மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பல நாட்களாக, ஜேர்மன் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் உக்ரேனில் போருக்காக 'தியாகங்களை' செய்ய பொதுமக்களை அழைப்புவிட்டு வருகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அடிக்கடி நடப்பது போல், சமூக ஜனநாயகக் கட்சியின் கூட்டாட்சித் தலைவர் பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் அதில் முன்னணியில் உள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது உத்தியோகபூர்வ இல்லமான Schloss Bellevue இல் 'சமாதானம் மற்றும் சுதந்திரத்திற்காக' என்ற இசை நிகழ்ச்சியில் ஸ்ரைன்மையர் 'எங்கள் மனிதாபிமான ஒற்றுமைக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.' ரஷ்யா மீது விதிக்கப்படும் கடுமையான பொருளாதாரத் தடைகள் தவிர்க்க முடியாமல் 'நமக்கும்' இழப்பைக் கொண்டுவரும். 'எங்கள் ஒற்றுமை உதட்டளவில் இல்லாமல் அதை முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டுமானால், அவற்றைத் தாங்க நாங்கள் தயாராக இருக்க வேண்டும்' என அறிவித்தார்.
'முழு உண்மை என்னவென்றால், பல கஷ்டங்கள் இன்னும் எங்கள் முன்னால் உள்ளன' என கூட்டாட்சி ஜனாதிபதி தொடர்ந்தார். 'எங்கள் ஒற்றுமை மற்றும் எங்கள் ஆதரவு, எங்கள் உறுதிப்பாடு, எம்மீதான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எங்கள் விருப்பம் கூட நீண்ட காலத்திற்கு தேவைப்படும்.'
கூட்டாட்சி ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (Photo: DBT/photothek)
Der Spiegel இதழும் கூட, சிக்கன நடவடிக்கைக்கு அதன் வாசகர்களை தயார்படுத்துகிறது. 'மீண்டும் இழப்புக்களை ஏற்றுக்கொள்வது எப்படி?' என்ற தலைப்பின் கீழ் சமீபத்திய இதழ் பின்வருமாறு கூறுகிறது: 'மிக நீண்ட காலமாக ஜேர்மன் யதார்த்தத்தில் ஒரு பங்கு வகிக்காத இழப்புக்களை ஏற்றுக்கொள்வது, பற்றாக்குறை, தியாகம் ஆகிய வார்த்தைகள் திரும்பி வருகின்றன. இதற்கு சமுதாயத்தை தயார்படுத்த அரசாங்கம் தயாராகின்றதா? ஆகக்குறைந்தது முயற்சிக்கிறதா?'.
தியாகம் செய்வதற்கான வாசகர்களின் விருப்பத்தை வலுப்படுத்த, இந்த செய்தி இதழ் அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தத்துவவாதிகளின் உதவியைப் பெறுகிறது.
Spiegel இன் படி 'நாட்டின் மிக முக்கியமான புத்திஜீவிகளில் ஒருவரான' எழுத்தாளர் நவிட் கெர்மானி, ரஷ்ய எரிசக்திக்கு உடனடி இறக்குமதித் தடையைக் கோருகிறார். மேலும் ஜேர்மன் அரசாங்கம் 'உண்மையான கட்டுப்பாடுகள் பற்றி பயப்பட வேண்டிய தருணத்தில்' அது பின்னடித்து வருவதாகக் குற்றம் சாட்டுகிறார்.
பேர்லின் சுயாதீன பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சமநிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் பேராசிரியர் பிலிப் லெபெனிஸ், நாம் 'நுகர்வு கலாச்சாரத்தில் வாழ்கிறோம், தவிர்த்துக்கொள்ளும் கலாச்சாரத்தில் அல்ல' என்று புகார் கூறுகிறார். தத்துவஞானி மற்றும் பேர்லின் கலை பல்கலைக்கழகத்தின் வருகை பேராசிரியரான பிலிப் ஹூபில் தவிர்த்துக்கொள்வதற்கான தருணம் கூட இலாபகரமானதாக இருக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறார். சிறந்த மற்றும் உடனடியாக புரிந்துகொள்ளக்கூடிய காரணங்கள் இருந்தால், பலர் கட்டுப்பாடுகளை ஏற்கத் தயாராக இருப்பார்கள். 'ஒரு மகப்பேறு மருத்துவமனையில் வெடிகுண்டுகளை வீசும் சர்வாதிகாரியுடன் சண்டையிடும் போது சில விஷயங்கள் புரிந்துகொள்ளக்கூடியவை” என Spiegel அதற்கு ஆதரவளிக்கிறது.
