இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சுகாதார ஊழியர்களின் நடவடிக்கை குழு (சு.ஊ.ந.கு.), இலங்கையில் உள்ள அனைத்து சுகாதார ஊழியர்களையும் அவர்களது சக ஊழியர்களில் ஒரு பெரும் பகுதியினர் மேற்கொண்டு வரும் காலவரையற்ற தேசிய வேலைநிறுத்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு வலியுறுத்துகிறது. ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் எதிப்புப் போராட்டத்தின் மையப்புள்ளியாக, இந்த போராட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவை வழங்குமாறு, அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
தாதிமார், துணை மருத்துவர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் மருந்தாளர்கள் உட்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள், திங்கட்கிழமை வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். புற்றுநோய், மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான அவசரச் சேவைகள், பிரதான கோவிட்-19 சிகிச்சை மையங்கள் மற்றும் மத்திய இரத்த வங்கி ஆகியவை இந்த கட்டத்தில் வெளிநடப்பு செய்யவில்லை.
15 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான சுகாதார தொழில் வல்லுநர்களின் சம்மேளனம் (சு.தொ.வ.ச.) இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. செவ்வாயன்று, மத்திய கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சுக்கு வெளியே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கூட்டம் நடத்தினர். அவர்கள் தீவு முழுவதும் இருந்து வந்திருந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதார ஊழியர்களின் முந்தைய நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்த சு.தொ.வ.ச., தங்களது அவசர கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் திரும்பத் திரும்ப மறுத்து வருகின்றமை தொடர்பாக எழுந்த கோபத்திற்கு பிரதிபலிப்பாகவே இந்த வார வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. சம்பள முரண்பாடுகளை சரிசெய்தல், போக்குவரத்து மற்றும் அவசர கடமை அழைப்புக்கான கொடுப்பனவுகளை 3,000 ரூபாயிலிருந்து ($US15) 10,000 ரூபாயாக அதிகரித்தல், மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவை அவர்களது கோரிக்கைகளில் அடங்கும்.
கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளில் நிரம்பிவழிவதால் சுகாதாரத் துறை முறிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்களால் திட்டமிட்டு சீரழிக்கப்பட்ட பற்றாக்குறையான சுகாதார உட்கட்டமைப்பினுள் அவசரநிலையைச் சமாளிக்க சுகாதார ஊழியர்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.
சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தமானது இலங்கையிலும் சர்வதேச அளவிலும் அடிப்படை சமூக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் மனித உயிர்களை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆளும் உயரடுக்கின் 'வைரஸுடன் வாழவேண்டும்' என்ற குற்றவியல் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட பேரழிவிற்கு எதிராக வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் ஒரு பகுதியாகும்.
அரசாங்க சார்பு பொது சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் (பொ.சே.ஐ.தா.ச.), எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சார்பு அகில இலங்கை சுகாதார சேவை சங்கம் (அ.இ.சு.சே.ச.) ஆகியவை வேலைநிறுத்தத்துக்கு குழிபறிப்பதில் ஈடுபட்டுள்ளன. இந்த துரோகத்தை நிராகரித்து தங்கள் சக ஊழியர்களுடன் இணைந்துகொள்ளுமாறு இந்த தொழிற்சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களிடமும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு பௌத்த பிக்குவான பொ.சே.ஐ.தா.ச. தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த, வேலைநிறுத்தத்தை 'நாசவேலை நடவடிக்கை' என்று இழிவான முறையில் முத்திரை குத்தியதோடு 'நாச வேலைகாரர்களுக்கு' தண்டனை வழங்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரினார். அது ஒரு 'கூட்டு நடவடிக்கை' அல்ல எனத் தெரிவித்து அ.இ.சு.சே.ச. வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என்று இழிந்த முறையில் அறிவித்தது. இந்த தொழிற்சங்கங்கள் நேரடியாக இராஜபக்ஷ அரசாங்கத்தின் பக்கம் நின்று அதை பலப்படுத்துகின்றன.
அதே நேரம், சு.தொ.வ.கூ. கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே அவர்களின் வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொள்ள முயற்சிக்கும் என்று நாம் வேலைநிறுத்தம் செய்யும் சுகாதார ஊழியர்களை எச்சரிக்கிறோம். செவ்வாய் கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், சு.தொ.வ.கூ. தலைவர்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலுக்கு விரைந்தனர். மேலதிக நேர கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என ஒரு வெற்று வாக்குறுதியை கொடுத்த ரம்புக்வெல்ல சுகாதார ஊழியர்களின் ஏனைய கோரிக்கைகள் பற்றி எதுவும் கூறவில்லை.
பின்னர் ஊடகங்களுடன் பசிய சு.தொ.வ.ச. தலைவர் ரவி குமுதேஷ்: “நீங்கள் அமைச்சரவையில் என்ன முடிவை எடுக்கப் போகிறீர்கள் என்பதை தயவுசெய்து எங்களிடம் கூறுங்கள் என்று சுகாதார அமைச்சரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதையே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப் போவதாக அமைச்சர் நாளை அல்லது நாளை மறுதினம் தெரிவித்தால், அமைச்சரவை தீர்மானம் வரும் வரை போராட்டத்தை இடைநிறுத்த எங்களால் முடியும்” என்றார்.
முன்னைய சுகாதார அமைச்சரும் அதிகாரிகளும், சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தனர், அந்த முன்னோடிகளைப் போன்று முடிவுகளை எடுக்க போதுமான 'தைரியம்' கொண்டவர்களாக இல்லை என்று திங்கட்கிழமை குமுதேஷ் குற்றம் சாட்டினார். இந்தக் கூற்று பொய்யானது. அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான போராட்டம் இல்லாமல், சுகாதார ஊழியர்களோ, அல்லது வேறு எந்தப் பிரிவுத் தொழிலாளர்களோ எதனையும் வென்றெடுத்ததில்லை.
அதே மூச்சில், குமுதேஷ், ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவும் சுகாதார அமைச்சரை விட ஏதாவது மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருந்தால், அவர்களுக்கு ஒரு தீர்வை வழங்க முடியும் என்பதால், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது போலியானது. ஜனாதிபதி இராஜபக்ஷ, அவரது அரசாங்கம் மற்றும் முழு முதலாளித்துவ வர்க்கமும், ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர், இந்த இக்கட்டான நிலை தொற்றுநோயால் வியத்தகு முறையில் மோசமடைந்துள்ளது.
சர்வதேச நிறுவனங்களுக்கு பாரிய கடன்களை திருப்பிச் செலுத்தும் முயற்சியில், கொடுத்துமாறல் ஏற்பாடுகள் வடிவில், கொழும்பு அதிக வெளிநாட்டுக் கடன்களை ஏற்பாடு செய்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் நிரப்பப்பட்டு தற்போது துறைமுகத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான கொள்கலன்களை விடுவிப்பதற்கு பணம் செலுத்துவதற்கு அதனிடம் நிதி இல்லை.
திங்களன்று, நிதி அமைச்சானது தொலைபேசி மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை விடயங்கள் உட்பட செலவினங்களைக் குறைக்க அழைப்பு விடுத்து அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. வருவாய் பற்றாக்குறையை நிரப்ப அரசாங்கம் பணம் அச்சடித்து வருகிறது. இது பணவீக்கத்தை தூண்டுவதுடன் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏனைய சுயதொழில் செய்பவர்களின் உண்மையான வருமானத்தை வெகுவாகக் குறைக்கிறது.
கடந்த மாதம் நிதியமைச்சு சர்வதேச நாணய நிதியத்திற்கு தொழில்நுட்ப உதவி என அழைக்கப்பட்டதைக் கோரி கடிதம் எழுதியது. இது மேலும் சிக்கன நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பதற்கும், தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் இன்னும் ஆழமான சமூகத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் என்பதற்கும் ஒரு சமிக்ஞையாகும்.
இந்த உண்மைகளை முழுமையாக உணர்ந்துள்ள சு.தொ.வ.ச., அரசாங்கத்திற்கு அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம் சுகாதாரப் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்! என்ற மாயைகளை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
குமுதேஷ், செவ்வாயன்று, ஆசிரியர்களின் போராட்டத்தை குறிப்பிட்டு, அதிக போராட்டங்கள் மூலம் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுத்ததாக பொய்யாக வலியுறுத்தினார். இது மற்றொரு வெளிப்படையான பொய் ஆகும்.
கடந்த ஆண்டு 100 நாள் ஆசிரியர்களின் இணையவழி கற்பித்தல் வேலைநிறுத்தத்தின் போது, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக போராட்டங்களை ஏற்பாடு செய்தன, பின்னர், அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட அற்ப ஊதிய உயர்வை– அதாவது அசல் ஊதியக் கோரிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமான உயர்வை- ஏற்றுக்கொண்டு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் வேகமாக பரவும் நிலையில் பாடசாலைகளை ஆபத்தான முறையில் மீண்டும் திறக்க உடன்பட்டு, தங்கள் உறுப்பினர்களைக் காட்டிக் கொடுத்தன. இந்த காட்டிக்கொடுப்பை அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களும் ஆமோதித்துள்ளன.
