இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவிற்கு எதிரான உழைக்கும் மக்களின் பாரிய எழுச்சி, முதலாளித்துவ ஆட்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் என அஞ்சி, அதனை தடம் புரளச்செய்யவும், சிதறடிக்கவும், நசுக்கவும் இலங்கை எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களும் அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டுமெனக் கோரி ஏப்ரல் தொடக்கத்தில் பாரிய எதிர்ப்பு வெடித்ததோடு, அந்த எதிர்ப்புக்களை நசுக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் அவை முறியடித்தன.
இப்போது தொழிலாளி வர்க்கம் ஒரு வர்க்கமாக போராட்டத்தில் இறங்கத் தொடங்கியுள்ளது. மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் போட்ட தடைகளையும் மீறி ஏப்ரல் 28 அன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் கோபத்தின் காரணமாக, தொழிற்சங்கங்கள் மே 6 அன்று மற்றொரு ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன.
விலைவாசி அதிகரிப்புக்கும் அடிப்படை உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள் பற்றாக்குறை, தினசரி மின்சார வெட்டுக்கள் ஆகியவற்றால் இந்த வெகுஜன எதிர்ப்புக்கள் தூண்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டையும் போலவே, உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோயினாலும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினாலும் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொள்கிறது.
கடந்த செவ்வாய்கிழமை ஊடகங்களிடம் பேசிய எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திசாநாயக்க, நாட்டின் நெருக்கடியை 'தீர்ப்பதற்கு' தனது கட்சியின் முன்மொழிவுகள் என்று அழைக்கப்படுவதை முன்வைத்தார். 'அரசியல் ஸ்திரமின்மையைத் தணிக்காமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாது' என்று அவர் வலியுறுத்தினார் - வேறுவிதமாகக் கூறினால், வெகுஜன எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களை நசுக்க ஒரு வழி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் இராஜினாமா செய்த பின்னர், குறுகிய கால இடைக்கால அரசாங்கம் அமைப்பதோடு, 'நிலையான அரசாங்கத்தை' அமைக்க பொதுத் தேர்தல்கள் நடந்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் ஏனைய குழுக்களாலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை ஜே.வி.பி.யும் ஆதரிக்கிறது.
இந்த முன்மொழிவுகள் “நியாயமான' தீர்வுகளாகத்” தோன்றினாலும், ஜே.வி.பி. அத்தகைய இடைக்கால அரசாங்கத்தில் இணைந்துகொள்ளாது என்று திஸாநாயக்க கூறினார். இவ்வாறான ஆட்சியில் பங்குபற்றும் தரப்பினர் “எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை முடியும்” என அவர் சுட்டிக்காட்டினார்.
திசாநாயக்க சற்றே வேறுபட்ட ஒன்றை முன்மொழிந்தார். ஜனாதிபதியும் அரசாங்கமும் இராஜினாமா செய்த பின்னர், “நாம் மிகக் குறுகிய காலத்திற்கு ஒரு இடைக்கால பாராளுமன்ற நிர்வாகத்தை உருவாக்கி, விரைவில் தேர்தலுக்கு செல்ல வேண்டும்” என்று அவர் கூறினார். 'ஒரு இடைக்கால பாராளுமன்ற நிர்வாகத்தை' எப்படி உருவாக்குவது அல்லது அதில் யார் பங்கேற்பார்கள் மற்றும் 'ஒரு இடைக்கால அரசாங்கத்தில்' இருந்து அது எவ்வாறு வேறுபடும் என்பதற்கு அவர் விளக்கம் தரவில்லை.
எவ்வாறாயினும், ஜே.வி.பி.யின் முன்மொழிவுகளின் அரசியல் நோக்கம் முற்றிலும் தெளிவாக உள்ளது – அது எதிர்ப்பு இயக்கத்தை நசுக்குவதாகும். ஐ.ம.ச.வைப் போலவே, முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு புதிய கலவையானது மோசமடைந்து வரும் சமூக நெருக்கடியைத் தணிக்கும் என்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையில், தொழிலாளர்கள், இளைஞர்கள் ஏழைகளின் கோபத்தை பாராளுமன்றத் தேர்தல் என்ற முட்டுச் சந்துக்குள் திசை திருப்புவதாகும்.
ஜே.வி.பி.யின் தலையீடு ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. சமமான வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து (ஐ.தே.க.) பிரிந்த வலதுசாரி ஐ.ம.ச. போல் அல்லாமல், ஜே.வி.பி.யானது மாவோயிசம், காஸ்ட்ரோயிசம், சிங்கள தேசபக்தியின் நச்சு கலவையின்' அடிப்படையிலான, “ஆயுதப் போராட்டத்தை' பிரேரிக்கும், 1960கள் மற்றும் 1970களில் சிங்கள இளைஞர்களின் குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்கத்தில் இருந்து தோற்றம் பெற்றதாகும்.
