மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வெள்ளிக்கிழமை ருமேனியாவில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், உக்ரேனில் ரஷ்ய நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி, 'எந்தவொரு உள்நோக்கம் கொண்ட தாக்குதலோ அல்லது அப்பாவி பொதுமக்களைக் குறிவைப்பதோ ஒரு போர்க்குற்றம் என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். காலம்,' என்று அறிவித்தார்.
ஹாரிஸின் கருத்துக்கள், உக்ரேனில் நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் அட்டூழியங்களுக்காக மாஸ்கோவுக்கு எதிராக போர்க்குற்றங்கள் சுமத்தும் வாஷிங்டனின் துதிப்பாடல்களின் பாகமாக இருந்தன. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா கிரீன்ஃபீல்ட்-தாமஸ் (Linda Greenfield-Thomas), போர்க்குற்றங்களுக்காக ரஷ்ய அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டினார், 'பொதுமக்கள் மீதான தாக்குதல்களை யாராலும் —எந்த விதத்திலும்—நியாயப்படுத்த முடியாது' என்று அறிவித்தார்.
மரியுபோல் நகர மருத்துவமனை ஒன்றின் பிரசவ வார்டு மீது ரஷ்ய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 3 பேர் கொல்லப்பட்டு, 17 பேர் வரை காயமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த சிதைந்த மருத்துவமனை கட்டிடம் மற்றும் இரத்தம் தோய்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் காட்டும் புகைப்படங்கள் பரவலாக பரப்பட்டுள்ளன.
ரஷ்யாவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக் கூடாது, ஒரு நிபந்தனை என்னவென்றால்: இது அமெரிக்க எதிர்ப்பாளர்களின் போர்க்குற்றங்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா நடத்திய குற்றங்களுக்கும் பொருந்தியதாக இருக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டு எண்ணற்ற பொதுமக்கள் கொல்லப்பட்டதற்காக அமெரிக்க ஜனாதிபதிகளும் மற்றும் இராணுவத் தலைவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மரியுபோலில் என்ன நடத்தப்பட்டுள்ளதோ அது உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய குற்றங்களின் அளவுக்கு அருகில் கூட வராது.
வாஷிங்டன் உலகெங்கிலும் அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்து தாக்கியது. அமெரிக்கப் பேரரசின் போர்க்குற்றங்களைப் பட்டியலிட்டால் ஒரு நீண்ட புத்தகத்தின் பக்கங்களை நிரப்பிவிடும். Wounded Knee, Bud Dajo, My Lai, Fallujah என்ற சொற்களையும் மற்றும் அமெரிக்க சிப்பாய்கள் சூழ்ந்திருக்க அவர்களின் துப்பாக்கிகளின் மீது சடலங்களாக கிடக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காட்டும் வலிமிகுந்த பரிச்சயமான புகைப்படங்களையும் அந்த புத்தகத்தின் அத்தியாயங்களில் நாம் பார்க்க முடியும்.
கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா எந்த நேரத்திலும் பங்கேற்றுள்ள எந்தவொரு மோதலையும் ஒருவர் விருப்பப்படி தேர்ந்தெடுத்துப் பார்த்தாலும், வாஷிங்டன் பொறுப்பாகும் ஏராளமான போர் குற்றங்களைக் காணலாம், ஆனால் இதற்காக யாரும் பொறுப்பாக்கப்படவில்லை.
பெப்ரவரி 13, 1991 இல், அமெரிக்க விமானப்படை பாக்தாத்தின் அமிரியா புறநகர் பகுதியில் வான்வழி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான பதுங்குமிடங்கள் மீது இரண்டு ஸ்மார்ட் குண்டுகளை வீசியது. 1980 களில் ஈரான்-ஈராக் போரின் போது இந்த அமிரியா பதுங்குமிடம் மக்கள் பாதுகாப்புக்கான பதுங்குமிடங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது அமெரிக்க இராணுவத்திற்கும் தெரியும், ஆனால் தெரிந்திருந்தும் அதை அது இலக்கில் வைத்தது, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அதைக் குண்டுவீசித் தாக்கியது. அதில் சுமார் 1,500 பேர், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
முன்னாள் அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ராம்சே கிளார்க் (Ramsey Clark) இன் கண்டுபிடிப்புகளை விக்கிபீடியா பின்வருமாறு தொகுத்தளிக்கிறது, “அந்த பதுங்குமிடத்தில் இருந்து மக்கள் வெளியேற முயன்றபோது, அண்டைபகுதியில் வசித்தவர்களுக்கு அலறல் சத்தம் கேட்டது. அவர்கள் நான்கு நிமிடங்கள் அலறியவாறு இருந்தார்கள். இரண்டாவது குண்டு வெடித்த பின்னர், அந்த அலறல் நின்றுவிட்டது.”
