இலங்கை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்துமாறு கோரி நடத்துகின்ற பொதுக் கூட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையின் மத்திய தேயிலைத் தோட்ட மாவட்டத்திலுள்ள ஓல்டன், கிளனுகி மற்றும் எபோட்ஸ்லி தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள், ஓல்டன், கட்டுகலை, வெளிஓயா ஆகிய மூன்று தோட்டங்களிலும் முகாமையாளர்களால் பழிவாங்கப்பட்ட மற்றும் வேலைநீக்கம் செய்யப்பட்ட 54 தோட்டத் தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்துமாறு கோரி, மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பகிரங்க இணையவழி கூட்டத்தை நடத்துகின்றன.

முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரைத் தாக்கியதாக பொய்க் குற்றம் சுமத்தி, ஹொரண பெருந்தோட்ட நிறுவனம், மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 38 தொழிலாளர்களை கடந்த வருடம் மார்ச் 22 அன்று வேலைநீக்கம் செய்தது. இவர்களில் 24 தொழிலாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளை பொலிஸ் பதிவு செய்துள்ளது.

செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில், அதிகரித்த வேலைச்சுமை மற்றும் சம்பள வெட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆறு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தியதைத் தொடர்ந்து தலவாக்கலை, கட்டுகலை தோட்டத்தைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2021 ஒக்டோபர் 7 கடுமையான நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், வீட்டிற்கு செல்லும் வழியில் பாதிக்கப்பட்ட கட்டுகெல்லை தோட்டத் தொழிலாளர்கள் (WSWS Media)

ஹட்டனுக்கு அருகிலுள்ள வெலிஓயா தோட்டத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து தொழிலாளர்களும் இதே முறையில் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் வேலையில் இணைத்துக் கொள்வதற்காக, அதிகரித்த உற்பத்தி இலக்குகளை உள்ளடக்கிய அடக்குமுறை வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) முன்முயற்சியால் ஸ்தாபிக்கப்பட்ட ஓல்டன், கிளனுகி மற்றும் எபோட்ஸ்லியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்கள், அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிட வேண்டும், சோடிக்கப்பட்ட விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் மற்றும் வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோருகின்றன.

இந்தத் தாக்குதல்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்களின் முழு ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்த தொழிற்சங்கங்கள் எதுவும் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களைப் பாதுகாக்கவில்லை, மாறாக, அவர்களை வேண்டுமென்றே தனிமைப்படுத்தி தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து சதி செய்கின்றன.

இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தோட்டத் தொழிலாளர்கள், தோட்டக் கம்பனிகளால் தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து திணித்து வரும் கடுமையான வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்.

கம்பனிகள் மற்றும் அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதல்களை தோற்கடிப்பதன் பேரில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு தேவையான சுதந்திரமான, முதலாளித்துவ எதிர்ப்பு வேலைத்திட்டம் பற்றி, இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களை இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறும், தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களும் சோசலிச சமத்துவக் கட்சியும் முன்னெடுக்கும் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இங்கு பதிவுசெய்துகொள்ளுங்கள்.

Loading