற்சங்கங்களை அல்ல கருங்காலிகளின் ஒரு அமைப்பை தான் வைத்திருப்போம்,” என்று குறிப்பிட்டார்.
'தொழிற்சங்கங்கள்' துல்லியமாக இப்போது இந்த பாத்திரம் தான் வகிக்கின்றன. பெருநிறுவன நிர்வாகத்தின் இந்த முகவர்கள் மற்றும் இந்த தொழில்துறை பொலிஸ்காரர்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு அமைப்புகளின் மட்டுப்பட்ட செயல்பாட்டைக் கூட கைவிட்டுள்ளன என்பதோடு இப்போது நேரடியாக நிர்வாகம் மற்றும் அரசின் சார்பாக செயல்படுகின்றன.
தொழிற்சங்கம்-நிர்வாக கவசத்தில் இருந்து முறித்துக் கொண்டு வெளியேறப் போராடும் தொழிலாளர்களுக்கு ஒரு வேலைத்திட்டம் மற்றும் அமைப்புரீதியான வடிவத்தை வழங்க, கடந்தாண்டு, சாமானிய தொழிலாள குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) ICFI உருவாக்கியது.
பணவீக்கத்திற்கு எதிராக தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது, இந்த உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான பரந்த போராட்டத்தின் பாகமாகும். அது இந்த பெருந்தொற்றுக்கு உலகெங்கிலுமான எல்லா முதலாளித்துவ அரசாங்கங்களும் காட்டும் குற்றகரமான மற்றும் செயல் திறமையற்ற விடையிறுப்புக்கு எதிரான போராட்டத்துடன் பிணைந்துள்ளது, அவை ஒவ்வொரு படியிலும் மனித உயிர்களின் பாதுகாப்பை பெருநிறுவன இலாபங்களுக்கு அடிபணியச் செய்துள்ளன.
வர்க்கக் கூட்டு மூலமாக அல்ல, சமரசமற்ற வர்க்க போராட்ட வேலைத்திட்டத்தை IWA-RFC அடித்தளத்தில் கொண்டுள்ளது. தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளுக்குத் திறந்திருக்கும் அது, பெருநிறுவன இலாபத்திற்காக அல்ல மனித தேவைக்காக உற்பத்தியை மனிதாபிமான அடிப்படையில் உயர்ந்த விதத்தில் மறுஒழுங்கமைப்பு செய்து, சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாக கொண்ட ஒரு சோசலிச முன்னோக்கால் வழிநடத்தப்படுகிறது.
வேலையிடங்கள், பள்ளிகள் மற்றும் ஆலைகளில் தொழிலாளர்களாலேயே ஜனநாயகரீதியில் நடத்தப்படும் சாமானிய தொழிலாளர் குழுக்கள் வாழ்க்கைத் தரங்கள் மீதும் மற்றும் இந்த பெருந்தொற்றின் போது தொழிலாளர்களின் உயிர்கள் மீதும் உடல்நலம் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான ஒரு பரந்த போராட்டத்திற்கான குவிமையமாக சேவையாற்ற முடியும்.