மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சபாநாயகர் நான்சி பெலோசிக்கு கோவிட்-19 நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் வியாழனன்று அறிவித்தது, பின்னர் ஒரு நாள் கழித்து வெள்ளை மாளிகையில் நடந்த இரண்டு நிகழ்வுகளில் அவர் பங்கேற்றார், மேலும் ஜனாதிபதி ஜோ பைடெனுக்கு மிக அருகாமையில் இருந்தார். சமீபத்திய வாரங்களில் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மற்றும் பைடென் நிர்வாகத்தின் டஜன் கணக்கான உயர் அதிகாரிகளில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூக்குப் பின்னர், ஜனாதிபதி பதவிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் பெலோசி சமீபத்திய மற்றும் மிக முக்கியமான நபராவார்.
இந்த பட்டியலில் பொது வழக்குரைஞர் மெரிக் கார்லண்ட், சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் வர்த்தகச் செயலர் கினா ரைமண்டோ ஆகியோர் அடங்குவர். துணை ஜனாதிபதி ஹாரிஸ், அவரது தகவல் தொடர்பு இயக்குநர் ஜமால் சிம்மன்ஸூக்கு செய்தது போல், அவரது கணவர் Doug Emhoff க்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கோவிட் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி க்கு இரண்டாவது முறையாக கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டுள்ளது, மேலும் அவரது துணைச் செயலர் கரீன் ஜீன்-பியரே வுக்கும் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பைடெனின் சகோதரி வலேரி பைடென் ஓவன்ஸூக்கும், அத்துடன் வாஷிங்டன் டி.சி. மேயர் முரியல் பவுசருக்கும் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நியமிப்பது தொடர்பாக வியாழக்கிழமை நடந்த சபை வாக்கெடுப்பில் பங்கேற்று சில மணிநேரங்களுக்குப் பின்னர், குடியரசுக் கட்சியின் செனட்டர் சூசன் கொல்லின்ஸூக்கு அப்போதுதான் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.
கேபிடோல் ஹில் இன் மற்ற இடங்களில், பிரதிநிதிகள் சபையின் மேலும் ஐந்து உறுப்பினர்கள் தங்களுக்கும் கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்த வாரம் அறிவித்தனர்: அவர்களில், House Intelligence Committee இன் தலைவர் கலிபோர்னியாவின் ஆடம் ஷிஃப்; துணை சபாநாயகரான மாசசூசெட்ஸின் கேத்தரின் கிளார்க்; கலிபோர்னியாவின் ஸ்காட் பீட்டர்ஸ், வாஷிங்டனின் டெரெக் கில்மர் மற்றும் டெக்சாஸின் ஜோவாகின் காஸ்ட்ரோ ஆகியோர் அடங்குவர்.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து கோவிட்-19 நோய் உறுதிசெய்யப்பட்ட 134 சபை உறுப்பினர்களில், 65 அல்லது அண்ணளவாக பாதி பேர் டிசம்பர் 1, 2021 முதல், அதாவது அமெரிக்காவில் ஓமிக்ரோன் ஆதிக்க வகை மாறுபாடாக உருவெடுத்ததிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில், 80 வயதுக்கு மேற்பட்ட பெலோசி, ஸ்டெனி ஹோயர் மற்றும் ஜிம் கிளைபர்ன் ஆகிய சபையின் மூன்று உயர்மட்ட தலைவர்கள் அடங்குவர். கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 24 செனட்டர்களில், சரிபாதியாக 12 பேர் ஓமிக்ரோன் எழுச்சியின் போதுதான் பாதிக்கப்பட்டனர்.
ஜனாதிபதியின் வருடாந்திர உரை, முன்னணி ஜனநாயகக் கட்சியினருக்கான மூடிய கதவு வார இறுதி மீளாய்வு, கிரிடிரான் மனமகிழ் மன்றத்தின் ஆண்டு விருந்து (கிட்டத்தட்ட ஆயிரம் உயர்மட்ட அரசியல், ஊடகம் மற்றும் வணிகப் பிரமுகர்கள் பங்கேற்கும் ஒரு முக்கிய சமூக நிகழ்வு), மற்றும் கட்டுப்படியாகக்கூடிய பராமரிப்புச் சட்டம் (Affordable Care Act) நிறைவேறியதன் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த விழா உட்பட, மார்ச் மாத தொடக்கத்திலிருந்து அரசியல் ஸ்தாபகத்திற்குள் நடந்த தொடர்ச்சியான அரசியல் கூட்டங்கள் வைரஸ் வெடித்துப் பரவுவதற்கான முக்கிய சம்பவங்களாக இருந்தன.
