டொன்பாஸில் குண்டுவெடிப்புகள் ஐரோப்பாவை போரின் விளிம்பிற்கு கொண்டு வருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழனன்று, கிழக்கு உக்ரேனின் டொன்பாஸ் பகுதியில் குடியிருப்புப் பகுதிகள் உட்பட கடும் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இது குறைந்தபட்சம் கடந்த வசந்த காலத்தில் இருந்து, அமெரிக்க நிதியுதவி பெறும் உக்ரேனிய இராணுவத்திற்கும் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கும் இடையேயான மோதலின் மிக முக்கியமான இராணுவ விரிவாக்கமாக உள்ளது. பெப்ரவரி 16ம் திகதி நடைபெறவிருந்த உக்ரேன் மீதான ரஷ்யாவின் 'படையெடுப்பு' நடைமுறைக்கு வரத் தவறிய சில மணி நேரங்களிலேயே குண்டுவீச்சு பற்றிய செய்தி வந்தது. கிரெம்ளின் எப்பொழுதும் தன்னிடம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லையென மறுத்துள்ளது.

ஜனவரி 22, 2022, உக்ரேனின் கியேவில் உள்ள ஒரு நகரப் பூங்காவில் உக்ரேன் ஆயுதப் படைகளின் தன்னார்வ இராணுவப் பிரிவான உக்ரேனின் பிராந்திய தற்காப்புப் படையின் உறுப்பினர்கள் பயிற்சி பெறுகின்றனர். (AP Photo/Efrem Lukatsky, File)

கிரெம்ளினின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், டொன்பாஸின் சூழ்நிலையானது “எந்த நேரத்திலும்” “எங்கள் எல்லைகளுக்கு மிக அருகாமையில் ஒரு புதிய போர் வெடிப்பாக” உருவெடுக்கக்கூடும் என்று கூறினார்.

லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கிராமத்தில், ஒரு மழலையர் பள்ளியும் மற்றும் ஒரு பள்ளியும் தாக்கப்பட்டன. பிரிவினைவாதிகள் உக்ரேனிய இராணுவத்தை குற்றம்சாட்டினர், அதேவேளை கியேவ் பிரிவினைவாதிகளை குற்றம்சாட்டியது.

எந்த ஆதாரமும் வழங்காமல், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், இது உக்ரேனியர்களை ‘இழிவுபடுத்தும்’ வகையில் வடிவமைக்கப்பட்ட ரஷ்யாவின் ‘மற்றவர்கள் மீது பழிபோடும் நடவடிக்கை’ என்றார். பல வாரங்களாக, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஊடகங்களும் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களும் இதை ரஷ்யா திட்டமிட்டு ‘மற்றவர்கள் மீது பழிபோடும் நடவடிக்கை’ என ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ஒளிபரப்பின. இந்த குற்றச்சாட்டுக்கள் மிகவும் அபத்தமானவை என சமீபத்தில் ஒரு AP நிருபர் கூட அவை குறித்து ஒரு அரசுத்துறை செய்தித் தொடர்பாளரிடம் சவால் விடுத்தார்.

டொன்பாஸில் தற்போது நிகழும் இராணுவத் தாக்குதலானது ரஷ்யாவுடன் ஒரு போரைத் தூண்டுவதற்கான அமெரிக்க முயற்சிகளின் பின்னணியில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் நிகழ்த்திய ஒரு அசாதாரணமான போர்வெறி உரையைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் நேட்டோ அதிகாரிகள், ரஷ்யா அதன் துருப்புக்கள் சிலவற்றை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டாலும், ரஷ்ய படையெடுப்பின் அச்சுறுத்தல் உடனடி நிலையிலேயே இருப்பதாக வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கென், வியாழனன்று, ரஷ்ய துருப்புக்கள் எதுவும் வாபஸ் பெறப்படவில்லை, மாறாக அவை “வரும் நாட்களில் உக்ரேனுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கவே தயாராகி வருகின்றன” என்று குற்றம் சாட்டினார். வாஷிங்டனை தளமாகக் கொண்ட பொலிட்டிகோ செய்தியிதழ், இப்போது ரஷ்ய படையெடுப்புக்கு சாத்தியமுள்ள மற்றொரு தேதியை அறிவித்துள்ளது – அது பிப்ரவரி 20 என்கிறது.