ஆனால் எதற்காக தியாகம் செய்ய வேண்டும்?
'சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமைக்காக உக்ரேனிய மக்களின் துணிச்சலான மற்றும் கடுமையான போராட்டத்தை ஆதரிப்பதற்காக' என்று ஸ்ரைன்மையர் பதிலளிக்கிறார். 'எங்கள் போராட்ட தயார்நிலை மற்றும் நமது சக மனிதநேயம், சமாதானத்திற்கான நமது விருப்பம் மற்றும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான எங்கள் நம்பிக்கை' ஆகியவற்றைப் பாதுகாக்க என்கின்றார். அவர் தனது குறுகிய உரையில் 'சுதந்திரம்' என்ற வார்த்தையை எட்டு முறைக்குக் குறையாமல் பயன்படுத்துகிறார்.
ஸ்ரைன்மையர் நேர்மையானவராக இருந்திருந்தால், அவர்: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கலுக்கு நிதியளிப்பதற்காக; ஜேர்மனியை மீண்டும் ஐரோப்பாவில் முன்னணி இராணுவ சக்தியாக மாற்றுவதற்காக; முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் நாம் ஏற்கனவே கைப்பற்றி, பேரழிவிற்குள்ளாக்கி பின்னர் மீண்டும் இழந்த உக்ரேனை இறுதியாக நமது செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்காக; நமது விரிவாக்க இலட்சியங்களுக்கு எப்போதும் தடையாக உள்ள ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதற்காக; அதை உடைத்து, அதன் பரந்த மூலவளங்களை தடையின்றி பெறுவதற்காக எனக் கூறியிருக்க வேண்டும்.
அவர் நேர்மையானவராக இருந்திருந்தால், மேலும்: இந்த இலக்குகளை அடைவதற்கு, சாத்தியமான மிகப்பெரிய 'தியாகத்தை' நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இது ஐரோப்பா முழுவதையும் அணுசக்தி பாலைவனமாக மாற்றும் மூன்றாம் உலகப் போரின் அபாயமாகும் எனக் கூறியிருக்கவேண்டும்.
உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் பிற்போக்குத்தனமானது மற்றும் நிராகரிக்கப்பட வேண்டும். இறந்த பொதுமக்கள், வீடுகளை அழித்தது மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை விட்டு வெளியேறும் படங்கள் பலரை திகிலடையச் செய்தன. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் ஜனநாயக, சுதந்திரத்தை விரும்பும் மற்றும் செழிப்பான உக்ரேனை ஆக்கிரமித்த புட்டின் என்ற ஒரு கொடூரனின் தீய எண்ணத்தின் விளைவுதான் போர் என்ற கூற்று வெறுமனே அபத்தமானது.
உண்மையில், இது நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பினாமிப் போராகும். இதில் உக்ரேனிய மக்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகின்றனர். இந்தப் போர் நீண்டகாலமாக அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளால் தயாரிக்கப்பட்டு தூண்டப்பட்டு வருகிறது. அவர்கள் உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியான நேட்டோவை மேலும் மேலும் கிழக்கு நோக்கித் தள்ளி, ஏற்கனவே உள்ள உடன்படிக்கைகளுக்கு மாறாக, இரண்டு முறை உக்ரேனில் அரசாங்க மாற்றத்தை ஏற்பாடு செய்து, ஆயுதமளித்து, பாசிச சக்திகளை ஊக்குவித்தார்கள். இப்போது பில்லியன் கணக்கான மதிப்புள்ள ஆயுத விநியோகத்துடன் போரை ஆதரிக்கின்றனர்.
இதில் ஸ்ரைன்மையர் முக்கிய பங்கு வகித்தார். 2014 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை தீவிர வலதுசாரி கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றியபோது ஸ்ரைன்மையர் ஜேர்மன் வெளியுறவு மந்திரியாக கியேவில் இருந்தார். அவருடைய பிரெஞ்சு மற்றும் போலந்து சகாக்களுடன் சேர்ந்து, அவர் வலதுசாரி சதி மூலம் துரிதப்படுத்தப்பட்ட அதிகார மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டார். ஸ்ரைன்மையரின் பேச்சுவார்த்தை பங்காளிகள் மற்றும் புதிய அரசாங்கத்தின் உறுப்பினர்களில் ஸ்வோபோடா கட்சி அடங்கும். இது நாஜி ஒத்துழைப்பாளர்களை கௌரவிப்பதுடன் மற்றும் ஜேர்மன் தேசிய கட்சியின் (NPD) நவ-நாஜிகளுடன் இணைந்து செயல்படுகிறது.