அதன் பேரழிவுகரமான 'ஆயுதப் போராட்டம்' மற்றும் சோசலிச மற்றும் மார்க்சிச பாசாங்குகளை நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டு விட்ட ஜே.வி.பி., இப்போது முதலாளித்துவ வர்க்கத்தினதும் அதன் ஆட்சியினதும் மீட்பராக தன்னை முன்னோக்கித் தள்ளுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய திஸாநாயக்க, 2001ல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் (ஸ்ரீ.ல.சு.க.) தனது கட்சியே அதிகாரத்தில் வைத்திருந்ததாக வெட்கமின்றி பெருமையடித்தார். 2004இல் ஒரு ஜனாதிபதியாக ஐ.தே.க. அரசாங்கத்தை பதவி விலக்க குமாரதுங்க எடுத்த முடிவை ஜே.வி.பி. ஆதரித்தது. 'நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அந்த நேரத்தில் நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்தோம்' என்று ஜே.வி.பி. தலைவர் பெருமையாக அறிவித்தார்.
2001 இல், குமாரதுங்கவின் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பல பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களுக்கான அழைப்புக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சியான ஐ.தே.க.யில் இணைந்தனர். நச்சுத்தனமான சிங்கள பேரினவாதக் கட்சியான ஜே.வி.பி., விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு சமாதானப் பேச்சுக்களையும் எதர்த்து, இனவாதப் போரைத் தொடர அழைப்பு விடுத்து, குமாரதுங்க நிர்வாகத்தை 'வெளியில் இருந்து' ஆதரித்தது.
விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு குந்தகம் விளைவிப்பதற்காக, 2004 இல் ஐ.தே.க. அரசாங்கத்தை கவிழ்க்க குமாரதுங்க எடுத்த முடிவை ஜே.வி.பி.யும் ஆதரித்தது. அதன் பின்னர் புதிய பொதுத் தேர்தலில் போட்டியிட குமாரதுங்கவுடன் தேர்தல் கூட்டணியில் நுழைந்து, அவருன் கை கோர்த்தது. நான்கு அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சந்தை சார்பு ஆணையை அமல்படுத்துவதில் அதன் அமைச்சர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய சமூக நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மாறாக, 'அரசியல் ஸ்திரத்தன்மையை' உறுதிப்படுத்தவும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்கவும், தனது கட்சி எப்போதும் தயாராக உள்ளது என்பதை ஆளும் வர்க்கத்திற்கு உணர வைப்பதற்காக, ஜே.வி.பி.யின் துரோகத்தனமான கடந்த காலத்தை திஸாநாயக்க சுட்டிக்காட்டுகிறார்.
“நிலைமை மாறிவிட்டது” என ஜே.வி.பி. தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதியையோ அரசாங்கத்தையோ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார். இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது அனைத்துக் கட்சி அரசாங்கத்தையோ உருவாக்குவதனால் ஸ்திரமின்மைக்கு தீர்வு காண முடியாது. ஒரு பொதுத் தேர்தலுக்கு செல்வதுதான் ஒரே தீர்வு என்பதையே அவர் அர்த்தப்படுத்துகிறார்.
புதிய தேர்தலுக்கான அழைப்பானது, '74 ஆண்டுகால ஆட்சியின் சாபம் வேண்டாம்', '74 ஆண்டுகள் நாட்டை ஆண்டவர்களே இன்றைய நெருக்கடிக்கு காரணம்!' 'பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரே நெருக்கடிக்கு பொறுப்பு' என்பவை உட்பட கடந்த மாதத்தில் எழுப்பப்பட்ட பல எதிர்ப்பு கோஷங்களுடன் முரண்படுகிறது.
இந்த முழக்கங்கள் தற்போதைய நெருக்கடிக்கு அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளுமே பொறுப்பு, முழு முதலாளித்துவ ஸ்தாபனமும் உழைக்கும் மக்களின் செலவில் பணக்காரர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது, அவை 1948ல் பெயரளவு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதையே செய்து வருகின்றன என்ற வளர்ந்து வரும் விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது.
ஸ்தாபனத்தில் உள்ள ஏனைய கட்சிகளைப் போலவே, ஜே.வி.பி.யும் இந்த இயக்கத்தை ஏமாற்றி திசைதிருப்ப துடிக்கிறது. தேர்தலின் பின்னர் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும், என்ன செய்யுவுள்ளன என்பது குறித்து, திஸாநாயக்க மௌனம் சாதிக்கிறார். புதிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளுக்கு இணங்க தவிர்க்க முடியாமல் மக்கள் மீது பெரும் சுமையைத் திணிக்கும்.
அவசரகால பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே வாஷிங்டனுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பியுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், இப்போது அதன் உத்தரவுகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கிறது. இது வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூக நலன்களில் வெட்டுக்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மறுசீரமைப்பதன் மூலம் தொழிலாளர்களினதும் கிராமப்புற ஏழைகளினதும் வாழ்க்கைத் தரத்தில் பிரமாண்டமான தாக்குதலை உள்ளடக்கியதாகும்.
