மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ரஷ்யாவுக்கு எதிராக ஒரு போர் முனைவைத் தொடங்க நேட்டோ சக்திகள் பயன்படுத்தி வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் பொய்களைச் சம்பவங்கள் அம்பலப்படுத்துகின்றன. உக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்பைக் காணும் நாள் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்த நேற்றைய தினம், இதுவரையில் எந்த ரஷ்ய படையெடுப்பும் இல்லாமல் வந்து சென்றுவிட்டது, உண்மையில் சொல்லப் போனால் ரஷ்யா அதை ஒட்டிய உக்ரேன் எல்லையில் இராணுவப் பயிற்சிகளுக்காக நிலைநிறுத்தி இருந்த படைப்பிரிவுகளைத் திரும்பப் பெற்றது. இருந்தாலும் கிழக்கு ஐரோப்பாவுக்கான இராணுவ நிலைநிறுத்தல்களை அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகள் அதிகரித்ததுடன், ரஷ்யா உக்ரேனைத் தாக்க தயாராகி வருவதாக அவர்களின் வெற்று குற்றச்சாட்டுக்களைத் திரும்ப கூறினர்.
அந்த இராணுவப் பயிற்சிகளுக்குப் பின்னர் கிரிமியா மற்றும் பெலாருஸில் இருந்து அதன் டாங்கிகள் வெளியேறுவதைக் காட்டும் காணொளிகளை வெளியிட்ட போதும் கூட, நேட்டோ பொது செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் புரூசெல்ஸில் நேற்று தொடங்கிய இரண்டு நாள் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடங்கி வைத்து ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறுகையில் ரஷ்யாவை மீண்டும் கண்டித்தார். ரஷ்ய காணொளிகள் குறித்து கூறுகையில், “களத்தில் தீவிரப்பாட்டைக் குறைக்கும் எந்த அறிகுறியும் நாங்கள் பார்க்கவில்லை. பனிப்போருக்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாதளவில், உக்ரேனைச் சுற்றி ரஷ்யா போர் படைகளைக் குவித்துள்ளது. ஒரு புதிய தாக்குதலுக்கு இப்போது அனைத்தும் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. ஆனால் விளிம்பில் இருந்து பின்வாங்க ரஷ்யாவுக்கு இன்னமும் அவகாசம் இருக்கிறது,” என்று சலிப்பூட்டும் விதத்தில் வாதிட்டார்.
உக்ரேன் அல்லது ஜோர்ஜியா போன்ற ரஷ்யாவின் எல்லை நாடுகளை நேட்டோ சேர்த்துக் கொண்டு, அங்கே தாக்கும் ஆயுதங்களை நிலைநிறுத்தக்கூடும் என்ற மாஸ்கோவின் கவலைகளை ஸ்டொல்டென்பேர்க் ஒதுக்கித் தள்ளினார். நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் இன்று உக்ரேனிய மற்றும் ஜோர்ஜிய அமைச்சர்களைச் சந்திக்க தயாராகி வருகின்ற நிலையில், “ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பாதையைத் தேர்ந்தெடுக்க உரிமை உள்ளது,” என்று வாதிட்டார். கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ போர் படைப்பிரிவுகளை நிரந்தரமாக நிலைநிறுத்தி நேட்டோ அணுஆயுதங்களைப் பயன்படுத்த தயாராக இருப்பதை உறுதி செய்யும் திட்டங்களுடன் முன்நகர ஸ்டொல்டென்பேர்க் சூளுரைத்தார்.
“நாங்கள் கூட்டணியின் கிழக்கு பாகங்களில் இன்னும் கூடுதல் துருப்புகள், விமானங்கள் மற்றும் கப்பல்களை நிலைநிறுத்தி உள்ளோம், எங்கள் நேட்டோ விடையிறுப்பு படையின் தயார்நிலையை அதிகரித்துள்ளோம், பால்டிக் பிராந்தியத்தில் எங்கள் போர்ப் படைப்பிரிவுகளை அதிகரித்துள்ளோம்,” என்று கூறிய அவர், “எங்கள் தற்காப்பு தோரணையை இன்னும் கூடுதலாக அதிகரிக்க வேண்டியதைக் குறித்து நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் பேசுவார்கள். ருமேனியாவில் ஒரு புதிய நேட்டோ போர்ப் படைக்குழுவுக்குத் தலைமை கொடுக்க பிரான்ஸ் முன்வந்திருப்பதை நான் வரவேற்கிறேன். நாளை, எங்கள் அணுஆயுத தடுப்பு முறைகள் பாதுகாப்பாக, கண்காணிப்புடன், திறம்பட இருப்பதை உறுதிப்படுத்த, அணுஆயுத திட்டக் குழுவின் வழமையான ஒரு கூட்டத்திற்கு நான் தலைமை தாங்குவேன்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
ஸ்டொல்டென்பேர்க் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனின் முந்தைய கருத்துக்களை எதிரொலித்தார். ரஷ்ய துருப்புகள் எல்லை பகுதியில் இருந்து வெளியேறி வருவதை மறுக்காத பிளிங்கென், ரஷ்ய துருப்புகளின் 'அர்த்தமுள்ள பின்வாங்கலை' வாஷிங்டன் காணவில்லை என்று வலியுறுத்தினார். “மாறாக, உக்ரேனுக்கு எதிராக குறிப்பாக எந்தவொரு புதுப்பிக்கப்பட்ட ஆக்ரோஷ நடவடிக்கைக்கான முன்களப் படையாக இருக்ககூடிய படைகளை, அவை தொடர்ந்து எல்லையில் இருப்பதை, எல்லையில் குவிக்கப்படுவதை, தொடர்ந்து நாங்கள் பார்க்கிறோம்,” என்று கூறிய அவர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 'விசையை இழுக்கக்கூடும்' என்று வாதிட்டார்.