உக்ரேனிய இசைக்கலைஞர்களைத் தவிர, வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளுடனான தனது ஒத்துழைப்பு சந்தேகத்தினை ஏற்படுத்தும் என்பதை அறிந்த ஸ்ரைன்மையர், ரஷ்ய, பெலாருஷ்யன் மற்றும் போலந்து இசைக்கலைஞர்களையும் Bellevue அரண்மனையில் நடந்த ஒற்றுமைக்கான இசை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். 30 ஆண்டுகளாக வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்ய நட்சத்திர பியானோ கலைஞர் யெவ்ஜெனி கிசின் தனிக்கலைஞராக கலந்துகொண்டார். போரில் இருந்து தப்பியோடி நேரில் கலந்துகொண்ட 84 வயதான உக்ரேனிய இசையமைப்பாளர் வாலண்டைன் சில்வெஸ்ட்ரோவின் படைப்புகளுக்கு மேலதிகமாக, சோபின், சாய்கோவ்ஸ்கி மற்றும் ஷோஸ்டகோவிச் ஆகியோரின் படைப்புகளும் நிகழ்த்தப்பட்டன.
'புட்டினின் வெறுப்பு, மக்களிடையேயும் வெறுப்பாக மாற அனுமதிக்க வேண்டாம்' என்று ஸ்ரைன்மையர் நியாயப்படுத்தினார். ஆனால் நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவின் அபிமானியும் உக்ரேனிய தூதருமான ஆண்ட்ரி மெல்னிக் தனது கணக்கை தீர்த்துக்கொண்டார். அவர் நிகழ்வை நாசப்படுத்தி, ஒரு மோசமான தேசியவாத ட்வீட்டைப் பின்வருமாறு பதிவிட்டார், “என் அன்பான கடவுளே, ரஷ்ய குண்டுகள் நகரங்களின் மீது விழும் வரை மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரவும் பகலும் கொல்லப்படும்போது, உக்ரேனியர்களாகிய எங்களுக்கு 'பெரிய ரஷ்ய கலாச்சாரத்தை' பற்றி அக்கறையில்லை என்பதை ஜேர்மன் ஜனாதிபதிக்கு புரிந்துகொள்வது ஏன் மிகவும் கடினம். அவ்வளவுதான்”.
ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போர், அனைத்து ஏகாதிபத்தியப் போர்களைப் போலவே, தொழிலாள வர்க்கத்தின் சமூக வெற்றிகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல்களை உள்ளடக்கியதாகும். முதலாம் உலகப் போரின் போது, சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) தொழிற்சங்கங்களும் தொழிற்துறை உடன்படிக்கை செய்து அனைத்து தொழிலாளர் போராட்டங்களையும் நசுக்கின. ரோசா லுக்செம்பேர்க் மற்றும் கார்ல் லீப்க்னெக்ட் போன்ற போரை எதிர்ப்பவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்கு முன், ஹிட்லர் தொழிலாளர் இயக்கத்தை நசுக்கி, தீங்கற்ற போர்-எதிர்ப்பு நகைச்சுவைகளைக் கூட மரணத்துடன் தண்டிக்கும் பயங்கரவாத ஆட்சியை நிறுவினார்.
ஆளும் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களால் இப்போது கோரப்படும் 'தியாகங்களும்' அதே நோக்கத்திற்காக சேவை செய்யகின்றன. உழைக்கும் மக்கள் ஹிட்லருக்கு பின் மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் திட்டத்திற்காகவும், தங்கள் சொந்த இருப்பை அச்சுறுத்தும் ஒரு போருக்காகவும் விலையை செலுத்தவேண்டியிருக்கும். நீண்ட காலத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்ட ஊதியக் குறைப்புக்கள், சமூக செலவுக் குறைப்புக்கள் மற்றும் பாரிய பணிநீக்கங்கள் ஆகியவை உக்ரேனின் 'சுதந்திரத்திற்கு' அவை அவசியமான 'தியாகம்' என்ற இழிவான நியாயத்துடன் இப்போது செயல்படுத்தப்படுகின்றன.
