சிங்களப் பேரினவாத ஜே.வி.பி. தன்னை மாற்றீடு இலங்கை அரசாங்கமாக முன்னிலைப்படுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்தாண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இலங்கையை பேரழிவில் இருந்து காப்பாற்ற 'அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அவசரத் தேவை' இருப்பதாக அறிவித்தார். 'நாங்கள் தலைமையை ஏற்க தயாராக இருக்கிறோம்,' என்று அவர் அறிவித்தார்.

உண்மையில் பூகோள கோவிட்-19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட ஆழமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியில் இலங்கை முதலாளித்துவம் மூழ்கியுள்ளது. பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டது. ஏற்றுமதி, சுற்றுலா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பண வருகையும் பிரமாண்டமானளவு குறைந்துள்ளதால் அந்நியச் செலாவணி வறண்டு போய், வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறும் அபாயம் உள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க [Source: Anura Kumara Dissanayake Facebook]

பொருளாதாரத்திற்கு முண்டுகொடுக்கும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பிரதிபலித்துள்ளதுடன், தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய சிக்கனச் சுமைகளைத் திணித்துள்ளது.

இது, கடந்த ஆண்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றி பல வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை தூண்டிவிட்டது. கிராமப்புற மாவட்டங்களில், அழிவை எதிர்கொண்டுள்ள விவசாயிகள், உரங்கள் உள்ளிட்ட அடிப்படை விவசாய இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பு ஆளும் வர்க்கத்தின் முள்ளந்தண்டில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை முதலாளித்துவத்தின் பாரம்பரியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆகிய இரண்டும் பிளவுபட்டு, முக்கியத்துவமில்லாத எச்சங்களாக ஆகிவிட்டன.

ஸ்ரீ.ல.சு.க. இல் இருந்து பிரிந்த ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியோ அல்லது ஐ.தே.க. இல் இருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தியோ (ஐ.ம.ச.) பரவலான வெகுஜன ஆதரவைப் பெறவில்லை. இராஜபக்ஷ நிர்வாகம் இராணுவத்தை பெரிதும் நம்பியுள்ளதுடன், பெருகிவரும் அதிருப்திக்கு அடக்குமுறையைத் தவிர அதனிடம் வேறு பதில் இல்லை.

ஜே.வி.பி. இலங்கை முதலாளித்துவத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற தனது சேவைகளை வழங்குவதற்கு மேடையில் ஏறியுள்ளதுடன் அதற்கேற்ப ஊக்குவிக்கப்படுகிறது.

தீவின் தெற்கில் அதிருப்தியடைந்த சிங்கள இளைஞர்களை, மாவோவாதம் மற்றும் கஸ்றோவாதத்தின் விவசாய கெரில்லாவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆழமாக சிங்கள பேரினவாதத்துடன் கலந்த கொள்கையுடனேயே, 1960களில் ஜே.வி.பி. ஸ்தாபிக்கப்பட்டது. அதன் 'ஆயுதப் போராட்டம்' ஒன்றன் பின் ஒன்றாக பேரழிவிற்கு இட்டுச் சென்றது.

ஜே.வி.பி. சோசலிசத்திற்காக போராடுவதாக கூறிக்கொண்டதை நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டுவிட்டது. உலகெங்கிலும் உள்ள இதே போன்ற அமைப்புகளைப் போலவே, ஜே.வி.பி.இயும் வசதியான பாராளுமன்ற ஆசனங்களுக்காக தானியங்கி ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, நீண்ட காலத்திற்கு முன்பே அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னை இணைத்துக் கொண்டது.

டெய்லி மிரர் பத்திரிகையில் ஜே.வி.பி தலைவருடனான உயர்மட்ட நேர்காணல், அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் பற்றிய ஜே.வி.பி.யின் 'அம்பலப்படுத்தல்கள்' அடங்கிய ஊடக செய்தியாக்கங்களின் பகுதியாகும். நாட்டின் நெருக்கடி பற்றி சமீபத்தில் எழுதிய கட்டுரையாளர் ஒருவர், “அவர்தான் பதிலா? ஏன் இருக்க கூடாது?' என்று அனுரகுமார திசாநாயக்கவுக்கு சாதகமாக அறிவித்தார்.

