மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனில் அதிகரித்து வரும் போர், அமெரிக்க-நேட்டோ சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு நேரடி மோதலாக வெடிக்கும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது, இதற்கு இணையாக, ஆனால் கிட்டத்தட்ட முழுமையாக பேசப்படாமல் கோவிட்-19 நோய்தொற்றும் பெரிதும் வெடித்துப் பரவும் போக்கு உள்ளது. இந்த இரண்டு ஒன்றோடொன்று இணைந்த உலகளாவிய நெருக்கடிகள் மனிதகுலத்தை பேரழிவை நோக்கித் தள்ளுகின்றன.
தொற்றுநோயின் மிக முக்கிய மையமாக இப்போது ஹாங்காங் உள்ளது, அங்கு நிகழும் தனிநபர் நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் விகிதங்கள் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்ந்த முன்னைய எழுச்சிகளை விஞ்சிவிட்டன. பெப்ரவரி நடுப்பகுதியில் நோய்தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறிய உடனேயே, மருத்துவமனைகளும் பிணவறைகளும் அவற்றின் வரம்பை கடந்தன, ஒப்பீட்டளவில் குறைவாக தடுப்பூசி பெற்ற வயதான மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திங்களன்று, ஹாங்காங்கில் 1 மில்லியன் மக்களில் நிகழும் தினசரி புதிய இறப்புக்களின் 7 நாள் சராசரி 29.18 ஐ எட்டியது. இது, ஜனவரி 23, 2021 அன்று இங்கிலாந்தில் எட்டப்பட்ட உச்சம் 18.31 ஐ விட 50 சதவீதம் அதிகமாகும், ஜனவரி 13, 2021 இல் நிகழ்ந்த அமெரிக்காவின் உச்சம் 10.22 ஐ விட கிட்டத்தட்ட மூன்று மடங்காகும், மேலும் ஏப்ரல் 23, 2021 அன்று உலகின் உச்சபட்சமாக பெருவில் பதிவான சராசரி 26.2 ஐ விடவும் அதிகமாகும். ஹாங்காங்கில் கோவிட்-19 இறப்புக்கள் தொடர்ந்து அதிவேகமாக அதிகரித்து வருகின்றன, மேலும் வரும் நாட்களில் இது 1 மில்லியன் மக்களுக்கு 50 பேர் வீதம் இறக்கும் நிலையை மீறக்கூடும்.
குறிப்பிடத்தக்க வகையில், ஸ்பைக் புரதத்தில் I1221T பிறழ்வுடன் கூடிய ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாடு தான், ஹாங்காங்கில் வரிசைப்படுத்தப்பட்ட அனைத்து நோய்த்தொற்றுகளிலும் 100 சதவீதம் ஆகும். தொற்றுநோயின் அடுத்தக்கட்டமாக இந்த நகரம் நிலக்கரி சுரங்கத்தில் உள்ள ஒரு கேனரி ஆக உள்ளது, இதன் மூலம் BA.2 துணை மாறுபாடு உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் ஓமிக்ரோனின் BA.1 துணை மாறுபாடு உலகளவில் பரவியதைப் போலவே, உலகப் பொருளாதாரத்தின் முழுமையான மறுதிறப்பானது சர்வதேச அளவில் BA.2 வேகமெடுத்துப் பரவுவதற்கு காரணமாகிறது. கோவிட்-19 நோய் இப்போது ‘நிரந்தரமானது’ மற்றும் ஒரு நிலையான ‘புதிய வழமை’ எட்டப்பட்டுள்ளது என்று பெருநிறுவன ஊடகங்கள் பரப்பிய கதைக்கு மாறாக, இந்த முன்னோடியில்லாத நெருக்கடியின் மூன்றாம் ஆண்டில் யதார்த்தம் மீண்டும் தகர்க்கப்பட்டுள்ளது.
ஜனவரி 24, 2022 அன்று உத்தியோகபூர்வ உலகளாவிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 3.44 மில்லியனை எட்டி 37 நாட்களுக்குப் பின்னர், இந்தச் சரிவு மார்ச் 2 அன்று திடீரென 1.48 மில்லியனாக நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் சீராக உயர்ந்து வருகிறது, இது தொற்றுநோயின் சமீபத்திய உலகளாவிய எழுச்சியின் தொடக்கத்தையே குறிக்கிறது.
BA.2 துணை மாறுபாடு உலகளவில் வரிசைப்படுத்தப்பட்ட மொத்த நோய்தொற்றுக்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது, மேலும் தொற்றுநோயின் புதிய அலையை இயக்குகிறது. covariants.org வலைத் தளத்தால் கண்காணிக்கப்படும் 75 நாடுகளில், 35 நாடுகளில் இதுதான் இப்போது மேலாதிக்க மாறுபாடாக உள்ளது. மேலும் அதிகளவு தினசரி புதிய நோய்தொற்றுக்களைக் கொண்ட முதல் 10 நாடுகளில், 7 நாடுகளில் குறைந்தது 40 சதவீத நோய்தொற்றுக்களுக்கு இது காரணமாக உள்ளது: அதாவது, வியட்நாமில் 42 சதவீதம், ஜேர்மனியில் 63, ரஷ்யாவில் 41, நெதர்லாந்தில் 53, இங்கிலாந்தில் 57, ஆஸ்திரியாவில் 40, மற்றும் மலேசியாவில் 73 என்றளவிற்கு உள்ளது.
பல வாரகால சரிவுக்குப் பின்னர், இங்கிலாந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த வாரம் அனைத்து வயதினர் மத்தியில் 15.6 சதவீதம் கூர்மையாக அதிகரித்துள்ளது, ஆனால் 6 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட குழந்தைகளிடையே மட்டும் இது அதிர்ச்சியூட்டும் வகையில் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், வடகிழக்கு பிராந்தியம் BA.2 இன் மிக விரைவான வளர்ச்சியை எதிர்கொள்வது உட்பட, அங்கு அதன் பரவல் அதிவேகமாக உயர்ந்து வருகிறது.
உலகளவில் கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான கொள்கைக்காக வாதிடும் விஞ்ஞானிகள் மற்றும் சமூக குழுக்களின் உலகளாவிய கூட்டணியான உலக சுகாதார வலையமைப்பின் (World Health Network-WHN) இணை நிறுவனரான விஞ்ஞானி யானீர் பார்-யாம், சமீபத்தில் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினார். டோக்கியோ பல்கலைக்கழகத்தின் BA.2 பற்றிய முக்கிய ஆய்வின் முடிவுகளை சுருக்கமாக விவரிக்கையில், “BA.2 ஆனது BA.1 ஐ விட 40 சதவிகிதம் கூடுதல் வேகத்துடன் பரவுகிறது”, மேலும் “BA.1 ஐ விட அதிக தடுப்பூசி-ஏய்ப்புத் திறன் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், BA.1 ஐ விட BA.2 “மிகக் கடுமையானது” என்றும், “BA.2 ஆல் ஏற்படும் தொற்று BA.1 இன் முந்தைய தொற்றை எதிர்க்கிறது” என்றும் அவர் கூறினார்.
மேலும், “BA.2 ஆனது BA.1 இல் இருந்து வேறுபட்டது, தற்போதைய எண்ணிடல் திட்டத்தின் படி; அதன் சொந்த வகைக்கு என சொந்த கிரேக்க எழுத்து வழங்கப்பட வேண்டும். ஆனால் இது அரசியல் ரீதியாக அவ்வளவு சௌகரியமானதல்ல, ஏனென்றால் மக்களுக்கு இது முடிந்துவிட்டதாக அறிவிக்கிறார்கள் என்ற நிலையில், ஒரு புதிய கிரேக்க எழுத்து வழங்கப்பட வேண்டும் என்பது என்ன நடக்கிறது என்று நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கேள்விகளை எழுப்பும்.” என்று டாக்டர். பார்-யாம் நிறைவு செய்தார்.
உண்மையில், சீனாவைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் கோவிட்-19 இன் பரவலைக் குறைக்க எஞ்சியுள்ள அனைத்துத் தணிப்பு நடவடிக்கைகளையும் கைவிட்ட நிலையில், அதிக தொற்றும்தன்மையுள்ள, உக்கிரமான மற்றும் நோயெதிர்ப்பு-தவிர்க்கும் திறனுள்ள BA.2 துணை மாறுபாடானது அதிக வேகமெடுத்துப் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த முயற்சிகளின் குறுகிய பார்வையும் முட்டாள்தனமும் இப்போது முழுமையாக அம்பலப்பட்டு நிற்கிறது.
அமெரிக்காவில், இந்த செயல்முறையானது பைடென் நிர்வாகம் மற்றும் வெள்ளி மாளிகையின் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியண்ட்ஸ் ஆகியோரால் முடுக்கிவிடப்பட்டுள்ளது, இவர் வோல் ஸ்ட்ரீட்டின் CARES சட்ட பிணையெடுப்பிற்குப் பின்னர் 2020 இல் மட்டும் 10.4 மில்லியன் டாலர் முதல் 28 மில்லியன் டாலர் வரை குவித்தவராவார்.
வெள்ளை மாளிகையுடன் நெருங்கிப் பணியாற்றுபவரும், பைடென் மற்றும் ஒபாமாவின் முன்னாள் ஆலோசகருமான எசேக்கியேல் இமானுவல், “கோவிட் உடன் ‘புதிய இயல்பு’ வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு தேசிய உத்தி” என்ற தலைப்பில் ஜனவரி 6, 2022 அன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை இணைந்து எழுதியவர் ஆவார். ஞாயிற்றுக்கிழமை, இந்த ஆய்வறிக்கையின் 136 பக்க விரிவாக்கம் “அடுத்த இயல்பான நிலையை அடைதல் மற்றும் நிரந்தரமாக்குதல்: கோவிட் உடன் வாழ்வதற்கான ஒரு வழித்தடம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
ஆயுட் காலத்தை குறைக்கவும் சுகாதாரச் செலவினங்களைக் குறைக்கவும் நீண்டகாலமாக வாதிடும் இமானுவல், ஊனமுற்றோர் உரிமைகள் வழக்குரைஞர்களால் “கருணைக்கொலைவாதியாக” விவரிக்கப்படுகிறார். ‘பேரழிவுக்கான ஒரு வழித்தடம்’ என்று பெயரிடப்பட்ட அவரது திட்டம், இந்த தடுக்கக்கூடிய வைரஸால் விளையும் முடிவில்லாத நோய்தொற்று அலைகள், இறப்புக்கள் மற்றும் நீண்டகால பலவீனத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறது, இது சமூகத்தின் நிரந்தர அம்சமாக இருக்க வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.
அனைத்து கோவிட்-19 பரிசோதனைகள் மற்றும் தொடர்புத் தடமறிதல் நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போலி விஞ்ஞான நியாயத்தை வழங்குவதான இமானுவலின் ‘வழித்தடம்’ என்பது சீனாவில் பின்பற்றப்படும் ‘சக்தி வாய்ந்த பூஜ்ஜிய’ மூலோபாயத்திற்கு எதிரானது, இந்த மூலோபாயம், 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாட்டில் மே 2020 இல் இருந்து மீண்டும் மீண்டும் நிகழ்ந்த நோய்தொற்று வெடிப்புக்களைத் தடுத்து இறப்பு எண்ணிக்கையை வெறும் 2 ஆக குறைத்தது குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரோன் மற்றும் அதன் BA.1 மற்றும் BA.2 துணை மாறுபாடுகளின் பரிணாம வளர்ச்சியானது, ஆளும் வர்க்கத்தின் இலாப நலன்களுக்கு பொது சுகாதாரத்தை கீழ்ப்படிய வைத்த தொற்றுநோய்க்கான முதலாளித்துவத்தின் பதிலிறுப்பின் விளைபொருளாகும். ஒவ்வொரு நாட்டிலும் வைரஸைக் கட்டுப்படுத்தவும் இறுதியில் அகற்றவும் தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த மறுப்பதன் மூலம், ஆளும் வர்க்கமானது ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் இப்போது ஓமிக்ரோன் போன்ற அரக்கர்களை உருவாக்கியுள்ளது, இவை ஒவ்வொன்றும் அதன் முன்னோடியை விட மோசமானதாகும்.
