தென் சீனக் கடல் மீது ஆத்திரமூட்டும் விமானத்தில் அமெரிக்க இந்தோ-பசிபிக் தளபதி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஊடகங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு கணக்கிடப்பட்ட ஆத்திரமூட்டலில், அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தலைவர் அட்மிரல் ஜோன் அக்விலினோ ஞாயிற்றுக்கிழமை ஒரு கடற்படை உளவு விமானத்தில் தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி குழுவில் உள்ள சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளுக்கு அருகே வேண்டுமென பறந்தார்.

தீவுகளை இராணுவமயமாக்கியதற்காக சீனாவைக் கண்டிக்க அக்விலினோ இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார், மேலும் சீனாவுடன் முரண்பாடு ஏற்பட்டால் 'போரிடவும் வெற்றி பெறவும்' தயாராக இருக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று அச்சுறுத்தும் வகையில் எச்சரித்தார்.

பிராந்தியத்தில் பென்டகனின் உயர்மட்ட தளபதியின் முன்னோடியில்லாத விளம்பரப்படுத்தப்பட்ட விமானப் பயணம் ஒரு பரந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் உக்ரேனில் ரஷ்யாவுடனான மோதலை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கையிலும், பைடென் நிர்வாகம் வேண்டுமென்றே ஆசியாவில்-தைவான் மற்றும் தென் சீனக் கடலில் ஆபத்தான வெடிப்பு புள்ளிகள் தொடர்பாக சீனாவுடன் பதட்டங்களை அதிகப்படுத்துகிறது.

Mischief Reef, Subi Reef மற்றும் Fiery Cross Reef ஆகியவற்றில் ஏவுகணை தளங்கள், விமானம் தாங்கிகள் மற்றும் ரேடார் அமைப்புகளை நிர்மாணிப்பதை அக்விலினோ சுட்டிக்காட்டினார், அது முடிந்ததாகத் தெரிகிறது என்று கூறினார், மேலும் தென் சீனக் கடலில் வேறு இடத்தில் சீனா இராணுவ உள்கட்டமைப்பை உருவாக்குமா என்று ஊகித்தார்.

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி (INDOPACOM), அட்மிரல் ஜோன் சி. அக்விலினோ இடதுபுறம், ஞாயிற்றுக்கிழமை மார்ச் 20, 2022 அன்று வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள பம்பாங்கா மாகாணத்தில் உள்ள கிளார்க் விமானத் தளத்தை வந்தடைகிறார் (AP Photo/Aaron Favila)

'அந்தத் தீவுகளின் செயல்பாடு PRC [மக்கள் சீனக் குடியரசு] அவர்களின் கண்டக் கரைகளுக்கு அப்பால் தாக்குதல் திறனை விரிவுபடுத்துவதாகும்' என அக்விலினோ கூறினார். 'அவர்களால் ஏவுகணை அமைப்புகளின் அனைத்து தாக்குதல் திறன்களுடன் போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்களை பறக்க முடியும்.” இந்த ஏவுகணை அமைப்புகள் இராணுவ மற்றும் சிவிலியன் விமானங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றார். 'அவர்கள் அருகிலுள்ள அனைத்து நாடுகளையும் மற்றும் அனைத்து சர்வதேச கடல் மற்றும் வான்வெளியையும் அச்சுறுத்துகிறார்கள்.'

அசோசியேட்டட் பிரஸ் கருத்துப்படி, “சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட திட்டுகளுக்கு அருகில் 4,500 மீட்டர்கள் வரை குறைந்த உயரத்தில் P-8A Poseidon பறக்கையில், சில சிறிய நகரங்கள் போல திரை கண்காணிப்புகளில் தோன்றின, பல மாடி கட்டிடங்கள், கிடங்குகள், விமான கூடாரங்கள், துறைமுகங்கள், ஓடுபாதைகள், வெள்ளை நிற வட்ட கட்டமைப்புகள் மற்றும் ரேடார்கள் என்று அக்விலினோ கூறினார். ஃபியரி கிராஸ் அருகே, 40 க்கும் மேற்பட்ட குறிப்பிடப்படாத கப்பல்கள் நங்கூரமிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.”