ஜேர்மனியில் நாளை தொடங்கப்படவுள்ள முனீச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூடன் தான் கலந்துகொள்ளவிருப்பதாக பிளிங்கென் அறிவித்தார். அதே நேரத்தில், நேட்டோவின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க், ரஷ்யாவின் எல்லையில் படைகளை மேலும் குவிக்க நேட்டோ தயாராகி வருவதாகக் கூறினார். “ரஷ்ய அச்சுறுத்தலுக்கு” எதிரான இந்த வகையான போர்க்கால அணிதிரட்டல், இப்போது “ஐரோப்பாவில் புதிய வளமை” என ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

வியாழக்கிழமை பீரங்கித் தாக்குதல் பற்றிய செய்திகள் வெளியான சிறிது நேரத்திலேயே, பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான டிசம்பர் கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்ததற்கு மாஸ்கோ பதிலளித்தது. அதாவது, உக்ரேன் நேட்டோவில் சேர அனுமதிக்கப்பட மாட்டாது, மாறாக நேட்டோ அதன் 1997 எல்லைகளுக்கு திரும்பும் என்பதற்கும், மற்றும் ரஷ்ய எல்லைக்கு அருகில் அணுவாயுத ஏவுகணைகளை நேட்டோ நிறுத்தாது என்பதுடன், ஏற்கனவே அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள ஏவுகணைகளை மீளப்பெறும் என்பதற்கும் உத்தரவாதம் வேண்டும் என்று கிரெம்ளின் மீண்டும் வலியுறுத்தியது. உக்ரேன் மீதான எந்த படையெடுப்புக்கும் தான் தயாராகவில்லை என்று கிரெம்ளின் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கிரெம்ளின், தனது பாதுகாப்பு கோரிக்கைகள் எதையும் கருத்தில் கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது என்று குறிப்பிட்டு, இந்நிலையில் அது பின்வாங்கப் போவதில்லை என்றும், 'இராணுவ-தொழில்நுட்பத் தன்மையான நடவடிக்கைகளை செயல்படுத்துவது உட்பட பதிலளிப்பதற்கு கட்டாயப்படுத்தப்படலாம்' என்றும் கூறியது.

பகிரங்கப்படுத்தப்படாத காரணங்களுக்காக, ரஷ்யாவுக்கான அமெரிக்க துணைத் தூதரை மாஸ்கோ வியாழக்கிழமை வெளியேற்றியது.

உக்ரேனில், ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி இராணுவவாத பேச்சுக்களுக்கும் அமைதிக்கான அழைப்புக்கும் இடையில் ஊசலாடுகிறார். இந்த வாரம் டொன்பாஸில் பீரங்கித் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், உக்ரேனிய துருப்புக்களை முன்நின்று பாராட்ட அவர் ஒரு பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர், RBC Ukraina செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 2015 மின்ஸ்க் உடன்படிக்கைகளை தனது அரசாங்கம் இனி ஏற்காது என உறுதிபடக் கூறினார். ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நான்கு வழி பேச்சுவார்த்தைகளுக்கான நோர்மண்டி வடிவத்திற்குள் கியேவ் செயல்படும் என்று அவர் கூறிய அதேவேளை, ஒரு புதிய பெரிய சர்வதேச ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அந்த ஒப்பந்தம், உக்ரேன் நேட்டோவில் இணையும் செயல்முறை இழுபறியில் இருப்பதால், நேட்டோ உறுப்பு நாடுகள் பெறுவதற்கு ஒப்பான “பாதுகாப்பு உத்தரவாதங்கள்” உக்ரேனுக்கும் வழங்கப்படுவதாக இருக்க வேண்டும் என்று செலென்ஸ்கி கோரினார். அதே நேரத்தில், மேற்கத்திய ஊடகங்களில் நிலவும் போர்வெறியை செலென்ஸ்கி மீண்டும் கண்டித்தார்.

