மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்தக் கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.
திமோதி ஸ்னைடரின் நியூ யோர்க் டைம்ஸின் “நாங்கள் அதைக்கூற வேண்டும். ரஷ்யா பாசிச நாடு' என்ற கருத்து தெரிவிக்கும் பத்தியில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை சட்டபூர்வமாக்குவதை நோக்கமாகக் கொண்ட வரலாற்றுப் பொய்மைப்படுத்தலின் நேர்மையற்ற புரவலரான யேல் பல்கலைக்கழக பேராசிரியரின் பாத்திரத்தின் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.
ரஷ்யா 'பாசிச அழிவுப் போருக்காக போராடுகிறது' என்று ஸ்னைடர் எழுதி, மேலும் 'இதில் ரஷ்யா வென்றால், உலகெங்கிலும் உள்ள பாசிவாதிகள் ஆறுதலடைவார்கள்' என்று எச்சரிக்கிறார்.
இந்தக் கூற்று நேட்டோ கூட்டணியில் வலதுசாரி அரசாங்கங்கள் மற்றும் சக்திவாய்ந்த வலதுசாரி தீவிரவாத இயக்கங்களின் ஈடுபாட்டை மட்டும் புறக்கணிக்கவில்லை. மாறாக அசோவ் பட்டாலியனின் உக்ரேனிய பாசிவாதிகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் முன்னணியில் உள்ளனர் என்ற உண்மையை ஸ்னைடர் மீண்டும் மறைக்கிறார்.
ரஷ்யா 'பாசிசம்' என்ற ஸ்னைடரின் கூற்று, பாசிசத்தை 'நியாயத்தின் மீதான விருப்பத்தின் வெற்றி' என்று அவர் வரையறை செய்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு வரலாற்று, அரசியல் மற்றும் சமூகவியல் நிலைப்பாட்டில் இருந்து, இந்த உளவியல் அடிப்படையிலான 'வரையறை' பயனற்றது.
ஆட்சியின் தோற்றம், மக்களின் அடித்தளம் மற்றும் சமூக-பொருளாதார நலன்கள் பற்றி இது எதையும் விளக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் உட்பட பல அரசாங்கங்கள் மற்றும் எண்ணற்ற அரசியல் கட்சிகள் 'நியாயத்திற்கு மேலான விருப்பத்தை' எடுத்துக்காட்டுகின்றன. அது மட்டும் அவர்களை பாசிசவாதிகளாக ஆக்கிவிடாது.
'கல்வியாளர்கள் பயன்படுத்த முயலும் பாசிசத்தின் பெரும்பாலான வரையறைகள் ரஷ்யாவிற்கு பொருத்தமாக இருக்கின்றது' என ஸ்னைடர் வலியுறுத்துகிறார். எந்த கல்வியாளர்கள்? அவர்களை அவர் பட்டியலிடவில்லை. வரையறைகளைப் பொறுத்தவரை, ஸ்னைடர் மூன்றை மட்டுமே அடையாளம் காட்டுகிறார்.
ரஷ்யா 'தனி ஒரு தலைவரைச் சுற்றி ஒரு தனிநபர் வழிபாட்டைக் கொண்டுள்ளது.' ஸ்னைடர் தனது விதிமுறைகளை இங்கும் வரையறுக்கவில்லை. ஒரு தனிநபர் வழிபாட்டு நிலை போன்ற ஒன்றை வழங்கும் புட்டினின் பரந்த ஆதரவின் குறிப்பிட்ட அம்சம் என்ன? இது புட்டினின் மேலாதிக்கப் பாத்திரத்திற்கு அடித்தளமாக இருக்கும் சமூக மற்றும் அரசியல் இயக்கவியல் பற்றி எதுவும் விளக்கவில்லை.
இரண்டாவது வரையறை என்னவென்றால், ரஷ்யா 'இரண்டாம் உலகப் போரைச் சுற்றி ஒழுங்கமைக்கப்பட்ட இறந்தவர்களின் வழிபாட்டைக் கொண்டுள்ளது' என்பதாகும். இதன் பொருள் என்ன? சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பை தோற்கடிக்கும் போராட்டத்தில் சுமார் 30 மில்லியன் மக்கள் இழந்ததை ரஷ்யா நினைவில் வைத்திருக்கின்றது.
