முன்னோக்கு

அமெரிக்காவின் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 1 மில்லியனை எட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வேர்ல்டோமீட்டர்ஸ் புள்ளிவிபர ஆய்வு நிறுவனத்தின் தகவல்படி, இன்று மாலைக்குள், அமெரிக்காவின் உத்தியோகபூர்வ கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்து விடும். ஒரே சீரான புள்ளிவிபரங்கள் இல்லாததால், கோவிட்-19 இன் சரியான இறப்பு எண்ணிக்கையும் மற்றும் பிற புள்ளிவிபர ஆய்வு நிறுவனங்களின்படி அது 1 மில்லியனைக் கடக்கும் தருணமும் அறியப்படவில்லை என்றாலும், ஏப்ரல் இறுதிக்குள் ஒவ்வொரு புள்ளிவிபர ஆய்வு நிறுவனத்தின் விபரங்களும் இந்த கொடூரமான மைல்கல்லை அனேகமாக தாண்டிவிடும். இந்த பெருந்தொற்றால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்பட்ட அதிகப்படியான இறப்புகளைக் குறித்த மதிப்பீடுகள் உண்மையான அமெரிக்க இறப்பு எண்ணிக்கையை 1.2 மில்லியனுக்கும் அதிகமாகக் காட்டுகின்றன.

பேரழிவுகரமான உயிரிழப்பும் இந்த பெருந்தொற்றின் பரந்த சமூக தாக்கங்களும் அமெரிக்க வரலாற்றில் முன்னோடியில்லாதவை. ஒட்டுமொத்த குடும்பங்களும் சீரழிக்கப்பட்டுள்ளன. 65 வயதுக்கு அதிகமான ஒவ்வொரு 100 பேரில் ஒருவர் கோவிட்-19 ஆல் கொல்லப்பட்டுள்ளார். 200,000 க்கும் அதிகமான குழந்தைகள் இந்த நோயால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது முதன்மை கவனிப்பாளரையோ இழந்துள்ளனர்.

20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா நடத்திய ஒவ்வொரு போரின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கையை விட அதிகமான அமெரிக்கர்கள் இந்த இரண்டாண்டு கால இடைவெளியில் கோவிட்-19 ஆல் இறந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், தடுத்திருக்கக்கூடிய இந்த நோயால் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் சராசரியாக 2,735 அமெரிக்கர்கள் இறந்துள்ளனர், இது செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 2,977 பேர் எண்ணிக்கைக்கு அருகில் உள்ளது.

இந்த பெருந்தொற்றின் முதல் ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் ஆயுட்காலம் வியத்தகு முறையில் 1.8 ஆண்டுகள் குறைந்தன, இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட மிக அதிகபட்ச குறைவாகும். இந்த கட்டத்தில், ஒருங்கிணைந்த மொத்த சராசரி ஆயுட்காலத்தின் குறைவு ஐந்து வருடங்களை நெருங்கி இருக்கலாம்.

Ventilator tubes attached to a COVID-19 patient at Providence Holy Cross Medical Center in the Mission Hills section of Los Angeles, Nov. 19, 2020 [Credit: AP Photo/Jae C. Hong] [AP Photo/Jae C. Hong]

வெகுஜன இறப்புகளின் புள்ளிவிவரங்களில் எண்ணற்ற நபர்களின் துயரங்கள் குறிப்பிடப்படவில்லை. பெற்றோர்கள், தாத்தா-பாட்டிகள், அத்தைமார்கள், மாமன்மார்கள், மகன்கள், மகள்கள், முதியவர்கள், அவர்கள் வாழ்க்கையின் முக்கிய நபர்கள், வாழ்க்கையே தொடங்கி இருக்காதா இளைஞர்கள், அனைவரும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காலத்தால் அழியாத சமூகப் பேரழிவுக்கும், 1 மில்லியன் இறப்புகள் என்ற மைல்கல்லுக்கும் விடையிறுப்பதில், ஒவ்வொரு இடங்களிலும் மிகப் பெரியளவில் ஒரு பாரிய உத்தியோகபூர்வ அலட்சியம் இருந்துள்ளது.

