மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் உக்ரேனுக்குப் பெரும்பாலும் ஆயுதங்கள் மற்றும் பிற உதவிகளுக்குச் செலவிடுவதை அங்கீகரிக்கும் 40 பில்லியன் டாலர் சட்ட மசோதாவில் கையெழுத்திட்டார்.
ஒரு மாதத்திற்கு முன்னர், பைடென் நிர்வாகத்தின் கீழ் உக்ரேனுக்கான அமெரிக்க இராணுவ உதவி மொத்தம் 4 பில்லியன் டாலராக இருந்தது. பைடென் ஒரு பேனாவைக் கொண்டு ஒரே வீச்சில், அந்த மோதலுக்கான அமெரிக்கப் பொறுப்பேற்பைப் பத்து மடங்கு அதிகரித்துள்ளார்.
ஆனால் சமீபத்திய ஆயுத ஏற்றுமதிக்கான அந்தக் கையெழுத்தின் மை காய்வதற்குள், வாஷிங்டன் அந்த மோதலை இன்னும் கூடுதலாக விரிவாக்கச் சென்றது. திங்கட்கிழமை அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் இலாயிட் ஆஸ்டின், டென்மார்க் மூலமாக அமெரிக்கா ஹார்பூன் கப்பல்-தகர்ப்பு ஏவுகணைகளை (Harpoon anti-ship missiles) உக்ரேனுக்கு வழங்கும் என்று அறிவித்தார். ஹார்பூன் ஆயுதங்கள் மிகப் பெரிய போர்க் கப்பல்களையே மூழ்கடிக்கக் கூடிய அமெரிக்கக் கப்பற்படையின் நிலையான கப்பல்-தகர்ப்பு ஆயுதமாகும்.
வெள்ளிக்கிழமை உக்ரேனிய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்சென்கொ (Anton Gerashchenko) ட்வீட் பதிவில், 'துறைமுகங்களை விடுவிக்கும் திட்டத்தின்' ஒரு பகுதியாக '[ரஷ்ய] கருங்கடல் கடற்படைக் கப்பல்களை அழிக்க அமெரிக்கா ஒரு திட்டத்தைத் தயாரித்து வருகிறது' என்று குறிப்பிட்டார். 'சக்தி வாய்ந்த கப்பல் தகர்ப்பு ஆயுதங்களை (250-300 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் ஹார்பூன் மற்றும் கடற்படைத் தாக்கும் ஏவுகணைகளை) வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது,' என்றும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
கருங்கடலில் ரஷ்யக் கடற்படையை அழிப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது என்பதை உத்தியோகபூர்வமாக மறுத்து பென்டகன் விடையிறுத்தது. ஆனால் அது துல்லியமாக அது போன்ற ஒரு நடவடிக்கையில் தான் ஈடுபட்டுள்ளது என்பதைத் திங்கட்கிழமை அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. கடந்த மாதம் ரஷ்யக் கடற்படையின் முதன்மையான போர்க் கப்பல் மொஸ்க்வாவை மூழ்கடித்ததில் அமெரிக்கா ஏற்கனவே நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தது.
வழக்கம் போல, அமெரிக்காவின் இராணுவ விரிவுபடுத்தல் சரமாரியான ஒரு பிரச்சாரப் பொழிவுடன் சேர்ந்துள்ளது. இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அனுதாபிகள், உலகளவில் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காகத் துறைமுகங்களைத் திறந்து விட வேண்டிய அவசியமிருப்பதால் கருங்கடலில் அதிக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருப்பதாக அறிவிக்கின்றனர்.
'உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களைப் புட்டின் பட்டினியில் வாட்டுகிறார்' என்று தலைப்பிட்டு வாஷிங்டன் போஸ்ட் ஒரு தலையங்கம் வெளியிட்டது. 'இப்போது உக்ரேனிய துறைமுகங்களில் 20 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்களும் சோளங்களும் சேமிப்பு கிடங்கில் வெறுமனே கிடக்கின்றன நிலையில், உலகின் பிற பகுதிகளில் பெரும்பான்மை அவற்றால் ஆன மட்டும் சமாளித்துக் கொண்டிருக்கின்றன. திரு. புட்டினின் போர் திரு. புட்டினின் உலகளாவிய பஞ்சமாக மாறும் விளிம்பில் உள்ளது,” என்று குறிப்பிட்டு நிறைவு செய்கிறது.
போஸ்டின் பாசாங்குத்தனம் மலைப்பூட்டுகிறது. அமெரிக்கா தான் பட்டினியை வெளியுறவுக் கொள்கையின் 'ஆயுதமாக' பயன்படுத்தும் உலகின் முன்னணி நடவடிக்கையாளராகும். 1974 இல், விவசாயத் துறைச் செயலர் ஏர்ல் பட்ஸ் (Earl Butz) அறிவிக்கையில், 'உணவு என்பதும் ஓர் ஆயுதம் தான். இது இப்போது எங்கள் பேரம் பேசும் வகைகளில் முக்கிய கருவிகளில் ஒன்றாக உள்ளது என்று அறிவித்தார். 1980 டிசம்பரில், ரீகனின் விவசாயத் துறைச் செயலர் ஜோன் பிளாக் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'உணவை நம்மிடம் உள்ள மிகப்பெரிய ஆயுதமாக நான் நம்புகிறேன்,' என்றார்.
சிலியில் 1973 இல் சால்வடார் அலெண்டே (Salvador Allende) அரசாங்கத்தை அகற்றிய வெற்றிகரமான முயற்சியின் ஒரு பகுதியாக அங்கே உணவுப் பொருள் உதவிகளை அமெரிக்கா நிறுத்தியது மற்றும் கியூபாவுடன் வர்த்தகம் செய்ததற்காக பங்களதேஷைத் தண்டிக்க 1974 இல் ஒரு மிகப் பெரிய பஞ்சத்தின் போது அந்நாட்டுக்கு உணவுப் பொருள் உதவிகளை வெட்டியது ஆகியவைப் பட்டினியை அமெரிக்கா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியதற்கான உதாரணங்களில் உள்ளடங்கும்.
1990 களில் உணவு மற்றும் மருந்துகளை ஈராக் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விதித்த தடையாணைகள், தடுத்திருக்கக் கூடிய நூறாயிரக்கணக்கான மக்களின் மரணத்திற்குப் பங்களிப்பு செய்தது, அதேவேளையில் ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடையாணைகள் உணவு விலைப் பணவீக்கம் கிடுகிடுவென உயர வழி வகுத்தன, அதாவது ஓர் ஆய்வின்படி 'ஆரோக்கியமான உணவு உட்கொள்வது பெரும்பாலான ஈரானியர்களுக்கு மிகவும் கடினமாகி விட்டது.”
தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் உணவு நெருக்கடியைப் பொறுத்த வரை, அடிப்படையிலேயே இதற்கான பொறுப்பு அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் மீது விழுகிறது, இவை தான் தற்போதைய மோதலைத் தூண்டிவிட்டு, போருக்கு ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை ஒவ்வொரு கட்டத்திலும் நாசமாக்க முயன்றுள்ளன.
கருங்கடலின் மீது கட்டுப்பாட்டை நிறுவுவது அமெரிக்காவின் முக்கிய போர் இலக்காக உள்ளது. இந்த நீர்வழி ஐரோப்பா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கிறது. இது எண்ணெய் மற்றும் எரிவாயுவின் முக்கியமான வளங்களைக் கொண்டுள்ளது என்பது மட்டுமல்ல, மாறாக ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் ஹைட்ரோகார்பன் குழாய்களுக்கான முக்கிய இடமாகவும் சேவையாற்றுகிறது.
அமெரிக்கா ரஷ்யாவுடனான அதன் போரை விரிவாக்கிக் கொண்டிருந்தாலும், உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் இரண்டாவது பெரிய பொருளாதாரமும் ஆன சீனாவுடன் போருக்குச் செல்ல பைடென் பகிரங்கமாக அச்சுறுத்தினார்.
ஜப்பானில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய பைடெனிடம், 'தைவான் விவகாரம் வரும் போது அதைப் பாதுகாக்க இராணுவ ரீதியில் நீங்கள் அதில் ஈடுபட விரும்புகிறீர்களா?” என்று கேட்கப்பட்டது.
