உக்ரேனை ஏழ்மைப்படுத்தல்: கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த நாட்டிற்கு என்ன செய்து வருகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இது இரண்டு பாகங்கள் கொண்ட தொடரின் முதல் பாகம்

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியின் உரையைக் கேட்க கடந்த புதன் கிழமையன்று நடந்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களின் கூட்டத்தில், சபாநாயகர் நான்சி பெலோசி, 'ஸ்லாவா உக்ரேனி' —'உக்ரேனுக்கு மகிமை'— என ஐந்து முறைக்குக் குறையாமல் கூச்சலிட்டு நிகழ்வைத் தொடங்கினார். இவ்வாறு செய்தமை வாஷிங்டன், இலண்டன் மற்றும் பிற இடங்களில் சமீபத்தில் பிரபலமாகிவிட்டது. இறுதியில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனும் நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடரிலும் மற்றும் ட்விட்டரிலும் அவ்வாறே கூச்சலிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடென், இந்த இரண்டு உக்ரேனிய வார்த்தைகளை இன்னும் கையாளவில்லை என்றாலும், ஒவ்வொரு ஒவ்வொரு குடிமகனும் மற்றொருவரை பலமுறை கொல்லப் போதுமான ஒரு பில்லியன் டாலருக்கு மேலான மதிப்புள்ள ஆயுதங்கள் உக்ரேனுக்குள் பாய்ச்சியது, அந்த தேசத்தின் 'சுதந்திரம்' மற்றும் 'கண்ணியத்தை' பாதுகாப்பதற்காக என்று ஒவ்வொரு தருணத்திலும் கூறுகிறார்.

'ஸ்லாவா உக்ரேனி' என்ற வார்த்தையின் தோற்றம், ரஷ்ய, உக்ரேனிய, யூத, போலந்து போன்ற அனைத்து இனங்கள் மற்றும் மொழியியல் குழுக்களை கொண்ட உக்ரேனின் உழைக்கும் மக்களுக்கும் அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் உள்ள உண்மையான உறவைப் பற்றிய சிலவற்றை வெளிப்படுத்துகிறது. உக்ரேனிய பாசிசத் தலைவர் ஸ்டீபன் பண்டேராவைப் பற்றி க்ரெஸ்கோர்ஸ் ரோசோலின்ஸ்கி-லீப (Grzegorz Rossolinski-Liebe) எழுதிய புத்தகம், 'ஸ்லாவா உக்ரேனி' உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதன் இராணுவப் பிரிவான உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் பயன்படுத்திய வணக்கத்தின் ஒரு பகுதியாகும். இவை இரண்டாம் உலகப் போரின் போது பல்லாயிரக்கணக்கான சோவியத், யூத மற்றும் போலந்து மக்களை படுகொலை செய்ததற்கு கூட்டுப்பொறுப்பாளிகளாகும்.

அமெரிக்காவோ, ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அதன் அமைப்புகளோ எதுவுமோ இப்போதாகட்டும் அல்லது முன்னெப்போதாகட்டும் உக்ரேனிய மக்களைப் பற்றியும் அவர்களது விடுதலை பற்றியும் ஒருபோதும் அக்கறை கொண்டிருக்கவில்லை. அவர்களின் ரஷ்யாவுடனான போரில் அந்த நாட்டை வெளிச்சக்திகளுக்கான அரங்கமாக பாதமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பல தசாப்தங்களாக உக்ரேனிய மக்களை பொருளாதார ரீதியாக கழுத்தை நெரித்தே வருகின்றன. இக்கொள்கையின் விளைவாக பாரிய அளவிலான ஆயுதங்கள் இன்றைய உக்ரேனிய பாசிஸ்டுகளின் கைகளுக்குச் செல்வதுடன், மேலும் நாட்டின் சில பகுதிகள் வெடிவைத்து தகர்க்கப்படுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் டொமினிக் ஸ்ரவுஸ்-கான் (வலது) உக்ரேன் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை (இடது) ஏப்ரல் 12, 2010 அன்று வாஷிங்டன், டிசி யில் உள்ள அதன் தலைமையகத்தில் வரவேற்கிறார் (International Monetary Fund Photograph/Stephen Jaffe) [Photo: International Monetary Fund, Stephen Jaffe]

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, 44.13 மில்லியன் மக்களைக் கொண்ட உக்ரேன், ஐரோப்பாவில் ஏழ்மையான அல்லது இரண்டாவது ஏழை நாடாகும். இது சுமார் 2.6 மில்லியன் மக்களை கொண்ட மோல்டோவாவுடன், இந்த மோசமான பெயரைப் பெற்றுக்கொள்ள போட்டியிடுகிறது.