சமீபத்திய கருத்துக்களில், உக்ரேனின் மக்கள் சேவகர் கட்சி தலைவர் டேவிட் அராக்மியா, இந்த “வெறியால் நாட்டிற்கு இப்போது ஒவ்வொரு மாதமும் 2-3 பில்லியன் டாலர்கள் செலவாகிறது” என்று கூறினார். உயர்மட்ட ரஷ்ய அரசு பிரச்சாரகர்களின் வேலையை விட ‘மோசமான’ வகையில், இதை ஒரு ‘கலப்பின போர்’ வடிவமாக CNN, புளூம்பேர்க் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகிய ஊடகங்களால் பரப்பப்பட்ட ‘போலி’ செய்திகள் என்று அவர் விவரித்தார். இந்த அறிக்கைகளைத் உந்துவிக்கும் பொருளாதார கவலைகளுக்கு அப்பால், அமெரிக்க அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டது போல், தங்கள் நாடு ரஷ்யாவிற்கு மற்றொரு “ஆப்கானிய பொறியாக” மாறிவிடுமோ என்ற அச்சம் உக்ரேனிய தன்னலக்குழுவின் பிரிவுகளுக்குள் சந்தேகத்திற்கு இடமின்றி நிலவுகிறது. மக்களால் கைவிடப்பட்ட மிகவும் கடினமான அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் ஒருவரையொருவர் ஏமாற்றுக்காரர்களாகக் காணலாம்.

ரஷ்யாவிற்கு எதிரான போர் முனைப்பில் உக்ரேன் தன்னை அதிகரித்தளவில் ஸ்திரமின்மைக்கு ஆளாக்குகிறது. நாட்டின் நிலைமையை செலென்ஸ்கி கட்டுப்படுத்துகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த வாரங்களில், அவரது அரசாங்கத்தை தூக்கியெறிந்துவிட்டு, அவருக்குப் பதிலாக உடனடியாக அமெரிக்காவிற்கு ஒத்துப்போகும் ஒருவரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடப்பதற்கான பல அறிகுறிகள் அங்கு தென்படுகின்றன.

இந்த சூழ்நிலையை பெரிதும் ஸ்திரமிழக்கச் செய்யும் மற்றொரு உண்மையான கூறு என்னவென்றால், உக்ரேனிய பாசிஸ்டுகளின், ரஷ்யாவுடனான மோதலின் தீவிரம், மற்றும் வெட்கங்கெட்ட மேற்கத்திய ஊடக பிரச்சாரங்கள் அவர்களை ‘ஜனநாயகம்’, ‘சுதந்திரத்திற்காக’ போராடுபவர்கள் என ஊக்குவிப்பதாலும் அவர்கள் தைரியமடைந்துள்ளனர். அரசு மற்றும் இராணுவ எந்திரத்திற்குள் நடைமுறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதான இந்த படைகள் பெரியளவில் ஆயுதம் ஏந்தியவை. 2014 ஆட்சிக்கவிழ்ப்பின் போது பாசிச Right Sector ஐ வழிநடத்தியவரும், மேலும் தனது சொந்த தீவிர வலதுசாரி துணை இராணுவப் பிரிவை இன்னும் நடத்துபவருமான டிமிட்ரி யாரோஷ், உக்ரேனின் பொதுப் பணியாளர்களின் தலைவரான வலேரி ஜலுஷ்னிக்கு ஆலோசகராக இருந்து வருகிறார்.

2021 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கி, தீவிர வலதுசாரிகளின் நீண்டகால கோரிக்கையான கிரிமியா மற்றும் டொன்பாஸை “மீளச் சேர்க்கும்” திட்டம் உக்ரேனின் உத்தியோகபூர்வ இராணுவ மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். மூடிய கதவுகளுக்குப் பின்னால் விவாதிக்கப்படுவதை சந்தேகத்திற்கு இடமின்றி விளக்கி, உக்ரேனின் பாராளுமன்ற உறுப்பினரும் நவ-நாஜி ஸ்வோபோடா கட்சியின் தலைவருமான Oleh Tyahnybok, இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யா 'துண்டாக்கப்பட வேண்டும்' என்று கூறினார். Tyahnybok இன் கூற்றுப்படி, கிரிமியாவை உக்ரேனுக்கு 'திரும்ப' செய்ய '20 தேசிய மாநிலங்களின்' இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட வேண்டும். ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இதே சூழ்நிலையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார், அதாவது யூகோஸ்லாவியாவை செதுக்குவது ஒரு பெரிய கவலையாக உள்ளது. அதாவது, யூகோஸ்லாவியா துண்டாடப்படுவதைப் பெரிய அளவில் திரும்பச் செய்வது ஒரு முக்கிய கவலையாக உள்ளது.

