சீனாவுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறப்பு ஆசியான் உச்சிமாநாட்டை அமெரிக்கா நடத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (Association of Southeast Asian Nations - ASEAN) உறுப்பினர்கள், சீனாவுக்கு எதிரான இராஜதந்திர தாக்குதலின் பாகமாக கடந்த வாரம் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனை சிறப்பு இரண்டு நாள் உச்சிமாநாட்டில் சந்தித்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம், மாஸ்கோவிற்கு எதிராக உக்ரேனில் அமெரிக்க/நேட்டோ பினாமி போரை நடத்தும் அதேவேளையில், இந்தோ-பசிபிக் பகுதியில் பெய்ஜிங்குடன் அது மோதலை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இந்த சந்திப்பு இருந்தது. இருப்பினும், அமெரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு ஆசியான் உறுப்பினர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்தன.

வாஷிங்டன் டிசி இல் நடந்த ஆசியான்-அமெரிக்க சிறப்பு உச்சிமாநாடு, 2022 (Photo: Facebook/ASEAN)

ஆசியான்-அமெரிக்க உச்சிமாநாடு மே 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்றது, இது இந்த அமைப்பின் 45 ஆண்டுகால வரலாற்றில் வாஷிங்டனில் நடைபெற்ற முதல் ஆசியான் உச்சிமாநாடாகும். மேலும், இது 2016 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் அப்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது சிறப்பு உச்சிமாநாடாகும்.

உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டு, தைவான் மீதான தூண்டுதலற்ற படையெடுப்புக்கு பெய்ஜிங் திட்டமிட்டுள்ளதாக அதனை மீண்டும் குற்றம் சாட்ட பைடென் இந்த உச்சிமாநாட்டைப் பயன்படுத்திக் கொண்டார். உண்மையில், அமெரிக்காவும் நேட்டோவும் வேண்டுமென்றே ஐரோப்பாவில் போரைத் தூண்டிவிட்டதைப் போல, பிராந்திய பூசல்கள் மற்றும் தைவான் குறித்து பெய்ஜிங்கை தூண்டிவிட்டு அமெரிக்கா பகைத்துக் கொண்டிருக்கிறது.

பைடென், இந்த சந்திப்பை “அமெரிக்க-ஆசியான் உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தின்” தொடக்கம் என்று அழைத்து, கூடியிருந்த தலைவர்களிடம் “எங்கள் பார்வையில், இந்தோ-பசிபிக்கும் ஆசியான் பிராந்தியமும் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை எங்கள் விவாதங்களின் அகலம் பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.

சீனாவை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், பைடென், “சுதந்திரமான மற்றும் திறந்த, நிலையான மற்றும் செழிப்பான, மற்றும் மீள்தன்மையுள்ள மற்றும் பாதுகாப்பான ஒரு இந்தோ-பசிபிக்கை” அமெரிக்கா நாடுகிறது என்று கூறினார். ‘சுதந்திரமான மற்றும் திறந்த’ இந்தோ-பசிபிக் மற்றும் ‘சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு’ என அழைக்கப்படுவதற்கு பெய்ஜிங் ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என வாஷிங்டன் பேய்த்தனமாக சித்தரிக்கிறது.

வாஷிங்டனின் உண்மையான அச்சம் என்னவென்றால், சீனாவின் பொருளாதார விரிவாக்கம் அமெரிக்க உலக மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது, அதாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கில் அது அதன் சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைப் பூர்த்தி செய்ய சர்வதேச விதிகளை வகுத்தது.

கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை இதேபோன்ற குறிப்பைத் தாக்கியதுடன், அமெரிக்காவும் ஆசியானும் “ஒரு திறந்த, உள்ளடக்கிய, மற்றும் விதிகள் அடிப்படையிலான பிராந்திய கட்டமைப்பை மேம்படுத்துவதில் தொடர்புடைய அடிப்படைக் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்கின்றன, மேலும் இந்த விஷயத்தில் இந்த இலக்குகளில் பங்குபெறும் கூட்டாளர்களுடன் ஆசியான் ஒரு மைய இடத்தைப் பிடித்துள்ளது” என்று கூறுகிறது.