இந்த மைல்கல்லுக்கு முந்தைய நாட்கள் மற்றும் வாரங்களில் இந்த பெருந்தொற்று குறித்து மனப்பூர்வமான நினைவுகளும், இதயாஞ்சலிகள் மற்றும் தீவிர விவாதங்கள் பல நடத்தப்படும் என்று ஒருவர் கற்பனை செய்திருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த பெருந்தொற்று இப்போது கிட்டத்தட்ட முழுமையாக ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தாலும் பெருநிறுவன ஊடகங்களாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது, அதேவேளையில் இன்னும் அதிகமாக பரவக்கூடிய, தடுப்பூசியையே எதிர்க்கும், வீரியம் மிக்க ஓமிக்ரோன் BA.2 துணை மாறுபாட்டின் புதிய எழுச்சி பின்புலத்தில் அதிகரித்து வருகிறது.

1 மில்லியன் தேவையில்லாத இறப்புகள் இந்த பெருந்தொற்றின் மிகவும் துன்பியலான அம்சம் என்பதோடு, மில்லியன் கணக்கான ஒருவேளை கூடுதலாக பத்து மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் அவர்களின் உடல்நலக் குறைபாடு காரணமாக இப்போது நீண்டகால கோவிட் ஆல் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல், மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி உட்பட ஏறக்குறைய உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும் எண்ணற்ற அறிகுறிகள் இதில் உள்ளடங்கும்.

200 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று Seroprevalence ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்சம் 10 சதவீத நோய்த்தொற்றுகள் நீண்டகால அறிகுறிகளுக்கு இட்டுச் செல்கின்றன என்றும், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்குத் தடுப்பூசியை மீறி ஏற்படும் நோய்தொற்றுக்களும் ஒப்பீடத்தக்க விகிதத்தில் இருப்பதாகவும், நீண்ட கால கோவிட் பற்றிய ஆய்வுகள் மதிப்பிடுகின்றன, இதன் அர்த்தம் 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் நீண்ட கால மாற்றங்களை அனுபவித்துக் கொண்டிருக்கலாம் என்பதாகும்.

மேலும், கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்தளவில் மூளை பாதிப்பு, இதய நோய், சிறுநீரக நோய், நீரிழிவு நோய் இன்னும் பல அபாயத்தை எதிர் கொண்டிருப்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக நீண்ட கால கோவிட் இன் சமூக தாக்கம் கணக்கிட முடியாமல் உள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளில் பெரும்பாலானவை தொழிலாள வர்க்கம் மற்றும் கீழ்நிலை நடுத்தர வர்க்கத்தினரையே தாக்கியுள்ளன. வருமானம் ஈட்டுபவர்களில் அடிமட்ட 90 சதவீதத்தினரில் உள்ளடங்கி உள்ள அவர்கள், பாதுகாப்பற்ற பணியிடங்களுக்குத் திரும்பவும், வைரஸ் பரவலின் பிரதான மையங்களாக விளங்கும் பாதுகாப்பற்ற பள்ளிகளுக்கு அவர்கள் குழந்தைகளை அனுப்பவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் சுமார் 25.8 மில்லியன் குழந்தைகள் ஏற்கனவே கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக செப்டம்பர் 2021 வாக்கில் CDC மதிப்பிட்டது. அப்போதிருந்து பள்ளிகள் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டதால், இந்த எண்ணிக்கை 40 மில்லியனுக்கும் அதிகமாக சென்றிருக்கலாம், அதுவும் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஓமிக்ரோன் நோய்தொற்றோ அல்லது மறுதொற்றோ ஏற்பட்டிருக்கலாம்.

முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தைப் பொறுத்த வரையில், இந்த பெருந்தொற்று முன்னெப்போதும் இல்லாத ஒரு வரப்பிரசாதமாகி உள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை, கிட்டத்தட்ட ஒருமனதாக இரு கட்சி ஆதரவுடன் டொனால்ட் ட்ரம்பால் CARES சட்டம் கையெழுத்தானதில் இருந்து இரண்டு ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும். இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய சொத்து பரிமாற்றத்தைத் தொடங்கியது, அக்டோபர் 2021 இல் இருந்து அமெரிக்க பில்லியனர்கள் மலைப்பூட்டும் அளவுக்கு 2.1 டிரில்லியன் டாலர்களைக் குவித்துக் கொண்டனர்.