கோவிட்-19 தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட சமூகப் பேரழிவிற்கு மத்தியில் உழைக்கும் மக்களின் அவல நிலை குறித்து எந்தவித அக்கறையும் முழுமையாக இல்லாததை டெய்லி மிரர் பத்திரிகை திஸாநாயக்கவை பேட்டி கண்டமை குறிப்பிடத்தக்கது. மக்களின் உயிர் வாழ்க்கையை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை திஸாநாயக்க ஆதரிப்பதன் காரணமாக முகக்கவசங்கள், பரிசோதனைகள் மற்றும் தொடர்புத் தடமறிதல், பொது முடக்கம் போன்ற அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லை அல்லது “பொருளாதாரத்தை திறந்துவிடும்” அரசாங்கத்தின் குற்றவியல் கொள்கையை பற்றி விமர்சிக்கவில்லை. 2020 ஏப்ரலில் ஜனாதிபதி இராஜபக்ஷவினால் கூட்டப்பட்ட தொற்றுநோய் தொடர்பான அனைத்துக் கட்சி மாநாட்டில் ஜே.வி.பி. பங்குபற்றியதோடு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு தனது ஆதரவை வழங்கியது.

இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியின் ஆழத்திலிருந்து மீட்பதிலேயே திசாநாயக்க பிரத்தியேகமாக கவனம் செலுத்தினார். அவர் ஊழல், விரயம் மற்றும் தவறான நிர்வாகத்தை மட்டுமே குற்றம் சாட்டினாரே அன்றி, திவாலான இலாப முறைமையைப் பற்றி அவர் பேசவே இல்லை. அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் சுயநல அரசியல்வாதிகளுக்குப் பதிலாக, தொற்றுநோயால் அளவிடமுடியாத அளவிற்கு உக்கிரமடைந்த உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியில் வேரூன்றியிருக்கும் ஒரு பொருளாதார இக்கட்டு நிலையை புதிய முகங்கள் மீட்டெடுக்கும் என்பது போன்று, திசாநாயக்க துறைசார் வல்லுனர்களின் அரசாங்கத்தை பிரேரிக்கின்றார்.

ஜே.வி.பி. அதனுடன் இணைந்த, கட்சியின் முன்னணி அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆதரவான கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் தீவிரவாதிகளின் தொகுப்பான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச) என்பதை அமைத்துக்கொண்டுள்ளது. முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சிகளுடன் ஒப்பிடும்போது, ஜே.வி.பி. மற்றும் தே.ம.ச.வுக்கு 'விடையதானங்களோடு அதிக தகுதி வாய்ந்தநபர்களைக் கொண்ட ஒரு அமைச்சரவையை நியமிக்க முடியும்' என்று திஸாநாயக்க பெருமிதம் கொண்டார்.

வெற்று நம்பிக்கைகள் மற்றும் வார்த்தை ஜாலங்களின் தொகுப்பைத் தவிர வேறொன்றும் இல்லாத கட்சியின் 'தேசியத் திட்டத்தை' திசாநாயக்க முன்வைக்கும்போது, அது ஜே.வி.பி.யின் முன்னோக்கின் வங்குரோத்துக்கு சாட்சியமளிக்கின்றது. உலகப் பொருளாதார நெருக்கடி பற்றி அவர் குறிப்பிடவே இல்லை.

* நாட்டை தவிர்க்கமுடியாத தவணைத் தவறல் நிலையில் இருந்து காப்பாற்ற, ஜே.வி.பி. மூன்று வருட கடன் தீர்ப்பு ஒத்திவைப்பை கோர எதிர்பார்க்கின்றது. சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை அது எப்படி அதை ஏற்றுக்கொள்ள வைக்கப் போகிறது என்பது விளக்கப்படவில்லை.

* சிக்கனக்கோரிக்கைகளைத் திணிப்பதில் பேர்போன சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்பதற்கு ஜே.வி.பி. எதிரானது அல்ல என்று திஸாநாயக்க அறிவித்தாதர். கடனுக்கான நிபந்தனைகளின் பட்டியலை தயாரிப்பது சர்வதேச நாணய நிதியம் அன்றி, திவாலின் விளிம்பில் தத்தளிக்கும் இலங்கையே அதை தயாரிப்பதாக எண்ணிக்கொண்டு, அத்தகைய அணுகுமுறை 'எச்சரிக்கையுடன்' மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திஸாநாயக்க நினைக்கின்றார் போலும்.

* வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணப்பரிவர்த்தனையில் திடீர் சரிவை சுட்டிக் காட்டிய பின்னர், ஜே.வி.பி. புலம்பெயர் தொழிலாளர்கள் பணத்தை அனுப்ப ஊக்குவிப்புகளை வழங்கும் என்று திஸாநாயக்க அறிவித்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதற்குத் தயங்குவதற்கான பிரதான காரணமாக உள்ள, ரூபாயின் கட்டுப்பாடற்ற சரிவை ஜே.வி.பி. எவ்வாறு தடுக்கும் என்பதை அவர் விளக்கவில்லை.

* ஜே.வி.பி. அதன் வர்க்க நோக்குநிலையை வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள பணக்கார இலங்கையர்களை உள்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப் போகிறது. அவர்கள் எதில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்த வரையில், இதற்கு முன்பு யாரும் இந்த விருப்பங்களை முயற்சிக்கவில்லை என்பது போல், இலங்கையின் பாரம்பரிய பயிர்களும் மென்பொருள் துறையும் இலாபகரமான வாய்ப்புகள் என்ற பிரகாசமான யோசனையை ஜே.வி.பி. முன்வைத்துள்ளது.

உண்மையில், இந்த ஆடம்பரமான தேசியத் திட்டம், ஜே.வி.பி. இலங்கை முதலாளித்துவத்தை ஆதரிக்கும் என்றும் அதன் நலன்களுக்காக எப்போதும் செயல்படும் என்றும் பெருவணிகத்திற்கு வழங்கும் உறுதிமொழியைத் தவிர வேறில்லை. தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தை திசைதிருப்ப, பிளவுபடுத்த மற்றும் தடம்புறளச் செய்ய ஒரு கருவியாகப் அதைப் பயன்படுத்த முடியுமான என்பதே, ஜே.வி.பி. சம்பந்தமாக ஆளும் வர்க்கத்திற்கு காணப்படும் உண்மையான ஆர்வம் ஆகும்.

அந்த நேர்காணலுக்கான டெய்லி மிரரின் அறிமுகம், ஜே.வி.பி 'சமூகத்தின் அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் அதன் ஜனரஞ்சகத்தில் ஈர்க்கக் கூடிய முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளது. உண்மையில், கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை முதலாளித்துவ பாரம்பரியக் கட்சிகளுடன் அது கொண்ட இழிவான சூழ்ச்சிகள் மற்றும் கூட்டணிகளின் விளைவாக ஜே.வி.பி.யின் ஆதரவு சரிந்துள்ளது.

2004 இல், அது 39 பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருந்ததோடு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தது. அதில் அதன் நான்கு அமைச்சர்கள் சந்தை சார்பு திட்ட நிரலைத் திணிப்பதற்குப் பொறுப்பாக இருந்தனர். ஜே.வி.பி. கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி என்ற குடையின் கீழ் போட்டியிட்டு மூன்று ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது. இரண்டு ஜே.வி.பி. உறுப்பினர்கள் மட்டுமே வென்றனர்.

ஜே.வி.பி.க்கு தற்போது மூன்று எம்.பி.க்களை கொண்டுள்ள நிலையில், 'ஊழல்' மிக்க பாரம்பரிய கட்சிகளுடனான கூட்டணியை நிராகரிக்கும் அதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்கு இன்னும் மூன்று வருட கால அவகாசம் உள்ள நிலையில், ஜே.வி.பி. எவ்வாறு அரசாங்கத்தை அமைக்க முன்மொழிகிறது என்று கேட்ட போது, திஸாநாயக்க வேறு வழிகளில் ஆட்சிக்கு வரும் எனக் கூறினார் .

“அரசாங்கத்தை மாற்றுவது தொடர்பாக எங்களின் முதல் விருப்பம் தேர்தல்தான். ஆனால் இந்த ஊழல் மற்றும் பேரழிவு ஆட்சிகளை மக்கள் தெருவில் இறங்கி எப்படி கவிழ்த்துள்ளனர் என்பதை உலகில் நாம் பார்த்திருக்கிறோம். அதுவும் ஜனநாயகம்தான். அது எங்கள் திட்டம் இல்லையென்றாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்... எனவே இன்னும் மூன்று வருடங்கள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என அவர் தெரிவித்தார்.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் ஜே.வி.பி. தலையீடு செய்யுமா என்று கேட்கப்பட்டதற்கு,: “ஆம். நாடு ஒரு தோல்வியுற்ற நாடாக மாறும் அபாயம் ஏற்பட்டால், சமூக நிறுவனங்களில் சீர்குலைவு ஏற்பட்டால், ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில் அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது,” என திஸாநாயக்க அறிவித்தார்

தொழிலாளர்களினதும் ஏழைகளினதும் பெருகிவரும் வெகுஜன இயக்கத்தின் மத்தியில், ஜே.வி.பி. இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு முதலாளித்துவ ஆட்சிக்கு எந்த சவாலையும் செய்யவில்லை என்பதைக் காட்டுவதற்காக அதன் சேவைகளை வழங்கி வருகிறது. ஜே.வி.பி. இன்றுவரை செய்துள்ள அனைத்தும், முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அல்ல, மாறாக அதை காப்பாற்றுவதில் உறுதியாக உள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

கடந்த சில மாதங்களில், இந்த கட்சி ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள், மின்சாரம், துறைமுகங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள அதன் தொழிற்சங்கங்கள் மூலம், ஊதிய அதிகரிப்பு, மற்றும் வாழ்க்கை நிலைமைகள் அபிவிருத்திக்காக தொழிலாளர்கள் முன்னெடுத்த தொடர்ச்சியான போராட்டங்களை மட்டுப்படுத்தவும், சலுகைகளை வழங்குமாறு பெரிய வணிகங்களுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்ற மாயையை விதைக்கவும் வேலை செய்தது.

கடந்த ஆண்டு நவம்பர் 24 அன்று, ஜே.வி.பி. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத், பெருவணிக தலைவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சூம் கூட்டத்தில், 'பாரிய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு தற்காலிகமாக உதவுவதற்கு தனது கட்சி தயாராக உள்ளது' என்று கூறினார்.

அரசாங்கம் தயாராக இருந்தால், ஜே.வி.பி 'அத்தியாவசியமான நிதி ஒழுக்கம் மற்றும் முகாமைத்துவம் குறித்து ஒருமித்த கருத்துக்கு வரும்' என்று ஹேரத் உறுதியளித்தார். இத்தகைய 'நிதி ஒழுக்கம்' தவிர்க்க முடியாமல் உழைக்கும் மக்கள் மீது புதிய சிக்கன நடவடிக்கைகள் மற்றும் புதிய சுமைகளைத் திணிப்பதைக் குறிக்கும். இராஜபக்ஷ ஆட்சி இந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்றாலும், ஹேரத்தின் கருத்துக்கள், பெருவணிகத்திற்கான அதன் ஆதரவையும், வாழ்வாதாரத்தை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுப்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

தனது டெய்லி மிரர் நேர்காணலில், அவர் தேசத்தின் நாயகனாக காட்டிக் கொள்ள முற்பட்ட நிலையில், அது ஒரு புதிய அத்தியாயத்துக்கு மாறி, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சம உரிமையை நிலைநாட்டுவதாகக் கூறிய ஜே.வி.பி. தலைவர் திசாநாயக்க, கட்சியின் பிற்போக்கு சிங்களப் பேரினவாத அரசியலை நிராகரிக்க முற்பட்டார்.

ஜே.வி.பி. எப்போதும் சிங்கள மேலாதிக்கத்தின் ஈவிரக்கமற்ற ஆதரவாளராக இருந்ததுடன், 1983 இன் தொடக்கத்தில் இருந்தே, தமிழர் விரோதப் படுகொலையைத் தொடர்ந்து, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான இனவாதப் போரை ஆதரித்தது.

2005 இல், ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை முறித்து, பிற்போக்கு இனவாத யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சியை ஜே.வி.பி. ஆதரித்தது. 2009 மே மாதம் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும் படுகொலை செய்யப்பட்டபோது, போரின் இரத்தம் தோய்ந்த முடிவுக்கு, இராணுவத்திற்கு உற்சாகமூட்டும் தலைவர்களாகவும், போர்க்குற்றங்களுக்கு மன்னிப்பு கோருபவர்களாகவும் ஜே.வி.பி. செயல்பட்டது.

