மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வேலைநிறுத்தப் போராட்டம் செய்த மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (MSRTC) நூற்றுப் பதினெட்டு பேருந்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர் குன்ரதன் சதாவர்தே ஆகியோருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏப்ரல் 8 அன்று தேசியவாத காங்கிரஸ் (NCP) தலைவர் சரத் பவாரின் மும்பை இல்லத்திற்கு முன்பு போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் 'கலவரத்தில் ஈடுபடல்' மற்றும் 'சதிசெய்தல்' என்ற குற்றச்சாட்டுகளை இன்னும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஏப்ரல் 8 அன்று பவாரின் வீட்டிற்கு காவலில் இருந்த போலீசார் மீது தொழிலாளர்கள் செருப்பு மற்றும் கற்களை வீசி உள்ளே நுழைய முயன்றதாக போராட்டத்தை கடுமையாக கண்டித்திருக்கும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொழிலாளர்களும் அவர்களது வழக்கறிஞரும் கடந்த இரண்டு வாரங்களை சிறையில் செலவழித்தனர், பிணையில் வெளியில் வருவதற்கான அவர்களின் முந்தைய முயற்சிகள் மறுக்கப்பட்டன அல்லது காலம் கடத்தப்பட்டன.
10,000 ரூபாய் (130 அமெரிக்க டாலர்கள்) பிணையில் தொழிலாளர்கள் பிணையில் விடுவிக்கப்படலாம் என்று நேற்று ஒரு அமர்வு நீதிமன்றம் கூறியது. பல தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய பாரத்தை அளித்திருக்கிறது. 10,000 ரூபாய் பல MSRTC தொழிலாளர்களின் மாத சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது. மேலும், நகரங்களுக்கு இடையேயான அரசாங்கத்திற்குச் சொந்தமான பேருந்து சேவைக்கு எதிராக கிட்டத்தட்ட ஆறு மாத கால வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அவர்களுக்கு வருமானமோ அல்லது வேலைநிறுத்தப் பலன்களோ எதுவும் கிடைக்கவில்லை.
சதாவர்தேவுக்கு 50,000 ரூபா பிணை வழங்க நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
70,000க்கும் மேற்பட்ட MSRTC தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடித்துக்கொண்டு ஏப்ரல் 22க்குள் வேலைக்குத் திரும்ப வேண்டும் அல்லது அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவர் என பம்பாய் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த அந்த நாளுக்கு மறுநாள், பவாரின் அதிகாரபூர்வ இல்லமான சில்வர் ஓக் பகுதி ஆவேசமான போராட்டத்தின் காட்சியாக இருந்தது.
ஊதியங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மேலும் மறைமுகமாக வளர்ந்துவரும் தனியார்மயமாக்கலுக்கு எதிராக பாதுகாக்க, தன்னாட்சியாக செயல்படும் MSRTC நிறுவனத்தை மாநில அரசாங்கத்துடன் இணைக்க வேண்டுமென்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்யும் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
பவாரின் இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்த வேலைநிறுத்தப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை மற்றும் 'சதிசெய்தல்' குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சதாவர்தே ஆகியவை MSRTC தொழிலாளர்களை அச்சுறுத்தி அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசு அடக்குமுறையின் ஒரு பகுதியாகும்.
தெற்கு மும்பையில் உள்ள பவாரின் இல்லத்திற்கு வெளியே தன்னியல்பாக நடைபெற்ற போராட்டமானது, கோடிக்கணக்கான உயிர்களைக் கொன்ற பெரும்தொற்றுநோய் மற்றும் உழைக்கும் மக்கள் மீது பெரும் சுமைகளை ஏற்றிவரும் பணவீக்கத்தின் மத்தியில் இந்தியாவின் தொழிலாள வர்க்கம் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் உள்ள கோபத்தின் ஆழத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
தனியார்மயமாக்கல் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் செயல்திட்டத்தை எதிர்த்து MSRTC தொழிலாளர்கள் போராடுகிறார்கள், அதே செயல்திட்டத்தை பல மில்லியன் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இந்தியாவின் தீவிர வலதுசாரி நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் தலைமையிலான மகாராஷ்டிரா உள்ளிட்ட அனைத்து மாநில அரசாங்கங்களும் செயல்படுத்துகின்றன.
எவ்வாறாயினும், தொழிற்சங்கங்கள் மற்றும் 'இடது' கட்சிகள் - அனைத்திற்கும் மேலாக ஸ்ராலினிஸ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் அந்தந்த தொழிற்சங்க கூட்டமைப்புகளான CITU மற்றும் AITUC ஆகியவை அவர்களுக்கு ஆதரவைத் திரட்ட எதுவும் செய்யவில்லை. அதற்கு பதிலாக MSRTC தொழிலாளர்களின் தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை தனிமைப்படுத்தவும் நாசப்படுத்தவும் அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலைநிறுத்தப்போராட்டகாரர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆதரிக்க மறுத்ததற்காக NCP தலைவரை கோபத்துடன் கண்டனம் செய்தனர், வெறுப்புடன் காலணிகள் மற்றும் செருப்புகளை வீசினர். பவார் பல தசாப்தங்களாக மகாராஷ்டிரா அரசியலின் அங்கமாக இருந்து வருகிறார். பேருந்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பகட்டாக அனுதாபம் காட்டி, தொழிற்சங்கங்கள் மற்றும் நீதிமன்றங்களுடன் கூட்டுச் சேர்ந்து வேலைக்குத் திரும்புமாறு வற்புறுத்தியதன் பின்னர் அவர் இலக்கு வைக்கப்பட்டார்.
பாசிச சிவசேனா தலைமையிலான ஒரு கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மற்றும் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பிரிந்த காங்கிரஸ் கட்சியையும் உள்ளடக்கி NCP மகாராஷ்டிராவை ஆட்சி செய்கிறது.
ஏப்ரல் 8 அன்று ஏற்பட்ட எதிர்ப்புகளைக் கண்டு இந்தியாவின் ஆளும் வர்க்கம் நிலைகுலைந்து போனது. சரத் பவாரின் மருமகனும், மூத்த NCP அரசியல்வாதியும், மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சருமான அஜித் பவார், காவல்துறை ஏன் அது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யத் தவறியது என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். உள்துறை அமைச்சரும் NCP அரசியல்வாதியுமான திலீப் வால்ஸ்-பாட்டீல், 'உளவுத்துறையின் தோல்விகள்' மற்றும் 'தூண்டுபவர்களை' வேட்டையாடுவதற்கான விசாரணையை மேற்கொள்ளும்படி அறிவித்துள்ளார். இதற்கிடையில் கசப்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் உள்ளூர் காவல்துறை தலைவர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுவிட்டார்.
சில்வர் ஓக் பகுதியில் நடந்த எதிர்ப்புக்கு பீதியடைந்த பிரதிபலிப்பை வெளிப்படுத்தியதில் பாக் ஜலசந்தியை கடந்து இலங்கையில் நடந்த சம்பவங்கள் ஒரு சிறிய காரணியாக இருக்கவில்லை. ஒரு வாரத்திற்கு முன்னர், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் வீட்டிற்கு வெளியே நடந்த ஒரு எதிர்ப்புப் போராட்டமானது அந்த தீவில் சுமார் 70 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தூண்ட உதவியது, அது கோடிக்கணக்கானவர்களை நாசமாக்கிய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக இருந்தது.
மகாராஷ்டிர மாநில காவல்படை ஏப்ரல் 8 ஆம் தேதி நடந்த போராட்டத்தை ஒடுக்கவும் மோசமாக பழிவாங்கவும் விரைவாக செயலில் இறங்கியது. கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 29 பெண்கள் உட்பட 104 போராட்டக்காரர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அன்றிரவு மேலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட அவர்களுக்கு நேற்று வரை பிணையில் எடுப்பதற்கு மறுக்கப்பட்டது.