உக்ரேனின் மக்கள் தொகையில் அடிமட்ட 50 சதவீதத்தினர் நாட்டின் மொத்த வருமானத்தில் வெறும் 22.6 சதவீதத்தையும் அதன் செல்வத்தில் 5.7 சதவீதத்தையும் பெறுகின்றனர். உலக சமத்துவமின்மை தரவுத் தளத்தின்படி, உக்ரேனின் நிகர தனிப்பட்ட சொத்துக்களில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை மேல்மட்ட 10 சதவீதத்தினர் கொண்டுள்ளனர். இத்தளமானது உலகின் மூன்று முன்னணி சமத்துவமின்மை நிபுணர்களான தோமஸ் பிகெட்டி, இமானுவல் சாஸ் மற்றும் கப்ரியல் ஜுக்மான் ஆகியோரின் இயக்கத்தின் கீழ் வெளியிடப்பட்டது. 2018 இல், உக்ரேனிய குடும்பங்களின் சராசரி நிகர சேமிப்பு 245 டாலர்களாக இருந்தது.

உக்ரேனில் சராசரி குடும்ப வருமானம் ஆண்டுக்கு 4,400 டாலர்கள் ஆகும். இது ஈரானின் பொருளாதாரத்திற்கு இணையாக உள்ளது. ஈரானின் பொருளாதாரம் பல ஆண்டுகளாக நசுக்கும் பொருளாதாரத் தடைகளின் கீழ் இயங்கி வருகிறது. உக்ரேனில் சராசரி ஊதியம் ஒரு மாதத்திற்கு வெறும் 330 யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொழிலாளிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் 144 யூரோக்கள் ஆகும். உக்ரேனிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, உயிர்வாழ்வதற்கான வாழ்வாதாரம் குறைந்தபட்சம் 64 யூரோக்கள் ஆக இருப்பதால், ஒரு தனிநபர் அதில் பாதிக்கும் குறைவான தொகையில் உயிர்வாழ முடியும். ஓய்வூதிய அளவின் கீழ் நிலையில் இருக்கும் ஓய்வு பெற்றவர்கள் மாதம் 50 யூரோக்களை பெறுகின்றனர்.

வழக்கமாக உக்ரேனிய குடும்பம் அதன் மொத்த வருமானத்தில் 47 சதவீதத்தை உணவுக்காகவும், மற்றொரு 32 சதவீதத்தை பயன்பாட்டுக் கட்டணங்களுக்காகவும் செலவிடுவதாக நாட்டின் சமூகவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், 60 சதவீத குழந்தைகள் உட்பட, அரசாங்க தரநிலைகளின்படி கிட்டத்தட்ட 60 சதவீத மக்கள் ஏழைகளாக இருந்தனர். அந்த வறுமை விகிதம் 2019 இல் 'மட்டும்' 37.8 சதவீதத்திற்கு குறைந்தது. ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு 2020 ஆம் ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட உக்ரேனிய குழந்தைகளில் 15.9 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாகவும், 2019 ஆம் ஆண்டில் இனப்பெருக்க வயதுடைய பெண்களில் 17.7 சதவீதம் பேர் உணவில் இரும்புச்சத்து இல்லாததால் ஏற்படும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளது. அந்த எண்ணிக்கை 2004ல் இருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் எடை கூடியவர்களாக உள்ளனர்.

உக்ரேனிய மக்கள் தொகை

2014 மற்றும் 2019 க்கு இடையில், பிறப்பு விகிதம் 19.4 சதவீதம் குறைந்துள்ளது. உக்ரேனின் இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 14.7 என மிக அதிகமாக உள்ளது. உலகின் ஏழ்மையான கண்டமான ஆபிரிக்காவின் பல நாடுகளை விட இது மிகவும் கூடுதலாக உள்ளது. உலக வங்கியின் கூற்றுப்படி, அதன் தற்கொலை விகிதம் உலகில் 11 வது இடத்தில் உள்ளது. பிறப்பைவிட இறப்புகள் இரண்டு மடங்கிற்கு அதிகமாக இருப்பதாலும் மற்றும் நூறாயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் சிறந்த வாழ்வைத் தேடி புலம்பெயர்ந்து வருவதாலும், நாட்டின் மக்கள்தொகை 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் சுருங்குகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று 8 மில்லியன் குறைவான உக்ரேனிய குடிமக்கள் உள்ளனர்.