இந்த விஷமப் பிரச்சார மொழி, நேட்டோவின் இட்டுக் கட்டப்பட்ட ரஷ்ய விரோத சொல்லாடல் மதிப்பிழந்திருப்பதில் இருந்து திசைதிருப்ப நோக்கம் கொண்டுள்ளது, உண்மையில் சொல்லப் போனால் எந்த வகையிலும் இதற்கு ஆதாரமில்லை, இது பொறுப்பின்றி இராணுவக் கட்டமைப்பை நியாயப்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.
ரஷ்ய படையெடுப்பு பற்றிய நேட்டோ அதிகாரிகளின் எச்சரிக்கைகள், ரஷ்யாவிடம் இருந்து அவர்கள் பாதுகாப்பதாக கூறும் உக்ரேனில் உள்ள நேட்டோ ஆதரவு அரசாங்கத்தால் மீண்டும் நேரடியாக நிராகரிக்கப்பட்டன. உக்ரேன் மீது படையெடுக்க அப்பகுதியில் ரஷ்யாவிடம் போதுமான துருப்புகள் இல்லை என்று உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி மீண்டும் மீண்டும் பகிரங்கமாக குறிப்பிட்ட பின்னர், உக்ரேனிய இராணுவ உளவுத்துறை நேற்று அதன் சொந்த உத்தியோகபூர்வ மதிப்பீட்டை வெளியிட்டது. “உக்ரேன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய இராணுவ படைப்பிரிவு உக்ரேனுக்கு எதிராக வெற்றிகரமாக பெரியளவில் ஆயுத தாக்குதல் நடத்த போதுமானதில்லை,” என்று அது அறிவித்தது.
உக்ரேனின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வங்கித்துறையைப் பாதிக்கும் ஒரு மிகப் பெரிய இணையவழி தாக்குதலை ரஷ்யா நேற்று நடத்தியதாக அமெரிக்க குற்றச்சாட்டுக்களையும் உக்ரேனிய அதிகாரிகள் நிராகரித்தனர். அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க இணை வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலாந்து, “கண்கூடாகவே, கிரெம்ளின்' அந்த தாக்குதலை நடத்தியது என்று கூறிய அதேவேளையில், உக்ரேனிய இணைய பாதுகாப்பு அதிகாரி விக்டொர் ஜோரா CNN க்குக் கூறுகையில், “பொறுப்பைச் சாட்டுவது மிகவும் முன்கூட்டியதாக இருக்கும்,” என்றார்.
இருந்தாலும், கிழக்கு ஐரோப்பாவில் போர்ப் படைப்பிரிவுகளை நிரந்தரமாக நிலைநிறுத்துவது குறித்து நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் புரூசெல்ஸின் இன்றைய உச்சி மாநாட்டிலோ அல்லது இந்த ஜூனில் மாட்ரிட்டில் நடத்தப்பட உள்ள நேட்டோ உச்சி மாநாட்டிலோ அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த போர்ப் படைப்பிரிவு பல்கேரியா, ருமேனியா, சுலோவாக்கியா மற்றும் ஹங்கேரிக்கு அனுப்பப்படலாம் என்று செவ்வாய்கிழமை பெயர் வெளியிட விரும்பாத ஒரு நேட்டோ தூதர் ராய்டர்ஸிற்குத் தெரிவித்திருந்தார் — இவ்விதத்தில் இது நேட்டோ இராணுவத் தளங்கள் மற்றும் துருப்புகளைக் கொண்டு ரஷ்யா மற்றும் உக்ரேனின் மேற்கத்திய எல்லைகளை சுற்றி வளைக்கும் தொடர்ச்சியான நேட்டோ நிலைநிறுத்தல்களை முழுமையாக்கும்.
