இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வியாழன் மாலை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, அமெரிக்க சார்பு ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்ததைக் கண்டிக்கிறது.
இது, ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரியும் தங்கள் மீது இழைக்கப்பட்ட சமூகப் பேரழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் போராடி வரும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்களுக்கு எதிராக, இராஜபக்ஷ மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கை ஆகும்.
உழைக்கும் மக்கள் கடுமையான பற்றாக்குறையையும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அனைத்து அடிப்படை பொருட்களுக்கான விலை உயர்வையும் எதிர்கொள்வதுடன் நீண்ட மின்வெட்டுக்களை அனுபவிக்கின்றனர். இந்த நெருக்கடியானது கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் அமெரிக்கா-நேட்டோ முன்னெடுக்கும் பினாமி போரினாலும் உந்தப்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கவின் கீழ் இராஜபக்ஷவின் புதிய அரசாங்கம் இந்த நிலைமைகள் எதனையும் தீர்க்கப் போவதில்லை. மாறாக, அது அவற்றை மோசமாக்கும். இது சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் அவரது புதிய அரசாங்கமும் கீழிறங்க வேண்டும்! நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு, அதன் தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை அணிதிரட்டி சோசலிச கொள்கைகளுக்காகப் போராடுவதே. தொழிலாள வர்க்கத்துக்கு முன்னோக்கி செல்வதற்கு உள்ள பாதை ஆகும்.
இராஜபக்ஷ, “கண்டவுடன் சுடும்” அதிகாரத்துடன் சட்டத்தை அமுல்படுத்துவதற்காக இராணுவத்தை நிலைநிறுத்தி, அதன் பின்னர் ஒரு நாள் கழித்து, இந்த கபடத்தனமான நடவடிக்கையை மேற்கொண்டார். கடந்த வெள்ளியன்று, பாரிய ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மற்றும் ஹர்த்தாலை அடுத்து, இராஜபக்ஷ ஒரு அடக்குமுறை அவசரகால நிலையை பிரகடனம் செய்தார்.
திங்களன்று, பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவால் ஏற்பாடு செய்யப்பட்ட இராஜபக்ஷவின் ஆளும் கட்சி குண்டர்கள், நிராயுதபாணியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்க கட்டவிழ்த்து விடப்பட்டனர்.
அரசியல் ரீதியாக பலவீனமடைந்துள்ள ஜனாதிபதி இராஜபக்ஷ, விக்கிரமசிங்கவை சம்பந்தப்படுத்தி ஒருபுறம் தனக்கும் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவிற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் செய்யவும், மறுபுறம் அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் செய்யவும் திரை மறைவில் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆகஸ்ட் 2020 பொதுத் தேர்தலில் 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் விக்கிரமசிங்க மட்டுமே ஆவார். இலங்கையின் அரசியலமைப்பு நெறிமுறைகளின்படி கூட, பெரும்பான்மை இல்லாமல், அவருக்கு எந்த சட்டபூர்வமும், நிலைத்தன்மையும் கிடையாது. இலங்கை அரசியல் உயரடுக்கினரால் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இரகசிய உடன்பாடுகள் மற்றும் பேரம் பேசல்களின் மூலமே புதிய பிரதமரால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற முடியும்.
இராஜபக்ஷவைப் பொறுத்தவரை, விக்கிரமசிங்கவை பதவியில் அமர்த்துவதற்கான ஒரே தகுதி, அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆறு முறை பிரதமராகவும் இருந்தவர் என்பதும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளினதும் முகவராக இருந்தமையுமே ஆகும். இராஜபக்ஷ இப்போது ஒரு கொடூரமான சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் அதிகரித்து வரும் கோபத்தை அடக்கவும் இந்த ஊழல் நிறைந்த அரசியல் ஊழியரின் பக்கம் திரும்பியுள்ளார்.
விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற சில நிமிடங்களில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் அவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். “பிரதமராக அவர் நியமிக்கப்பட்டமையும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கமொன்று விரைவாக உருவாக்கப்பட உள்ளமையும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படிகளாகும். சர்வதேச நாணய நிதியத்தில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தைப் பெறவும் அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய நீண்ட கால தீர்வுகளையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்.”
