புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரதமர் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான திட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதியளித்துள்ளார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன கட்டளைகளை அமுல்படுத்துவதற்காக வியாழன் அன்று ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய உணவுகள், எரிபொருள் மற்றும் மருந்துகளின் கடுமையான தட்டுப்பாடு மற்றும் நீண்ட நாள் மின்வெட்டு ஆகியவற்றால் எரியூட்டப்பட்ட வாரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை அடுத்தே விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவி விலகக் கோரியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்ததைக் கண்டித்தும், இலங்கையின் கொழும்பில், 13 மே 2022 வெள்ளிக் கிழமை இலங்கையர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். [AP Photo/Eranga Jayawardena] [AP Photo/Eranga Jayawardena]

விக்கிரமசிங்க இப்போது ஒரு அமைச்சரவையை நியமித்து, நாடாளுமன்ற பெரும்பான்மையைக் கூட்டுவதற்கு போதுமான பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவரது நியமனத்தை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் தலைவர்களும், 2020 இல் ஐ.தே.க. இல் இருந்து பிரிந்த மிகப் பெரிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் (ஐ.ம.ச.) எதிர்த்தன.

ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவை அனுபவிக்கும் ஒரு தேசமாக மாறுவதற்கு, எங்களுக்கு 'மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிறுவனங்களின் உதவி தேவை' என்று விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார். மறுநாள் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் தூதர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக பிரதமராக பதவி வகித்த விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் அமெரிக்க சார்பு நோக்குநிலையை அமுல்படுத்தியதில் பேர் போனவர் ஆவார்.

கடுமையான வெளிநாட்டு நாணய பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மத்திய வங்கி கடந்த மாதம் அதன் பாரிய வெளிநாட்டு கடனை தற்காலிகமாக செலுத்தத் தவறுவதாக அறிவித்தது. ஜனாதிபதியின் சகோதரர் மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம், அவசரகால பிணை எடுப்பு கடனைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தது.

சர்வதேச நாணய நிதியத்துடனான தொழில்நுட்ப மட்டத்திலான இரண்டாவது சுற்று கலந்துரையாடல் திங்களன்று தொடங்கியது. இலங்கையில் 'கடன் நிலைத்தன்மை' இல்லாததால், பிணை எடுப்பு கடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு, அதன் உடனடி கொள்கை முன்முயற்சிகள் முக்கியமானவை என்று சர்வதேச நாணய நிதியம் முன்பே வலியுறுத்தியது.

விக்கிரமசிங்க இந்த பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டும். மற்றும் சர்வதேச நாணய நிதியம் கோடிட்டு காட்டியுள்ள சிக்கன திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில் பின்வருவன அடங்கும்:

  • கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாக உயர்ந்துள்ள நிதிப் பற்றாக்குறையை கூர்மையாக குறைப்பது.
  • அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மேலும் விரிவான தனியார்மயமாக்கல் அல்லது வணிகமயமாக்கல்.
  • பெருமதி சேர் வரி (VAT) மற்றும் நேரடி வரிகளில் அதிகரிப்பு மற்றும் வரி வலையை விரிவாக்குவது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க வருவாயை தற்போதைய 8 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக இரட்டிப்பாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • எண்ணெய்யின் சந்தை விலையைப் பிரதிபலிக்கும் வகையில் எரிபொருள் விலைகளை நிர்ணயம் செய்தல், மற்றும் தண்ணீர் கட்டணங்களை உயர்த்துவதுவதும், அவற்றின் வணிகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலுக்குத் தயாரிக்கும் வகையில் குறித்த அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கான ஒரு படியாகும்.

இந்த நடவடிக்கைகள் அரச வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் ஆழமான வெட்டுக்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்துதல் மற்றும் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுச் சேவைகளைக் குறைக்கும்.

சர்வதேச நாணய நிதிய கோரிக்கைகளின் கொடூரமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், முன்னாள் நிதி அமச்சர் அலி சப்ரி மே 4 அன்று பாராளுமன்றத்தில் 'நாட்டின் பொருளாதாரம் ஒரு முக்கியமான மட்டத்தில் உள்ளது' என்று கூறியதோடு 'யார் ஆட்சியில் இருந்தாலும் வலிமிகுந்த சீர்திருத்தங்கள் வரவுள்ளன' என்று எச்சரித்தார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும் என்று சப்ரி கூறினார். எவ்வாறாயினும், இலங்கையில் நடப்பது, கோவிட்-19 தொற்றுநோயால் உக்கிரமடைந்து, இப்போது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி யுத்தத்தால் வியத்தகு முறையில் அதிகரித்துள்ள முதலாளித்துவத்தின் மோசமான உலகளாவிய நெருக்கடியின் மிகக் கூர்மையான வெளிப்பாடாகும்.

நாட்டின் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு நாணய கையிருப்பு டாலர் 50 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது என்று சப்ரி அறிவித்தார். இது தினசரி இறக்குமதிக்கு கூட போதுமானதாக இல்லை. அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சிக்கன வரவு-செலவுத் திட்டம் 'புதிய அடிப்படை உண்மைகளுடன்' பயணிப்பதாக இருக்க வேண்டும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உண்பதற்கான சூழ்நிலையை உருவாக்க விரும்புவதாக விக்கிரமசிங்கவின் பிரகடனம் செய்வது, இலங்கையில் சமூக நெருக்கடியின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. பல உழைக்கும் மக்கள், தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் போதுமான உணவை வழங்க முடியாமல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாமல் தங்களுக்குத் தேவையான மருந்துகளைப் பெற முடியாமல் உள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளைத் திணிப்பது இந்த மாபெரும் சமூகப் பேரழிவைத் தணிக்காது, மாறாக அதைத் தீவிரப்படுத்தும்.

