மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் பதவியேற்ற பின்னர் அந்த பிராந்தியத்திற்கு அவர் முதன்முறையாக சென்ற தனது வடகிழக்கு ஆசியாவிற்கான தனது பயணத்தை இன்று நிறைவு செய்கிறார். சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் முறையே தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் மற்றும் ஜப்பானிய பிரதம மந்திரி புமியோ கிஷிடாவுடன் உச்சிமாநாடுகளை நடத்தும் பைடெனின் குறிக்கோள், சீனாவுடனான வாஷிங்டனின் மோதலை அதிகரிக்க தனது கூட்டாளிகளை தயார்படுத்துவதாகும்.
சியோல் மற்றும் டோக்கியோவில் அவரது சந்திப்புகள் பல சீன எதிர்ப்பு நிலைப்பாடுகளை பற்றி கலந்துரையாடி, அப்பிராந்தியத்தில் உள்ள பிராந்திய தகராறுகள் தொடர்பாக பெய்ஜிங்கை மூர்க்கத்தனமாக காட்டுவது மற்றும் தைவான் மீது பெய்ஜிங்கிற்கு சவால் விடுவது உட்பட பலவற்றை உள்ளடக்கியுள்ளது. யூனுடனான பைடெனின் கூட்டறிக்கை சீனாவை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இலக்கு தெளிவாக இருந்தது. பைடென் மற்றும் கிஷிடா தம்மை கட்டுப்படுத்திக்கொள்ளாததுடன், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் உள்ள பிராந்திய மோதல்கள் குறித்து பெய்ஜிங்கை விமர்சித்ததுடன் மற்றும் ஹாங் காங் இல் 'மனித உரிமைகள்' மீதான பாசாங்குத்தனமாக தமது கவலைகளை வெளிப்படுத்தினர்.
பைடெனின் பயணம் சியோலுக்கும் டோக்கியோவிற்கும் இடையே சிறந்த உறவுகளை மேம்படுத்த உதவும் என்று வாஷிங்டன் நம்புகிறது. இப்போது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சியோல் ஜப்பானிய எதிர்ப்பு உணர்வைப் பயன்படுத்தி மோசமடைந்து வரும் உள்நாட்டு நிலைமைகளிலிருந்து திசைதிருப்ப மற்றும் டோக்கியோவின் மறுஇராணுவமயமாக்கலும் கவலைகளை எழுப்புவதால் தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கசப்பானதாக உள்ளது. யூனின் புதிய நிர்வாகம் டோக்கியோவுடன் உறவுகளை மேம்படுத்த உறுதியளித்துள்ளது.
சியோலில், பைடெனும் யூனும் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர். 'இரு தலைவர்களும் ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சிகள் மற்றும் கொரிய தீபகற்பத்திலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமான பயிற்சிகளின் நோக்கம் மற்றும் அளவை விரிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல்களை தொடங்க ஒப்புக்கொள்கிறார்கள்.' தென் கொரியாவிற்கு 'அமெரிக்காவின் நீட்டித்த தடுப்புக்கான அர்ப்பணிப்பு', 'அணு, பாரம்பரிய மற்றும் ஏவுகணை பாதுகாப்பு திறன்கள் உட்பட முழு அளவிலான அமெரிக்க பாதுகாப்பு திறன்களைப் பயன்படுத்துவதையும் உள்ளடக்கியது' என்றும் பைடென் தெளிவுபடுத்தினார்.
மேலும், பைடென் மற்றும் யூன் விரிவாக்கப்பட்ட தடுப்பு மூலோபாயம் மற்றும் ஆலோசனைக் குழுவை 'விரைவில்' மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர். ஜனவரி 2018 முதல் சந்திக்காத குழு, அணு ஆயுதங்களின் பயன்பாடு உட்பட நீட்டிக்கப்பட்ட தடுப்பு என்று அழைக்கப்படும் மூலோபாய மற்றும் கொள்கை சிக்கல்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு மன்றமாகும். தென் கொரிய ஆளும் வட்டங்களுக்குள் உள்ள பழமைவாதிகள் அமெரிக்க அணு ஆயுதங்களை நாட்டிற்குத் திரும்பக்கொண்டுவரக் கோருகின்றனர்.