இந்த கூட்டங்கள் நம்பமுடியாத பொறுப்பற்ற தன்மையின் நிரூபணமாக இருந்தன, ஏனென்றால் 79 வயதான ஜனாதிபதி - 34 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மூளை குருதி நாள நெளிவு (aneurysms) பாதிப்பில் இருந்து உயிர் தப்பியவர் – தானும் முகக்கவசம் அணியாமல், முகக்கவசம் அணியாத ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டங்களுக்குள் சிரமத்துடன் புகுந்து, கைகுலுக்கி மற்றும் அரவணைத்து சர்வசாதாரணமாக இருக்கிறார். பல சந்தர்ப்பங்களில், அவருடன் 82 வயதான பெலோசி, அல்லது கேபிடோல் ஹில் இன் சிறுபான்மையை சார்ந்த மற்றும் பைடெனின் நெருங்கிய கூட்டாளியுமான 81 வயதான ஜிம் க்ளைபர்ன் தான் இருந்தனர்.
உண்மை என்னவென்றால், அமெரிக்க அரசைச் சேர்ந்த பல முன்னணி பிரமுகர்கள் இவ்வாறு சமீபத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது, இந்த உயர்மட்ட அடுக்குகளில் உள்ள ஆழ்ந்த பொறுப்பற்ற தன்மையின் அறிகுறியாக உள்ளது.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த பொறுப்பற்ற நடத்தையின் பின்னணியில் உள்ள அரசியல் உள்நோக்கத்தை விளக்கியது: “ஆலோசகர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஜனாதிபதி வழமையாக தொடர்பு கொள்வது அவருக்கு கோவிட்-19 நோய் தொற்றிக்கொள்வதற்கான வாய்ப்பாக அமையக்கூடும் என்பதை நிர்வாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். என்றாலும், பல அமெரிக்கர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும், வேலைக்குத் திரும்பவும், நண்பர்களுடன் சாதாரணமாக பழகவும் விரும்புவதால், திரு. பைடென் பாதி-இயல்பான உணர்வை வெளிப்படுத்துவது முக்கியம் என்று அவர்கள் கூறினர்.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உத்தியோகபூர்வ வாஷிங்டன் மூலம் கோவிட்-19 இவ்வாறு விரைவாக பரவுவதானது, கோவிட்-19 தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று அமெரிக்க மக்களை தவறாக வழிநடத்த, வெள்ளை மாளிகையால் முடுக்கிவிடப்பட்ட ஒரு முறையான பிரச்சாரத்தின் துணை தயாரிப்பு ஆகும். இருப்பினும், கொள்கைபிடிப்புவாத தொற்றுநோயியல் நிபுணர்களும் பொது சுகாதார அதிகாரிகளும், இப்போது அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாடானது, குளிர்காலத்தில் நாடெங்கிலும் வெடித்துப் பரவி நாசப்படுத்திய ஓமிக்ரோனின் BA.1 துணை மாறுபாட்டை விட அதிகம் பரவக்கூடியது மற்றும் மிகுந்த ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர்.
வெள்ளை மாளிகை அதிகாரிகளும் காங்கிரஸ் தலைவர்களும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைமைகளுக்கு திரும்புவது பற்றிய தங்களது சொந்த பிரச்சாரத்தை நம்புவதில் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டுள்ளனர், அல்லது பைடென் சமீபத்தில் கூறியது போல், “வைரஸ் இனி கட்டுப்பாட்டில் இருக்காது.” ஆனால் வாஷிங்டனில் நிலவும் நோய்தொற்றின் தொடர் பாதிப்பு உத்தியோகபூர்வ கூற்றுக்களின் மோசடியை அம்பலப்படுத்துகிறது. உண்மையில், கோவிட்-19 மக்களை தொடர்ந்து அழித்து வருகிறது, கடந்த மாதத்தில் குறைந்தது 24,000 பேரை அது பலி கொண்டது. BA.2 துணை மாறுபாடு அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய நிலையில், வரைபடத்தில் நோய்தொற்று வளைவு மேல்நோக்கி உயரத் தொடங்கியுள்ளது.