இத்தாக்குதல்கள் தொடங்கி நீண்ட காலமாகிவிட்டது. புதன்கிழமை, மத்திய புள்ளியியல் அலுவலகம் பணவீக்க விகிதம் 7.3 சதவிகிதம் என்று அறிவித்தது. இது 40 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும். மில்லியன் கணக்கான உழைக்கும் குடும்பங்களுக்கு, இது உண்மையான வருமானத்தில் பாரிய சரிவைக் குறிக்கிறது. எரிபொருள், குடியிருப்பை வெப்பமாக்கல் அல்லது வாடகைக்கு தங்கள் வருமானத்தில் அதிக விகிதத்தை செலுத்த வேண்டியவர்களின் இருப்பை இந்த வீழ்ச்சி அச்சுறுத்துகிறது. அவற்றின் விலைகள் உண்மையில் அதிகரித்துவருகின்றன.
உக்ரேன் போருக்கு முன்பே பணவீக்கம் கடுமையாக உயர்ந்திருந்தது. மத்திய அரசாங்கமும் ஐரோப்பிய மத்திய வங்கியும் பங்குச் சந்தை விலைகளையும் பணக்காரர்களின் அதிர்ஷ்டத்தையும் தலைசுற்ற வைக்கும் அளவிற்கு உயர்த்திய பணவெறியின் விளைவே இதுவாகும். தொற்றுநோய்களின் 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் காரணமாக தொழிலாளர்களின் வருமானம் வீழ்ச்சியடைந்தது மற்றும் உலகளவில் 20 மில்லியன் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டன.
தொற்றுநோயால் தூண்டப்பட்ட விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் பொருளாதார குழப்பங்கள் இந்த ஊகக் குமிழி பணவீக்க உயர்வுக்கு வழிவகுத்தன. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் இதைத் துரிதப்படுத்தியது. குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் இது ஆரம்பம் மட்டுமே.
பொருளாதார தடைகளுக்கு பதிலடியாக, ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நிறுத்தினால், பணவீக்கம் 10 சதவீதத்தை எட்டும் என பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர். 'சில நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி, அதிகமான மக்களை குறுகிய நேர வேலையில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும்' என பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் (DIW) தலைவர் மார்செல் பிராட்ஷர் கூறினார்.
DIW ஆய்வின்படி, நிரந்தர விநியோக முடக்கம் 3 சதவீத பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கும் மற்றும் இது சுமார் 10 ஆண்டுகள் நீடிக்கும். ஏனைய மதிப்பீடுகள் இன்னும் மேலே செல்கின்றன. அத்தகைய சந்தர்ப்பத்தில், அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பாரிய வேலையின்மை மற்றும் கடுமையான மந்தநிலையை எதிர்பார்க்கிறார். ஜேர்மனியில் தொழில்துறையின் முழு கிளைகளும் அச்சுறுத்தப்படும் என்று அவர் ARD தொலைக்காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையின் படி, ரஷ்யா அடுத்த வார இறுதியில் எரிவாயு விநியோகத்தை நிறுத்த முடியும். ஏப்ரல் 1 முதல் எரிவாயு கொடுப்பனவுகளை ரூபிள்களில் மட்டுமே ஏற்கும் என ரஷ்யா கூறியுள்ளதை திங்களன்று G7 பொருளாதார அமைச்சர்கள் ஏகமனதாக நிராகரித்தனர். யூரோக்கள் மற்றும் டாலர்களிலிருந்து ரூபிள்களுக்கு மாறுவதன் மூலம், ரஷ்யா தனது நாணய பெறுமதியை ஸ்திரப்படுத்த முயற்சிக்கிறது. மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் நாணய இருப்புகளில் பெரும்பகுதியை முடக்கிய பின்னர் அதன் மதிப்பு சரிந்தது.
பொருளாதார அமைச்சர் ரொபேர்ட் ஹாபெக் (பசுமைக் கட்சி) எரிவாயு அவசரத் திட்டத்தின் ஆரம்ப எச்சரிக்கை நிலையை புதன்கிழமை அறிவித்தார். ஒரு நெருக்கடி குழு இப்போது விநியோக நிலைமையை தினமும் கண்காணித்து வருகிறது. அது கடுமையாக மோசமடைந்தால், முன்னுரிமையாக யாருக்கு எரிவாயு வழங்கப்பட வேண்டும் என்பதை மத்திய விநியோக அமைப்பு தீர்மானிக்கும். இரசாயனத் தொழிலில் உள்ள பல நிறுவனங்கள் எரிவாயுவை எரிசக்திக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், மூலப்பொருளாகவும் பயன்படுத்துவதால், மொத்த உற்பத்தி வீழ்ச்சிகள் ஏற்படலாம்.