விக்கிரமசிங்கவின் நியமனமானது பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், குறிப்பாக சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் இலங்கையை இணைப்பதற்குமானது என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
1977 இல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஐ.தே.க அரசாங்கத்தின் கீழ் அவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டதில் இருந்தே விக்ரமசிங்கவின் வரலாறு இழிவானது. அந்த அரசாங்கம் ஈவிரக்கமற்ற திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதுடன் 1980 இல் அரசாங்க ஊழியர்களின் பொது வேலைநிறுத்தத்தை நசுக்கியதோடு தங்களது சமூக உரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிராகப் போராடிய 100,000 அரச ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், பலவீனப்படுத்தவும், ஒடுக்கவும் தமிழர்களுக்கு எதிரான 26 ஆண்டு கால இனவாத யுத்தத்தையும் அது கட்டவிழ்த்து விட்டது. சர்வதேச மூலதனத்தின் ஈவிரக்கமற்ற சுரண்டலுக்காக, மலிவான-தொழிலாளர் தளங்களாக சுதந்திர வர்த்தக வலயங்களை அறிமுகப்படுத்தியதற்காக விக்கிரமசிங்க குறிப்பாக பாராட்டப்படுகிறார்.
விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் சேர்ந்து, 2015 ஆம் ஆண்டு வாஷிங்டனின் அனுசரணையுடன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி அவருக்குப் பதிலாக அமெரிக்க சார்பு மைத்திரிபால சிறிசேனவை பதவியில் அமர்த்திய ஆட்சி மாற்ற நடவடிக்கையில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். பெய்ஜிங்குடனான இராஜபக்ஷவின் உறவுகளை முறித்து, சீனாவை இலக்கு வைத்து அது முன்னெடுத்த 'ஆசியாவில் முன்நிலை' கொள்கையுடன் இலங்கையை இணைக்க அமெரிக்கா விரும்பியது.
நேற்று அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர், 'நாங்கள் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறோம், நாங்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும்,' என விக்கிரமசிங்க அறிவித்தார்.
ஆனால் என்ன வழியில் வெளியேறுவது? விக்கிரமசிங்கவின் படி, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதைச் செய்ய முடியும். அதாவது, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைத்தல், வரிகளை அதிகரிப்பது மற்றும் அரசாங்க வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் எஞ்சிய விலை மானியங்களில் ஆழமான வெட்டுக்கள் மூலம் நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது உள்ளிட்ட மிலேச்சத்தனமான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும்.
இந்த நடவடிக்கைகளால் உழைக்கும் மக்களுக்கு ஏற்படப்போகும் சமூகப் பேரிடர் ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருப்பதை விட பிரமாண்டமானதாக இருக்கும். பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் இழப்பில் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் மற்றும் இலங்கை பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கினரின் கோரிக்கைகளை அமுல்படுத்துவதை துரிதப்படுத்தும்.
விக்கிரமசிங்கவின் சாதனைகள் நன்கு பேர்போனவை மற்றும் அவரது கொள்கைகளின் விளைவுகள் பேரழிவு தருபவை என்பதை அறிந்துள்ளதால் அவரது நியமனம் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் பாரிய எதிர்ப்பை சந்திக்கும்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) நேற்று விக்கிரமசிங்கவை ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்ததுடன், இடைக்கால ஆட்சியை ஸ்தாபிப்பதற்கான அதன் தயார்நிலையை வெளிப்படுத்திய போதிலும், இராஜபக்ஷ தன்னை அரசாங்கத்தை அமைக்க அழைக்கவில்லை என்று குற்றம் சாட்டியது. ஜனாதிபதி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முதலில் கோரிக்கையை ஐ.ம.ச., நேற்று பிற்பகல் அதை மறுபரிசீலனை செய்து, அதற்கு பதிலாக அதற்கான ஒரு காலக்கெடுவைக் கேட்டது.
ஐ.ம.ச. இன் அனைத்துத் தலைவர்களும் ஐ.தே.க. உறுப்பினர்கள் ஆவர். 2020 தொடக்கத்தில், அவர்கள் ஐ.தே.க. இல் இருந்து பிரிந்து, புதிய கட்சியாக ஐ.ம.ச. என்பதை அமைத்தனர். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளைத் திணிப்பதைத் தவிர, பொருளாதார நெருக்கடிக்கு ஐ.ம.ச. இடம் மாற்றுத் தீர்வு கிடையாது.
ஜனாதிபதியிடம் தமது கட்சி வேலைத்திட்டமொன்றை முன்வைத்து இடைக்கால ஆட்சி அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யுடன் கலந்துரையாடல்களை நடத்துவதில் இராஜபக்ஷ ஆர்வம் காட்டவில்லை என்றும் திஸாநாயக்க புலம்பினார். உண்மையில் சிக்கன நடவடிக்கைகளை இரக்கமற்ற முறையில் அமுல்படுத்துவதைத் தவிர வேறு எந்த வேலைத்திட்டமும் ஜே.வி.பி. இடம் கிடையாது.