கலிபோர்னியா மாநில சட்டத்தை மீறி, மே 2020 இல் அவர் பணியாளர்களை வேலைக்குத் திரும்ப வர நிர்பந்தித்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், அம்மாநில ஜனநாயகக் கட்சியினரால் தண்டிக்கப்படவில்லை என்பதோடு, அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் $200 பில்லியனுக்கும் அதிகமாக குவித்துள்ளார். பாரிய கோவிட்-19 நோய்த்தொற்றுகளையும் மற்றும் அவர் பணியிடங்களில் ஏராளமான இறப்புகளையும் மேற்பார்வையிட்ட, அமசன் நிறுவுனர் ஜெஃப் பெசோஸ் மார்ச் 2020 இல் இருந்து $75 பில்லியன் குவித்துள்ளார்.

ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள் இரண்டுடின் கீழ், அத்துடன் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்களின் கீழ், பொது சுகாதாரமானது பெருநிறுவனங்கள் மற்றும் நிதிய தன்னலக்குழுவின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நலன்களுக்குத் தொடர்ந்து கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது. பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் 'விஞ்ஞானத்தைப் பின்பற்றுவதாகவும்' மற்றும் இந்த பெருந்தொற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளைப் பேணுவதாகவும் காட்டும் பாசாங்குத்தனம் ஓமிக்ரோன் மாறுபாட்டின் எழுச்சியின் போது அம்பலமானது.

டிசம்பர் 15, 2021 இல், ஓமிக்ரோன் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கத் தொடங்கிய போது, வெள்ளை மாளிகையின் கோவிட்-விடையிறுப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியண்ட்ஸ் (இவரின் நிகர சொத்து மதிப்பு $90 மில்லியனுக்கும் அதிகம்) கூறினார், “எங்கள் குழந்தைகளைப் பள்ளியிலும் எவ்வாறு வைத்திருப்பது எங்கள் வணிகங்களை எவ்வாறு திறந்து வைப்பது என்பது எங்களுக்குத் தெரியும், நாங்கள் எந்த வகையிலும் நம் பொருளாதாரத்தை முடக்கப் போவதில்லை,” என்றார். இது அதற்கடுத்த மூன்று மாதங்களுக்கான தொனியை அமைத்தது, அது இந்த பெருந்தொற்றின் இரண்டாவது மிக மோசமான அலையாக ஆனது, அதில் 170,000 க்கும் அதிகமான அமெரிக்கர்கள் கோவிட்-19 ஆல் இறந்தனர்.

ஓமிக்ரோன் அதிகரிப்பின் போது, ஜனநாயகக் கட்சியினர், கோவிட்-19 இப்போது 'வழமையான பகுதிசார் தொற்றுநோய்' மற்றும் ஒரு 'புதிய வழமையாக' ஆகிவிட்டது என்ற பொய்யின் அடிப்படையில் ட்ரம்ப் முன்னெடுத்த அதே 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயத்தை ஏற்றுக் கொண்டனர். இதே செயல்முறை கனடாவிலும், ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் கட்டவிழ்த்து விடப்பட்டது, சீனாவுக்கு வெளியே உலகின் ஒவ்வொரு அரசாங்கமும் இந்த வைரஸ் பரவலை மெதுவாக்குவதற்கான எல்லா பொது சுகாதார நடவடிக்கைகளையும் கைத்துறந்தன.

உலகளவில், உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை இப்போது 6.1 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் அதிகப்படியான இறப்புகள் தோராயமாக 20.2 மில்லியனாக மதிப்பிடப்படுகிறது. ஓமிக்ரோன் BA.2 துணை மாறுபாடு உலகெங்கிலும் கட்டுப்பாடில்லாமல் பரவி வருவதாலும், புதிய மாறுபாடுகள் பரிணமிப்பதாலும் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இது தீவிரமே அடையும்.

முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு மக்களிடையே எந்த அளவிலான மரணத்தையும் ஏற்கத் தயாராக உள்ளது என்பதை வேறெந்த சம்பவத்தையும் விட, இந்த பெருந்தொற்று, தெளிவுபடுத்தி உள்ளது. கோவிட்-19 இல் இருந்து உயிர்களை எப்படி காப்பாற்றுவது என்பதில் பைடென் நிர்வாகத்திற்கு எதுவும் அக்கறை இல்லை. அதற்கு நேரெதிராகவே உள்ளது. அவர் மற்ற நேட்டோ சக்திகளுடன் போர் கலந்தாலோசனைகளில் பங்கேற்பதற்காகவும், உக்ரேன் சம்பந்தமாக ரஷ்யாவுடன் மோதலைத் தூண்டுவதற்காகவும் ஐரோப்பாவுக்குப் பறந்துள்ளார். கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் உலகை ஒன்றிணைக்க அழைப்பதற்கு பதிலாக, பைடென் ரஷ்யாவை எதிர்க்க நேட்டோவை ஒன்றிணைக்கும் நோக்கில் உள்ளார்.

அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவுடன் நேரடி மோதலில் ஈடுபட்டால், அது விரைவிலேயே கட்டுப்பாட்டை மீறி மனித நாகரிகத்தையே நிரந்தரமாக அழிக்கக்கூடிய ஓர் அணு ஆயுதப் போரைக் கட்டவிழ்த்து விடலாம்.

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா மற்றும் அனைத்து நேட்டோ சக்திகள் உள்ளடங்கலாக போரில் ஈடுபட்டுள்ள போர்வெறி கொண்ட ஒவ்வொரு நாடும், அதனதன் நாடுகளில் இந்த பெருந்தொற்றால் மிகப் பெரிய உயிரிழப்பை அனுபவித்துள்ளன என்பது பொதுவான விஷயமாக இருந்தாலும், கோவிட்-19 பரவலைத் தடுக்க என்ன செய்யப்பட்டுள்ளதோ அதற்கான ஆதாரவளங்களை ஒருவர் ஒப்பிட்டால், அமெரிக்கா அதன் மக்கள் மீது மிகவும் அலட்சியமான வழியில் சென்றுள்ளது.

கோவிட்-19 இல் இருந்து பாரிய நோய் மற்றும் மரணத்தை ஏற்றுக்கொள்வதும் ஊக்குவிப்பதும், அணு ஆயுதப் போரைப் பிரயோகிப்பது சம்பந்தமாக ஆளும் வட்டங்களில் ஓரளவுக்கு உளவியல்ரீதியான தடை கடந்து சென்றிருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் 1 மில்லியன் அமெரிக்கர்களின் உயிர்களை தியாகம் செய்ய தயாராக இருக்கிறார்கள் என்றால், வெளிநாடுகளில் மில்லியன் கணக்கானவர்களின் மரணத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை இருக்கும்?

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அமெரிக்க பெருந்தொற்றுக் கொள்கைகள், உலகின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளதைப் போலவே, தொடர்ச்சியாக மகத்தான சமூகக் குற்றங்களுக்கு நிகராக உள்ளது. உலக சோசலிச வலைத் தளத்தால் தொடங்கப்பட்ட கோவிட்-19 பெருந்தொற்றுக்கான உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணை, இந்த பெருந்தொற்றின் பாதிப்புகளை வெளிப்படுத்தி, இந்த தேவையற்ற துயரங்களுக்கும் மரணத்திற்கும் பொறுப்பான அனைவரையும் அடையாளம் கண்டு வருகிறது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு இந்த பெருந்தொற்றைக் குறித்து ஓர் அரசியல் மற்றும் வரலாற்று புரிதலை வழங்குவதே இந்த விசாரணையின் நோக்கமாகும், அதே நேரத்தில் இந்த பெருந்தொற்றை தடுக்கவும் மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்றவும் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பூஜ்ஜிய-கோவிட் மூலோபாயத்தைக் குறித்த விஞ்ஞானப்பூர்வ புரிதலுடன் இது தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குகிறது. இப்போதும் கூட, கொள்கை மாற்றம் கொண்டு வரப்பட்டால் இந்த பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

உலக முதலாளித்துவத்தின் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடும் நெருக்கடிகளை, எல்லாவற்றிற்கும் மேலாக இந்த பெருந்தொற்று மற்றும் அதிகரித்து வரும் மூன்றாம் உலகப் போர் அபாயத்தை, சமூகத்தின் சோசலிச மறுகட்டமைப்பை நோக்கமாகக் கொண்ட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்.

Loading