அந்த விபரம் தொடர்ந்து குறிப்பிட்டது: “மேல் தளங்களில் தங்கியிருந்த மக்கள் வெப்பத்தால் எரிந்து போனார்கள், அதேவேளையில் அந்த பதுங்குமிடத்தின் தண்ணீர் தொட்டியில் கொதித்துக் கொண்டிருந்த நீர் மற்றவர்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்தது. எல்லோரும் உடனடியாக இறந்துவிடவில்லை; பலியான சிலரின் கரிய எரிந்து போன கைரேகைகள் அந்த பதுங்குமிடத்தின் கான்கிரீட் மேல் கூரையில் இன்றும் பதிந்துள்ளன.”
இந்த மிகப் பெரும் போர் குற்றத்திற்கு யாரும் பொறுப்பாக்கப்படவில்லை.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் வியாழக்கிழமை ட்வீட்டரில் பதிவிட்டார், 'ரஷ்ய தலைமை மீது போர்க்குற்றம் இழைத்ததாக குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க வேண்டுமானால், அவர்கள் மருத்துவமனைகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்.' எத்தனை மருத்துவமனைகளை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியுள்ளது? இங்கே ஒரு சிறிய எடுத்துக்காட்டு:
அக்டோபர் 3, 2015 இல், குண்டூஸ் நகரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் மருத்துவமனை மீது அமெரிக்க போர்விமானம் குண்டுமழை பொழிந்தது, இதில் 12 மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் 10 நோயாளிகள் உட்பட குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர். அந்த மருத்துவமனை திட்டமிட்டு இலக்கில் வைக்கப்பட்டதாக அதன் பின்னர் ஆதாரங்கள் வெளியாயின. பின்னர் வெளியுறவுத்துறை செயலர் கிளிண்டன் அந்த குண்டுவெடிப்பு சம்பவம் 'ஆழமாக வருந்தத்தக்கது' என்றார். மருத்துவமனை மீதான குண்டுவீச்சு புட்டின் நடத்தும் போது மட்டும் போர் குற்றங்களாக ஆகிவிடுகின்றன.
ஆகஸ்ட் 2017 இல், சிரியாவின் ரக்கா நகர மருத்துவமனை மீது அமெரிக்கா பாஸ்பரஸ் குண்டுகளை வீசியது. உலக சோசலிச வலைத் தளம் எழுதியது, “மருத்துவமனையை இலக்கு வைப்பதும் பாஸ்பரஸ் வெடி குண்டுகளைப் பயன்படுத்துவதும் இரண்டுமே போர்க்குற்றங்கள் ஆகும். சதையை எரித்து எலும்புக்கூடாக்கும் மற்றும் காயங்களுக்குள் இன்னும் எரிச்சலூட்டும், இந்த இரசாயன ஆயுதங்கள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்த ஜெனிவா ஒப்பந்தத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளன.”
மே 1999 இல், நேட்டோ போர் விமானங்கள் யூகோஸ்லாவியாவின் பெல்கிரேடில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை வளாகத்தை குண்டுவீசித் தாக்கின, இது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு அழிக்கப்பட்டதுடன் மகப்பேறு பிரிவும் சேதப்படுத்தப்பட்டது. குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர், கர்ப்பிணிப் பெண்கள் சிதறிய கண்ணாடிச் சில்லுகளால் தாக்கப்பட்டனர், 20 குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர்.
இரத்தக்களரி தொடர்ந்து செல்கிறது. டிசம்பர் 2021 இல், நியூ யோர்க் டைம்ஸ் 'பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பற்றிய கோப்புகள்' (Civilian Casualty Files) என்ற ஒரு புலனாய்வு அறிக்கையை வெளியிட்டது, இது ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க குண்டுவீச்சுக்கள் எப்படி ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றன என்பதையும், அமெரிக்க அரசாங்கம் இதை எவ்வாறு மூடிமறைத்தது என்பதையும் அம்பலப்படுத்தியது. ஜூலை 2016 இல் வடக்கு சிரியா மீது நடத்தப்பட்ட ஒரேயொரு விமானத் தாக்குதலில் 120 பேர் கொல்லப்பட்டனர்.
பொதுமக்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டனர். இலக்கைக் குறித்து உணரப்பட்ட மதிப்பின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய மக்கள் இறப்புகள் என்பதை வரையறுத்து, ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஓர் இரகசிய இராணுவ கணக்கீடு உள்ளது. மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கொல்வதற்கு முன்னால், அமெரிக்க இராணுவம் அவர்களை வீடியோ திரையில் பார்த்த போதும், அவர்கள் வீடுகளை சிதைத்து இடிபாடுகளாக்கியது என்பதை பலியான பொதுமக்கள் பற்றிய கோப்புகள் ஆவணம் பதிவு செய்திருந்தது.