“ஆமாம்... அதற்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம்,” என்று பைடென் விடையிறுத்தார்.
பைடெனின் கருத்தைத் தவறான அறிக்கையாகவோ அல்லது 'முன்னுக்குப் பின் முரணானதாகவோ' (gaffe) ஊடகங்கள் முன் வைக்க முயற்சித்த போதிலும், பைடெனின் கருத்து முன்னணி அமெரிக்க வெளியுறவுத் துறைக் கொள்கைப் பிரமுகர்களின் கண்ணோட்டங்களை வெளிப்படுத்துகிறது என்பதே யதார்த்தமாகும்.
வெளியுறவுத் துறைக் கவுன்சிலின் தலைவர் ரிச்சர்ட் ஹாஸ் ட்விட்டரில் பின்வருமாறு பதிவிட்டார், “தைவான் மீதான மூலோபாயத் தெளிவுபடுத்தலுக்கு ஆதரவாக @potus பேசுவது இது மூன்றாவது முறையாகும், மூன்றாவது முறையாக WH [வெள்ளை மாளிகை] அதிகாரி மீண்டும் அந்தப் பாதையில் நடக்க முயன்றுள்ளார். அமெரிக்காவின் புதிய நிலைப்பாடாக அதை ஏற்றுக் கொள்வது நல்லது.”
தைவான் சம்பந்தமாக அமெரிக்கா சீனாவுடன் போருக்குச் செல்ல வேண்டும் என்ற பைடெனின் பிரகடனத்தை ஆதரித்து, ஹாஸ் அறிவித்தார், ''உக்ரேன் முன்மாதிரி' தைவானுக்குப் போதுமானது இல்லை. தைவான் ஒரு தீவு, அதற்கு எளிதாக மறுவினியோகம் செய்ய முடியாது. மேலும் ஆசியாவில் உள்ள உள்ளூர் கூட்டாளிகளும் பங்காளிகளும் நேரடி அமெரிக்கத் தலையீட்டை விரும்புகிறார்கள். மேலும் தைவான் உக்ரேனைப் போல பலமானது இல்லை. ஆகவே சீனாவுக்கு எதிராக பாதுகாப்புக்கு நேரடி அமெரிக்க இராணுவத் தலையீடு அவசியமாக இருக்கும்.”
உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தூண்டிய போரில் ஏற்கனவே பத்து நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பைடென் அச்சுறுத்தி வரும் சீனாவுக்கு எதிரான போர், உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட பகுதியான முழு ஆசிய-பசிபிக் பகுதியையும், பேரழிவுகரமான கணக்கிட முடியாத விளைவுகளுடன் ஒரு போர் மண்டலமாக மாற்றும்.
பைடென் வெள்ளை மாளிகையை அடைவதற்கு முன்னரே இராணுவ விரிவாக்கத்திற்கான தொலைநோக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. 'ட்ரம்புக்குப் பின்னர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மீட்பது' என்ற தலைப்பில் 2020 இல் பைடென் வெளியுறவு விவகாரங்கள் சம்பந்தமாக ஒரு கட்டுரை பிரசுரித்திருந்தார்.
பைடென், 'ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்க்க, கூட்டணியின் இராணுவ திறன்களைக் கூர்மையாக வைத்திருக்க' அதில் உறுதியளித்தார். அதே நேரத்தில், அமெரிக்கா 'சீனாவுடன் கடுமையாக இருக்க வேண்டிய' அவசியமிருப்பதாகவும், “சீனாவை எதிர்கொள்ள அமெரிக்க கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளின் ஓர் ஒருங்கிணைந்த முன்னணியைக் கட்டமைப்பதே அந்த சவாலைச் சமாளிப்பதற்கான மிகச் சிறந்த வழி,” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த திட்டங்கள் பிரத்யேகமாக உள்ளிருப்பவர்கள் மட்டுமே வாசிக்கும் வகையில் பிரத்யேக வெளியுறவுக் கொள்கை பிரசுரத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தன, ரஷ்யா மற்றும் சீனாவுடன் போரைத் தூண்டுவதற்கான பைடெனின் திட்டங்கள் வாக்காளர்களுக்கு அவர் விடுத்த முறையீடுகளில் கிட்டத்தட்ட எந்த பங்கும் வகிக்கவில்லை. அதற்குப் பதிலாக, “என்றென்றும் தொடரும் போர்களை' நிறுத்த பைடென் பகிரங்கமாக உறுதியளித்தார்.
