மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கடந்த வியாழன் அன்று நடைபெற்ற நாற்கர (குவாட்) பாதுகாப்பு உரையாடலின் தலைமை உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிக்க மறுத்துவிட்டார். சீனாவுக்கு எதிரான இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணி போன்ற ஒன்றின் கூட்டம் அமெரிக்க அதிபர் ஜோ பைடெனால் கூட்டப்பட்டது. ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலுக்கு ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே முழுமையாக ஒப்புதல் அளித்திருந்த நிலையில், ரஷ்ய படையெடுப்பை பகிரங்கமாக கண்டிக்கும்படி இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என பைடென் நம்பினார்.
மோடி அரசாங்கம் வாஷிங்டனுடனான புது டெல்லியின் மூலோபாய கூட்டாண்மைக்கும் மாஸ்கோவுடனான அதன் வரலாற்று பாதுகாப்பு உறவுகளுக்கும் இடையில் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது. இந்தியாவின் ஆளும் உயரடுக்கு, இரண்டு தசாப்தங்களாக பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் காங்கிரஸ் அரசாங்கங்களின் கீழ் வளர்ந்த அமெரிக்காவுடனான அதன் மூலோபாய கூட்டாண்மையை அதன் பிராந்திய மற்றும் பூகோள அபிலாஷைகளை முன்னெடுத்து செல்வதற்கான சிறந்த வழிமுறையாகக் கருதுகிறது. எவ்வாறாயினும், ரஷ்யாவுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் அதன் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
பெப்ரவரி தொடக்கத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், குவாட் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், குவாட்டின் புவியியல் பகுதி இந்தோ-பசிபிக் என்று வலியுறுத்தி விரிவடையும் உக்ரேன் போரைப் பற்றி எந்த கருத்தையும் கூறுவதைத் தவிர்த்தார்.
எவ்வாறாயினும், கடந்த வியாழன் உச்சிமாநாடு குறிப்பாக 'உக்ரேனுக்கு எதிரான போர் மற்றும் இந்தோ-பசிபிக் மீதான அதன் தாக்கங்கள்' பற்றி விவாதிக்க பைடெனால் அழைக்கப்பட்டது. உச்சிமாநாட்டிற்கு முன் பைடென் இந்த பிரச்சினையில் 'சாக்குப்போக்கு அல்லது தவிர்ப்புக்கு இடமில்லை' என வலியுறுத்தினார்.
உக்ரேனில் நிலவும் மோதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து குவாட் தலைவர்கள் விவாதித்தனர் மற்றும் அதன் பரந்த தாக்கங்களை மதிப்பிட்டனர், மேலும் 'ஒரு புதிய மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண இயக்க முறை” ஆகியவற்றில் உடன்பட்டனர். அவை இந்தோ-பசி,பிக்கில் குவாட் எதிர்கால மனிதாபிமான சவால்களை எதிர்கொள்வதை சாத்தியமாக்கும் மற்றும் அவை ஒவ்வொன்றும் உக்ரேனில் உள்ள நெருக்கடிக்கு முகம் கொடுக்கவும் அவற்றுக்கு பதிலளிப்பதற்கு வேண்டிய தகவல் தொடர்புக்கான ஒரு சேனலை வழங்குகின்றன” என்று உச்சிமாநாட்டிற்கு பின்னர் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கை அறிவித்தது.
அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான எந்தவொரு நேரடி இராணுவ மோதலிலும் ஒரு பக்கம் எடுப்பதைத் தவிர்க்கத் துடிக்கும் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு தனி செய்திக்குறிப்பு, உக்ரேனில் அவர்களின் 'மனிதாபிமான தாக்கங்கள்' உள்ளிட்ட வளர்ச்சிகள் பற்றி குவாட்டில் விவாதிக்கப்பட்டதாக கூறியது, ஆனால் மோடி ”கலந்துரையாடல் மற்றும் இராஜதந்திர பாதைக்கு திரும்ப வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தினார்.' அந்த அறிக்கை குவாட் 'இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கான அதன் முக்கிய நோக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்' என்று மேலும் கூறியது.