மோதல் சாத்தியக்கூறு உள்ள மண்டலத்தில் இருந்து மாஸ்கோ கணிசமான படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டிருப்பதற்குக் காட்டப்படும் இந்த விடையிறுப்பு தவறுகிடமின்றி ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. அதாவது இங்கே ரஷ்யா அல்ல, வாஷிங்டன் தலைமையிலான நேட்டோ தான் போர் நாடுகிறது. ரஷ்ய படைகள் பகுதியாக திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதை வரவேற்று அப்பகுதியில் பதட்டங்களைக் குறைக்க முயல்வதற்குப் பதிலாக, நேட்டோ சக்திகள் மாஸ்கோவைக் கண்டிப்பதுடன் அவற்றின் அச்சுறுத்தல்களைத் தீவிரப்படுத்துகின்றன. ரஷ்ய எல்லையில் உள்ள ரஷ்ய துருப்புகளை குறித்து நேட்டோ கூட்டணி கண்டிக்கின்ற அதேவேளையில், அது ரஷ்யா மற்றும் உக்ரேனின் எல்லைகளுக்கே அனுப்பி வரும் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.
மனிதகுலம், 1991 சோவியத் ஒன்றிய ஸ்ராலினிச கலைப்பின் பேரழிவுகரமான விளைவுகளை நேருக்கு நேர் சந்திக்க இழுத்து வரப்படுகிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதால், ஈராக்கில் 1991 வளைகுடா போர் தொடங்கி சேர்பியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவுக்கு எதிராக தொடர்ந்த போர்களில் மில்லியன் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்த மத்தியக் கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் நேட்டோவின் போர் முனைவுக்கு வழி வகுத்தது. இதே காலகட்டத்தில், சோவியத் அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து விட்டதால் அதற்கு நேட்டோ வழங்கி இருந்த எல்லா வாக்குறுதிகளையும் அது கைவிட்டது. இந்த நிகழ்வுபோக்கு இப்போது கிழக்கு ஐரோப்பா எங்கிலும் நிரந்தரமாக துருப்புகளை நிலைநிறுத்துவதற்கான நேட்டோ திட்டங்களில் போய் முடிந்துள்ளது.
1990 களில் நேட்டோ வழங்கிய வாக்குறுதிகளை அது கைகழுவி விட்டது. ஜேர்மன் மறுஐக்கியத்திற்குப் பின்னர் நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்க மாட்டோம் என்று 1990 இல் அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜேம்ஸ் பேக்கர் மற்றும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹன்ஸ்-டீட்டர் கென்ஸ்சர் மாஸ்கோவுக்கு உத்தரவாதம் வழங்கிய பின்னர், நேட்டோவும் வார்சோ உடன்படிக்கை நாடுகளும் ஐரோப்பாவில் அணுஆயுதமில்லா ஆயுதப்படைகளுக்கான (Treaty on Conventional Armed Forces in Europe - CFE) 1991 உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கை, மற்ற நாடுகள் மீது மிகப் பெரியளவில் படையெடுப்பு நடத்துவதற்குப் போதுமான மரபார்ந்த ஆயுதங்களைத் தேக்கி வைக்கும் ஐரோப்பிய நாடுகளின் தகைமையை மட்டுப்படுத்தி இருந்தது.
ஆனால் ஒரு சமாதான கொள்கை ஏற்றிருப்பதற்கான எந்த பாசாங்குத்தனத்தையும் கூட நேட்டோ கைத்துறந்ததால், 1997 நேட்டோ-ரஷ்யா இறுதிச் சட்டம் (NATO-Russia Final Act) போலாந்து, செக் குடியரசு, சுலோவாக்கியா மற்றும் ஹங்கேரியை உள்ளிணைத்தது. 1999 இல் அது சேர்பியா மீது குண்டு வீசியது, 2002 இல், தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை தடுப்பு ஒப்பந்தத்தை வாஷிங்டன் கைவிட்டது, அதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் மரபார்ந்த ஆயுதப்படை உடன்படிக்கையைக் (Conventional Armed Forces in Europe - CFE) கைவிட்டது, நேட்டோ கூட்டணியில் கிழக்கு ஐரோப்பாவின் முன்பினும் பரந்த பிரிவுகள் உள்ளடங்கி இருந்த போதும் அதை நேட்டோ ஏற்றுக் கொள்வதை அது தடுத்தது. 2015 இல் ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையைக் கைத்துறந்த பின்னர், வாஷிங்டன் 2019 இல் மத்திய தூர அணுஆயுத தளவாடங்கள் தடை உடன்படிக்கையை (Intermediate-range Nuclear Forces - INF) உதறிவிட்டது.