ஒரு புதிய நோய்தொற்று எழுச்சியை எதிர்கொள்கையில், பைடென் நிர்வாகம் நோய்தொற்று பரவுவதை மெதுவாக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டு வருகிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), கோவிட்-19 நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் விமானத்தில் செல்ல வேண்டாம் என்று ‘பரிந்துரைக்கும்’ அதேவேளை அவர்களை பயணம் செய்ய அனுமதித்தது, மேலும், கோவிட்-பாதிப்புள்ளவர்கள் பறக்க விரும்பும் வழக்குகளைப் புகாரளிப்பதை நிறுத்தலாம் என்று மாநில மற்றும் உள்ளூர் சுகாதாரத் துறைகளிடம் கூறியது.
வெள்ளை மாளிகையின் தலைமையிலான பிரச்சாரத்தில், தொற்றுநோய் விவகாரத்தை மூடிமறைக்கும் வகையில் மாநிலங்கள் முறையாக செயலாற்றுகின்றன. கடந்த வாரம், நியூ ஹாம்ப்ஷையர் மாநிலம், கோவிட்-19 நோயால் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையை மிகக் கடுமையாக மறுவரையறை செய்தது, அதாவது, ஒரு அறிக்கையின்படி, “கோவிட்-19 நோயாளிகளில் வெறும் 4 சதவீதத்தினர் மட்டுமே” சேர்க்கப்படுவதாக இது கணக்கிடுகிறது.
தேசியளவில் அனைத்து மாநிலங்களும் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் பற்றி தினசரி அறிக்கை செய்வதை முடிவுக்கு கொண்டு வருகின்றன, இவ்வாறு கலிபோர்னியா தினசரி அறிக்கை செய்வதை சமீபத்தில் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஆறு மாநிலங்களும் மற்றும் Puerto Rico கரீபியன் தீவுப் பகுதியும் மட்டுமே வாரத்தின் ஏழு நாட்களிலும் தற்போது கோவிட்-19 பற்றி அறிக்கை செய்கின்றன, மேலும் குறைந்தது 10 மாநிலங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது அவ்வப்போது அறிக்கை செய்கின்றன.
தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற கூற்றிலிருந்து மேலும் முன்னேறி, ஜனநாயகக் கட்சியின் தலைமையானது மோனோக்லோனல் நோய் எதிர்ப்பிகளை (antibodies) பயன்படுத்துவது போன்ற விலையுயர்ந்த சிகிச்சை முறைகளுக்கு அவசரகால நிதியை நீட்டிப்பதற்கும், அத்துடன் குறைந்த வருமானம் உள்ள மற்றும் காப்பீடு இல்லாத நபர்களுக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசிகளுக்காக மானியங்களை வழங்குவதற்கும் எந்த அவசரத்தையும் காட்டவில்லை.
இவை ஒரு தனி மசோதா மூலம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது, இது இப்போது செனட்டில் கிடப்பில் உள்ளது, செனட்டர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களும் இரண்டு வார கால ஈஸ்டர் விடுமுறையில் செல்வதால் அவை அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், உழைக்கும் மக்கள், ஒரு PCR பரிசோதனைக்கு 125 டாலர் வரை, மற்றும் அவர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் அவர்கள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைப் பெற ஆயிரக்கணக்கான டாலர்கள் வரை கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை எதிர்கொள்கிறார்கள்.