டோக்கியோவில் இருந்தபோது கிஷிடாவிடம் பைடென் இதேபோன்ற உறுதிமொழிகளை அளித்தார். இதில் 'பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஜப்பானை பாதுகாப்பதற்கான அமெரிக்க அர்ப்பணிப்பு, அணுசக்தி உட்பட முழு அளவிலான தகமைகளை வழங்குவதாகும்'. மேலும், ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி மார்ச் மாதம் அமெரிக்க அணு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய விவாதத்தைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கைகள் அடிக்கடி கூறப்படுவது போல் வறிய வட கொரியாவை இலக்காகக் கொண்டவை அல்ல, ஆனால் சீனாவை நோக்கியதாகும். வாஷிங்டன் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் அதன் பினாமிப் போரை தீவிரப்படுத்தினாலும், பெய்ஜிங்கை குறிவைக்கும் இராணுவ தயாரிப்புகள் தடையின்றி தொடர்கின்றன என்பதை அமெரிக்கா அதன் நட்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்துகிறது.
உண்மையில், பைடென் மற்றும் யூன் ஆகியோர் பியாங்யாங்கைப் பற்றி தங்கள் வழக்கமான கண்டனங்களை தெரிவித்தாலும், வட கொரியாவில் பாரிய கோவிட்-19 வெடிப்பைச் சமாளிக்க அவர்கள் “மனிதாபிமான உதவியை” வழங்க முன்வருவதாக தெரிவித்தனர். வாஷிங்டன் சீனாவின் ஆதிக்கப்பாதையில் இருந்து வட கொரியாவை பொருளாதார உதவியின் வாக்குறுதிகளுடன் கவர்ந்திழுக்க நம்புகிறது. அதன் மூலம் பெய்ஜிங்குடன் போர் ஏற்பட்டால் பியோங்யாங்கை நடுநிலையாக்குகிறது அல்லது வடக்கை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பக்கம் கொண்டு வரலாம் எனக் கருதுகிறது. அந்த காரணத்திற்காக, வட கொரியாவை வலுப்படுத்தும் யூனின் 'துணிச்சலான' திட்டத்திற்கு பைடென் ஆதரவு தெரிவித்தார்.
மறுபுறம், தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று வாஷிங்டனில் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஒரே சீனா' கொள்கையை சவால் செய்வதன் மூலம் டோக்கியோவிலும் சியோலிலும் தைவான் மீதான பதட்டங்களை அதிகரிக்க அமெரிக்கா முயன்றது.
திங்களன்று கிஷிடாவுடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, தைவான் மீது அமெரிக்கா இராணுவ ரீதியாக தலையிடுமா என பைடெனிடம் கேட்டதற்கு, அமெரிக்க ஜனாதிபதி, 'ஆம். அதுதான் நாங்கள் செய்த அர்ப்பணிப்பு' எனக் கூறினார்.
அமெரிக்க கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறி வெள்ளை மாளிகை இக்கருத்தை குறைத்துக்காட்ட முயன்றது. எவ்வாறாயினும், வாஷிங்டன், முதலில் ட்ரம்பின் கீழும், இப்போது பைடெனின் கீழும், எந்த ஆதாரமும் இல்லாமல் தைவான் மீது படையெடுப்பு நடத்த பெய்ஜிங் திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டுகையில், 'ஒரே சீனா' என்ற கொள்கையில் இருந்து விலகிச் செல்ல விரும்புகிறது என்பது தெளிவாகிறது. ரஷ்யா தொடர்பாக வாஷிங்டன் உக்ரேனில் செய்ததைப் போலவே பெய்ஜிங்கை இராணுவ நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதே இதன் நோக்கமாகும்.
திங்களன்று பைடெனின் கருத்துக்கு கூடுதலாக, 'தைவான் நீரிணையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு' அழைப்பு விடுத்து, யூன் மற்றும் கிஷிடாவுடனான கூட்டு அறிக்கைகளில் தைவான் பற்றிய குறிப்புகளைச் சேர்ப்பதை அமெரிக்க ஜனாதிபதி உறுதி செய்தார். இது ஒரு அப்பாவித்தனமான கருத்து அல்ல. ஆனால் அதன் 'ஒரே சீனா' என்ற கொள்கையையும் சீன அரசாங்கமாக பெய்ஜிங்கின் சட்டபூர்வமான தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் கணக்கிடப்பட்ட ஒன்றாகும்.