ஊடகங்கள் பட்டவர்த்தனமாகவே அலட்சியமாக உள்ளன, ஒவ்வொரு புதிய வெளியீடுகளும் இறுக்கமான மவுனத்தைச் சந்திக்கின்றன. எந்த அர்த்தமுள்ள விசாரணைகளும் இல்லை; தைரியமான பத்திரிகையாளர்களிடம் இருந்து எந்த அதிரடி கேள்விகளும் இல்லை. வாஷிங்டனின் எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தமில்லா வருத்தத்தைக் காட்டுவதே அமெரிக்க ஊடகங்களின் கையிருப்பில் உள்ளன.
உக்ரேனில் போர்க்குற்றங்களுக்காக புட்டினைக் குறிவைத்து, அதேவேளையில், அமெரிக்கப் பேரரசின் குற்றங்களை மூடிமறைக்கும் அமெரிக்க ஊடகங்கள், ஏறக்குறைய பண்டைய இடைக்கால சிலுவைப் போர்களின் தப்பெண்ணங்களைத் தோண்டி எடுக்கின்றன. 'நாகரிக ஐரோப்பியர்களின்' மரணங்கள் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு பயங்கரமாக எடுத்துக்காட்டப்படுகிறது, அதேவேளையில் அரேபியர்கள் மற்றும் ஆசியர்களின் மரணங்கள் குறித்து எதுவும் கூறப்படுவதில்லை. உக்ரேனில் இருந்து வரும் வெளிர் நிற அகதிகள் குறித்து ஒரு பரிதாபகரமான கூக்குரல் எழுப்பப்படுகிறது, ஆனால் அமெரிக்காவின் போர்களில் இருந்து தப்பி ஓடிய கரிய தோலுடைய அகதிகள் மத்திய தரைக்கடலில் மூழ்க விடப்பட்டனர்.
ரஷ்யாவின் போர்க்குற்றங்களை ஆவணப்படுத்துவதில் வாஷிங்டன் அதன் ஆழ்ந்த அக்கறையை அறிவிக்கிறது, ஆனால் ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவின் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக ஈவிரக்கமின்றி துன்புறுத்தப்படுகிறார். அமெரிக்கப் படைகளால் ஈராக் மக்கள் கொல்லப்பட்டது போன்ற குற்றங்களை விவரிக்கும் ஆவணங்களை அவர் தைரியமாக வெளியிட்டதற்காக, அவர் உயிரே நடைமுறையளவில் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் அவரை நிரந்தரமாக மவுனமாக்க கோருகிறது, அவர் இறந்துவிட்டதைக் காணும் வரை அது எங்கும் நிற்கப் போவதில்லை.
இந்த பாசாங்குத்தனம் இன்னும் நீள்கிறது. புட்டினுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்த அழைப்பு விடுக்கும் அமெரிக்கா, அதன் சொந்த தாக்குதல்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்பதாக இல்லை. போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எந்த அமெரிக்கரும் வழக்கில் இழுக்கப்படவில்லை, அவ்வாறு செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அமெரிக்க அரசாங்கம் தடுத்துள்ளது.
உக்ரேனில் நடந்த போர்க் குற்றங்களுக்கு வாஷிங்டனின் கண்டனம் சுயநலமானது என்பதோடு, பெருநிறுவன ஊடகங்களின் தார்மீக சீற்றம் ஜோடிக்கப்பட்டது மற்றும் ஒருதலைபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். மரியுபோல் சம்பந்தமாக கையைப் பிசைந்து கொண்டிருப்பது ஒரு குறிப்பிட்ட அரசியல் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த அக்கறை குடிமக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காக இல்லை, மாறாக ரஷ்யர்களை காட்டுமிராண்டிகளாகவும் மனிதாபிமானமற்றவர்களாகவும் பூதாகரமாக சித்தரிப்பதற்காக ஆகும்.
பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்த, அரசு மற்றும் ஊடகங்களால் ஒருதலைப்பட்சமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்வைக்கப்படும் போர்க்குற்றங்கள் போரைத் தூண்டுவதற்கே பயன்படுகின்றன. உக்ரைன் மீது நேட்டோ விதிக்கும் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதிக்கான ஆபத்தான கோரிக்கைகளை எழுப்புவதற்காக, மரியுபோல் மருத்துவமனை மீதான குண்டுவீச்சு, கோப உணர்ச்சியைக் கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்றவொரு விமானம் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதி தவிர்க்க முடியாமல் உலகப் போருக்கு வழிவகுக்கும்.
போர்க்குற்றங்கள் தொடர்பான வரம்புகளுக்கு எந்த சட்ட சாசனமும் கிடையாது. புட்டின் அவரது குற்றங்களுக்காக ஹேக்குக்கு அனுப்பப்பட வேண்டுமானால், கிளிண்டன், புஷ், ஒபாமா, ட்ரம்பும் மற்றும் பொதுமக்களை அமெரிக்கா கொன்று குவித்ததற்கு உடந்தையாய் இருந்த அனைவரும், அவருடன் விசாரணைக் கூண்டில் நிற்க வேண்டும்.