அரசாங்கம் முன்னரே சர்வதேச நாணய நிதியத்தை நாடத் தவறியமை பற்றி ஐ.ம.ச. மற்றும் ஐ.தே.க. குற்றம் சாட்டியுள்ளன. உழைக்கும் மக்களுக்கு அது பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்த ஜே.வி.பி.யும் அதன் தலைவரும் இது பற்றி எதுவும் கூறவில்லை. மாறாக, ஜே.வி.பி., உற்பத்தி சக்திகளின் தனியார் உடைமையையும் இலாபவெறியையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு முதலாளித்துவ அமைப்பினால் உருவான பொருளாதார நெருக்கடிக்கான பழியை, இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தின் மீதும் திருப்ப முயல்கிறது.
'கோட்டாபய இராஜபக்ஷ உள்ளிட்ட கும்பல் தமது கூட்டாளிகளுக்கு இலட்சக்கணக்கான ரூபாய்களை சம்பாதிப்பதற்கு இடமளிக்கும் வகையில் எடுத்த தீர்மானங்களே இந்த நெருக்கடிக்குக் காரணம்,' என்று திஸாநாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன் அனைத்து முன்னோடிகளையும் போலவே, இராஜபக்ஷ அரசாங்கமும், பல வழிகளில் ஊழலில் சிக்கியுள்ளது, ஆனால் முழு பொருளாதார நெருக்கடிக்கும் 'ஊழல்' மீது குற்றம் சாட்டுவது அபத்தமானதாகும். ஒரு புதிய அரசாங்கம் உலக முதலாளித்துவத்தின் பாரிய நெருக்கடியையும், அதன் விளைவாக உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து சமூக சீர்கேடுகளையும் அகற்றும் என்ற மாயையை பரப்புவதற்கு ஜே.வி.பி. செயற்படுகிறது.
ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்படும் எதிர்க்கட்சிகள், இராஜபக்ஷவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கும் போராட்டங்களுக்குள் மட்டுப்படுத்துவதன் மூலம், உழைக்கும் மக்களை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்கி, முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே தற்போதுள்ள சமூகப் பேரழிவிற்கு தீர்வு உள்ளது என்ற மாயையை விதைக்கின்றன.
இராஜபக்ஷ பதவி விலகவில்லை என்றால், ஜேவிபி, அதன் தேசிய மக்கள் சக்தி, (புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுநர்களின் ஒரு தேர்தல் கூட்டணி), அதன் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் அமைப்பு அவரை வெளியேற்றுவதற்கு பெரும் எண்ணிக்கையிலான போராட்டங்களை நடத்தும் என்று திஸாநாயக்க கடந்த வாரம் கர்ஜித்தார். எவ்வாறாயினும், அதன் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் ஒரே நோக்கத்தைக் கொண்டுள்ளன -அதாவது தேர்தல் அரசியலின் முட்டுச்சந்துக்குள் மக்களை திசை திருப்புவதாகும்.
ஜே.வி.பி தொழிற்சங்கங்கள் ஏற்கனவே புதிய இடைக்கால ஆட்சி மற்றும் தேர்தலைக் கோருவதன் மூலம் தொழிலாளர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு, சிறந்த ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைக் கோரி உழைக்கும் மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த ஜே.வி.பி. தொழிற்சங்கங்களும், இராஜபக்ஷ ஆட்சியின் கரத்தை வலுப்படுத்துவதில் முன்னணியில் இருந்தன.
சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ.ச.க.), ஜே.வி.பி உட்பட முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிராக, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு செயலூக்கமான வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. முதலாளித்துவ முறைமைக்குள் உழைக்கும் மக்களுக்கு தீர்வுகள் கிடையாது. தொழிலாள வர்க்கம் அதன் சுதந்திரமான அரசியல் மற்றும் தொழில்துறை சக்திகளை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே தனது உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.
தொழிற்சங்கங்கள், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளில் இருந்து உழைக்கும் மக்கள் சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை ஒவ்வொரு வேலைத் தளத்திலும், ஒவ்வொரு பெருந்தோட்டத்திலும், தொழிலாள வர்க்க பிரதேசங்களிலும் அமைக்க சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.
நடவடிக்கை குழுக்களின் மூலம் உழைக்கும் மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு திட்டத்தை நாங்கள் விரிவாகக் கூறியுள்ளோம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, அவசரகாலச் சட்டம், அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் உடனடியாக நீக்குமாறு கோருகிறோம்.
தற்போதைய சமூகப் பேரழிவை முடிவுக்குக் கொண்டு வர, சிறுபான்மைச் செல்வந்தர்களின் இலாபங்களுக்குப் பதிலாக பெரும்பான்மை மக்களின் எரியும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியது அவசியமாகும். வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்க வேண்டும்! அனைத்து வெளிநாட்டுக் கடனையும் நிராகரிக்க வேண்டும்!
இந்தத் திட்டத்திற்காகப் போராடுவதற்கான நடவடிக்கைக் குழுக்களை அமைப்பது, சோசலிசக் கொள்கைகளைச் செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்கான போராட்டத்திற்கு அடிப்படையை வழங்குகிறது. இந்தப் போராட்டத்தில், சமூக சமத்துவமின்மை, ஏகாதிபத்தியப் போர், கோவிட் தொற்றுநோய் போன்றவற்றின் தோற்றுவாயான முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொது போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து, இந்த நடவடிக்கைக்கு போராடுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.