எவ்வாறாயினும், உக்ரேனில் மோதலின் விரைவான அதிகரிப்புடன், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஆபத்தான சமநிலையை உருவாக்குவதற்கான புது டெல்லியின் முயற்சி பெருகிய முறையில் ஏற்றுக்கொள்ள முடியாததாகி வருகிறது.
ரஷ்யாவிற்கு எதிரான போர் உந்துதலுக்கு முழு ஆதரவு வழங்குவதற்கு குறைவான எதையும் வாஷிங்டன் ஏற்கத் தயாராக இல்லை. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் டொனால்ட் லூ, கடந்த புதன்கிழமை செனட் வெளியுறவுக் குழுவிற்கு வழங்கிய கருத்துக்களில் இது தெளிவாக்கப்பட்டது.
அந்த நேரத்தில், உக்ரேன் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யாவை கண்டிக்கும் பிரேரணைகளில் இந்தியா பலமுறை வாக்களிக்கவில்லை: இரண்டு முறை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC); ஐ.நா பொதுச் சபையின் (UNGA) சிறப்பு அவசர அமர்வில் ஒருமுறை; மற்றும் UNGA அமர்வைக் கூட்டுவதற்கான UNSC இல் ஒரு நடைமுறைத் தீர்மானத்திலும் வாக்களிக்கவில்லை.
'ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கும்படி இந்தியாவை வலியுறுத்துவதற்கு நாங்கள் அனைவரும் பணியாற்றி வருகிறோம்,' என்று செனட் விசாரணையில் லு கூறினார், மேலும் இந்தியா 'ரஷ்யாவிலிருந்து மேலும் விலகி இருக்க வேண்டும்' என்று எச்சரித்தார்.
மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அமெரிக்க வெளியுறவுத்துறை தனது இராஜதந்திரிகளுக்கு ஒரு கேபிளை அனுப்பியது, அது உக்ரேன் பிரச்சினையை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அவர்களது சகாக்களுடன் எழுப்புமாறு அறிவுறுத்தியது. உக்ரேன் மீது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவின் 'நடுநிலை” அவர்களை 'ரஷ்யாவின் முகாமில்' நிறுத்துவதாக கேபிள் கூறுகிறது.
புதன்கிழமை கூட்டத்தில், ரஷ்யாவைக் கண்டிக்கும் தீர்மானத்திற்கு UAE ஆதரவாக வாக்களித்தது, முன்பு இரண்டு UNSC வாக்குகளில் அது வாக்களிக்கவில்லை. எனினும் இந்தியா தொடர்ந்து வாக்களிக்கவில்லை.
புதன்கிழமை பிற்பகுதியில் வெளியுறவுத்துறை கேபிளை திரும்ப பெற்றாலும் அதற்கு காரணம் அது 'துல்லியமற்ற மொழியில் மற்றும் தவறுடன் வெளியிடப்பட்டது' என்று கூறியது. இது அமெரிக்காவால் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுவதை மேலும் எடுத்துக்காட்டுகிறது.
இந்தியா தனது 'நடுநிலை' நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தாலும் கூட, இந்தியா அமெரிக்க நிலைப்பாட்டின் பக்கமாகத் தான் சாய்கிறது.
வியாழன் இரவு வெளியிடப்பட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையில், 'ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் ஐ.நா. சாசனத்தைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், சர்வதேச சட்டம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும்' என்று இந்தியா கூறியுள்ளதை குறிப்பிடப்பட்டது. உக்ரேனின் 'பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை' பாதுகாக்கும் பெயரில் ரஷ்யாவிற்கு எதிரான போருக்குத் தயாராகும் வாஷிங்டனின் சாக்குப்போக்கை இந்த சொற்றொடர் எதிரொலிக்கிறது.
ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இப்போது விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள், புது டெல்லியின் இராணுவ வன்பொருளின் கணிசமான பகுதியை உள்ளடக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விநியோகங்களுக்கு ரஷ்யாவிடம் சார்ந்திருப்பதை இந்தியா குறைக்கும்படி நிர்பந்தித்துள்ளது.
