ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கம் தமிழ் அகதி குடும்பத்திற்கு பாதுகாப்பற்ற தற்காலிக வதிவிட அனுமதியை மட்டுமே வழங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதிய ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கம், அதன் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, தமிழ் அகதி முருகப்பன் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட அனுமதியை மறுத்து, பாதுகாப்பற்ற தற்காலிக வதிவிட (bridging visas) அனுமதியை வழங்கியுள்ளது.

நடேஸ் எனப்படும் நடேசலிங்கம் முருகப்பன், பிரியா எனப்படும் கோகிலபத்மப்ரியா நடேசலிங்கம் மற்றும் அவர்களது ஐந்து வயது மகள் கோபிகா மற்றும் மூன்று வயது மகள் தர்னிகா 2021 இல். [Credit: Facebook@solidaritywithBiloela]

குயின்ஸ்லாந்து பிராந்திய தொழிலாள வர்க்க நகர குடியிருப்பாளர்கள் தமிழ் அகதி குடும்பத்தின் விடுதலைக்காக போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் அந்த குடும்பம், விரைவில் பிலோயேலாவிற்கு (Biloela) திரும்ப முடியும் என்றாலும், நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல் இன்னும் அவர்கள் மீது தொங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த சிடுமூஞ்சித்தனமான அரசியல் தந்திரம், அகதிகள் மீதான இரு கட்சி துன்புறுத்தல்களை தொழிற் கட்சி ஆழப்படுத்துவதில் ஒரு பளபளப்பை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இது 1990 களில் கீட்டிங் தொழிற் கட்சி அரசாங்கம் படகு மூலம் வரும் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களையும் கட்டாய காவலில் வைக்கும் முறையை அறிமுகப்படுத்தியது.

பிரதமர் அந்தோனி அல்பானிஸ், இந்த குடும்பத்திற்கு அரசாங்கம் நிரந்தர பாதுகாப்பு வதிவிட அனுமதி அல்லது குடியுரிமை வழங்குமா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க சனிக்கிழமை மறுத்துவிட்டார். அமைச்சக விருப்புரிமையின் மூலம் உடனடியாக அவ்வாறு செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இருந்தபோதிலும் அதற்கு மறுத்துவிட்டார்.

தற்காலிக வதிவிட அனுமதி என்பது, அந்த குடும்பத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் இருப்பதையும், தொடர்ந்து அக்குடும்பம் சட்ட ரீதியான குழப்பத்தில் இருப்பதையும் குறிக்கிறது, அதாவது அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு எந்த நேரத்திலும் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்படும் மற்றும் அங்கு அவர்கள் வெளிப்படையான ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர். மேலும், தொழிற் கட்சி மனிதாபிமானமற்ற ‘எல்லை பாதுகாப்பு’ ஆட்சியைப் பராமரித்து வருகிறது, எனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் இதே பயங்கரங்களை எதிர்கொள்கின்றனர்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை சற்று நிம்மதி உணர்வுடன் வரவேற்கும் அதேவேளை, அகதிகள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரியா முருகப்பன் வேண்டுகோள் விடுத்தார். “இங்கு வரும் ஒவ்வொரு அகதியின் வாழ்க்கையிலும் இந்த அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை' என்றும் 'அகதிகள் அனைவரும் உயிர் தப்பிப்பிழைத்தவர்கள். அவர்களுக்கு நம்பிக்கை தேவை” என்றும் அவர் கூறினார்.

தற்காலிக குடிவரவுத்துறை அமைச்சரான பொருளாளர் ஜிம் சால்மர்ஸ், இந்த குடும்பம் அவர்களது குடிவரவு நிலையைத் தீர்க்க வேலை செய்யும்போது, அவர்கள் “சட்டபூர்வமாக சமூகத்தில் வசிப்பார்கள்” என்று கூறினார். அதேவேளை, “இந்த அரசாங்கம் இறையாண்மை எல்லைகளை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதாவது, உயர் கடல்களில் அகதிகள் படகுகளை இடைமறித்து, அதிலிருக்கும் அகதிகளை தப்பித்து வந்த நாடுகளுக்கு திருப்பியனுப்ப கட்டாயப்படுத்த கடற்படையை அனுப்புவதாகும்.

தற்காலிக விசாவைச் சுற்றி அரசாங்கம் முன்வைக்கும் முற்றிலும் பாசாங்குத்தனம், செவ்வாய்க்கிழமை புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு கடற்படையை பயன்படுத்தியபோது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது,

மே 21 தேர்தலுக்கு முன்னதாக படகு தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசன் கடற்படை நடவடிக்கையை குறுஞ்செய்தி மூலம் விளம்பரப்படுத்தி, எல்லைகளை பாதுகாப்பதாகக் கூறப்படும் அவரது அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார். தொழிற் கட்சி இந்த நடவடிக்கையை வலதுபுறத்தில் இருந்து விமர்சித்தது, இது இராணுவ நடவடிக்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும், அகதிகள் படகுகளை விரட்டும் இரு கட்சி கொள்கையை ‘அரசியல்மயமாக்கியது’ என்றும் கூறியது.