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இழந்த உயிர்களுக்கு மரியாதை செலுத்துவது, கடந்த காலப் போர்களில் உயிரிழந்தவர்களுக்கு பல நாடுகள் செலுத்திய அஞ்சலியை விட எவ்வாறு வேறுபட்டது? அமெரிக்க நினைவு தினம், பெயர் அறியப்படாத சிப்பாயின் கல்லறை மற்றும் ஆர்லிங்டன் கல்லறை ஆகியவை 'இறந்தவர்களின் தனிநபர் வழிபாட்டிற்கான' எடுத்துக்காட்டுகளா?
ஸ்னைடரின் மூன்றாவது வரையறை 'பேரரசின் மகத்துவத்தின் ஒரு கடந்த பொற்காலத்தின் கட்டுக்கதை. இது உக்ரேன் மீதான கொலைகாரப் போர் என்ற குணப்படுத்தும் வன்முறையின் போரால் மீட்டெடுக்கப்பட வேண்டும்'.
படையெடுப்பை நியாயப்படுத்த பிற்போக்குத்தனமான பெரும் ரஷ்ய தேசியவாதத்திற்கு புட்டின் அழைப்புவிடும் அதே வேளையில், உக்ரேனை தாக்கும் முடிவில் 'பேரரசின் மகத்துவத்தின் கடந்த பொற்காலம்' பற்றிய கனவுகள் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தன அல்லது இந்த அழைப்பீடு பாரிய ஆதரவை ஈர்க்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
உக்ரேனை தாக்கும் புட்டினின் முடிவு, நேட்டோவின் விரிவாக்கத்திற்கான பிரதிபலிப்பாகும். இந்த விரிவாக்கம், ரஷ்ய தேசிய அரசின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை அச்சுறுத்துகிறது. இது அடிப்படையில் பூர்சுவா-முதலாளித்துவ சொற்களினால் கிரெம்ளினால் வரையறுக்கப்பட்டது.
இந்த ரஷ்யாவின் படையெடுப்பு, ஏகாதிபத்திய-உந்துதல் கொண்ட பிராந்தியத்தை வெற்றிகொள்ளும் ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதற்கு எந்த முக்கியமான ஆதாரமும் இல்லை. இது ஹிட்லரின் ஆக்கிரமிப்புப் போருடனோ அல்லது 1990 முதல் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதில் அமெரிக்கா நடத்திய போர்களுடனோ ஒப்பிடக்கூடியது அல்ல.
எனவே ரஷ்யா பாசிச நாடு என்று ஸ்னைடரின் கூற்று முற்றிலும் உளவியல்ரீதியான குணாதிசயத்தின் மூன்று வரையறைகளை அடிப்படையாகக் கொண்டது. 1) 'தனி ஒரு தலைவரைச் சுற்றியுள்ள வழிபாடு' 2) 'இறந்தவர்களின் வழிபாட்டு முறை'; மற்றும் 3) 'பேரரசின் மகத்துவத்தின் கடந்த பொற்காலம் பற்றிய கட்டுக்கதை.'
இந்த திட்டவட்டத்தின் அறிவுசார் திவால்நிலை பாசிசம் பற்றிய எந்த தீவிர வரலாற்றாசிரியருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஸ்னைடரின் கலவை திவாலானது மட்டுமல்ல. அரசியல்ரீதியாக மோசமான நோக்கங்களுடன் வரலாற்றின் ஒரு கோரமான பொய்மைப்படுத்தலை நியாயப்படுத்துவதற்கு இது முன்னெடுக்கப்படுகின்றது.
ஸ்னைடர் எழுதுகிறார்: 'உக்ரேன் ஒரு பாசிசப் போரின் இலக்காக இருப்பது இது முதல் முறை அல்ல. 1941 இல் ஹிட்லரின் முக்கிய போர் நோக்கம் இந்நாட்டை கைப்பற்றுவதாக இருந்தது”.
ஜூன் 22, 1941 இல், நாஜி ஜேர்மனி உக்ரேன் ஒரு பகுதியாக இருந்த சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது. இப்படையெடுப்பின் நோக்கம் சோவியத் அரசின் மொத்த அழிவும், அதன் மக்கள் தொகையின் பெரும்பகுதியை அழித்தல் மற்றும் ஸ்லாவிய மக்களை 'கீழ்த்தரமான மனிதர்களாக' அடிமைப்படுத்துதலாகும்.