செனட் குழு விசாரணையில் லு கூறியது போல், 'இப்போது ரஷ்ய வங்கிகள் மீது போடப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக, ரஷ்யாவிடமிருந்து பெரிய ஆயுத அமைப்புகளை வாங்குவது உலகில் எந்த நாட்டிற்கும் மிகவும் கடினமாக இருக்கும்.' இந்தியா ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதை 53 சதவீதம் குறைந்துள்ளதாக லூ ஆர்வத்துடன் குறிப்பிட்டார், ஆனால் மேலும் குறைப்புக்கள் தேவை என்று வலியுறுத்தினார்.
இந்திய உயரடுக்கின் சில பிரிவுகள், அவை இன்னும் சிறுபான்மையினராக இருந்தாலும், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலை மோடி அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோருகின்றன. மார்ச் 2 அன்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவீட் செய்தார்: 'இந்திய அரசாங்கம் அதன் வாய்மொழி சமநிலையை நிறுத்த வேண்டும் மற்றும் உக்ரேனில் உள்ள முக்கிய நகரங்களில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவை கடுமையாக கோர வேண்டும்.' என்றார்.
சிதம்பரத்தின் நிலைப்பாடு ஆச்சரியமானது அல்ல. 2004 முதல் 2014 வரையிலான பிரதமர் மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், அமெரிக்காவுடன் குறிப்பிடத்தக்க உறவுகளைத் தொடங்கியது, அது ஒரு மூலோபாய கூட்டாண்மையாக வளர்ந்தது. 2014ல் இருந்து, பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் போர் உந்துதலில் நாட்டை ஒரு முன்னணி அரசாக மாற்றிய மோடி அரசாங்கத்தால் தற்போதைய அமெரிக்க-இந்திய கூட்டாண்மை மேலும் முன்னேறியது. இது மாஸ்கோ எதிர்ப்பையும் சேர்த்து நீடிக்க வேண்டும் என்று அமெரிக்கா இப்போது கோருகிறது.
மார்ச் 3 அன்று, இண்டியானா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் சுமித் கங்குலியின் “உக்ரேனில் ரஷ்யாவின் போர் குறித்து இந்தியா ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை Foreign Policy வெளியிட்டது. அதில் 'புது டெல்லி வேலியில் அமர்வது இனி அதன் இராஜதந்திர அல்லது பாதுகாப்பு நலன்களுக்கு சேவை செய்யாது' என்று அவர் வாதிட்டார் மேலும் 'அமெரிக்கா மற்றும் பிற கூட்டாளிகளின் சகிப்புத்தன்மைக்கு வரம்புகள் உள்ளது...” என்று அவர் எச்சரிக்கை செய்தார்.
'உக்ரேன் பிரச்சினையில், அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளுடன் இந்தியா நிற்கத் தவறியது சில இராஜதந்திர தனிமைப்படுத்தலுக்கு வழிவகுக்கும்' என்று கங்குலி கூறினார். அவர் இந்திய அரசாங்கம் 'விலைமதிப்பான தேர்வுகளைச் செய்வதற்கும் மற்றும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கும் துணிச்சலைத் திரட்ட வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார்.
ரஷ்யாவிற்கு எதிரான பக்கத்தை எடுப்பதைத் தவிர்ப்பதற்கு 'பேச்சு மற்றும் இராஜதந்திரம்' என்ற மோடியின் பேச்சுக்கள் இருந்தபோதிலும், உள்நாட்டில் உள்ள ஆழ்ந்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியால் உந்தப்பட்ட அமெரிக்க போர் உந்துதல், இந்தியா மற்றும் தெற்காசியாவின் பிற பகுதிகள் உள்ளிட்ட முழு உலகத்தையும் அதற்குள் இழுத்துச் செல்லும் மற்றும் அணுசக்தி பேரழிவை தூண்டும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது.