முன்னோக்கு

ரஷ்யாவுடனான அமெரிக்கப் போரை பைடென் பாரியளவில் விரிவுபடுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழனன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், 33 பில்லியன் டாலர் செலவுப் பொதியின் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடனான அமெரிக்கப் போருக்கான 20 பில்லியன் டாலர் ஆயுத ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளிக்குமாறு காங்கிரஸூக்கு அழைப்பு விடுத்தார்.

இன்றுவரை, அமெரிக்கா 3.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. அதாவது மோதலில் அமெரிக்காவின் ஈடுபாட்டை ஆறு மடங்கால் அதிகரிக்க பைடென் முன்மொழிகிறார். இது போரில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை குறிக்கும். அதாவது போர் வேகமாக கட்டுப்பாட்டை மீறி ஒரு கண்டம் முழுவதிலுமான மோதலாக மாறுகின்ற நிலையில், அது அமெரிக்காவின் தலையீட்டையும் பாரியளவில் விரிவுபடுத்தும்.

ஏப்ரல் 12, 2022, செவ்வாய்க்கிழமை, வாஷிங்டனுக்குச் செல்லும் வழியில் டெஸ் மொயின்ஸ் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் Air Force One இல் ஏறுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசுவதற்காக ஜனாதிபதி ஜோ பைடென் செல்கிறார். (AP Photo/Carolyn Kaster) [AP Photo/Carolyn Kaster]

இந்த அறிவிப்பு போரில் அமெரிக்க தலையீட்டின் முக்கிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும். இதில் அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவுடனான போரில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடுவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள். இந்த வார தொடக்கத்தில், பாதுகாப்புச் செயலர் லொயிட் ஆஸ்டின், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கியை அமெரிக்க அதிகாரிகள் சந்தித்ததை பற்றி விவரித்தார். “இந்த சந்திப்பில் எங்கள் கவனம் தற்போதைய சண்டையில் வெற்றிபெற உதவும் விஷயங்களைப் பற்றி பேசுவதில் இருந்தது” என்றார். ஆஸ்டின் மேலும், “ரஷ்யா பலவீனமடைவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்” என்றும் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, CBS உடனான ஒரு நேர்காணலில், முன்னாள் அமெரிக்க இராணுவ ஐரோப்பிய கட்டளைத் தளபதி பென் ஹோட்ஜஸ், “உங்களுக்குத் தெரியும், நாங்கள் இங்கு உக்ரேனுக்காக ஆரவாரம் செய்யும் வெறும் பார்வையாளர்கள் மட்டுமல்ல” என்று அறிவித்தார். “நாங்கள் வெற்றி பெற விரும்புகிறோம்” என்று அமெரிக்கா அறிவிக்க வேண்டும் என்றும் ஹோட்ஜஸ் கூறினார். மேலும் அவர், “அதாவது… ரஷ்யாவிற்கு வெளியே அதன் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் ரஷ்யாவின் திறமை இறுதியாக உடைக்கப்படுகிறது” என்று கூறி முடித்தார்.

ஆஸ்டின் அல்லது ஹோட்ஜஸின் கருத்துக்களை விட மிகப் பரந்த பார்வையாளர்களை அடைவதை நோக்கமாகக் கொண்ட பைடெனின் உரை, அவரது சொந்த பாதுகாப்புச் செயலரின் அறிக்கைகளுக்கு முரணாக, வெட்கம் கெட்ட, வெற்றுப் பொய்களால் நிரம்பியிருந்தது.

“சுதந்திரத்திற்கான அதன் போராட்டத்தில் உக்ரேனை ஆதரிக்க எங்களுக்கு இந்த மசோதா தேவை,” என்று பைடென் கூறினார். “எனவே, நாங்கள் ஆயுதங்கள், நிதியுதவி, வெடிமருந்துகள், மற்றும் பொருளாதார உதவியை வழங்க வேண்டும்… உக்ரேனிய மக்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்கும்போது அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் அல்லது ரஷ்யர்கள் உக்ரேனில் தங்கள் அட்டூழியங்களையும் ஆக்கிரமிப்புக்களையும் தொடரும்போது அவர்களுக்கு துணை நிற்போம்” என்றும் கூறினார்.

ஏப்ரல் 28, 2022, வியாழக்கிழமை, வாஷிங்டனில், வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் ஜனாதிபதி ஜோ பைடென் உக்ரேனில் நடக்கும் போர் பற்றி பேசுகிறார். (AP Photo/Andrew Harnik) [AP Photo/Andrew Harnik]

அதைப்பற்றி வெளிப்படையாக குறிப்பிட்டால், ரஷ்யாவுடனான பைடெனின் போருக்கும் உக்ரேனிய மக்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் வாஷிங்டன் ஊதியம் வழங்குபவர்களின் உத்தரவின் பேரில் கியேவில் உள்ள ஊழல்மிக்க தன்னலக்குழு ஆட்சியால் பீரங்கிக்கான தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.

துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் அணு ஆயுதங்கள் கொண்டு ரஷ்யாவை சுற்றி வளைப்பது, பல தசாப்தங்களாக நேட்டோவின் எல்லைகளை 400 மைல்கள் கிழக்கு நோக்கி விரிவுபடுத்துவது, மற்றும் ரஷ்யா தனது பிராந்தியமாக உரிமை கோரும் கிரிமியாவை மீட்பதற்கான உக்ரேனிய திட்டங்களுக்கு துணை நிற்பது ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா போரைத் தூண்டியது. வாஷிங்டனின் நோக்கங்கள் ரஷ்ய அரசாங்கத்தை தூக்கியெறிவதும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு ரஷ்யாவை முழுமையாக அடிபணியச் செய்வதையும் விட வேறெதுவும் இல்லை. இதை புட்டின் ‘அதிகாரத்தில் நீடிக்க முடியாது’ என்று பைடென் கடந்த மாதம் அறிவித்தபோது ஒப்புக்கொண்டார்.

பைடெனின் கருத்துக்களைத் தொடர்ந்து, ஜனாதிபதியிடம் ஒரு பத்திரிகையாளர் இவ்வாறு கேட்டார், “இந்த மோதலை உண்மையில் ஏற்கனவே நேட்டோ, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான மோதலாக சித்தரிப்பதாக ரஷ்ய ஊடகங்களிலும் மற்றும் அவர்களின் சில அதிகாரிகளின் மத்தியிலும் அதிகரித்து வரும் ரஷ்ய கருத்துக்களால் நீங்கள் எந்தளவிற்கு கவலைப்படுகிறீர்கள்? மேலும் அவர்கள் அணு ஆயுதங்களைப் பற்றி பேசுகிறார்கள், இது ஒரு வாழ்வா சாவா போராட்டம் என்கிறார்கள், மேலும் பல விஷயங்களை மிகவும் எச்சரிக்கையான வார்த்தைகளைக் கொண்டு சித்தரிக்கிறார்கள்.

“மேலும் தனித்தனியாகப் பார்த்தாலும் சரி, இது அதனுடன் தொடர்புபட்டது: இது ஏற்கனவே ஒரு பினாமி போர் என்று லாவ்ரோவ் கூறுகிறார். இது ஒரு நேரடிப் போர் அல்ல, மாறாக ஒரு பினாமி போராகும். அப்படியானால் இந்த இரண்டு விஷயங்களில் ஏதோவொன்று உண்மையா?” என்று கேட்கப்பட்டது.

இதற்கு, பைடென், ‘அவை உண்மையல்ல,” என்று பதிலளித்தார், மேலும் “இது உண்மையின் பிரதிபலிப்பு அல்ல, மாறாக [ரஷ்யாவின்] தோல்வியின் பிரதிபலிப்பு என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நிர்வாகம் அதன் உரிமைகோரல்களை மறுக்கையில், அதற்கு ‘ரஷ்யா’வை காரணமாக வலியுறுத்துவது அமெரிக்க ஊடகங்களின் கொள்கையாகும். இருப்பினும், இந்த விஷயத்தில், இவை வெறும் ‘ரஷ்ய’ கருத்துக்கள் அல்ல, மாறாக பைடெனின் சொந்த பாதுகாப்புச் செயலர் விடுத்த அறிக்கைகளாகும். அத்துடன் வேண்டுமென்றே தன்னை ஏமாற்றிக்கொள்ள விரும்பாத எவருக்கும் இது மறுக்க முடியாத உண்மை என்பது தெரியும்.

பைடெனின் நேர்மையின்மை அமெரிக்க மக்கள் ரஷ்யாவுடனான போரை ஆதரிக்கவில்லை என்ற உண்மையின் பிரதிபலிப்பாகும். போரைத் தவிர்க்க முடியாத உண்மைகளின் தொகுப்பை உருவாக்கி, பின்னர் அமெரிக்க மக்களை சட்டமூலத்தில் அடியெடுத்து வைப்பதே அரசாங்கத்தின் உத்தியாக உள்ளது என்பதையும் பிரதிபலிக்கிறது.

பைடென் நிர்வாகத்தின் வெட்கக்கேடான பொய்யானது, அமெரிக்க ஊடகங்கள் எந்தவொரு சர்வாதிகார அரசாலும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்படுகின்றன என்ற உண்மையில் தங்கியுள்ளது. பேரரசரை ஒன்றுமில்லாமலாக்க எவரும் துணிவதில்லை. அமெரிக்க ஊடகங்கள், அதன் பங்கிற்கு, அதன் பொய்களுக்கு ரஷ்யாவுடனான போருக்கான பைடெனின் திட்டங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள போர்வெறி பிடித்த மற்றும் இரத்தவெறி பிடித்த செல்வந்த உயர்-நடுத்தர வர்க்கம் ஆதரவளிக்கும் என்பதை அறிந்திருக்கிறது.