வரலாற்றாசிரியர் ஸ்டீபன் ஜி. பிரிட்ஸ் தனது கிழக்குப் போர்: கிழக்கில் ஹிட்லரின் அழிப்புப் போர் என்பதில் பின்வருமாறு எழுதுகிறார்
கிழக்கில் நடந்த போரில் ஹிட்லர் தவறித்தடக்கி விழுந்துவிடவில்லை. அவரைப் பொறுத்தவரை, 'சரியான' போர் எப்போதும் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரானது. ஏனெனில் அவருக்கு ஜேர்மனியின் விதி வாழ்விற்கான இடத்தை (Lebensraum) அடைவதையும் 'யூதப் பிரச்சினையைத் தீர்ப்பதையும்' சார்ந்திருந்தது. இவை இரண்டும், சோவியத் ஒன்றியத்தை அழிப்பதில் தங்கியிருந்தன.
இவற்றில் எது மிக முக்கியமானது? ஹிட்லரின் கருத்துக்களைப் பொறுத்தவரை, அவற்றை முதன்மைப்படுத்தவோ அல்லது பிரிக்கவோ முயற்சிப்பது செயற்கையானதாக இருக்கும். அவரைப் பொறுத்தவரை, 'யூத-போல்ஷிவிசத்திற்கு' எதிரான போர் மற்றும் வாழ்விற்கான இடத்தை போர் விரிவானது மற்றும் ஒன்றுலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதது.
நாஜி படையெடுப்பின் முக்கிய மற்றும் சுயாதீன இலக்கான சோவியத் ஒன்றியத்திலிருந்து உக்ரேனை ஒரு தனி அமைப்பாக முன்வைப்பதன் மூலம் ஸ்னைடர் உக்ரேனிய பாசிஸ்டுகளின் தவறான கட்டுக்கதையை பின்னோக்கிச்சென்று தழுவுக்கொள்கின்றார்.
ஆனால் சமகால உக்ரேனிய பாசிசத்தை மூடிமறைப்பதும் மற்றும் அவரது கொடூரமான ரஷ்ய-எதிர்ப்பு பிரச்சாரமும் ஸ்னைடர் வரலாற்றைப் பொய்மைப்படுத்தும் கட்டுக்கதையில் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்கின்றன.
Bloodlands என்ற தனது புத்தகத்தில், ஸ்னைடர் இன்றைய அசோவ் பட்டாலியன் மற்றும் தொடர்புடைய நவ-நாஜி இயக்கங்களின் மூதாதையர்களான ஸ்டீபன் பண்டேரா தலைமையிலான உக்ரேனிய பாசிஸ்டுகள் சோவியத் ஒன்றியம் மீதான ஜேர்மன் படையெடுப்பை வரவேற்று யூதர்கள் மற்றும் போலந்து மக்களின் கொலையில் ஒத்துழைத்தார்கள் என்ற உண்மையை மறைக்கிறார்.
ஜனநாயகத்தின் தலைவிதி ரஷ்யாவின் தோல்வியில் தங்கியுள்ளது என்ற கூற்றுடன் ஸ்னைடர் முடிக்கிறார். 'உக்ரேன் வெற்றிபெறவில்லை என்றால், பல தசாப்தங்களாக இருளை நாம் எதிர்பார்க்கலாம்' என்று அவர் அறிவிக்கிறார். ஸ்னைடர் சொல்வது சரியென்றால், உலகம் 'இருளிலிருந்து' பாரதூரமான ஆயுதம் ஏந்திய உக்ரேனிய பாசிசவாதிகளால் பாதுகாக்கப்படும்?
ஊடகவியலாளர் மைக்கல் கோல்போர்ன் ஒரு நீண்ட ஆய்வில், 'உலகெங்கிலும் உள்ள மற்ற தீவிர வலதுசாரி இயக்கங்களுக்கு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் பணியாற்றும் மற்றும் தொடர்ந்து சேவை செய்யும் இயக்கம்' என்று விவரிக்கும் அசோவ் பட்டாலியனால் ஜனநாயகம் எவ்வாறு காப்பாற்றப்படும்?
ஸ்னைடரின் பணி புத்திஜீவித்தனமாக மதிப்பற்றது என்பதை அறிந்த பல வரலாற்றாசிரியர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் அவரது பிரபல்யத்தால் பயமுறுத்தப்படுகிறார்கள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் கட்டுக்கதையை சவால் செய்யப் பயப்படுகிறார்கள். இந்தக் கோழைத்தனமான மௌனத்தை கலைக்க வேண்டிய நேரம் இப்போது வந்தாகிவிட்டது.