முன்னோக்கு

ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த உக்ரேனுக்கு அமெரிக்கா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பைடென் நிர்வாகம் மே 21 இல் 40 பில்லியன் டாலர் உதவிப் பொதி மற்றும் ஆயுதங்கள் வழங்க கையெழுத்திட்ட மை காய்வதற்குள், அமெரிக்கா உக்ரேனுக்குள் பாய்ச்சும் ஆயுத வரம்பை இன்னும் கூடுதலாக விரிவாக்கி, போர் நடத்தப்பட்டு வரும் பகுதியை பரந்தளவில் விரிவாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது.

சனிக்கிழமை உக்ரேன் பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறுகையில், டென்மார்க் வழியாக அமெரிக்கா அனுப்பிய ஹார்பூன் கப்பல் தகர்ப்பு ஏவுகணையையும், அதே போல் அமெரிக்காவில் இருந்து நேரடியாக M109 Paladin ரகக் குண்டுத் துளைக்காத சுயமாக ஏவும் ஹோவிட்சர்களையும் (சிறு பீரங்கிகள்) பெற தொடங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

ஏறக்குறைய 30 டன் எடையுள்ள M109, 25 மைல்களுக்கு அப்பால் இருந்தும், 100 பவுண்டுகள் எடையுள்ள, பீரங்கிக் குண்டுகளைச் சுடும் திறன் கொண்டது. அதன் உற்பத்தி நிறுவனம் போயிங் தகவல்படி, ஹார்பூன், 'உலகின் மிகவும் வெற்றிகரமான கப்பல் தகர்ப்பு ஏவுகணையாகும் … அது தரையில் இருந்து தாக்குவதிலும் மற்றும் கப்பல் தகர்ப்புப் பணிகளிலும் இரண்டிலும் செயல்படும் திறன் கொண்டது.'

போயிங் எழுதுகிறது, '500-பவுண்டு எடையுள்ள வெடிக்கும் குண்டுகள், கடலோரப் பாதுகாப்புத் தளங்கள், தரையிலிருந்து விண்ணில் செலுத்தும் ஏவுகணைத் தளங்கள், தற்காப்பற்ற விமான, துறைமுக/ தொழில்துறை இடங்கள் மற்றும் துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் உட்பட, பல்வேறு வகையான நில இலக்குகளைத் தாக்கும் மிகவும் ஆபத்தான வெடிகுண்டுகளைச் செலுத்தும்.”

இத்தகைய ஆயுத அமைப்புகளை வழங்குவதன் அர்த்தம் என்னவென்றால், அமெரிக்கக் கடற்படை மற்றும் ஆயுதப் படைப் பயன்படுத்தும் அதே கப்பல் தகர்ப்பு ஏவுகணைகள் மற்றும் இடம் பெயரும் பீரங்கி அமைப்புகளையே உக்ரேனியப் படைகளும் பயன்படுத்த இருக்கின்றன.

உக்ரேன் சமீபத்தில் 100 க்கும் அதிகமான டிரோன்களைப் பெற்றிருப்பதாகவும் ரெஸ்னிகோவ் அறிவித்தார். M109 ரக ஆயுதம் 25 மைல்கள் சென்று தாக்கும், ஹார்பூன் 77 மைல்கள், மற்றும் அமெரிக்காவிடம் கொள்முதல் செய்யப்பட்ட பெய்ராக்தார் (Bayraktar) டிரோன்கள் ஆயிரக் கணக்கான மைல்கள் சென்று தாக்கும் திறன் கொண்டவை என்பதால், அமெரிக்கா ஏற்கனவே டஜன் கணக்கான அல்லது நூற்றுக் கணக்கான மைல்கள் ரஷ்ய எல்லைக்குள் சென்று தாக்கும் ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கி உள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க அதிகாரி ஒருவர் ராய்டர்ஸிடம் கூறுகையில், அமெரிக்கா அது வழங்கும் ஆயுதங்களை உக்ரேனிய படைகள் பயன்படுத்துவதற்கு புவியியல் வரம்புகள் எதையும் விதிக்கவில்லை என்றார். “நாங்கள் விரைவான அதிகரிப்பு பற்றி கவலை கொள்கிறோம், அவர்களுக்கு நாங்கள் வழங்கும் தளவாடங்கள் மீது இது வரையில் வீச்செல்லை வரம்புகளை விதிக்கவோ அல்லது அவர்களின் கைகளை அதிகமாகக் கட்டுவதையோ விரும்பவில்லை,” என்றவர் கூறினார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல்கள் நடத்த அமெரிக்கா உக்ரேனுக்கு நடைமுறையளவில் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

உக்ரேனிய இராணுவம் ஏற்கனவே ரஷ்யாவுக்குள் பல தாக்குதல்களை நடத்தி உள்ளது, அதில் குறைந்தது இராணுவம் சாராத ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சமீபத்தில் கிழக்கு உக்ரேனுக்கு அருகில் குர்ஸ்க் பகுதியில் அதன் துருப்புகள் மற்றும் பீரங்கி தளவாடங்களின் நிலைநிறுத்தலை அதிகரித்துள்ளது.