'அவர்களின் குடியேற்ற நிலையின் தீர்மானத்தை நோக்கி' பணியாற்றுவதான சால்மர்ஸின் குறிப்பு, குடும்பம் இன்னும் 'சட்டவிரோதமான, குடிமக்கள் அல்லாதவர்கள்' என தீர்ப்பளித்து நாடு கடத்தப்படலாம் என்பதைக் காட்டுகிறது. தந்தை நடேஸ், தாய் பிரியா மற்றும் மூத்த மகள் கோபிகா ஆகியோரின் புகலிட விண்ணப்பங்கள் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்த இளைய மகள் தர்னிகாவுக்கு வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிக்க கூட தடை விதிக்கப்பட்டது.

மார்ச் 5, 2018 அன்று பிலோலாவில் உள்ள அவர்களது வீட்டில் அதிகாலை திடீர் சோதனையில் துணை இராணுவ ஆஸ்திரேலிய எல்லைப் படையால் (ABF) இந்த குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் விடுதலைக்காக ஒரு தேசிய அளவிலான “Home to Bilo” பிரச்சாரத்தை முன்னெடுத்த பிலோயெலா குடியிருப்பாளர்களின் அயராத முயற்சிகள் இல்லாதிருந்தால் அவர்களின் தடுப்புக்காவல் வெளிவராமலே போயிருக்கும்.

முந்தைய தாராளவாத-தேசியக் கூட்டணி அரசாங்கம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்தை ஒருவித தடுப்புக் காவலில் வைத்திருந்தது, இதில் பிரதான நிலப்பரப்பில் இருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடல் ஆஸ்திரேலியப் புறக்காவல் பகுதியில் அமைந்துள்ள மோசமான கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு மையமும் அடங்கும்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரான பெர்த்தில் ‘சமூக தடுப்புக்காவலில்’ குடும்பம் வாடுகிறது, இளைய குழந்தை தர்னிகா முறையற்ற மருத்துவ சிகிச்சை காரணமாக உயிருக்கு ஆபத்தான இரத்த நிலையை கொண்டுள்ளார்.

கூட்டணி அரசாங்கத்தால் நடத்தப்பட்டாலும், குடும்பத்திற்கு எதிரான தாக்குதல்கள் முந்தைய தொழிற் கட்சி அரசாங்கங்களால் நடைமுறைக்கிடப்பட்ட
நடவடிக்கைகளின் கீழ் நடத்தப்பட்டன. 2012 ஆம் ஆண்டு கில்லார்ட் இன் தொழிற் கட்சி அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுடன் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்த அனைத்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களையும் திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. குறைந்தபட்சம் 700 பேர் நாடு கடத்தப்பட்டனர், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர் மற்றும் சிலர் சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது ‘காணாமலாக்கப்பட்டனர்’ என்று அறிக்கைகள் வெளிவந்தன.

2022 கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரம் முழுவதும், சோசலிச சமத்துவக் கட்சி, போர் உந்துதலை நிறுத்துதல், கோவிட்-19 ஐ ஒழித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தை தடுத்தல் ஆகியவை குறித்த முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக புகலிடக் கோரிக்கையாளர்களைப் பாதுகாக்க அழைப்பு விடுத்தது. எங்கள் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியது:

“தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த, அனைத்து வகையான இனவெறி மற்றும் தேசியவாதமும் நிராகரிக்கப்பட வேண்டும், மேலும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் துன்புறுத்தப்படுவதை எதிர்க்க வேண்டும். தொழிலாளர்கள் முழு குடியுரிமை உரிமைகளுடன் எங்கு வேண்டுமானாலும் வாழவும் வேலை செய்யவும் முடியும்.”

அகதிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் போல தோரணம் கட்டும் பசுமைவாதிகள், இலங்கைப் படகைத் திருப்பி அனுப்பிய தொழிற் கட்சி அரசாங்கத்தை கண்டித்தனர். எவ்வாறாயினும், புதிய அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதன் மூலம் அரசியல் ஒழுங்கிற்கு ‘ஸ்திரத்தன்மையை’ மீட்டெடுப்பதாக உறுதியளித்தபோது அது இல்லை. இது 2010 முதல் 2013 வரையிலான கில்லார்ட் அரசாங்கத்துடன் ஒரு நடைமுறைக் கூட்டணியை அமைப்பதில் பசுமைவாதிகளின் பங்கிற்கு இணங்குகிறது, அது இலங்கை அகதிகளை நாடு கடத்தியது மற்றும் தொலைதூர பசிபிக் தீவுகளில் 'கடற்கரை' குடிவரவு சிறை முகாம்களை மீண்டும் திறந்தது.

“Operation Sovereign Borders” திட்டத்திற்கான தொழிற் கட்சியின் அர்ப்பணிப்பு, அதன் வலதுசாரி நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய திட்டமாகும், இது சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலின் பின்னால் அணிவகுத்து நிற்கிறது, மற்றும் தொழிலாள வர்க்கம் ‘தியாகங்களை’ செய்யக் கோருகிறது.

முருகப்பன் குடும்பத்தின் மீதான தொடர்ச்சியான தண்டனைக்குரிய செயற்பாடு உலகெங்கிலும் உள்ள அகதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எடுத்துக் காட்டுகிறது. இந்த குடும்பத்தின் விடுதலைக்கான போராட்டமும் அதேபோது சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான அகதிகளின் விடுதலையும், உழைக்கும் மக்கள் உலகெங்கிலும் அவர்கள் விரும்பும் இடத்தில் வாழவும் வேலை செய்யவும் உள்ள அவர்களின் அடிப்படை உரிமையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இது தேசிய எல்லைகளை பராமரிக்கும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறைக்கு எதிரான பொதுவான போராட்டத்தின் பாகமாகும்.

Loading