சுகாதாரம், கல்வி, அரச நிர்வாகம், ரயில், மின்சாரம், துறைமுகங்கள், பெட்ரோலியம் மற்றும் பெருந்தோட்டங்கள் என கடந்த 12 மாதங்களாக போராட்டத்தில் இறங்கிய அனைத்து தொழிலாளர்களும், இதே காட்டிக்கொடுப்புகளையே அனுபவித்திருக்கிறார்கள். அரசாங்க மற்றும் பெருவணிகத் தாக்குதல்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்காமல், தொழிலாள வர்க்கம் அதன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது.
முதலாளித்துவ ஆட்சிக்கும் தேசிய அரசுக்கும் கட்டுப்பட்ட தொழிற்சங்கங்கள், அரசாங்கத்துடன் எந்த மோதலுக்கும் செல்ல பயப்படுவதோடு, அத்தகைய போராட்டத்தைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளன. இது, அதிகரித்து வரும் வெகுஜன கோபத்தை எதிர்கொள்ள சர்வாதிகார நடவடிக்கைகளை பின்பற்றுவது பற்றி கலந்துரையாடி வரும் இராஜபக்ஷ ஆட்சிக்கும் ஆளும் உயரடுக்கிற்கும் தைரியத்தை அளித்துள்ளது. நீதி அமைச்சர் அலி சப்ரி, வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை சட்டவிரோதமாக்குவதற்கு பகிரங்கமாக முன்மொழிந்துள்ளார்.
சுகாதார ஊழியர்கள் சு.தொ.வ.ச. மாயையை கட்டவிழ்த்து விடுவதையும், அது இராஜபக்ஷ அரசாங்கத்திடம் வங்குரோத்து வேண்டுகோள்கள் விடுப்பதையும் நிராகரிப்பதோடு மேலும் கண்ணியமான ஊதியங்கள், வேலை நிலைமைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பான தொழிலுக்குமான போராட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு சுகாதார நிறுவனத்திலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நடவடிக்கை குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
சீரழிந்து வரும் சுகாதார சேவையை சீரமைக்கவும், நவீனப்படுத்தவும், அதிக சுகாதார ஊழியர்களை நியமிக்கவும், தேவையான ஊதியம் மற்றும் வேலைச் சூழல்களை முழுமையாக வழங்கவும், பில்லியன் கணக்கான ரூபாய்களை அவர்கள் கோர வேண்டும். தொழிலாளர்களை தர அடிப்படையில் பிரிக்கும் தொழிற்சங்கங்களின் முயற்சிகளை நடவடிக்கை குழுக்கள் நிராகரிப்பதோடு அனைத்து சுகாதார ஊழியர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தினதும் ஐக்கியத்துக்காகப் போராட வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அடைவதற்கான போராட்டமானது, ஒரு சில செல்வந்தர்களின் நலன்களுக்காக அன்றி, பெரும்பான்மையினரின் நலன்களுக்காக பொருளாதாரத்தை மறுசீரமைப்பதன் பேரில், முதலாளித்துவ இலாப முறைமைக்கு எதிரான அரசியல் போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார ஊழியர்களின் நடவடிக்கை குழு வலியுறுத்துகிறது. சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை இது குறிக்கிறது.
தொற்றுநோய் காலம் முழுவதும் அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உட்பட உலகெங்கிலும் நடந்த போராட்டங்களில் சுகாதார ஊழியர்கள் முன்னணியில் உள்ளனர். அடுத்த வாரம், பெப்ரவரி 15 அன்று, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள தாதிமார்கள் வெளிநடப்பு செய்யவுள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை சுகாதாரப் ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள தமது சகோதர சகோதரிகளுடன் கைகோர்க்க வேண்டும். தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டமைப்பை வழிநடத்தும் முன்நோக்கு இதுவே ஆகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் முன்முயற்சியில் 2020 இல் உருவாக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் நடவடிக்கை குழு, பல சுகாதார நிறுவனங்களில் உள்ள செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற துணைப் பணியாளர்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சுகாதார வேலைத் தளங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைக்க நாம் போராடி வருகிறோம். இந்த போராட்டத்தில் உதவி பெற எங்களை தொடர்பு கொள்ளவும்.