ஜேர்மனியின் மின்சாரத் தேவையில் 15 சதவீதத்தை இயற்கை எரிவாயுவும் கொண்டுள்ளது. தனியார் குடும்பங்களின் எரிசக்தி நுகர்வில் 41 சதவீதம் எரிவாயு மூலம் வழங்கப்படுகின்றது. இந்த விநியோகம் கிடைக்காவிட்டால், பல குடும்பங்களுக்கு வெப்பமூட்டல் அல்லது சூடான தண்ணீர் அல்லது சமைப்பதற்கான வசதிகள் இருக்காது.
ஜேர்மன் அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்கள் குழு இந்த ஆண்டுக்கான அதன் வளர்ச்சி முன்னறிவிப்பை 1.8 சதவீதமாகக் குறைத்துள்ளது. கடந்த நவம்பரில், அது இன்னும் 4.6 சதவீதத்தை எட்டும் என்று கருதியது. 'பொருளாதார வல்லுநர்கள்' என்று அழைக்கப்படுபவர்கள் பணவீக்கம் 6.1 சதவீதமாக தொடர்கிறது, இது வரிவருமான குறைவிற்கு வழிவகுக்கும் என்று மதிப்பிடுகின்றனர். பாதுகாப்புத்துறைக்கான செலவுகள் அதிகரித்து வருவதால், சமூகச் செலவினங்களில் வெட்டுக்கள் மூலம் இவை மீட்கப்பட வேண்டும்.
தொழிற்சங்கங்கள் இந்தப் போரில் அரசு மற்றும் பெருநிறுவனங்களின் பக்கம் 100 சதவீதம் ஆதரவாக இருப்பதை அடையாளம் காட்டியுள்ளன. சான்சிலர் ஷோல்ஸ் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் 100 பில்லியன் யூரோக்கள் அதிகரிப்பதாக அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், IG Metall தொழிற்சங்கமும் மற்றும் ஜேர்மன் தொழிற்துறை கூட்டமைப்பும் (BDI) ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டன. அதில் அவர்கள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளுக்கு 'உறுதியாக' ஆதரவளித்தனர். IG Metall, பொருளாதாரத் தடைக் கொள்கையின் பேரழிவு தரும் பொருளாதார விளைவுகளான விண்ணைத் தொடும் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள், உயர் பணவீக்கம், பணிநீக்கங்கள், குறுகிய கால வேலை மற்றும் ஊதிய இழப்புகளை அதன் உறுப்பினர்களின் மீது சுமத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதை தொழிலாளர்கள் ஏற்க முடியாது, ஏற்கவும் கூடாது. அவர்களிடம் கோரப்படும் 'தியாகங்கள்' 'சமாதானத்திற்காக' அல்ல, மாறாக இராணுவவாதம் மற்றும் போரின் விரிவாக்கத்திற்காகவாகும். மனிதகுலம் மீண்டும் போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தினுள் வீழ்வதைத் தடுப்பதற்கான ஒரே வழி, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சக்திவாய்ந்த சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதுதான்.
போருக்கு எதிரான போராட்டம் மற்றும் வருமானம், சமூக வெற்றிகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன் பிரிக்க முடியாதவை. முதலாம் உலகப் போரில், உணவுக்கான போராட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் வெகுஜன வேலைநிறுத்தங்கள்தான் இறுதியில் 1917 இல் ரஷ்யப் புரட்சிக்கும், 1918 இல் ஜேர்மன் புரட்சிக்கும் வழிவகுத்தது. இது போரை முடிவுக்குக் கொண்டு வந்து போர்வெறியர்களை விரட்டி துரத்தியது.
போரின் ஆபத்தை எதிர்ப்பதற்கு, பிற்போக்குத்தனமான தொழிற்சங்கங்களுடன் முறித்துக் கொள்வதும், தொழிற்சாலைகளில் போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதும் அவற்றை சர்வதேச அளவில் ஒன்றிணைப்பதும் அவசியமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள போர்வெறியர்களை எதிர்க்கும், தேசியவாதத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் நிராகரிக்கும் மற்றும் முதலாளித்துவத்தை தூக்கியெறிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடும் ஒரு சர்வதேச தொழிலாளர் கட்சியை கட்டியெழுப்புவது அவசியம். அந்தக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் மற்றும் அதன் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei) ஆகும்.