சென்னை துப்புரவுப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பொது சேவை மற்றும் மாநில அரசு நிறுவனமான சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் (Chennai Metropolitan Water Supply and Sewerage Board - CMWSSB) இணைக்கப்பட்ட சுமார் 1,800 துப்புரவுப் பணியாளர்கள், அவ்வாரியத்தின் இன் மூத்த அதிகாரிகள் மற்றும் பெரிய காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் அச்சுறுத்தப்பட்ட நிலைமைகளின்கீழ் மே 25 அன்று தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திடீரென முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி மே 15 அன்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியிருந்தனர்

வேலைநிறுத்தப் போராட்டம் செய்யும் சென்னை துப்புரவுப் பணியாளர்கள் (WSWS Media)

மே 25 அன்று MRC நகரில் உள்ள பெருநகர நீர் வழங்கும் பணியகத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, வாரிய உயர்மட்ட அதிகாரிகள் உள்ளே அதிரடியாக நுழைந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். உடன் வந்த காவல்துறை அதிகாரிகளும் பலத்தை பயன்படுத்துவார்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை உணர்ந்த வாரியத்தின் மூத்த அதிகாரிகள், நிரந்தர வேலைக்கான கோரிக்கையை சென்னையை தலைநகராகக் கொண்ட தமிழ் நாட்டின் முதல்வரிடம் தெரிவிப்பதாகவும், அவர்களுக்கு சாதகமான ஒரு தீர்வு மூன்று மாதங்களுக்குள் கிடைக்கும்என்றும் தெரிவித்தனர். இந்த வாக்குறுதிகள் வெறும் மோசடியானதாகும். அது வேலைநிறுத்தப் போராட்டம் செய்பவர்களை பயமுறுத்தி மற்றும் மிரட்டல் விடுப்பதன் மூலம் மீண்டும் வேலைக்கு திரும்பச்செய்யும் அவர்களின் முயற்சிகளுக்கு துணைபுரிவதற்கான ஒரு மோசடியைத் தவிர வேறில்லை.

1,800 தற்காலிகத் தொழிலாளர்கள் நேரடியாகப் பணியில் ஈடுபடுவதை பிப்ரவரி 21ஆம் தேதி நிறுத்துவதற்கு வாரியம் முடிவு செய்து, அவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக தரம் குறைத்ததாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஆனால், நிர்வாகம் இந்த மாற்றம் குறித்து விளக்கமளிக்காமல் அமைதியாக இருந்துள்ளது.. ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படாத சமயத்தில்தான் தொழிலாளர்களுக்கு இது தெரிய வந்ததுள்ளது.

உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் மற்றும் காவல்துறையால் கைதுசெய்யப்படுவர் என அச்சுறுத்தப்பட்டு துப்புரவுத் தொழிலாளர்களின் போர்க்குணம் மிக்க வேலைநிறுத்தப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் கூடவே இருக்கும் ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் கட்சியின் தொழிற்சங்கமான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியூ) முக்கிய பங்கு வகித்துள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளின் ஆதரவைத் திரட்டுவதன் மூலமும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியமேலாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் காவல்துறையின் மிரட்டல் தந்திரங்களுக்குப் பதிலடி கொடுக்காமல் சிஐடியூ துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டத்தை தனிமைப்படுத்திக் கைவிட்டது.

'பணியாளர்கள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டதாக கூறி ஜெட் ரோடிங் வாகனங்களின் மற்றும் தூர்வாரும் வாகனங்களின் சாவிகளை எதிர்ப்பு தெரிவித்த ஓட்டுனர்களிடமிருந்து அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றார்கள்' என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக ஊடகங்களின் அறிக்கைகள் தெவிவிக்கின்றன.

மே 25 உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு தொழிலாளி, வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தொழிலாளர்களின் முடிவின் பின்னணியை ஊடகங்களுக்கு விவரித்துள்ளார்: “சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாகம் போராட்டத் தொழிலாளர்களிடம் அவர்களது வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இப்போது, அவர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்பும்படியும், போராட்டக் காலத்திற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளும்படியும் அல்லது அவருக்குப் பதிலாக புதிய நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தனித்தனியாக தொழிலாளர்களை அழைத்து பேசிகின்றனர். பிரதமர் நகரத்திற்கு வருகை தருவதை காரணம் காட்டி தொழிலாளர்களை கைது செய்யப்போவதாகவும் போலீசார் மிரட்டினர்.”

ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு எதிரான துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் எந்த தொழிற்சங்க உதவியுமின்றி தன்னிச்சையாக வெடித்துள்ளது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியதுப்புரவுத் தொழிலாளர்கள் நிரந்தர வேலைகளுக்காகவும், மலிவு-தொழிலாளர் முறை மற்றும் ஆபத்தான ஒப்பந்த வேலைகளுக்கு எதிரான போராட்டத்தில் தனியாக இல்லை. இந்தியா முழுவதும் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். அரசாங்க அதிகாரிகள் இந்த மிகவும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் காலவரையின்றி வேலையில் அமர்த்தியுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் கட்டுப்பாடற்ற சுரண்டலுக்கு ஆளாகிறார்கள், ஏனெனில் ஒப்பந்த முகவர்களின் தொழிலாளர் உரிமை மீறல்கள் எப்பொழுதும் கண்காணிக்கப்படுவதில்லை மற்றும் கட்டுப்படுத்தப்படுவதில்லை. இந்தியா முழுவதிலும் உள்ள தனியார் மற்றும் பொதுத் துறைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர், மேலும் அதன் பரவலானது ஆளும் வர்க்கம் தொழிலாளர் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் ஒரு முக்கிய வழிமுறையாகும், அதே நேரத்தில் தொழிலாளர்களை ஒன்றுசேர்ந்துவிடாதவகையில் பிரிக்கிறது.

சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு எதிராகப் பிரகடனம் செய்கின்றன, ஆனால் அதற்கு எதிராக தீவிரமான போராட்டத்தை நடத்தவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஆங்காங்கே நடக்கும் போராட்டங்களுக்கு தொழிலாளர் எதிர்ப்பை அவர்கள் மட்டுப்படுத்தியுள்ளனர் மற்றும் பல நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடுக்குகளாகப் பிரிப்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர், பெரும்பாலும் நிரந்தர, ஒப்பந்த, பயிற்சியாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என உள்ளனர். பிரதம மந்திரி நரேந்திர மோடியின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டாளர் சார்பு 'சீர்திருத்தங்களுக்கு' எதிராக எழுந்தட தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் பரந்த எழுச்சியிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டங்களை தொழிற்சங்கங்கள் தனிமைப்படுத்தியுள்ளன. வாகனத் தொழிலாளர்களின் முக்கிய வேலைநிறுத்தப் போராட்டங்கள், நாடு முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள ஒரு நாள் மற்றும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் விவசாய வணிகச் சார்பு சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஆண்டு முழுவதும் நடத்திய போராட்டம் ஆகியவை மேம்படுத்தப்பட்ட நிலைமைகள் மற்றும் பணியிட நலன்களுக்காக உழைக்கும் மக்களின் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்திற்கான சாத்தியம் இருப்பதை நிரூபிக்கிறது.

70,000க்கும் மேற்பட்ட மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (MSRTC) தொழிலாளர்கள், பேருந்து வழித்தடங்கள் மற்றும் பணிமனைகளை தனியார்மயமாக்கும் மாநகராட்சி மற்றும் மாநில அரசின் திட்டங்களைத் தடுக்கும் வகையில், மாநில அரசு ஊழியர்களின் நிலையைப் வென்றெடுக்க நவம்பர் தொடக்கத்தில் இருந்து, ஏப்ரல் மாத இறுதி வரையில் ஐந்து மாதங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தனர். வேலைநிறுத்தப் போராட்டம் செய்பவர்களின் உறுதியும் போர்க்குணமும் இருந்தபோதிலும், அவர்களது வேலைநிறுத்தப் போராட்டங்கள் தொழிற்சங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ராலினிச சிஐடியுவால் காட்டிக் கொடுக்கப்பட்டுவருன்றன. நீதிமன்றங்கள் வேலைநிறுத்தத்தை சட்ட விரோதமாக்கின. மேலும் போராட்டத்தின் நிதி நெருக்கடி தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததால் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

வேலைநிறுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் மே 16 அன்று சென்னையில் வசிப்பவர்களுக்கு தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு ஒரு பகிரங்கக் கடிதத்தில் அறிவிப்பு வெளியிட்டனர்: 'நாங்கள் சுமார் 20-30 ஆண்டுகளாக களப்பணியாளர்கள், சில்ட் வாகன ஓட்டுநர்கள், ஜெட் ரோடிங் மற்றும் சூப்பர்-சக்கர் என வேலை செய்து வருகிறோம். வெறும் கையால் மலக்கழிவுகளை கையாள்வதை தடை செய்யும் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, நாங்கள் வழக்கமாக கழிவு நீர் சேகரிக்கும் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடை கிணறுகளில் எங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வந்துள்ளோம். ... விபத்துகளையோ, அவமானங்களையோ சந்திக்காத நாளே இல்லை. ... நச்சு வாயுக்கள் மற்றும் மல அசுத்தங்கள் பல வேலைத் தளங்களில் நமது உடல்களை தொழில் ரீதியாக பாதிக்கின்றன...”

உலக சோசலிச வலைத் தள (wsws.org) செய்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட்ட சென்னை துப்புரவுத் தொழிலாளர்களுடன் பேசினர். ஸ்ராலினிச சிஐடியூ போன்ற துரோக முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகவும் மற்றும் அவற்றுக்கு எதிராகவும் ஒரு நடவடிக்கைக் குழுவைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை அவர்களுடன் விவாதித்தார்கள். தொழிலாளர்கள் தங்கள் வர்க்க நலன்களைப் பாதுகாக்க தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களுடன் பிணைக்கப்பட்ட அரசியல் கட்சிகளை இனி நம்பியிருக்க முடியாது என்று அவர்கள் விளக்கினர். ஒப்பந்தத் தொழிலாளர் முறை என்பது, தொழிலாளர் சுரண்டலை அதிகரிப்பதற்கும், பெரும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் லாபத்தை அதிகரிப்பதற்குமான அரசு ஆதரவுக் கொள்கையாகும். எனவே அவர்கள் முதலாளித்துவ அரசு மற்றும் தேசிய அரசாங்கங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் மற்றும் சோசலிச கொள்கைகளுக்காக போராட வேண்டும்.

ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் பேராதரவு பெற்ற தேசிய அரசாங்கக் கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பெருவணிகக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது, மற்றும் தற்போது தமிழ்நாட்டில் அரசாங்கத்தை அமைத்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) ஆகியவற்றை வகுப்புவாத மற்றும் சர்வாதிகார பிஜேபிக்கு எதிரான 'மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக' மாற்று என்று ஊக்குவிக்கிறது.. இவ்வகையில் ஸ்ராலினிசக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவக் கட்சிகளுடனும் அரசுடனும் கட்டிப்போட்டு வருகின்றன.

வேலைநிறுத்தப் போராட்டம் செய்யும் துப்புரவுப் பணியாளர்கள் தாங்கள் சகித்துக் கொள்ள வேண்டிய பயங்கரமான நிலைமைகளுக்கு எதிராகப் பேசினர்.

வேலைநிறுத்தப் போராட்டம் செய்யும் சென்னை துப்புரவுத் தொழிலாளி கமலக்கண்ணன் (WSWS Media)

40 வயதான கமலக்கண்ணன் WSWS இடம் கூறினார்: “முன்பு நாங்கள் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நேரடி ஊழியர்களாக இருந்தோம். இப்போது நாங்கள் ஒப்பந்த தொழிலாளர்களை வாரியத்திற்கு விநியோகம் செய்யும் வெவ்வேறு ஒப்பந்த முகவர்களின் கீழ் மாற்றப்பட்டுள்ளோம்.” பணியாளர்களுக்கு கையுறை, தலைக்கவசம், காலணிகள், சீருடை போன்ற பாதுகாப்பு கருவிகளை அதிகாரிகள் வழங்குவதில்லை” என்று அவர் புகார் கூறினார். 'பாதுகாப்பு கருவிகள் இல்லாத காரணத்தால், 42 வயதான ஜானகிராமன் என்ற தொழிலாளி, ஜெட் ராடிங் சிஸ்டம் உடைந்து, மிக அதிவேக நீர் வெளியே பீச்சியடித்ததால், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நிர்வாகம் அவரைப் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. சிகிச்சை முடிந்து தற்போது அவர் தனது வீட்டில் தங்கியுள்ளார். அவருக்கு வாரியம் இழப்பீடு வழங்கவில்லை. அவருக்கு மாதந்தோறும் பெயரளவிலான ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது” என்று அந்தத் தொழிலாளி விளக்கினார்.