பட்டியல் இவ்வாறு தொடர்கிறது. பெரும் பணக்காரர்களைத் தவிர, நடுத்தர மற்றும் உயர்-நடுத்தர வர்க்க மக்களின் ஒரு குறுகிய அடுக்கு பெரிய நகரங்களில் குவிந்துள்ளது, உக்ரேன் பற்றாக்குறையின் ஒரு கடலாகி உள்ளது.

இன்று உக்ரேன் மீது தங்கள் அன்பை பொழிந்து ஊர்வலம் நடத்தும் இதே நாடுகளால் அந்நாட்டின் மீது திணிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் நேரடி விளைவாகும். உடனடி அர்த்தத்தில், தற்போதைய சூழ்நிலையின் வேர்கள், 2014 அமெரிக்க ஆதரவுடனான சதியினால் கியேவில் ஒரு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் இருக்கின்றது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு இணைப்பு உடன்படிக்கையை கையெழுத்திட்டு, அதற்காக பாரிய சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் அது இன்னும் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது.

அந்த நாட்டின் சமூக மற்றும் பொருளாதார பேரழிவிற்கான வேர்களை, ஸ்ராலினிச அதிகாரத்துவம் 1991 இன் இறுதியில் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து மற்றும் உருவாகிய புதிய சுதந்திர தேசிய அரசுகள் அனைத்திலும் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதனூடாக அவற்றை உலக நிதி மற்றும் வர்த்தக வலைப்பின்னலில் முற்றாக ஒருங்கிணைப்பை உருவாக்கியதிலிருந்து கண்டுகொள்ளலாம். மேற்கத்திய ஆலோசகர்களின் நெருக்கமான ஒத்துழைப்போடு 'அதிர்ச்சி வைத்தியம்' என அழைக்கப்படும் தொடர்ச்சியான கொள்கைகளின் மூலம் தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்கள் தனியார் கைகளுக்கு மாற்றப்பட்டது. முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் மற்றும் அவர்களது பிள்ளைகள், பொருளாதார மேலாளர்கள் மற்றும் பெரிய சோவியத் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் பிரிவுகளின் இயக்குனர்கள், அத்துடன் நிழல் பொருளாதாரத்தில் செயலில் உள்ள குற்றவியல் பிரிவினர் உழைக்கும் மக்களின் இழப்பில், சோவியத்தின் வளங்களை வெளிப்படையான திருட்டு மற்றும் மலிவுவிலை விற்பனை மூலம் தமதாக்கிக்கொண்டனர்.

வாழ்க்கைச் செலவுகளுக்கேற்ற ஐரோப்பாவின் நிகர சராசரி மாதாந்திர சம்பளம்

இந்த அழிப்பு நடவடிக்கையின் விளைவாக, பெருவணிகத்தின் போட்டிப் பிரிவுகள் உக்ரேனில் தோன்றின. அவை கிழக்கில் டொனெட்ஸ்க் மற்றும் அதன் மேற்கில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்கில் மையம் கொண்டிருந்தன. நிலக்கரி சுரங்கம், செயல்முறையாக்கம், எரிசக்தி உற்பத்தி, போக்குவரத்து மற்றும் உலோகம் ஆகியவை அவற்றின் முக்கிய செல்வத்தின் ஆதாரங்களாக இருந்தன. வங்கி மற்றும் ஊடகப் பேரரசுகள் தோன்றின. மேலும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் விவசாயத்தினூடாக இலாபத்திற்கான புதிய மூலாதாரங்கள் விரைவில் கண்டுகொள்ளப்பட்டன.

உக்ரேனின் கோடீஸ்வரர்களின் பெயர்கள் இந்தக் காலகட்டத்திலிருந்து முன்னோக்கி அதிகரிக்கத் தொடங்கின. விக்டர் பிஞ்சுக் ($1.9 பில்லியன்), ரெனாட் அக்மெடோவ் ($7.6 பில்லியன்), இகோர் கொலோமோய்ஸ்கி ($1.8 பில்லியன்) மற்றும் ஹெனாடி போஹோலியுபோவ் ($1.1 பில்லியன்), பெட்ரோ போரோஷெங்கோ ($1.6 பில்லியன்), வாடிம் நோவின்ஸ்கி ($1.4 பில்லியன்) மற்றும் பலரும் தோன்றினர். பல தசாப்தங்களாக, உக்ரேனிய அரசியல் மோதல்கள், கூட்டணிகள், கூட்டணிகளில் பிளவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான சண்டைகளால் அறியப்பட்டதாக இருந்தது. இது நாடு, ஐரோப்பாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளுக்கு இழுக்கப்படுமா, ரஷ்யாவுடன் அதன் நெருங்கிய உறவுகளைப் பேணுமா அல்லது எப்படியாவது இரண்டையும் ஒரே நேரத்தில் நிர்வகிக்கலாமா என்ற கேள்விகளுடன், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருந்தது. வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், உக்ரேன் இப்போட்டியின் முக்கிய மண்டலமாக புரிந்து கொள்ளப்பட்ட நிலையில், இப்போது போர் வெளிப்பட்டுள்ளது.