அதிநவீன ஆயுத அமைப்புகளுக்குக் கூடுதலாக, ரஷ்யாவுக்குள் இன்னும் ஆழமாகத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கக் கூடிய பல ராக்கெட் ஏவுகணைகளின் வடிவில் உக்ரேனுக்கு இன்னும் நீண்ட தூர ஆயுதங்களை வழங்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

'ரஷ்யாவுக்குள் சென்று தாக்கக் கூடிய ராக்கெட் அமைப்புகளை உக்ரேனுக்கு [அமெரிக்கா] அனுப்பப் போவதில்லை' என்று பைடென் பத்திரிகையாளர்களிடம் திங்கட்கிழமை கூறி இருந்தாலும், பைடெனின் அறிக்கைப் பெரும்பாலும் அர்த்தமற்றது என்பதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் உடனடியாகத் தெளிவுபடுத்தினார்கள்.

வெள்ளை மாளிகை தகவல்படி, அது 190 மைல்கள் வரைச் சென்று திறம்பட தாக்கக் கூடிய MGM-140 ATACMS ஏவுகணை போன்ற, அமெரிக்கா வழங்கும் அமைப்புகள் செலுத்தும் ஒரு சில நீண்ட தூர வெடிகுண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இத்தகைய அமைப்புகள் சரமாரியாகச் சிதறி வெடிக்கும் வெடிகுண்டுகள் (Cluster Munitions) சம்பந்தப்பட்ட நடைமுறை ஒப்பந்தத்தை மீறுகின்றன, ஆனால் உலகெங்கிலுமான போர்களில் சிதறி வெடிக்கும் இத்தகைய வெடிகுண்டுகளைக் கொண்டு ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்றுள்ள அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தைக் கடைபிடிப்பதில்லை.

ரஷ்யாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் மைக்கேல் மெக்ஃபாலின் வார்த்தைகளில் கூறினால், 'உக்ரேனியர்களிடம் துல்லியமாக-வழிநடத்தப்படும் இப்போது இருக்கும் ஏவுகணைகளை விட அதிக தூரம் சென்று தாக்கும் இத்தகைய ஏவுகணைகளின் புதியவற்றை' உக்ரேன் பெற உள்ளது.

உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்புவது மீதான மிகச் சிறிய கட்டுப்பாடுகளைப் பற்றிய பைடெனின் கருத்தும் கூட உடனடியாக ஊடகங்களில் கண்டிக்கப்பட்டது.

உக்ரேன் 'ரஷ்யக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அதன் முன்னாள் பிரதேசங்களை வழங்கும் ஒரு போர் நிறுத்தத்தில் வெறுமனே கையெழுத்திட்டு உயிர் பிழைக்கச் செய்ய' விரும்புவதாக பைடெனைக் குற்றஞ்சாட்டி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கடுமையாகச் சாடியது.

பீதியில் இருப்பது போல, ஜேர்னல் குறிப்பிடுகையில், ரஷ்யப் படைகள் 'கிழக்கு உக்ரேனின் டொன்பாஸ் பகுதியில் புதிய இராணுவ வெற்றிகளை' பெற்று வருவதாக எச்சரித்தது. 'அமெரிக்கா எதைச் செய்யாது என்பது பற்றி விளாடிமிர் புட்டினுக்கு' அமெரிக்க ஜனாதிபதி 'மறுஉத்தரவாதம்' அளிப்பதாகவும், 'உக்ரேனுக்கு உதவுவதில் பைடெனின் தெளிவின்மை, அவர் இன்னும் ஒரு மூலோபாய வெற்றியை அடைய முடியும் என்று நம்புவதற்கு அந்த ரஷ்யரை ஊக்குவிக்கிறது' என்றும் அது குற்றஞ்சாட்டியது.

இதே பாணியில், குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்செ கிரஹாம் கூறுகையில், பைடென் 'உக்ரேனுக்கும் ஜனநாயகத்துக்குமே கூட துரோகம் செய்வதாக' குற்றஞ்சாட்டினார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மிகவும் வெறித்தனமாக இருந்தாலும், இந்தப் போர்க் காய்ச்சல் அரசியல் ஸ்தாபகம் முழுவதும் பரவியுள்ளது. கிழக்கு உக்ரேனில் ரஷ்யப் படைகள் வெளிப்படையாக முன்னேறி வருகின்றன என்பது மட்டுமே அமெரிக்க அதிகாரிகளை வரிந்துக் கட்டிக் கொண்டு வரச் செய்கிறது, இது இந்தப் போர் இன்னும் பெரியளவில் விரிவடைய அச்சுறுத்துகிறது.