அவர்களும் அவர்களது ஸ்ராலினிச முன்னோடிகளும் தான் அதற்கு நேரடி பொறிப்பாளிகள் என்ற யதார்த்தத்திலான ஏகாதிபத்திய சுற்றிவளைப்பின் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், ரஷ்ய ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் ஒரு போரை தவிர்க்க முடியாததாகக் கருதுகின்றன.

ரஷ்யாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை கவுன்சிலின் கௌரவத் தலைவரான சேர்ஜி கரகனோவ், சமீபத்தில் அளித்த பேட்டியில், “நாம் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலை முற்றிலும் எளிமையானது. நாம் தற்போதைய அமைப்பில் தொடர்ந்து இருப்போமானால் (அதாவது, உக்ரேனுக்குள் நேட்டோவின் விரிவாக்கத்தை வெறுமையாகப் பார்த்தால்), போர் தவிர்க்க முடியாததே.… அந்த வகையில், ஐரோப்பாவில் ஒரு நிலையான மற்றும் சமமான பாதுகாப்பு அமைப்பை எட்டுவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பதும், மேலும் அதன் மூலம் இராணுவ மோதலைத் தவிர்ப்பதும் எப்படி என்பதுதான் எங்கள் கவலையாகும். ஒரு பெரும் போர் எதுவும் நிகழாமல் அமைப்பை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். ஆயினும்கூட, ஒரு சிறு போர் அல்லது தொடர்ச்சியான உள்ளூர் போர்கள் இன்னும் நிகழக்கூடும் என்பதை நான் நிராகரிக்கவில்லை. கடந்த தசாப்தங்களில் இது நிரூபிக்கப்பட்டுள்ளதன் படி, நமது மேற்கத்திய கூட்டாளிகள், அவர்களது வரலாற்றை மறந்ததாலோ அல்லது அவர்களது கேடுகெட்ட முட்டாள் தனத்தாலோ ‘மென்மையான’ ஒரு சூழலைத் தடுக்க முயற்சித்து, [மற்றும்] நம்மையும் போருக்குத் தூண்ட முயற்சிப்பதற்கான உச்சபட்ச வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

'எனவே, நிலைமை மிகவும் தீவிரமானது. மேலும் இது [ஏனென்றால்] மிகவும் கடுமையானது, நாம் அதைக் கடந்து செல்ல வேண்டும், ஏனென்றால் நாம் அவ்வாறு செய்யாவிட்டால், அமைப்பு எப்படியும் சரிந்துவிடும். பின்னர் ஒரு பெரிய போர் தவிர்க்க முடியாததாக இருக்கும், அது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் தொடங்கலாம். எனவே, தேர்வு தெளிவாக உள்ளது.'

டிசம்பரில் கிரெம்ளின் அதன் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான கோரிக்கைகளை ஏன் முன்வைத்தது என்பதற்கு விளக்கமளித்த கரகனோவ், முன்பை விட அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்யாவிடம் இப்போது சிறந்த “துருப்பு சீட்டுக்கள்” இருப்பதாகக் கூறினார். கரகனோவ் எந்த விபரங்களையும் வழங்கவில்லை என்றாலும், கிரெம்ளின் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான, குறிப்பாக ஜேர்மனி மற்றும் அமெரிக்கா இடையேயான பதட்டங்களில் விளையாட முயன்று வருகிறது, மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுடனான போருக்கு தயார் செய்வதில் மூழ்கியிருக்கும் நிலையில், அது ரஷ்ய-சீன கூட்டணி பற்றிய அச்சத்தைப் பயன்படுத்திக் கொள்ள நம்புகிறது.

வாஷிங்டன் அல்லது கிரெம்ளின் எதுவானாலும் அதன் புவிசார் அரசியல் மற்றும் உள்நாட்டு கணக்கீடுகள் எதுவாக இருந்தாலும், கடந்த தசாப்தங்களில் முதலாளித்துவ நெருக்கடியாலும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ வெறித்தனத்தாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட இயக்கவியல் தவிர்க்கமுடியாமல் பேரழிவுப் போருக்கு இட்டுச் செல்கிறது. இதற்கான ஒரே மாற்று பாதை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டில்தான் தங்கியுள்ளது.

Loading