மே 9 அன்று கார்டியன், 'இலங்கை உலகளாவிய கடன் நெருக்கடியை எதிர்கொள்ளும் முதல் பகடைக்காய்' என்று தலைப்பில் வெளியிட்ட கருத்து, உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸிடம் இருந்து மேற்கோள் காட்டியது. அவர், வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் ஆழமான நெருக்கடியைப் பற்றி கூறும் போது, 'எரிசக்தி, உரம் மற்றும் உணவுக்கான திடீர் விலை உயர்வு மற்றும் வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்புகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். ஒவ்வொன்றும் அவர்களை கடுமையாக தாக்குகின்றன,” என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்கு கெஞ்சுவதைத் தவிர இலங்கைக்கு வேறு வழியில்லை என்று விக்கிரமசிங்க பல மாதங்களாக வலியுறுத்தி வருகிறார். மார்ச் மாத தொடக்கத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “1977ல் பொருளாதாரம் சரிந்தபோது, நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்று திறந்த பொருளாதாரத்தை உருவாக்க அவர்களின் உதவியை நாடினோம். சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்த பிறகுதான் மற்ற நாடுகள் உதவின,” என்றார்.

1977 நெருக்கடியைப் பற்றி கூறியது குறிப்பிடத் தக்கதாகும். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐ.தே.க. அரசாங்கமே, சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தால் முன்வைக்கப்பட்ட ஈவிரக்கமற்ற திறந்த சந்தைக் கொள்கைகளுக்கு உலகில் முதன்முதலில் திரும்பியது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களை மலிவாக சுரண்டுவதற்கான கதவைத் திறந்துவிட்டு, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை கூட்டுத்தாபனமயம் மற்றும் தனியார்மயமாக்கும் திட்டத்தைத் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான வேலைகள் அழிக்கப்படுவதற்கும் சமூக மானியங்கள் வெட்டப்படுவதற்கும் இது தலைமை தாங்கியது.

இந்தக் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் உருவாக்கிய பரவலான எதிர்ப்பை ஜெயவர்த்தன அரசாங்கம் இரக்கமின்றி நசுக்கியது. 1980 இல், 100,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்து அரசாங்க ஊழியர்களின் பொது வேலைநிறுத்தத்தை நசுக்கியது. வர்க்கப் பதட்டங்கள் அதிகரித்த நிலையில், ஐ.தே.க. தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த தமிழர்-விரோத பேரினவாதத்தை கையில் எடுத்து, நீண்டகால தமிழர் விரோத யுத்தத்தை தொடங்கியது. தீவை நாசமாக்கிய அந்தப் போர், இலட்சக் கணக்கான மக்களைக் கொன்று 2009 இல் இரத்தக்களரியில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

விக்கிரமசிங்க, ஜெயவர்த்தன அரசாங்கத்தில் அமைச்சராக இருந்ததோடு அதன் பிற்போக்கு கொள்கைகளை முழுமையாக ஆதரித்தார். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பெருவணிகம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குனர்களின் இலாபங்களைப் பாதுகாப்பதற்காக, உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் சர்வதச நாணய நிதியத்தின் திட்டத்தை கட்டவிழ்த்து விடுவதற்காக அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். எந்தவொரு எதிர்ப்பு போராட்டத்திற்கும் எதிராக பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை பயன்படுத்த அவர் தயங்கப் போவதில்லை.

விக்கிரமசிங்கவால் அரசாங்கத்தை அமைக்க முடிகிறதோ இல்லையோ, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) உட்பட முழு அரசியல் ஸ்தாபகமும் இந்த தொழிலாள வர்க்க-விரோத திட்டநிரலை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளன.

ஐ.தே.க. போன்று ஐ.ம.ச.வும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி இராஜபக்ஷவிற்கு பலமுறை அழைப்பு விடுத்தது. ஜே.வி.பி. 2004 இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்துகொண்டதுடன் அதன் அமைச்சர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவினர். முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டியுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க இரு கட்சிகளும் முன்வந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஒரு சோசலிச மாற்றீட்டை முன்வைத்துள்ளது. அது பெருவணிகத்தின் இலாபங்களை விட உழைக்கும் மக்களின் அடிப்படை சமூகத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. பின்வரும் அவசர நடவடிக்கைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்:

  • அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரி! சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கன கோரிக்கைகளை நிராகரிக்கவும்!
  • அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்! தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள், பெரிய நிறுவனங்கள், பெருந் தோட்டங்கள் மற்றும் ஏனைய முக்கிய பொருளாதார மையங்களை தேசியமயமாக்க வேண்டும்!

மாதாந்த அடிப்படையில் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதிய அதிகரிப்பை திட்டமிட்டு, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏழை விவசாயிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்ய வேண்டும்.

இந்த முன்னோக்கிற்காகப் போராடுவதற்கு, தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளைச் சாராமல், தீவு முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நோக்கிய அரசியல் போராட்டத்திற்கான அடிப்படையை இந்த நடவடிக்கைக் குழுக்களால் உருவாக்க முடியும்.

அத்தகைய நடவடிக்கை குழுக்களை நிறுவ விரும்பும் தொழிலாளர்களுக்கு அரசியல் உதவிகளை வழங்க சோசலிச சமத்துவக் கட்சி தயாராக உள்ளது.

Loading