உழைக்கும் மக்கள் இத்தகைய சிகிச்சைகளை அணுகுவதை திட்டமிட்டு முடக்கி வரும் அதேவேளை, வாஷிங்டனில் உள்ள ஆளும் உயரடுக்கு (நிச்சயமாக, வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன அமெரிக்காவில் உள்ள அவர்களது முதலாளிகளுடன் சேர்ந்து), அவர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டால், மிக விரிவான மருத்துவ காப்பீடும் மற்றும் மிகவும் விலையுயர்ந்த சிகிச்சைகளும் அவர்களுக்கு உறுதியாக அளிக்கப்படுகின்றன.
பைடென் நிர்வாகம், ஜனநாயகக் கட்சி மற்றும் அவை சேவையாற்றும் நிதிய பிரபுத்துவம் ஆகியவை, ட்ரம்பால் தொடங்கப்பட்டு குடியரசுக் கட்சி ஆளுநர்களால் மாநிலம் மாநிலமாக செயல்படுத்தப்பட்டதான ‘வைரஸை எந்தத் தடையுமின்றி பரவ அனுமதிக்கும்’ அதே கொள்கைக்கு ஆதரவாக, தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கைவிடும் கொள்கையை இரட்டிப்பாக்குகின்றன.
இங்கே ஒரு வர்க்க தர்க்கம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் இரண்டிலும் உள்ள முதலாளித்துவ வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும், ஒரே தீவிரமான, விஞ்ஞான அடிப்படையிலான வழிமுறையான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நிராகரிக்கின்றனர், இது தற்காலிக பூட்டுதல்கள், பாரிய பரிசோதனை, தொடர்புத் தடமறிதல், மற்றும் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான மற்றும் வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கான பிற அனைத்து பொது சுகாதார நடவடிக்கைகள் உட்பட, சமூகத்தின் வளங்களை முறையாக அணிதிரட்டக்கூடியதாகும்.
சீனாவில் நிரூபிக்கப்பட்டுள்ளது போல், இந்த கொள்கை மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றும், என்றாலும் அமெரிக்க ஆளும் உயரடுக்கைப் பொறுத்த வரை, இத்தகைய முறைகள் தொழிலாள வர்க்கத்திடமிருந்து இலாபத்தைப் பிழிந்தெடுப்பதற்கு தடையாக இருக்கும், மேலும் நிதிச் சந்தைகளில் முன்நிகழ்ந்திராத வகையிலான ஊக உயர்வுகளை சீர்குலைக்க அவை அச்சுறுத்தும் என்பதால் அவற்றை வெறுப்புடனும் அச்சத்துடனும் அது பார்க்கிறது. மேலும், அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்களைப் பயன்படுத்தி, ஒரு அணுவாயுத மோதலாக விரிவடைய அச்சுறுத்துவதான ரஷ்யாவுடனான மோதல் போன்ற வேறுவிதமான போருக்கு அவர்கள் சமூகத்தை அணிதிரட்டுவார்கள்.
இது இன்னொரு கேள்வியை எழுப்புகிறது. அமெரிக்க அரசியல் உயரடுக்கு கோவிட்-19 தங்களுக்கும் ஆபத்தானது என்றாலும் கூட, அதன் ஆபத்தை மிகவும் கோரமான முறையில் அது கணக்கிடுமானால், உக்ரேன் மீதான ரஷ்யாவின் பெருகிவரும் போரின் ஆபத்து தொடர்பாக அவர்கள் இன்னும் பகுத்தறிவுடனும் எச்சரிக்கையுடனும் தொடர்ந்து செயல்படுவார்கள் என்பதை நம்புவதற்கு என்ன காரணம் உள்ளது? அதிலும், அத்தகைய போர் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது, மனிதகுலத்தின் உயிர்வாழ்வை அச்சுறுத்தக்கூடியது என்ற நிலையில்.
உலகளவில் கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான கொள்கைக்குப் பின்னால் ஒரே ஒரு சமூக சக்தியை மட்டுமே அணிதிரட்ட முடியும், ஆனால் அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிக சக்திவாய்ந்த சமூக சக்தியாகும். இந்நிலையில், தீர்க்கமான பிரச்சினை என்னவென்றால், ஒரு சோசலிச மற்றும் போர் எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், உழைக்கும் மக்களின் சுயாதீனமான பாரிய இயக்கத்தை வளர்த்தெடுப்பதாகும்.