உண்மையில், வாஷிங்டன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, சீனாவுக்கும் மற்றும் ஆசியான் உறுப்பினர்களான புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இடையே தென் சீனக் கடலில் நிலவும் பிராந்திய மோதல்கள் தொடர்பாக அந்த பிராந்தியத்தில் பதட்டங்களைத் தூண்டியுள்ளது. அமெரிக்க கடற்படை ஆத்திரமூட்டும் வகையில் ‘கடல்வழி நடவடிக்கைகளின் சுதந்திரத்தை’ மீண்டும் மீண்டும் அரங்கேற்றியுள்ளது, அதன் போர்க்கப்பல்களை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு அனுப்புகிறது.

ஆசியான்-அமெரிக்க கூட்டறிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தின் (United Nations Convention on the Law of the SEA-UNCLOS) உடன்படிக்கைக்கு பல குறிப்புகளை அளிக்கிறது, இதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை, மாறாக இந்த கடற்படை ஆத்திரமூட்டல்களை மறைமுகமாக நியாயப்படுத்துகிறது. “பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்துடன் 1982 UNCLOS இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து சுதந்திரம் மற்றும் கடல்களின் பிற சட்டபூர்வமான பயன்பாடுகளை உறுதி செய்வதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்” என்று அது கூறியது.

இத்தகைய கண்டனங்களின் நோக்கம், மறைமுகமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, சீனாவை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ‘சுதந்திரத்திற்கு’ ஒரு அச்சுறுத்தலாக சித்தரிப்பதாகும், அதே நேரத்தில் வாஷிங்டனை அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து அதன் இராணுவத் திட்டங்களை அபிவிருத்தி செய்ய இது அனுமதிக்கிறது. குறிப்பாக, சாலமன் தீவுகளுடன் சமீபத்தில் சீனா கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கண்டித்தன. அவர்கள் இந்த சிறிய பசிபிக் தீவு மாநில அரசாங்கத்திற்கு எதிராக ஆட்சி மாற்றம் பற்றிய மெல்லிய மறைமுக அச்சுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.

நவம்பரில் ஆசியானுக்கு பெய்ஜிங் உறுதியளித்த 1.5 பில்லியன் டாலர் வளர்ச்சி உதவியை ஈடுகட்ட, பைடென் உச்சி மாநாட்டின் போது ஆசியானுக்கு 150 மில்லியன் டாலர் நிதி வழங்க உறுதியளித்தார். தென் சீனக் கடலில் இராணுவ ஒத்துழைப்புக்காக 60 மில்லியன் டாலர் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சட்டவிரோத சீன மீன்பிடித்தலைத் தடுக்கும் சாக்குப்போக்கில், ஆசியான்-உறுப்பினர் கடற்படைகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்க கடலோரக் காவல்படை கப்பலை இப்பகுதிக்கு அனுப்புவதும் அடங்கும்.

இருப்பினும், ரஷ்யா மற்றும் சீனா விடயத்தில் அவர்களது நிலைப்பாட்டில் ஆசியான் நாடுகளிடையே பரந்த வேறுபாடுகள் உள்ளன. எனவே இரு நாடுகள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி மூடிய கதவுகளுக்குப் பின்னால் விவாதிக்கப்பட்டாலும், பொது அறிக்கைகள் நேரடி கண்டனங்களைத் தவிர்த்தன. சிங்கப்பூர் மட்டுமே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. வியட்நாமும் லாவோஸூம் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவைக் கண்டித்து மார்ச் மாதம் ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றாமல் புறக்கணித்தன. அதேவேளை, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் மிகுந்த நடுநிலை வகிக்கின்றன.

உக்ரேன் விவகாரத்தில், உச்சிமாநாட்டின் கூட்டறிக்கை ரஷ்ய படையெடுப்பைக் கண்டிப்பதில் அமெரிக்காவைப் பின்பற்றவில்லை. மாறாக அது, “இறையாண்மை, அரசியல் சுதந்திரம், மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான எங்கள் மரியாதையை” மீளுறுதி செய்ததுடன், “ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு இணங்குவதற்கான எங்கள் அழைப்பை” மீண்டும் வலியுறுத்தியது. மேலும் அது, ‘உடனடி போர் நிறுத்தத்திற்கும்’ மற்றும் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கும் அழைப்பு விடுத்தது.

சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலுடன் முழுமையாக அணிவகுப்பதிலும் ஆசியான் உறுப்பினர்களிடையே இதேபோன்ற பிளவுகள் உள்ளன. உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, அமெரிக்க இந்தோ-பசிபிக் ஒருங்கிணைப்பாளரான, கர்ட் கேம்ப்பெல் (Kurt Campbell), தைவான் விவகாரம் நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக இருக்கும் என்று பகிரங்கமாக அறிவித்ததுடன், அமெரிக்கா “தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பராமரிக்க விரும்புகிறது” என்று பாசாங்குத்தனமாக கூறினார். இருப்பினும், உச்சிமாநாட்டின் கூட்டறிக்கையில் தைவான் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.

சிங்கப்பூரில் உள்ள சர்வதேச ஆய்வுகளுக்கான எஸ். இராஜரத்தினம் பள்ளியின் (S.Rajaratnam School of International Studies-RSIS) மூத்த ஆய்வாளரான அமலினா அனுவார் (Amalina Anuar), “[நான்] நாங்கள் ஆசியான் உறுப்பினர்களை அமெரிக்காவுடன் இணைவதற்கு வற்புறுத்துவது பற்றி பேசினால் கூட, ஆசியான் உறுப்பினர்கள் தங்கள் நடுநிலையில் இருந்து விலகிச் செல்வது சந்தேகமே. ஆசியானும் சீனாவும் ஒரே சுற்றுப்புறத்தில் உள்ளன, மேலும் குறைந்தபட்சம் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாது, பல வழிகளில் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. இதன் காரணமாக பிராந்திய கட்டமைப்பில் இருந்து சீனாவை ஒதுக்குவதற்கு ஆசியான் விரும்பவில்லை” என்று Al Jazeera செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார்.

குறிப்பாக கம்போடியா பெய்ஜிங்குடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் இந்தோனேசியா சீன முதலீட்டை பெரிதும் சார்ந்துள்ளது. மேலும், மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் தலைவர்களும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவில்லை, காரணம் முதலாமவர் 2021 இல் ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நிகழ்த்தியதைத் தொடர்ந்து விலக்கப்பட்டார், மேலும் பிந்தையவர் ஒரு தலைமை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளார். மணிலாவில் உள்ள புதிய ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் நிர்வாகம், பெய்ஜிங்குடனான நெருக்கமான உறவுகளை வளர்ப்பதில், வெளியேறும் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்றவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எனத் தோன்றுகிறது.

இந்த பொருளாதார உறவுகளை ஈடுசெய்ய, வாஷிங்டன் இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பில் (Indo-Pacific Economic Framework-IPEF) வேலை செய்து வருகிறது, இதை பைடென் இந்த வாரம் வரவிருக்கும் தனது ஆசிய பயணத்தின் போது முறையாக தொடங்க திட்டமிட்டுள்ளார். கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டதும், செயலிழந்த பசிபிக்-கடந்த கூட்டாண்மை (Trans-Pacific Partnership-TPP) திட்டத்தை ஒத்ததுமான IPEF என்பது, அமெரிக்க வர்த்தகத்தையும் நலன்களையும் பிராந்தியத்தின் பொருளாதார உறவுகளின் மையத்தில் வைப்பதாகும். நிர்வாகம் காங்கிரஸின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் அபாயத்தை விட நிர்வாக உத்தரவுகள் மூலம் தனது திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறது.

இந்த வார இறுதியில், பைடென் வடகிழக்கு ஆசியாவிற்குச் செல்வார், அங்கு அவர் மே 21 அன்று சியோலில் புதிய தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோலையும் (Yoon Suk-yeol), மே 23 அன்று டோக்கியோவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவையும் (Fumio Kishida) சந்திப்பார். அடுத்த நாள், கிஷிடா, மற்றும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் தலைவர்களுடன் சீனாவுக்கு எதிரான ஒரு அரை-இராணுவக் கூட்டணியான நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quadrilateral Security Dialogue-Quad) உச்சிமாநாட்டில் பைடென் பங்கேற்பார்.

Loading