விமானத்தில் இருந்த இரண்டு அசோசியேட்டட் பிரஸ் நிருபர்கள், அமெரிக்க விமானத்தை தீவுகளில் இருந்து விலகி இருக்குமாறு சீன வானொலி செய்திகள் மூச்சு விடாமல் அறிவித்தது, அது அமெரிக்க விமானத்தால் புறக்கணிக்கப்பட்டது என்றனர். அவர்களோ அல்லது அவர்களின் அறிக்கையை வெளியிட்ட ஊடகங்களோ அக்விலினோவின் கருத்துக்களை எந்த வகையிலும் சவால் செய்யவில்லை அல்லது திரை கண்காணிப்புகளில் அவர்கள் என்ன பார்த்துக்கொண்டிருந்தனர் என்று கேள்வி எழுப்பவில்லை.

உண்மையில், அக்விலினோவின் கருத்துக்கள் யதார்த்தத்தை தலைகீழாக்குகின்றன. சீனாவை ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் குற்றம் சாட்டும்போது, இந்தோ-பசிபிக் கமாண்டர், சீன உரிமை கோரும் பகுதியிலும், கிட்டவுள்ள அமெரிக்கப் பிரதேசத்திலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலும் இராணுவ விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். தென் சீனக் கடல் உடனடியாக சீன நிலப்பகுதியை ஒட்டியுள்ளது
மற்றும் ஹைனன் தீவில் உள்ள முக்கிய நீர்மூழ்கிக் கப்பல் தளங்கள் உட்பட உணர்திறன் வாய்ந்த சீன இராணுவ நிறுவல்களுக்கு உடனடியாக அருகில் உள்ளது.

கடந்த தசாப்தத்தில், சீனா மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையே பிளவுகளை விதைக்கும் வழிமுறையாக தென் சீனக் கடலில் பதட்டங்களை அமெரிக்கா வேண்டுமென்றே தூண்டி விட்டது. 2010 இல், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ASEAN) பிராந்திய மன்றத்தில், தென் சீனக் கடலில் அமெரிக்காவிற்கு 'தேசிய நலன்' இருப்பதாக அறிவித்தார்.

முன்னர் பல்வேறு பிராந்திய மோதல்களை புறக்கணித்த நிலையில், கிளின்டனின் கருத்து அப்பிராந்தியத்தில் ஒரு ஆக்கிரமிப்பு ஊடுருவலையும், சீனாவுடனான அமெரிக்க மோதலை தீவிரப்படுத்துவதையும் அடையாளம் காட்டியது. அடுத்த ஆண்டு, பிராந்தியம் முழுவதும் சீனாவிற்கு இராஜதந்திர ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் இராணுவ ரீதியாகவும் சவால் விடும் வகையில் 'ஆசியாவில் முன்நிலை' ஐ ஒபாமா முறையாக அறிவித்தார். கடல்வழி மற்றும் பறப்பதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சாக்குப்போக்கில், அமெரிக்கா பலமுறை போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் சீனாவால் உரிமை கோரப்படும் கடல் மற்றும் வான்வெளி பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது.

சீனாவுடனான போருக்கான அமெரிக்க தயாரிப்புகள் வேகமாக முன்னேறியுள்ளன. பென்டகன் அதன் 60 சதவீத வான் மற்றும் கடற்படைப் படைகளை இந்தோ-பசிபிக் பகுதிக்கு மாற்றியமைத்துள்ளது, மேலும் அதன் இராணுவ தளங்களை மறுசீரமைத்து விரிவுபடுத்தியுள்ளது. சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவக் கூட்டுக்கள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகள் பிராந்தியம் முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களின் மூன்று தசாப்தங்களின் அடிப்படையில், சீனா தனது இராணுவ நிலைப்பாட்டை மூலோபாய தெற்கு சீனக் கடலில் வலுப்படுத்தி வருகிறது. அமெரிக்க இராணுவ மூலோபாயவாதிகள், சீனாவுடனான எந்தவொரு அமெரிக்கப் போரிலும், தென் சீனக் கடல் போன்ற சீனப் பெருநிலப்பரப்பிற்கு அருகில் உள்ள முக்கிய நீரின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை முக்கியமானதாகக் கருதுகின்றனர்.