டோக்கியோ இராணுவமயமாக்கலை நியாயப்படுத்த வாஷிங்டனால் தூண்டப்பட்ட பதட்டங்களையும் பயன்படுத்தியுள்ளது. டோக்கியோ உச்சிமாநாட்டின் அறிக்கையில் பின்வருமாறு அறிவித்தது: 'ஜப்பானின் பாதுகாப்பு திறன்களை அடிப்படையில் வலுப்படுத்துவது மற்றும் அதன் பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தின் கணிசமான அதிகரிப்பை செய்வதற்கான தனது உறுதியை பிரதமர் கிஷிடா தெரிவித்தார். பிரதம மந்திரி கிஷிடாவின் உறுதியை ஜனாதிபதி பைடென் வலுவாக ஆதரித்தார்”.
டோக்கியோ தனது இராணுவச் செலவினங்களை ஏற்கனவே உள்ள பாரியளவிலான தொகையை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் இராணுவ சக்தியை 'கூட்டு தற்காப்பு' என்ற பெயரில் வெளிநாடுகளில் சிறப்பாகத் திட்டமிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சாக்குப்போக்காகும். மீறப்படவேண்டும் எனக் கூறப்படும் அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவு ஜப்பான் தனது படைகளை வைத்திருப்பதையும் தனது ஏகாதிபத்திய நலன்களை மேம்படுத்துவதற்கு அதனை பயன்படுத்துவதை தடுக்கிறது.
விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்திய பைடெனின் பயணத்தின் பொருளாதார அம்சமும் வாஷிங்டனின் போர் தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும். தென் கொரியாவில் இருந்தபோது பைடென் ஒரு குறைக்கடத்தி (semiconductor) ஆலையில் சுற்றுப்பயணம் செய்கையில், பின்னர் வாஷிங்டன் 'நமது பொருளாதாரம் மற்றும் நமது தேசிய பாதுகாப்பு, நமது மதிப்புகளைப் பகிர்ந்து கொள்ளாத நாடுகளைச் சார்ந்திருக்காது' என்பதை உறுதிப்படுத்தும் என்று அறிவித்தார். இது சீனாவைப் பற்றிய ஒரு தெளிவான குறிப்பாகும்.
திங்களன்று தொடங்கப்பட்ட இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (Indo-Pacific Economic Framework - IPEF) மற்றொரு அங்கமாகும். ஜப்பான் மற்றும் தென் கொரியா உட்பட 13 நாடுகள் ஆரம்பத்தில் இந்த திட்டத்தில் பங்கேற்கும் என பைடென் கூறினார். IPEF என்பது பிராந்தியத்தில் பெய்ஜிங்கின் பொருளாதார செல்வாக்கை கட்டுப்படுத்தவும், சீனப் பொருளாதாரத்தின் மீது தங்கியிருப்பதை குறைக்கவும், ஒட்டுமொத்த போர் உந்துதலுக்கும் வசதியாக்குகின்றது. எவ்வாறாயினும், காங்கிரஸில் இருந்துவரும் எதிர்ப்பு ஏற்படாத வகையில், நிர்வாக உத்தரவுகளின் மூலம் பைடென் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயல்கையில், அமெரிக்க சந்தைகளுக்கான அணுகலை வழங்க முடியாத எந்தவொரு ஒப்பந்தமும் அதில் இணைந்துகொள்வதற்கு ஆர்வம் குறைந்ததாகவே இருக்கும்.
ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய சீனாவை இலக்காகக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான அரை-இராணுவ கூட்டணியான நாற்கர (Quad) பாதுகாப்பு கலந்துரைடலின் உச்சிமாநாட்டுடன் பைடென் தனது பயணத்தை முடித்துக்கொள்வார். பைடெனின் ஆசியப் பயணத்தின் நோக்கம், சீனாவிற்கு எதிரான இராணுவக் கூட்டணிகளை ஒருங்கிணைத்து, உக்ரேனில் அமெரிக்க/நேட்டோ பினாமி போரானது ஆசியாவில் அதன் போருக்கான தயாரிப்புகளில் இருந்து திசைதிருப்பவில்லை என்பதை அதன் நட்பு நாடுகளுக்கு உறுதியளிப்பதாகும்.