அதிகரித்து வரும் உலகளாவிய அணுஆயுத போர் அபாயத்திற்கு எதிராக அமெரிக்காவிலும், ஐரோப்பா மற்றும் ரஷ்யா எங்கிலும், சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணித்திரட்டாமல் போர் முனைவைத் தடுப்பது சாத்தியமில்லை. மோதலின் தீவிரப்பாட்டைக் குறைப்பதற்கான மாஸ்கோவின் முயற்சிகளுக்கு விடையிறுக்க நேட்டோவுக்கு எந்த உத்தேசமும் இல்லை என்பது வெளிப்படையாக உள்ளது.
ரஷ்யாவின் திவாலான சோவியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சியிடம் நேட்டோ போர் முனைவுக்கு எந்த முற்போக்கான விடையிறுப்பும் இல்லை. நேட்டோவைச் சாந்தப்படுத்தும் முயற்சியில் தோல்வியடைந்ததால், குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது, ஐரோப்பாவில் அது மிகவும் கவனமான கொள்கையைப் பின்தொடர முயன்று வருகிறது என்றாலும், அது பதிலடி நடவடிக்கையைப் பரிசீலித்து வருவதைக் குறித்து சமிக்ஞை செய்துள்ளது, இத்தகைய நடவடிக்கை உக்ரேன் விவகாரம் மீதான ஐரோப்பிய மோதலை ஓர் உலகளாவிய போராக வேகமாக தீவிரப்படுத்திவிடும்.
நேற்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Sergey Shoigu ஜனாதிபதி பஷர் அல் அசாத்துடன் பேச்சுவார்த்தைக்காக சிரியா பயணித்த அதேவேளையில், 15 ரஷ்ய போர்க்கப்பல்கள் சிரிய கடற்கரை பக்கத்தில் கடற்படை ஒத்திகைகள் நடத்தின. அவர் இராணுவ நிலைமை குறித்து சிரிய அரசாங்கத்திற்கு விளங்கப்படுத்தினார், நேட்டோ ஆதரவிலான இஸ்லாமியவாதிகள் மற்றும் குர்திஷ் கொரில்லாக்களுக்கு எதிராக தசாப்த கால மோதலில் ஈரானும் ரஷ்யாவும் சிரியாவை ஆதரித்தவை ஆகும்.
“அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் சர்வதேச நிலைமையை வேண்டுமென்றே தீவிரப்படுத்தி வருகின்ற நிலைமைகளில், … ஓர் எச்சரிக்கை சேதியை அனுப்பவே Shoigu டமாஸ்கஸ் பயணித்திருப்பதாக,” லெபனிய தளபதி சார்லஸ் அபி நாடெர் ரஷ்யாவின் TASS செய்தி முகமைக்குத் தெரிவித்தார். “நேட்டோ உடனான இராணுவ மோதல் சம்பவத்தில் ரஷ்யா சிரியாவில் உள்ள அதன் மூலோபாய வசதிகளைப் பயன்படுத்தும் என்பது உட்கிடக்கையாக தெரிகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்ட அவர், “ஓர் உலகளாவிய விட்டுக்கொடுப்பற்ற நிலைமையில் இத்தகைய வசதிகளை ரஷ்யா இணைத்துக் கொள்ளும் முக்கியத்துவத்தை' வலியுறுத்தினார்.
சீனா உடனான ஒரு மோதலின் பாகமாக நேட்டோ ரஷ்யாவுடனான அதன் போர் முனைவைப் பரிசீலிப்பதாக ஸ்டொல்டென்பேர்க் அவர் பங்குக்கு புரூசெல்ஸ் பத்திரிகையாளர் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார். “சீனா இப்போது புதிய அணுஆயுத ஆற்றல்களை, நீண்டதூர ஏவுகணைகள், ஹைபர்சோனிக் ஏவுகணைகளை வேகமாக அபிவிருத்தி செய்து வருகிறது,” என்று கூறிய அவர், அதற்கு முன்னதாக அவ்விரு நாடுகளையும் கண்டித்தார்: “அடிப்படையில் அந்த இரண்டு எதேச்சதிகார சக்திகளும், ரஷ்யா மற்றும் சீனா, ஒருங்கிணைந்து செயல்படுவதைப் பார்க்க முடிகிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவை விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை விரும்பவில்லை.”
ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் போர் முனைவும் சர்வதேச அளவில் இராணுவ பதட்டங்கள் வேகமாக தீவிரமடைந்து வருவதும், ஏகாதிபத்திய சக்திகள் தூண்டிவிட்டு வரும் இந்த அதிகரித்து வரும் ஒரு புதிய உலக போர் அபாயத்திற்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கையூட்டி அணித்திரட்ட வேண்டிய அவசியத்தை அடிக்கோடிடுகிறது.