1990களில், இறுதியில் ஒரு முனையில் பெரும் தொகைகள் குவிக்கப்பட்ட போதும், உக்ரேனின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியில் இருந்தது. 1993 மற்றும் 1999 க்கு இடையே தனிநபர் வளர்ச்சி 8.4 சதவிகிதம் குறைந்து, அதன் பொருளாதாரம் எந்த ஒரு ஐரோப்பிய நாட்டிலும் மிக மோசமானதாக இருந்தது.

பணவீக்கம் சில சமயங்களில் முற்றிலும் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. இது 1995 இல் ஆண்டு அதிகபட்சமாக 376 சதவீதத்தை எட்டியது. இதன் மூலம் சந்தை மறுசீரமைப்பு நிகழ்ச்சிப்போக்கின் ஆரம்பத்தில் உக்ரேனிய தொழிலாளர்களின் சேமிப்பு மற்றும் வாங்கும் சக்தியை துடைத்தெறிந்துவிட்டது.

'1990 களின் முற்பகுதியில் மாற்று வழிகள் இல்லாத பல இளைஞர்கள், கும்பல்களில் சேர்ந்தனர் மற்றும் குற்றவாளிகளால் செல்வத்தை குவிக்கும் செயல்பாட்டில் கைக்கூலிகளாகப் பயன்படுத்தப்பட்டனர்,' என அரசியல் பொருளாதார நிபுணர் யூலியா யூர்ச்சென்கோ உக்ரேனும் மூலதனத்தின் ஆட்சியும் என்ற தனது 2018 புத்தகத்தில் போட்டியிடும் வணிகங்களுக்கு இடையேயான போர் தொடர்பாக எழுதினார். சில நேரங்களில் போட்டி வியாபாரிகளுக்கு இடையிலான மோதலால் தெருக்களில் உடல்கள் குவிந்தன. 1988 மற்றும் 1997 க்கு இடையில் குற்றங்களில் இரண்டரை மடங்கு அதிகரிப்பு, பல்வேறு வகையான 'திருட்டு, கொள்ளை, மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல்' மற்றும் 'இலஞ்சம் வாங்குதல், கள்ளநோட்டு மற்றும் போதைப்பொருள் வர்த்தகம்' ஆகியவற்றால் பெரும்பாலும் உந்தப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

உக்ரேனில் உயர் 10 சதவீதம் பங்கிட்டுக்கொள்ளும் செல்வம்

இந்த நேரத்தில், 2000 மற்றும் 2010 களில் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவதற்கான ஒரு நிலையான செயல்முறையின் தொடக்கத்தில், உக்ரேன் சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியில் இருந்து 10 கடன்களைப் பெற்றது. யூர்ச்சென்கோவின் வார்த்தைகளில், இது 'உக்ரேனின் அரசாங்க முடிவெடுக்கும் அதிகாரத்தை திறம்பட மட்டுப்படுத்திய' உக்ரேன் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கையொப்பமிட்ட 1994 ஆம் ஆண்டு 'பொருளாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத்தின் கேள்விகள் பற்றிய குறிப்பாணை'யை மையமாகக் கொண்ட கடன்களின் விதிமுறைகளின் அடிப்படையிலானது.

மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஐரோப்பிய வங்கி போன்ற பிற சர்வதேச நிதி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள், இருதரப்பு-நிபந்தனையின் கொள்கையின் அடிப்படையில் வரைவு செய்யப்பட்டன. அதாவது, ஒருவருக்கொருவர் ஒத்துப்போகும் மற்றும் வலுப்படுத்தும் விதிமுறைகளை கடன் வழங்குபவர்களே வடிவமைத்து, இதே போன்ற வரம்புகளை நிறுவினர். இதனால் கடன் பெற்றவர்களின் கழுத்தில் உள்ள கயிறு பல திசைகளில் இருந்து இறுக்கப்படுவதாகின்றது.

வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தடைகளை உருவாக்கிய கொள்கையை நீக்குமாறும், விலைக் கட்டுப்பாடுகளை நீக்குதல், அரசாங்க வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையைக் குறைத்தல், 'உற்பத்தியற்ற' தொழில்களுக்கான மானியங்களைக் குறைத்தல், உற்பத்தி விற்பனை நிலையங்களை நவீனமயமாக்குதல் மற்றும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தல், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை தனியார்மயமாக்குதல், சமூகத் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியங்களை இலக்காகக் கொண்டு வரவு-செலவுத் திட்ட செலவினங்களைக் குறைத்தல், மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வரிகளைச் சுமத்துதல், (அதாவது விற்பனையில் இருந்து பணம் வசூலிப்பது வணிகத்திற்கு மாறாக நுகர்வோர் மீது அதிகமாக விழும்.) மேலும் தனியார்மயமாக்குதல் ஆகியவற்றை கியேவ் அரசாங்கத்திடம் கடன்வழங்குவோர் கோரினர்.

கியேவில் நிர்வாகம், அதிக அமெரிக்க அல்லது அதிக ரஷ்ய கூட்டாளியாக உள்ளதா என்பதைப் பொறுத்து, இந்த செயல்முறைகள் சில சமயங்களில் விரைவுபடுத்தப்பட்டாலும் அல்லது வேகம்குறைந்தாலும், ஒவ்வொரு உக்ரேனிய அரசாங்கமும் உலக மூலதனத்தின் கோரிக்கைகளை செயல்படுத்துவதில் பங்காளியாக இருந்து வருகிறது. சோவியத் ஒன்றிய அழிவின் பெரும் சாம்பலில் இருந்து வெளிப்பட்ட உக்ரேனிய ஆளும் வர்க்கம் இந்த வார்த்தையின் முழுமையான அர்த்தத்தில் ஒரு தரகு முதலாளித்துவ வர்க்கமாகும்.

உதாரணமாக, 1998 இல், உக்ரேனின் நாடாளுமன்றம் ஜனாதிபதி லியோனிட் குச்மாவிற்கு அரசாங்க செலவினங்களில் 30 சதவிகித குறைப்பை விதிக்கும் அதிகாரத்தை வழங்கியது. சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு அவ்வாறு செய்யச் சொன்னதால் அது செய்யப்பட்டது. 'நாணய மற்றும் நிதிய இலக்குகளை அடைவதற்கு கூடுதலாக, அரசாங்கம் தனியார்மயமாக்கல், வரி சீர்திருத்தம், எரிசக்தி மற்றும் விவசாயத் துறை மறுசீரமைப்பு மற்றும் அதன் பாரிய 'நிழல் பொருளாதாரத்தை' அகற்றுவதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்,' ஆகஸ்ட் 1998 இல் பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டது.

'இந்த சீர்திருத்தங்கள், வெளிநாட்டு நாடுகடந்த நிறுவனங்களுடனான போட்டிக்கு காலாவதியான தொழில்துறையைத் திறப்பதன் மூலமும் மற்றும் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கான அரசின் நிதியுதவியைக் குறைப்பதன் மூலமும் பரஸ்பரம் பொருளாதாரத்தில் எதிர்மறையான விளைவுகளை வலுப்படுத்தியது' என யூர்ச்சென்கோ எழுதுகிறார். இது குடிமக்களை ஏழ்மையாக்கி நிறுவனங்களை போட்டித்தன்மையற்றதாக்கி எதிர்மறை நுகர்வையும் மற்றும் சாத்தியமான வருவாய் வீழ்ச்சியையும் உருவாக்கியது.'

உக்ரேனின் கடன் எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து, 1997-2002 காலகட்டத்தில் 10 பில்லியன் டாலர்களிலிருந்து 2008-2009ல் 100 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மொத்த அனைத்து ஏற்றுமதி மதிப்பை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகவும் உள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், அடிப்படையில் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்த அதே மட்டத்தில் இன்றும் உள்ளது. இதன் விளைவாக, 2008-2009 நிதிநெருக்கடி போன்ற உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பரந்த நெருக்கடிகள் காரணமாக உக்ரேன் செலுத்துமதி நிலுவையை கொண்ட ஒரு நிரந்தமான கடன் சுழலில் சென்று முடிந்தது.

தொடரும்….

Loading