கடந்த வாரம் பௌத்த பிக்குகள் அமைப்பின் முன் உரையாற்றிய திஸாநாயக்க, கிரேக்கப் பொருளாதாரம் சரிந்த போது, 'கடுமையான முடிவுகளால்' மட்டுமே அது புத்துயிர் பெற்றது என்று கூறினார். அதேபோன்று, இலங்கையும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு 'வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம்', அதாவது வாழ்க்கை நிலைமைகளை மேலும் வெட்டிச் சரிப்பதன் மூலம் மட்டுமே நெருக்கடியை தீர்க்க முடியும் என்றார்.
தொழிற்சங்கங்கள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் என தொழிலாள வர்க்கம் எதிர்பார்க்க முடியாது. கடந்த இரண்டு மாதங்களாக, தொழிற்சங்கங்கள் அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் புதிய முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்குள் அவர்களை அடைத்து வைத்து, தொழிலாளர் போராட்டங்களை திசைதிருப்ப முயன்றன. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள், எதிர்க் கட்சிகள் முன்வைத்த அதே கோரிக்கைகளாகும். இது அரசாங்கத்தின் கரங்களை பலப்படுத்தி, முதலாளித்துவ அரசியலுடன் தொழிலாளர்களை கட்டிப்போடுவதை மட்டுமே செய்தது.
விக்கிரமசிங்க ஆட்சி மற்றும் வேறு எந்த இடைக்கால முதலாளித்துவ ஆட்சியையும் நிராகரிக்குமாறு தொழிலாள வர்க்கத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அழைப்பு விடுக்கிறது.
தொழிலாள வர்க்கத்தை விடயங்களை அதன் சொந்த கைகளில் எடுத்துக் கொள்ளுமாறு நாங்கள் அழைக்கிறோம். முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளுக்கு எதிராகவும் சுயாதீனமாகவும் மற்றும் எதிராகவும் ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளிலும், பெருந்தோட்டங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும். முழு தொழிலாள வர்க்கத்தையும் ஒருங்கிணைக்கவும் ஐக்கியப்படுத்தவும் தீவு முழுவதிலும் இத்தகைய நடவடிக்கை குழுக்களின் வலையமைப்மை உருவாக்குவது அவசியம்.
சோசலிச சமத்துவக் கட்சி இந்தக் குழுக்களுக்கு பின்வரும் கோரிக்கைகளை முன்னெடுக்க அழைப்பு விடுக்கிறது:
* மக்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற முக்கிய வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாளர்கள் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும். உற்பத்தி மற்றும் விநியோக வழிமுறைகள் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் இருக்கும் வரை, அவர்கள் இலாபத்தை பெருக்க மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
* வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டு தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட வேண்டும். அனைத்து வெளிநாட்டு கடன்களும் நிராகரிக்கப்பட வேண்டும், அதற்கு பதிலாக அந்த நிதியை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
* பரவலான பணவீக்கத்தை எதிர்கொள்ளும்போது, ஊதியங்கள் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும். விவசாயிகள் மற்றும் பிற சுயதொழில் செய்பவர்களுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் மற்றும் அவர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்ய வேண்டும்.
நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பை ஸ்தாபிப்பதானது, இலங்கையில் உள்ள முழு தொழிலாள வர்க்கத்தையும், அனைத்து மொழிகள் மற்றும் மதங்களைக் கடந்து, ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தும். சோசலிச சமத்துவக் கட்சி ஏற்கனவே பெருந்தோட்ட மற்றும் சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் மத்தியில் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பியுள்ளதுடன், ஏனைய வேலைத் தளங்களிலும் அவற்றை அமைப்பதில் உதவ தயாராக உள்ளது.
அதன் மே 10 அறிக்கையில், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களை அரசாங்க சார்பு குண்டர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, நடவடிக்கை குழுக்களுடன் பாதுகாப்புக் குழுக்களையும் பாதுகாப்புக் காவலர்களையும் அமைக்க தொழிலாளர்களுக்கு சோ.ச.க. அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கொள்கைகளை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே, தொழிலாளர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளை தங்கள் பக்கம் அணிதிரட்டி, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட முடியும்.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்தப் போராட்டத்தில் சேருமாறும், சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் வெகுஜனக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டியெழுப்புமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.