பம்பாய் உயர் நீதிமன்றத்திற்கு முன்பாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் சதாவர்தே, பவாரின் இல்லத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாத போதிலும் கூட ஏப்ரல் 8 அன்று விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார். அவர் அன்றைய தினம் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் இப்போது கலவரம் மற்றும் சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒரு மோசமான ஒடுக்குமுறையை தொடங்க போலியான குற்றச்சாட்டுகள் விரைவாகப் பயன்படுத்தப்பட்டன. கடந்த நவம்பரிலிருந்து மும்பையின் ஆசாத் மைதான் விளையாட்டு மைதானத்தில் முகாமிட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டக்காரர்களை போலீசார் ஏப்ரல் 9 ஆம் தேதி 'அப்புறப்படுத்தினர்.'. 'அவர்கள் ஏதேனும் அரசியல் கட்சி அல்லது அமைப்பால் தூண்டப்பட்டு செயல்படுகிறார்களா என்பதைக் கண்டறிய போராட்டக்காரர்களின் செல்பேசி அழைப்பு தரவு பதிவுகளையும் மற்றும் சமூக ஊடக நடவடிக்கைகளையும் சைபர் போலீஸ் கண்காணிப்பு செய்தது”. என்று ஏப்ரல் 11 அன்று இந்தியாவின் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சதாவர்தேவின் கைது மாநிலத்தின் உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (Essential Services Maintenance Act - ESMA) செயல்படுத்தப் போவதாகவும், வேலைநிறுத்தக்காரர்களை மொத்தமாக கைது செய்யப் போவதாகவும் பலமுறை மிரட்டல் விடுத்த போக்குவரத்து அமைச்சரும், சிவசேனா தலைவருமான அனில் பராப், அந்த வழக்கறிஞரை போராட்டத்தின் 'சூத்திரதாரி’’ (மூளை) என்று கண்டித்துள்ளார்.
போராட்டத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் காவல்துறையினரால் சதாவர்தேவ் வீடு சோதனையிடப்பட்டதுடன் அவருக்கு ஜாமீன் வழங்குவதை மாநில அதிகாரிகள் எதிர்த்தனர். மேலும் அவர் மூன்று மாநில அரசாங்க அமைச்சர்களின் வீடுகளை குறிவைத்ததாகக் கூறப்படும் 'பெரிய சதியை' அதிகாரிகள் கண்டறிவதற்கு உதவுவதற்காக அவ்வழக்கறிஞர் காவலில் வைக்கப்பட வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் பிரதீப் காரா கூறியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டக்கார்களிடம் தவறான 'ஒப்புதல் வாக்குமூலங்களை' பெறுவதற்காக அவர்கள் மீண்டும் மீண்டும் பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பத்திரிகை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
துணிச்சலான மகாராஷ்டிர வேலைநிறுத்த போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறை, ஏப்ரல் 7 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் அவர்கள் வேலைக்குத் திரும்பினால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக எந்தத் தொழிலாளியும் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற அதன் மிகவும் பாராட்டப்பட்ட கூற்றுக்கள் கிழிந்து தொங்குகிறது.
'தாக்குதலில் ஈடுபட்ட கும்பலின் ஒரு பகுதியாக இருந்த மற்றும் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்' என்று ஏப்ரல் 12 அன்று MSRTC நிர்வாக இயக்குனர் சேகர் சான்னே அறிவித்துள்ளார். 'தாக்குதலில் கைது செய்யப்பட்ட பெரும்பாலான வேலைநிறுத்தப் போராட்டம் செய்த MSRTC ஊழியர்கள் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவித்தலும் அனுப்பப்பட்டுள்ளது' என்று மேலும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்கள், மகாராஷ்டிர வேலைநிறுத்தக்காரர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிட வேண்டும் என்றும், அவர்களுடன் வேலைநிறுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான MSRTC தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோர வேண்டும்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்களுக்கு எதிரான வன்முறைப் பழிவாங்கல்களை இந்திய அரசு நீண்ட காலமாகக் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. 2017 ஆம் ஆண்டில், ஹரியானாவில் உள்ள மாருதி-சுசுகியின் மானேசர், கார் அசெம்பிளி ஆலையில் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்திய 13 தொழிலாளர்ளை பழிவாங்குவதற்காக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது குறிப்பிடத்ததகுந்தது.
மேலும் படிக்க
- இந்தியாவின் மகாராஷ்டிராவில் வேலைநிறுத்தம் செய்யும் 70,000 பேருந்து ஓட்டுநர்களுக்கு பேர்லின் பேருந்து தொழிலாளர்கள் ஆதரவு!
- பம்பாய் உயர்நீதிமன்றம் அச்சுறுத்தும் தீர்ப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து மகாராஷ்டிர பேருந்து தொழிலாளர்களின் ஐந்து மாத வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பெரும் ஆபத்து
- ஆறு வார கால மகாராஷ்டிர பொது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களின் நாசவேலைகளால் ஆபத்தில் உள்ளது