இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
நாட்டின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள இன்றியமையாத மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு குறித்து இலங்கை முழுவதும் விழிப்படைந்துள்ள வைத்தியர்களும் ஏனைய சுகாதார ஊழியர்களும் பாரதூரமான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
பெரும்பாலான இலங்கையர்கள் பொது சுகாதார அமைப்பையே நம்பியிருக்கின்றனர். நாட்டின் இலவச பொது சுகாதார அமைப்பு சீரழிந்து, நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள அதே வேளை, பொது மற்றும் தனியார் ஆகிய இரண்டு மருத்துவ சேவைகளும் அடிப்படை மருத்துவப் பொருட்களின் பெரும் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
இலங்கையின் முதன்மையான புற்றுநோய் சிகிச்சை மையமான அபேக்ஷா வைத்தியசாலையின் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளும் சோதனைகளை இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் பிரதான அறுவை சிகிச்சை உட்பட முக்கியமான மருத்துவ நடைமுறைகளை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி மே 23 அன்று தெரிவித்தது.
வைத்தியர் ரொஷான் அமரதுங்க செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: “புற்றுநோயாளிகளுக்கு இது மிகவும் மோசமானது. சில சமயங்களில், காலையில் சில அறுவை சிகிச்சைகளுக்குத் திட்டமிடுகிறோம் [ஆனால்] பொருட்கள் இல்லாததால் குறிப்பிட்ட நாளில் அவற்றைச் செய்ய முடியாமல் போகலாம்.” நிலைமை விரைவாக மேம்படுத்தப்படாவிட்டால், சில நோயாளிகள் 'ஏறத்தாழ மரண தண்டனையை' எதிர்கொள்வர் என்றும் அவர் கூறினார்.
மற்றொரு அபேக்ஷா மருத்துவமனை மருத்துவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) பேசும் போது குறிப்பிட்ட சில மருந்துகளின் பற்றாக்குறை ஏனைய துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார். லுகேமியா சிகிச்சை மருத்துவர்களிடம், ஜி-சி.எஸ்.எஃப். (இரத்த வெள்ளையணுக்கள் இருப்பு-ஊக்கி காரணி) மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லை என்று அவர் கூறினார். சில நோயாளிகளின் உறவினர்கள் பொட்டாசியம் உப்புக் குப்பிகளை வெளியில் தேடி வாங்கத் தள்ளப்பட்டுள்ளனர்.
கல்லீரல் செயலிழப்பினால் இரத்தம் வாய்வழியாக வெளியேற்றப்படுவதால் அவதிப்படும் நோயாளிகளின் வாயில் கேமராக்களை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட கிளிப்கள் மருத்துவமனையில் தீர்ந்து போய் ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது என்று கண்டி தேசிய ஆஸ்பத்திரியைச் சேர்ந்த மருத்துவர் WSWS இடம் கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமான நாட்டின் நிதி நெருக்கடி சமீபத்தில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை அடைத்து மேலும் மோசமாகியதால், கடந்த ஐந்து மாதங்களாக இலங்கையின் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இந்த உயிராபத்தான பிரச்சினைகள் தோன்றியுள்ளன.
வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு நாணய கையிருப்பைக் கையாள்வதற்கான அவநம்பிக்கையான முயற்சியில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருட்கள் உள்ளிட்ட பிரதான இறக்குமதிகளைக் குறைத்ததுடன், நீண்ட நேர மின் வெட்டுக்கும் வழி வகுத்தது.
இதன் விளைவாக உருவான சமூக நெருக்கடியானது ஜனாதிபதி இராஜபக்ஷவையும் அவரது ஆட்சியையும் பதவி நீக்கம் செய்யக் கோரும், பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வருமாறும் கோரும் வெகுஜன எதிர்ப்புக்களை துரிதப்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார தொழிலாளர்கள் முன்னணியில் இருந்தனர்.
இலங்கை அதற்கு வேண்டிய மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்களில் 80 வீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இறக்குமதிக்கான கடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறும் அதே வேளை, வங்கிகள் தங்களிடம் அமெரிக்க டாலர்கள் இல்லை என்று கூறுகின்றன.
மே 16 அன்று, முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் சஞ்சீவ முனசிங்க, 188 அல்லது நோயாளிகளுக்குத் தேவையான 646 அடிப்படை மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு, அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் இல்லை என்று விசேட குழுவிடம் கூறினார். இதய நோயாளிகளுக்கான ஒன்று உட்பட இதில் பதினான்கு மருந்துகள், அத்தியாவசியமானவை என அவர் கூறினார். அறுவை சிகிச்சை உபகரணங்களும் பற்றாக்குறையாக இருந்தன.
மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரண விநியோகஸ்தர்களுக்கு அமைச்சினால் 34 பில்லியன் ரூபாவை (100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலுத்த முடியவில்லை என முனசிங்க ஒப்புக்கொண்டார்.
அண்மைய மாதங்களில் இராஜபக்ஷ அரசாங்கம் பல்வேறு மருந்துப் பொருட்களின் விலைகளை கிட்டத்தட்ட 90 வீதத்தால் பாரியளவு அதிகரித்துள்ளது. மருந்துகளின் விலை மார்ச் 11 அன்று 29 சதவீதமும், ஏப்ரல் 11 அன்று 20 சதவீதமும், ஏப்ரல் 30 அளவில் மேலும் 40 சதவீதமும் அதிகரித்தது.