யதார்த்தத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளைப் பைடென் திரும்பப் பெற்றமை ரஷ்யா மற்றும் சீனா உடனான அமெரிக்க மோதலை விரிவாக்குவதற்கான தயாரிப்பில் அமெரிக்க படைகளை மறுநிலைநிறுத்தம் செய்வதற்காக இருந்தது.
2020 இல், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எச்சரித்தது, “பைடென்/ஹாரிஸ் நிர்வாகம் அமெரிக்க மேலாதிக்கத்தின் ஒரு புதிய விடியலைத் தொடங்கி வைக்காது. மாறாக, இந்த மேலாதிக்கத்தை வலியுறுத்தும் முயற்சி, முன்னெப்போதையும் விட வன்முறையாக செய்யப்படும். அது அதிகாரத்திற்கு வந்தால்—21 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான குற்றங்களுக்குப் பொறுப்பான பிற்போக்குவாதிகளின் கூட்டத்தின் ஆதரவுடன்—பாரியளவில் போர் விரிவாக்கத்திற்கு அது பொறுப்பேற்கும்.”
இந்த எச்சரிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக, அமெரிக்க இராணுவம் இவ்விரு நாடுகளுடன் 'வல்லரசு மோதலைத்' தொடுக்க அதன் திட்டங்களைப் படிப்படியாக வலியுறுத்தி உள்ளது. இப்போது, ஏற்கனவே ரஷ்யாவுடன் ஒரு போர் வெடித்துள்ளது, இந்த நிர்வாகம் சீனாவுடன் படிப்படியாக ஒரு போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதை பைடெனின் கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.
இந்த மோதல்கள் அணு ஆயுதச் சக்திகளுக்கு இடையே நடத்தப்படும் ஒரு உலகப் போராக விரிவடைந்து, ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா மற்றும் சொல்லப் போனால் ஒட்டுமொத்த மனித நாகரிகத்தையும் அழிக்க அச்சுறுத்துகின்றன.
பைடென் நிர்வாகத்தின் போர்த் திட்டங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒப்பீட்டளவில் அதன் பொருளாதாரச் சரிவை இராணுவ வழிமுறைகள் மூலம் மாற்றியமைக்கும் இடைவிடாத முனைவை வெளிப்படுத்துகின்றன.
ஆனால் இந்த போரால் தூண்டப்பட்ட இந்த நெருக்கடியானது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு எதிராகவும் மற்றும் இந்த நெருக்கடிக்குத் தொழிலாளர்களை விலை கொடுக்க வைக்க ஆளும் வர்க்கங்களின் முயற்சிகளுக்கு எதிராகவும் உலகெங்கிலும் தொழிலாளர்களைப் போராட்டத்திற்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் இந்த உலகளாவிய இயக்கம், ஒரு புதிய உலகப் போரைத் தடுப்பதற்கும், மனிதகுலத்தை அச்சுறுத்தும் பேரழிவை நிறுத்துவதற்குமான போராட்டத்திற்குச் சமூக அடித்தளத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க
- பைடெனின் ஆசியப் பயணம் சீனாவுடனான இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்கிறது
- திமோதி ஸ்னைடர் "ரஷ்யா பாசிச நாடு" என்று கூறுகிறார்: அமெரிக்க-நேட்டோ போர் பிரச்சாரத்திற்கான சேவையில் பொய்மைப்படுத்தல்
- அமெரிக்காவில் சக்தி வாய்ந்த வேலைநிறுத்த இயக்கம் எழுகிறது
- உக்ரேனுக்கான 40 பில்லியன் டாலர் உதவிப் பொதியை செனட் நிறைவேற்றுகையில், சுவீடன், பின்லாந்துக்கான நேட்டோ உறுப்பினர் பதவிக்கு பைடென் நிர்வாகம் அழுத்தம் கொடுக்கிறது