இந்த சமூக குற்றவியல் கொள்கைகளின் நீண்டகால விளைவுகள் கணக்கிட முடியாதவையாகும். நெடுங்கோவிட் பற்றிய ஒவ்வொரு ஆய்வும், இந்த நோயின் கொடூரமான தன்மையையும், உலகளவில் அதை அகற்ற வேண்டியதன் அவசியத்தையும் மீளுறுதி செய்கிறது. சமீபத்தில் Nature இல் வெளியிடப்பட்ட UK Biobank உருவகப்படுத்தல் ஆய்வானது மிகவும் சமீபத்தியது மற்றும் அநேகமாக மிகவும் எச்சரிக்கிறது, இது இலேசான நோய்தொற்று பாதிப்புள்ள பங்கேற்பாளர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பின்னர் மூளை திசுக்கள் காயமடைந்திருந்ததைக் கண்டறிந்தது, இது ஒரு தசாப்த கால முதுமையில் ஏற்படுவதற்கு ஒத்த சேதமாக இருந்தது. அதாவது, மனச்சோர்வு (dementia) மற்றும் நினைவாற்றல் இழப்பு ஆகியவை கோவிட்-19 நோய்தொற்றுக்களின் பாதிப்பு அளவின் நீண்டகால விளைவுகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.
தற்போதைய தடுப்பூசிகள் இறப்புக்கான வாய்ப்பை கட்டுப்படுத்துகின்றன, அதேவேளை நோய்தொற்றுக்கள், கடுமையான நோய் அல்லது மரணத்தை நிறுத்தாது என்பதானது, ‘தடுப்பூசி மட்டும்’ என்ற அணுகுமுறையை விஞ்ஞானபூர்வமற்றதாக்குகிறது, மற்றும் சாத்தியமற்றதாக்குகிறது என்பது இப்போது மிகத் தெளிவாகிறது. உலகெங்கிலுமாக மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வைரஸ் பரவி பாதிக்க அனுமதிக்கப்படும் வரை, வைரஸ் பரிணாமத்தின் இடைவிடாத தன்மையின் காரணமாக, அதிக தடுப்பூசி-எதிர்ப்புத்திறன் கொண்ட, தொற்றும்தன்மையுள்ள மற்றும் வீரியம் மிக்க புதிய வகைகள் தொடர்ந்து வெளிப்படும்.
BA.2 இன் தோற்றமானது, காய்ச்சல் அல்லது பொதுவான ஜலதோஷம் போன்ற ஒரு இலேசான மற்றும் மென்மையான வைரஸ் பாதிப்பாக கோவிட்-19 மாறும் என்ற அனைத்து கூற்றுக்களையும் அடிப்படையில் மறுக்கிறது. இந்த கூற்றுக்கள், தொற்றுநோயின் பேரழிவால் அதிர்ச்சியடைந்துள்ள பெரிதும் போர்க்குணமிக்க தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவதற்காக எப்போதும் மெத்தனமாக வெளியிடப்படுபவையாகும்.