சந்திரசேகர் (WSWS மீடியா)

சாக்கடை துப்புரவு தொழிலாளி சந்திரசேகர், 32, கூறியதாவது: வேலை இல்லை என்றால் ஊதியம் இல்லை என்ற கொள்கையை அவர்கள் பின்பற்றுவதால், ஞாயிற்றுக்கிழமைக்கான சம்பளம் வழங்கப்படுவதில்லை. நான் 11 வருடங்களாக வேலை செய்கிறேன். எனது மாதச் சம்பளம் 15,000 ரூபாய் [US$193]. அவர்கள் எனது மாதச் சம்பளத்தில் இருந்து 850 ரூபாயை PF [வருங்கால வைப்பு நிதி] மற்றும் ESI [தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டமான ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத் திட்டம்] ஆகியவற்றிற்காகப் பிடித்தம் செய்கின்றனரு.

பணியில் நவீன உபகரணங்களைப் பயன்படுத்துவது குறித்து அவர் கூறியதாவது: சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு தற்போது புதிய நவீன கருவிகள் கிடைத்தாலும், சில இடங்களில் பணிபுரியும் ஆட்கள் கழிவுநீர் கிணறுகளில் இறங்கி அடைப்பை அகற்ற வேண்டியுள்ளது. இந்த வகையான வேலைகள் தொழிலாளர்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இந்த துப்புரவுப் பணியை அனைத்து அரசுத் துறை வளாகங்களிலும், வீட்டு வசதி வாரியத் திட்டங்களிலும் நாங்கள் செய்கிறோம். அவர்கள் வேலை செய்யும் இடங்களில் சில இடங்களில் ஜெட் ரோடிங் மற்றும் கழிவுநீர் உறிஞ்சும் லாரிகளைப் பயன்படுத்தினாலும், மாநில அரசு பெரும்பாலான இடங்களில் மனிதர்களை பயன்படுத்துகிறது. நாங்கள் உயர் நீதிமன்றம் மற்றும் பொது மருத்துவமனை [GH] வளாகங்களிலும், மாநில அமைச்சர்களின் வீடுகளிலும் வேலை செய்கிறோம்.

ஸ்ரீதர் (WSWS மீடியா)

45 வயதான ஸ்ரீதர் கூறியதாவது: வாரியத்தில் பணிபுரியும் போது, மாத சம்பளம், 25,000 ரூபாய். ஆனால் என்னை ஒப்பந்த தொழிலாளி ஆக்கிய பிறகு எனது சம்பளம் 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நாங்கள் நிரந்தர வேலைகளைக் கோருகிறோம், எனவே எங்கள் வேலைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படும் மற்றும் நிரந்தரத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் பிற நன்மைகளுக்கு நாங்கள் உரிமையுடையவர்களாக மாறுவோம்.

சிஐடியு ஆற்றிய துரோகப் பாத்திரம் குறித்து பேசிய அவர், “ஐந்தாண்டுகளுக்கு முன், மூன்று மாதங்களில் எங்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியின் பேரில், நாங்கள் சிஐடியுவில் சேர்ந்தோம். ஆனால், ஐந்து வருடங்கள் ஆகியும் எங்களை நிரந்தரமாக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. உயர் அதிகாரிகளால் நாங்கள் துன்புறுத்தப்பட்ட போதெல்லாம் எங்கள் பாதுகாப்புக்கு சிஐடியு வரவில்லை. அதனால் சிஐடியு தொழிற்சங்கத்தில் இருந்து வெளியேறினோம். தொழிற்சங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தோம். எங்களுக்கு சங்கம் தேவையில்லை. தற்போது மாநில அரசுக்கு எதிராக நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

38 வயதான நிர்மல் கூறியதாவது: எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனது மாதச் சம்பளம் 12,000 ரூபாய். ஆனால், இதில் எனது வீட்டு வாடகைக்கு 5,000 செலவிட வேண்டியுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில்தான் வசிக்கின்றனர்.”

1992 இல் வாரியத்தில் சேர்ந்த கோபால் கருத்துப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தொழிலாளர்கள் கோவிட்-19 காரணமாக இறந்துள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களின் அழுத்தத்தின் பேரில் 2019ஆம் ஆண்டு நீதிமன்றங்களில் தொழிற்சங்கம் வழக்குத் தொடுத்துள்ளது என்றார். “ஆனால் வழக்கு தொடர்பான எந்த புதிய தகவலும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகளை கேட்டால், அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டாம் என்று சொல்வார்கள், ஏனென்றால் அவர்களுக்கு அது பற்றி எதுவும் தெரியாது.”

Loading