'சாதாரண தமிழ் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி இன்னும் தீவிரமாகச் கட்சி சிந்தித்திருக்க வேண்டும், நாங்கள் எங்கள் பொறுப்புகளில் தவறிவிட்டோம், அதைப் பற்றிய சுய பகுப்பாய்வு எங்களுக்கு உள்ளது,” என்ற திஸாநாயக்கவின் சுயநலப் பிரகடனத்தை யாரும் நம்பிவிடக் கூடாது. எந்த சிரமங்கள் பற்றி குறிப்பிடுகின்றார்? ஜே.வி.பி. என்ன பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியது? அது செய்த சுயபகுப்பாய்வு என்ன?

திசாநாயக்கவின் சுயவிமர்சன பிரகடனம் எதையும் விளக்காததோடு முற்றிலும் அர்த்தமற்றது. சாதாரண தமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் எண்ணம் ஜே.வி.பி.க்கு இல்லை. இது தமிழ் மற்றும் முஸ்லீம் உயரடுக்கின் மதிப்பிழந்த கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இலக்கு வைக்கப்பட்டதாகும் –அதாவது ஜே.வி.பி. அவற்றுடன் சேர்ந்து செயற்பட தயாராக இருப்பதாக திஸாநாயக்க அறிவிக்கிறார்.

சிறுத்தை அதன் புள்ளிகளை மாற்றிக்கொள்ளவில்லை. 21 ஏப்ரல் 2019 அன்று தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, சிங்கள பௌத்த இனவாதிகள் வசைபாடிய இழிந்த முஸ்லிம்-விரோத பேரினவாதத்தின் கூச்சலில் ஜே.வி.பி.யும் இணைந்துகொண்டது. ஜே.வி.பி.யும் திஸாநாயக்க மற்றும் ஏனைய ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்றத்தில் அனைத்து முஸ்லீம் மக்களும் பொறுப்பாளிகள் போல, அனைத்து முஸ்லிம்களும் தாக்குதலை கண்டிப்பதுடன் இராணுவம் தலைமையிலான தேடுதல் வேட்டைக்கு உதவ வேண்டும் எனக் கோரினர்.

இறுதி எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட வேண்டும். ஜே.வி.பி. தொழிலாள வர்க்கத்தின் மீதான கொலைகார சரீரத் தாக்குதல்களை நடத்துவதில் கடந்த காலத்தில் பேர் போனது. ஆளும் வர்க்கம் ஜே.வி.பி. மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பின் பிரதான ஈர்ப்பு இதுவே ஆகும். 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் அரசங்கம் நாட்டை பிளவுபடுத்திவிட்டதாக குற்றம் சாட்டி, அதை ஜே.வி.பி. கசப்புடன் எதிர்த்தது. புலிகளை நிராயுதபாணியாக்க வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய அமைதி காக்கும் படையினரை இறக்குவதற்கு அந்த ஒப்பந்தம் வழியமைத்தது.

ஜே.வி.பி. ஒரு இழிந்த சிங்கள இனவாத பிரச்சாரத்தை தூண்டிவிட்டது. அதில் தொழிலாளர்களை வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்குமாறு துப்பாக்கி முனையில் கட்டளையிட்டது. தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் உட்பட 'தேசத்தைக் காப்பாற்றுவதற்கான' ஜே.வி.பி.யின் பிரச்சாரத்தின் அரசியல் எதிரியாக கருதப்பட்ட எவரையும் அதன் ஆயுததாரிகள் சுட்டுக் கொன்றனர்.

ஒப்பந்தத்தை எதிர்த்த சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று உறுப்பினர்களையும் ஜே.வி.பி. படுகொலை செய்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழம் அந்த உடன்படிக்கையை எதிர்த்தது, ஜே.வி.பி.யின் 'தேசத்தைக் காப்பாற்றுதல்' என்ற நிலைப்பாட்டில் இருந்து அல்ல, மாறாக முதலாளித்துவத்தின் வடிவமைப்புகளுக்கு எதிராக தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கே ஆகும்.

கோவிட்-19 தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட ஆழமடைந்துவரும் நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்கும் புரட்சிகரப் பணியானது அத்தியாவசியமானதும் அவசரமானதுமாகியுள்ளது. மிக அடிப்படையான ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க, தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச மாற்றுக்கான போராட்டத்தை கையிலெடுத்து, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளை தம் பக்கம் ஈர்த்துக்கொள்ள வேண்டும். ஜே.வி.பி. உட்பட முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து அரசியல் கருவிகளுக்கும் எதிராக சோசலிச சமத்துவக் கட்சி இன்று போராடும் முன்னோக்கு இதுவே ஆகும்.

Loading