வரும் வெள்ளிக்கிழமை, அதாவது மார்ச் 11 ஆம் தேதி, உலக சுகாதார அமைப்பு கோவிட்-19 வெடிப்பை ஒரு பெருந்தொற்றாக உத்தியோகபூர்வமாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் குறிக்கிறது. வெறும் இரண்டு ஆண்டுகளில், சுமார் 20 மில்லியன் மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர் என்று எக்னாமிஸ்ட் பத்திரிகை வெளியிட்ட ‘அதிகப்படியான இறப்புக்கள்’ பற்றிய கண்காணிப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இதில், அமெரிக்காவில் 1.2 மில்லியன், ரஷ்யாவில் 1.2 மில்லியன், உக்ரேனில் 220,000, இங்கிலாந்தில் 150,000 மற்றும் ஜேர்மனியில் 120,000 என்பதாக மதிப்பிடப்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்கைகளும் அடங்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘சமூக நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குதல்’ மற்றும் ‘தடுப்பூசி-மட்டும்’ உத்திகளின் மூலம் சமூகப் படுகொலையை செய்து வந்துள்ளதான அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள ஆளும் உயரடுக்குகள், அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவுடனான சாத்தியமான மூன்றாம் உலக் போரில் இன்னும் பயங்கரமான குற்றங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் தம்மை வலுப்படுத்திக் கொண்டுள்ளன.
உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் ஓமிக்ரோன் எழுச்சியின் உச்சத்தின் போது வெடித்துள்ள போரினால், கோவிட்-19 இன் பரவல் இன்னும் பெரியளவில் மோசமடையும். 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனிய அகதிகள் நாட்டை விட்டு வெளியேறி, நெரிசல் மிக்க இரயில்களிலும் சுரங்கப் பாதைகளிலும் நிரம்பிவழியும் சூழலானது பாரிய நோய்தொற்று பரவலுக்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
தொற்றுநோய் மற்றும் உக்ரேன் குறித்த ரஷ்யாவுடனான மோதல் ஆகிய இரண்டு விவகாரங்களிலும், ஆளும் வர்க்கம் அசாதாரணமான பொறுப்பற்றத் தன்மையுடன் முன்னேறுகிறது. ஆனால் அது ஆளும் வர்க்க நலன்களில் வேரூன்றியுள்ள பொறுப்பற்ற தன்மையாகும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவில் போருக்கான வெறித்தனமான பிரச்சாரத்தின் மைய நோக்கங்களில் ஒன்றாக தொற்றுநோயிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவது உள்ளது.
இந்நிலையில், முதலாளித்துவ ஊடகங்கள், தொற்றுநோய் பற்றி அவை அறிக்கை செய்யவில்லை என்றால், அது இல்லை என்ற மாயையில் செயல்படுகின்றன. ஆனால், பெரும்பான்மை மக்களுக்கு, தொற்றுநோய் பேரழிவுகர விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இச்சூழலில், மூன்றாம் உலகப் போருக்கான உந்துதலை நிறுத்துவதற்கும், கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போரைத் தொடங்குவதற்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட பாரிய இயக்கத்தை கட்டியெழுப்புவதே மிக முக்கிய பணியாகும்.
WSWS உடனான நேர்காணலில், டாக்டர் பார்-யாம், “அதை முன்பை விட இப்போது நீக்குவது எளிது. ஏனென்றால், தொழில்நுட்பம் மேம்பட்டு வருகிறது. நமது புரிதலும் அதிவேகமாக வளர்ந்துள்ளது” என்று வலியுறுத்திக் கூறினார். அவர் மேலும், “நாம் அதை செய்ய முடிவு செய்ய வேண்டும் அவ்வளவுதான், பின்னர் நாம் மிகச் சிறந்த நிலையை அடைவோம்” என்றும் கூறினார்.
உலகளவில் கிடைக்கக்கூடிய அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து செயற்படுத்துவதன் மூலம் மட்டுமே கோவிட்-19 அகற்றப்பட்டு, தொற்றுநோய் முடிவுக்குக் கொண்டுவரப்படும். இதன் மிக அடிப்படையாக, போர் மற்றும் தடுக்கக்கூடிய நோயினால் ஏற்படக்கூடிய தேவையற்ற இறப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், மற்றும் சமூக சமத்துவத்தின் அடிப்படையில் மனித கலாச்சாரத்தின் வளர்ச்சியைத் தொடங்குவதற்கும் என, இதற்கு முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான நேரடி போராட்டமும் மற்றும் உலக சோசலிச சமுதாயத்தை நிறுவுவதும் தேவைப்படுகிறது.