கடந்த ஆண்டு காங்கிரசுக்கான சாட்சியத்தில், சீனாவுடனான போர் 'பெரும்பாலானவர்கள் நினைப்பதை விட மிக நெருக்கமானது' என்று அக்விலினோ எச்சரித்தார். அவரது முன்னோடியான அட்மிரல் பில் டேவிட்சன் சில நாட்களுக்கு முன்பு செனட் ஆயுத சேவைகள் குழுவிடம், அமெரிக்கா சீனாவுடன், குறிப்பாக தைவானுடன், ஆறு ஆண்டுகளுக்குள் மோதலை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறினார்.

கடந்த வாரம் விமான பறப்பிலிருந்து பேசிய அக்விலினோ, இப்பகுதியில் வாஷிங்டனின் முக்கிய நோக்கம் ஊக்கமிழக்கச் செய்வதன் மூலம் 'போரைத் தடுப்பது' எனக் கூறினார். எவ்வாறாயினும், ஆசியா முழுவதும் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பின் உண்மையான நோக்கம் துல்லியமாக எதிர்மாறானது என அக்விலினோவின் அச்சுறுத்தலால் சுட்டிக்காட்டப்பட்டது: 'தடுத்தல் தோல்வியுற்றால், எனது இரண்டாவது பணி போராடி வெற்றி பெறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்' என்றார்.

இந்தோ-பசிபிக் தளபதி, சீனாவின் இராணுவ விரிவாக்கம் 'பிராந்தியத்தில் ஸ்திரமின்மை' க்கு வழிவகுக்கிறது என குற்றம் சாட்டினார்: 'கடந்த 20 ஆண்டுகளில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மக்கள் சீனக் குடியரசின் மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பை நாங்கள் கண்டிருக்கிறோம் என நான் நினைக்கிறேன்.'

சீனாவால் முன்வைக்கப்படும் 'அச்சுறுத்தல்' வெறுமனே போருக்கான அமெரிக்க தயாரிப்புகளுக்கான சாக்குப்போக்கு ஆகும். அமெரிக்க இராணுவ வரவு-செலவுத் திட்டமானது சீனாவைக் குள்ளமாக்குவது மட்டுமல்ல, ஆனால் அடுத்த ஒன்பது பெரிய இராணுவ சக்திகளின் இராணுவ வரவு-செலவுத் திட்டங்களை விடவும் பெரியது. பென்டகன் பசிபிக் பகுதியில் அதன் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை விரிவுபடுத்தி வருகிறது மற்றும் ரஷ்யாவுடனான இடைநிலை-தரப்பு அணுசக்தி (INF) ஒப்பந்தத்தை அமெரிக்கா இரத்து செய்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் தாக்குதல் இடைநிலை அணுகுண்டு ஏவுகணைகளை நிலைநிறுத்தி, அதையே ஆசியாவிலும் செய்யத் தயாராகி வருகிறது.

அதன் வரலாற்று வீழ்ச்சியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு, ரஷ்யாவையும் குறிப்பாக இப்போது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவையும், அதன் முக்கிய அச்சுறுத்தல்களாக கருதுகிறது, அதன் பாரிய இராணுவம் உட்பட அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக உள்ளது. தென் சீனக் கடலில் அக்விலினோவின் ஆத்திரமூட்டும் விமான பறப்பு, வாஷிங்டனின் வெளியுறவுக் கொள்கையின் வெளிப்படையான பொறுப்பற்ற தன்மையை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ரஷ்யாவை ஆப்கானிஸ்தான் வகை புதைகுழியில் மூழ்கடிக்கும் நோக்கில் உக்ரேனில் ஒரு போரைத் தூண்டிவிட்ட நிலையில், பைடென் நிர்வாகம் சீனாவுடன் பதட்டங்களைத் தூண்டி வருகிறது. பைடென் உட்பட வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரிகள், உக்ரேன் மோதலில் ரஷ்யாவிற்கு பொருள் ஆதரவை வழங்கினால், சீனாவிற்கு 'விளைவுகள்' ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். 'விளைவுகள்' தண்டனைக்குரிய பொருளாதாரத் தடைகள் என பரவலாக விளக்கப்பட்டாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ ஆத்திரமூட்டல்களை நாடியதில் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளது.

Loading