இந்த மோசமான நிலைமை அரசு நடத்தும் பொது மருத்துவமனைகளுக்கு மட்டும் அல்ல. தனியார் துறை மருத்துவமனைகளும், மயக்க மருந்துகள் உட்பட எழுபதுக்கும் மேற்பட்ட முக்கிய மருந்துகள் அவற்றின் களஞ்சியத்தில் பற்றாக்குறையாக இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளன. இதனால் அவர்கள் குறைந்த பயன்தரும் மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
அபிவிருத்தியடைந்து வரும் பேரழிவைப் பற்றி மருத்துவர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். கடந்த மாத தொடக்கத்தில், இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) அறிவித்ததாவது: “வழக்கமான சத்திரசிகிச்சை நடவடிக்கைகள் போன்ற சில சேவைகளை குறைப்பதற்கு ஏற்கனவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன, மேலும் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்களின் பயன்பாட்டை மட்டுப்படுத்தவும் கூட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல கொள்கை அல்ல, ஏனெனில் அவசரநிலை அல்லாத சூழ்நிலைகள் சில மணிநேரங்களில் உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளாக மாறும்.
வாரங்களுக்குள் நிலைமை சரிசெய்யப்படாவிட்டால், “அவசர சிகிச்சையும் சாத்தியமில்லை. இது ஒரு பேரழிவுகரமான மரணங்களை ஏற்படுத்தும், இது கோவிட், சுனாமி மற்றும் உள்நாட்டுப் போரின் ஒருங்கிணைந்த இறப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம்.
இத்தகைய மதிப்பீடுகளை முன்னெப்போதும் கண்டதில்லை. நாட்டின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை தற்போது 16,500க்கும் அதிகமாக உள்ளது, டிசம்பர் 2004 சுனாமியின் விளைவாக 30,000 இலங்கையர்கள் இறந்தனர், கொழும்பின் 26 ஆண்டுகால இரத்தக் களரி தமிழர்-விரோத போரில் குறைந்தது 150,000 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் தமிழ் பொது மக்கள் ஆவர்.
மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் உருவாக்கப்பட்ட சுகாதாரப் பேரழிவின் அளவை இலங்கையின் முதன்மையான மருத்துவ சங்கத்தின் பின்வரும் எச்சரிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நிலைமை, பெருகிவரும் பணவீக்கத்தால் ஏற்படும் பட்டினியுடன் சேர்ந்து, வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு சமூக பேரழிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம், வருடாந்திர தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 33.8 சதவீத உயர்வையும், உணவுக் குறியீடு 45.1 சதவீத அதிகரிப்பையும் காட்டியது.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில், “அடுத்த இரண்டு மாதங்கள் அனைத்து பிரஜைகளின் வாழ்விலும் மிகவும் கடினமானதாக இருக்கும்” என்று எச்சரித்தார். மக்கள் 'சில தியாகங்களைச் செய்ய' தயாராக வேண்டும் என்று அவர் அறிவித்தார்.
கடந்த வாரம் விக்கிரமசிங்க, அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றும் அரச செலவீனங்கள் 'முழுமையாக வெட்டப்பட வேண்டும்' என்றும் அறிவித்தார்.
இலங்கையின் ஆளும் உயரடுக்கின் ஈவிரக்கமற்ற அணுகுமுறை, நடப்பு கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், கடந்த மூன்று வருடங்களாக பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் சுகாதார அமைச்சின் செலவினங்களையும் ஒப்பிடுவதன் மூலம் நிரூபித்துக்கொள்ள முடியும்.
2020 இல் பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு 290 பில்லியன் ரூபாவாகும், சுகாதாரச் செலவு வெறும் 254 பில்லியன் ரூபாவாகும்; 2021 இல் பாதுகாப்புக்கு 380 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட அதேவேளை சுகாதாரத்துக்கு 286 பில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு, பாதுகாப்புக்காக 373 பில்லியன் ரூபாவும், சுகாதாரத்திற்காக 225 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது, இது கடந்த மூன்று ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட மிகக் குறைந்த தொகையாகும்.
தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு போதுமான சுகாதார சேவை மற்றும் பிற அடிப்படை சமூக தேவைகளை வழங்குவதற்கு தேவையான நிதியை இலங்கை முதலாளித்துவம் ஒருபோதும் வழங்காது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
அதனால்தான், பெரிய நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் பிற பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்குவதன் மூலமும், அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிப்பதன் மூலமும், தொழிலாள வர்க்கம் அனைத்து அத்தியாவசிய உற்பத்தி மற்றும் விநியோகத்தின் கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்துக்கொள்வதுமே மோசமான சமூக நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரே வழி ஆகும். இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்களின் கூட்டாளிகள், உலகெங்கிலும் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள அவர்களின் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளே ஆவர்.
சோசலிச சமத்துவக் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் சாராமல், ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும் மற்றும் தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களை வலியுறுத்துகிறது, மேலும் அவசரமாகத் தேவைப்படும் இந்த சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும்.
மேலும் படிக்க
- இலங்கை: அரசு துறையில் வேலை மற்றும் ஊதிய வெட்டுக்களை எதிர்த்திடு! தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!
- இலங்கைப் பிரதமர் உழைக்கும் மக்களை அதிக தியாகம் செய்யக் கோருகிறார்
- இலங்கை: காலிமுகத்திடல் எதிர்ப்புகளின் "கட்சி சார்பின்மை" சாக்குப்போக்கின் பின்னால் இயங்கும் முதலாளித்துவ அரசியல்