தாராளவாத பத்திரிகையாளர் கிடியோன் ராச்மன் (Gideon Rachman), திங்கட்கிழமை பைனான்சியல் டைம்ஸில், 'மேற்கு நாடுகள் உக்ரேனில் அதன் நரம்புகளை முறுக்க வேண்டும்' என்ற தலைப்பில், போர்வெறி ஊட்டும் ஒரு கட்டுரை எழுதினார். இந்த மோதலுக்கு ஓர் இராஜாங்கத் தீர்வுக்கான வாய்ப்பை எழுப்பி அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் வரும் தனிமையான குரல்களைக் கண்டித்து, ராச்மன் எழுதுகையில், 'ஓர் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமாதான தீர்வுக்கான எந்த வாய்ப்பும் ஏற்படுவதற்கு முன்னர், இந்தப் போரின் வேகம் உக்ரேனை நோக்கி திரும்ப வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

தைவான் சம்பந்தமாக சீனாவுடனான அதன் மோதலை அமெரிக்கா செயலூக்கத்துடன் அதிகரித்து வரும் நிலையில், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான இந்த ஏகாதிபத்திய பினாமி போரின் விரிவாக்கம், அதன் சொந்தத் தர்க்கத்தை ஏற்று வருகிறது.

மார்ச் 11 இல் கூட பைடென் அறிவித்தார், “நாங்கள் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராகப் போர் நடத்த மாட்டோம். நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போராகும், நாங்கள் அதைத் தடுக்க முயற்சி செய்கிறோம்.”

ஆனாலும் அப்போதிருந்து, ஒவ்வொரு நாளும், ரஷ்யாவுடனான ஒரு நேரடி மோதலை நோக்கி அமெரிக்கா படிப்படியாக முன்னேறி உள்ளது. அமெரிக்கா உக்ரேனுக்கு அதன் ஆயுத ஏற்றுமதியை அதிகரித்தது, முதலில் பத்து மடங்காக, பின்னர் நூறு மடங்காக. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 'அதிகாரத்தில் நீடிக்க முடியாது' என்று மார்ச் 26 வாக்கில் பைடென் கூறினார். கடந்த மாதம், அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், 'நாங்கள்' ரஷ்யாவுடன் 'சண்டையில்' ஈடுபட்டுள்ளோம் என்பதை ஒப்புக் கொண்டார், பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையினர் அணி தலைவர் ஸ்டெனி ஹோயர் இந்த மாதம் வெளிப்படையாகவே 'நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளோம்' என்றார்.

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் குழு தொடர்ச்சியான பல உருவக ஒத்திகைகள் குறித்து நடத்திய ஒரு பகுப்பாய்வில், “ஒரு நீடித்த மோதல் போக்கில் பங்கெடுப்பவர்கள் அந்த மோதலைத் தனியொரு நாட்டில் கட்டுப்படுத்தி வைக்க விரும்புவதாகக் கூறினாலும் கூட, அது திட்டமிடாமலேயே [புவியியில் ரீதியில்] விரிவடைவதை நோக்கிய ஓர் அபாயகரமான போக்கு' இருப்பதைக் குறித்து எச்சரித்தது.

இந்த ஆபத்தான போக்கைச் செயலில் காண, ஒருவர் உருவக ஒத்திகைகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை, மாறாக உக்ரேன் மண்ணிலேயே பார்க்கலாம்.

ரஷ்ய எல்லைக்குள் இன்னும் அதிக ஆழமாகச் சென்று தாக்கும் திறனை உக்ரேனியப் படைகளுக்கு வழங்குவதன் மூலம், அமெரிக்கா இந்தப் போரை இன்னும் கூடுதலாக விரிவாக்கக் கருதுகிறது.

அணு ஆயுதமேந்திய சக்தியுடன் ஒரு போரை விரிவாக்குவதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்றத்தன்மை, அது முகங்கொடுத்து வரும் பாரியளவிலான உள்நாட்டு நெருக்கடிக்கு ஒரு சான்றாகும். அதிகரித்து வரும் பணவீக்கம், வீழ்ச்சி அடைந்து வரும் கூலிகள், முக்கிய பண்டங்களின் பற்றாக்குறை, பெருகி வரும் மந்தநிலை ஆகியவற்றுக்கு மத்தியில், வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சியின் பாகமாக அமெரிக்காவிலும் தொழிலாள வர்க்க இயக்கம் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே பத்து ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படக் கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ள, ரஷ்யா உடனான போரை விரிவாக்குவதில் ஒட்டுமொத்த அமெரிக்க ஸ்தாபகமும் ஒன்றுபட்டுள்ளது. இந்தப் போருக்கு முடிவு கட்டுவது தொழிலாள வர்க்கத்தின் பணியாகும்.

Loading