“உங்கள் சொந்த பாதுகாப்புச் செயலர் தான் ‘நாங்கள்’ ரஷ்யாவுடனான ‘சண்டையில்’ இருக்கிறோம் என்று கூறினார். அதேவேளை நீங்கள் இல்லை என்று கூறுகிறீர்கள். உங்கள் இருவரில் யார் பொய் சொல்கிறீர்கள்?” என்ற இந்த தெளிவான கேள்வியைக் கேட்க ஒரு பத்திரிகையாளர் கூட எழுந்திருக்கவில்லை.

எவரும் எதையும் கேட்கவில்லை:

Politicoவின் கூற்றுப்படி, “ரஷ்யாவுடனான முழு அளவிலான போரை வெடிக்கச் செய்வதற்குத் திட்டமிட வெள்ளை மாளிகை ஒரு ‘புலி அணியை’ உருவாக்கியுள்ளது. இந்த அணியின் மதிப்பீட்டின்படி, ரஷ்யாவுடனான முழு அளவிலான அணு ஆயுதப் போரில் அமெரிக்க மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேர் இறப்பார்கள்?”

புதனன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அமெரிக்காவும் பிற நேட்டோ உறுப்பினர்களும் போரில் ஈடுபடுவதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு இன்றுவரை மிக வெளிப்படையான அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

“தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளில் வெளியில் இருந்து தலையிட்டு, நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத மூலோபாய அச்சுறுத்தல்களை உருவாக்க எவராவது முடிவு செய்தால், வரவிருக்கும் அடிகளுக்கான நமது பதில் விரைவாகவும், மின்னல் வேகத்திலும் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்,” என்று புட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். மேலும், “இதற்கான அனைத்து கருவிகளும் நம்மிடம் உள்ளன… தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்துவோம். மேலும் இதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கான அனைத்து முடிவுகளையும் நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம்” என்றார்.

3.7 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்கள் ரஷ்யாவின் எல்லைகளுக்கு பாயும் என்பதற்கான பதில் இது என்றால், 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிக்கு அதன் பதில் என்னவாக இருக்கும்?

அமெரிக்க இராணுவ மூலோபாயவாதிகள், தங்கள் பங்கிற்கு, அணு ஆயுதப் போருக்குத் திட்டமிடுவது மட்டுமல்லாமல், அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகின்றனர். புதனன்று, கடற்படையின் முன்னாள் துணைச் செயலரான சேத் க்ராப்ஸி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில், “அணு ஆயுதப் போரை அமெரிக்கா வெல்லும் என்பதைக் காட்ட வேண்டும்” என்ற தலைப்பில் ஒரு ஆசிரிய தலையங்கக் கட்டுரை எழுதினார்.

அவர், “அமெரிக்கா ஒரு அணு ஆயுதப் போரை வெல்லத் தயாராகவில்லை என்றால், அது ஒன்றை இழக்க நேரிடும் என்பதே உண்மை” என்று எழுதினார். மேலும் அவர், புட்டின் “நேட்டோ கிரெம்ளினின் தலையை துண்டிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கணக்கிட வேண்டும் – ஆம், அங்கு பாதிக்கக்கூடிய உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், அதைத் துண்டிக்க வேண்டும்” என்றும் கூறினார்.

இத்தகைய வார்த்தையாடல்களுக்கு மத்தியில், பைனான்சியல் டைம்ஸின் எட்வர்ட் லூஸ் இவ்வாறு எச்சரித்தார். “பெரும்பாலான மக்கள் இதைப் பற்றி அறியாத நிலையில், 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் உலகம் அதன் மிக ஆபத்தான காலகட்டத்திற்குள் நுழைகிறது. 50 வயதிற்குட்பட்ட பெரும்பான்மையானவர்கள் அணுசக்தி மாயத் தோற்றத்தை கடந்த நூற்றாண்டின் எஞ்சிய நினைவுச் சின்னமாக நினைத்தே வளர்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில வாரங்களில், அணுவாயுத பரிமாற்றத்திற்கான வாய்ப்பு இந்த நூற்றாண்டின் அமைதிக்கு மிகவும் நேரடியான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.”

தற்போதைய சூழ்நிலைகளால் முன்வைக்கப்படும் பாரிய ஆபத்துக்கள் குறித்து தொழிலாள வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது, சமூக சமத்துவமின்மை, வறுமை, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் போருக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் நோக்கில், போருக்கு எதிரான ஒரு புதிய மற்றும் சக்திவாய்ந்த இயக்கத்தை வளர்த்தெடுப்பது மிகவும் அவசியமாகும். இந்த இயக்கம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய சோசலிச முன்னோக்கை விரிவுபடுத்துவது மே 1, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் 2022 மே தினத்தின் மைய நோக்கமாக இருக்கும். இந்த முக்கியமான நிகழ்வை ஊக்குவிக்கவும், மேலும் அதில் கலந்துகொள்ளவும் எங்கள் வாசகர்கள் அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading