மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நரேந்திர மோடி தலைமையிலான, தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ந்து அதிகரித்து வரும் தாக்குதலை எதிர்த்து இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், நிலக்கரி மற்றும் தாமிர சுரங்கத் தொழிலாளர்கள், எஃகு, எண்ணெய், தொலைத்தொடர்பு, அஞ்சல் மற்றும் கிராமப்புற சுகாதார (ஆஷா) தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள். குறிப்பாக நிலக்கரி இந்தியா, இந்திய ஆயுள் காப்புறுதி நிறுவனம் மற்றும் அரசுக்கு சொந்தமான வங்கிகள் போன்ற தனியார்மயமாக்கலுக்கு குறிவைக்கப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்களின் வலுவான பங்கேற்பு எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைநிறுத்தம் இந்தியாவின் ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளால் திட்டமிட்டு ஊக்குவிக்கப்படும் சாதி மற்றும் வகுப்புவாதப் பிளவுகளை கீழறத்து தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான ஒற்றுமைக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
இந்தியா முழுவதும் வெகுஜன வேலையின்மை, உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் கடுமையாக விலை உயர்வுகள், நீடித்திருக்கும் வறுமை, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அடிப்படை பொது சேவைகளின் பற்றாக்குறை ஆகியவை குறித்து பெருகி வரும் சமூக கோபம் உள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு மோடி தலைமையில் மற்றும் அனைத்து எதிர்க்கட்சி தலைமையிலான மாநில அரசாங்கங்களாலும் செயல்படுத்தப்பட்ட ஆளும் வர்க்கத்தின் அழிவுகரமான பதிலால் இந்த அனைத்து சமூக சீர்கேடுகளும் மிகப்பெரிய அளவில் மோசமடைந்துள்ளன.
கடந்த ஆண்டு, தொழிலாளர்கள் தங்கள் வர்க்க நலன்களை பெருகிவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு அலைகள் மூலம் வலியுறுத்த முயன்றனர். கடந்த மே மாதம், கோவிட்-19 க்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் தமிழ்நாடு, சென்னையின் புறநகரில் உள்ள ஃபோர்டு, ஹூண்டாய் மற்றும் ரெனால்ட்-நிசான் ஆலைகளை தற்காலிகமாக மூடும்படி வாகனத் தொழிலாளர்கள் நிர்ப்பந்தம் செய்தனர். குறிப்பாக முக்கியமானது என்னவென்றால் 75,000 மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் (MSRTC) கடந்த நவம்பரில் இருந்து நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவையைத் தனியார்மயமாக்கும் திட்டங்களை முறியடிக்கவும், தங்களின் ஊதியத்தை முறையாகப் பெறுவதற்கான முயற்சியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காட்டுமிராண்டித்தனமான நிர்வாகத்தின் பழிவாங்கல்கள் மற்றும் அரசாங்க அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் நாசவேலைகளுக்கு முகங்கொடுத்து தொழிலாளர்கள் விடாப்பிடியாக நிற்கின்றனர். வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே, அதை சட்டவிரோதமாக அறிவித்த நீதிமன்றத் தடைக்குக் கீழ்ப்படியுமாறு இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களும் MSRTC தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
அபாயகரமான ஒப்பந்த முறை தொழிலாளர் வேலைகள், தனியார்மயமாக்கல் மற்றும் வறுமைக் கூலிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் வேறுபட்ட போராட்டங்களை ஒன்றிணைப்பதற்கும், பெரும்தொற்றுநோய் மற்றும் வேலையின்மைக்கு எதிராக சமூக மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்காகவும், தொழிலாள வர்க்க எதிர்த்தாக்குதல்களாகவும், கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் நகர்ப்புற ஏழைகளை பின்னால் அணிதிரட்டவும் நிலைமைகள் முதிர்ச்சியடைந்துள்ளன..
எவ்வாறாயினும், இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள 10 தொழிற்சங்க கூட்டமைப்புகளை பொறுத்தவரையில் இது மோடி அரசாங்கம் மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன தொழில்துறை மற்றும் அரசியல் அணிதிரட்டலை நோக்கிய ஒரு படி அல்ல. மாறாக அவர்கள், கடந்த தசாப்தத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்ற எதிர்ப்பு வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அது அவர்கள் வர்க்கப் போராட்டத்தை நசுக்கும் நோக்கத்துடன் செய்தனர் அன்றி வளர்ச்சியடைய செய்வதற்கல்ல. 2024ல் அடுத்த பொதுத் தேர்தலின் போது ஒரு மாற்று வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான அவர்களின் சொந்த முயற்சிகளுக்குப் பின்னால், 'மக்கள் சார்பு' கொள்கைகளை பின்பற்றும்படி மோடி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வீண் முயற்சிகளில் தொழிலாளர்களை வழிநடத்த முயற்சிக்கின்றனர்.
இது சமீப காலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் விருப்பமான தேசிய அரசாங்கக் கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC), மற்றும் அது தமிழகத்தில் ஆளும் கட்சியான வலதுசாரி, பிராந்திய பேரினவாத திமுக உடன் இணைந்திருக்கும் தொழிலாளர் முற்போக்கு முன்னணி (LPF) ஆகியவை குறித்தும் உண்மையாக உள்ளது. இது குறிப்பாக இரட்டை ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ). ஆகியவற்றின் தொழிற்சங்க துணை அமைப்புகளான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆகியவை தொடர்பாகவும் உண்மையாக இருக்கிறது.
உயிர்களுக்கு முன்னே இலாபங்கள்
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களைப் போலவே, இந்திய அரசாங்கங்களும் பெரும்தொற்றுநோய்களின் போது ஒவ்வொரு கட்டத்திலும் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு மேலாக பெரும் வணிக இலாபங்களையும் முதலீட்டாளர்களின் செல்வத்தையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளன. 2020 வசந்த காலத்தில் ஒரு சுருக்கமான, மோசமாகத் தயாரிக்கப்பட்ட தேசிய முடக்கத்தின் போது
பெரும் மக்கள் தொகையினர் ஒரே இரவில் அனைத்து வருமானமும் பறிக்கப்பட்டு, தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும்படி விடப்பட்டனர்- அதை தொடர்ந்து எந்த நிலையிலும் ஒரு கொலைவெறி உந்துதலுடன் 'பொருளாதாரத்தைத் திறந்த நிலையில்' வைத்திருப்பது தொடர்ந்தது. கடந்த வசந்த காலத்தில், இந்தியா அதன் பேரழிவுகரமான டெல்டாவால் இயக்கப்பட்ட இரண்டாவது அலை வெகுஜன தொற்றுகள் மற்றும் இறப்புகளால் அழிக்கப்பட்டபோது, மோடி, கொடிய வைரஸிலிருந்து அல்ல, ஊரடங்கிலிருந்து இந்தியாவை 'காப்பாற்றுவேன்' என்று பகிரங்கமாக உறுதியளித்தார். உத்தியோகபூர்வமாக, இந்தியாவில் 521,000 கோவிட்-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், மோடி அரசாங்கத்தைத் தவிர, கார்ப்பரேட் மீடியாக்களில் உள்ள அவர்களது ஊதுகுழல்களை தவிர, அனைவரும் இதை ஒரு மொத்தக் குறையாக ஒப்புக்கொள்கிறார்கள். அதிகப்படியான இறப்பு பற்றிய பல ஆய்வுகள், இந்தியாவின் கோவிட் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கையை நான்கு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்டதாக குறிப்பிட்டுள்ளன.
பெரும்தொற்றுநோய் வேலையின்மை மற்றும் பசியின் பெரும்தொற்றுநோயுடன் சேர்ந்துள்ளது.
பெரும்தொற்றுநோயின் மோசமான கட்டங்களில் அழிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான வேலைகளில் பல மீட்டெடுக்கப்படவில்லை. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின்படி, 8 சதவீத இந்தியக் குடும்பங்களில் 'பொருளாதார ரீதியாகச் செயல்படுபவர்கள்' (தொழிலாளியாகவோ, விவசாயியாகவோ, வியாபாரியாகவோ ஒருவர் கூட இல்லை, மற்றும் 68 சதவிகிதத்தினரில் ஒரு நபர் மட்டுமே அவ்வாறு இருக்கிறார். இவ்வாறான நிலை பெரும்பாலான மக்கள், நீடித்த பல தலைமுறை குடும்பங்களில் வசிக்கும் நாட்டில் உள்ளது, இங்கு வேலையில்லாதவர்களுக்கு அரசு உதவி கிடையாது.
தொற்றுநோயின் முதல் ஆண்டில், மேலும் 230 மில்லியன் இந்தியர்கள் ஒரு நாளைக்கு 375 ரூபாய் (US$5) அல்லது அதற்கும் குறைவாக வாழ வேண்டியிருந்தது என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு கண்டறிந்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஏழ்மையான பிரிவுகள்தான். 2015-16 மற்றும் 2020-21 க்கு இடையில், இந்திய குடும்பங்களில் 20 சதவீத ஏழை குடும்பங்கள் சராசரியாக 50 சதவீதத்திற்கும் அதிகமாக வருமானம் குறைந்துள்ளதாக இந்தியர்களின் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மறுபுறம் இந்தியாவின் பணக்காரர்கள் மற்றும் பெரும் பணக்காரர்களின் செல்வம் பெருகியுள்ளது, மேலும் தொற்றுநோய்களின் போது இருந்ததை விட அதிகமாக இல்லை. 2021 ஆம் ஆண்டில், இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 102 இலிருந்து 142 ஆக (ஃபோர்ப்ஸ்) அல்லது 51 ஆக அதிகரித்து 250 ஆக உயர்ந்தது (ஹாருன் குளோபல் பணக்காரர்களின் பட்டியல்). இந்த பில்லியனர்களில் 98 பணக்காரர்கள், சமீபத்திய ஆக்ஸ்பாம் அறிக்கையான 'சமத்துவமின்மையைக் கொல்கிறது' என்பதில் குறிப்பிட்டபடி அனைத்து இந்தியர்களில் 555 மில்லியன் மக்கள் அதவது 40 சதவீத ஏழைகளின் செல்வத்திற்கு சமமான செல்வத்தைக் கொண்டுள்ளனர்.
மோடி அரசாங்கத்தின் அழிவுகரமான 'உயிர்களை விட இலாபம் முக்கியம்' என்ற பெரும்தொற்றுநோய் கொள்கையானது தொழிலாள வர்க்கத்தின் மீதான வர்க்கப் போர் தாக்குதலின் அதி நவீன தீவிர தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சியை ஊக்குவிப்பதன் பெயரில், முதலீட்டாளர் வருமானம் மற்றும் தொழிலாளர் சுரண்டலை வியக்கத்தக்க வகையில் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட 'பெருவெடிப்பு' பொருளாதார 'சீர்திருத்தங்களை' அது செயல்படுத்தியுள்ளது. அதில் பின்வருவன அடங்கும்: மேலதிக வரி குறைப்புகள் மற்றும் பெருவணிகத்திற்கான மானியங்கள்; தொழிலாளர் 'சீர்திருத்த' சட்டம் இதன்மூலம் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் 'தற்காலிகமாக வேலைக்கு அமர்த்துதல் மற்றும் நீக்குதல்' மூலம் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறது மற்றும் பெரும்பாலான தொழிலாளர் வேலை நிறுத்த நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்குகிறது; மற்றும் அரசாங்க சொத்துக்களின் ஒரு சில 'மூலோபாயத் துறைகளில்' உள்ள ஒரு சில நிறுவனங்களைத் தவிர மற்ற அனைத்தையும் தனியார்மயமாக்கி பெரும் விற்பனை செய்வதாகும்.
இந்த சமூகத்தை எரியும் நெருப்புக்குள் தள்ளும் நடவடிக்கைகளை செயல்படுத்த, மோடியும் அவரது இந்து மேலாதிக்கவாத பாஜகவும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு வகுப்புவாதத்தை தூண்டிவிட்டு, மேலும் அதிகளவில் சர்வாதிகார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு எதிரான அவர்களின் அரசியலமைப்பு சதி இதற்கு எடுத்துக்காட்டாக விளங்குறது. அது இந்தியாவின் முஸ்லிம் மக்களை தனிப் பெரும்பான்மையாக கொண்ட மாநிலத்தின் அதன் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை நீக்கியது, மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரை யூனியன் பிரதேசமாக தரம் குறைத்து, அதன் மூலம் நிரந்தரமாக மத்தியில் ஆளும் அரசாங்க ஆட்சியின் கீழ் கொண்டுவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறையில் அனைத்து வேலைநிறுத்தப் போராட்டங்களையும் சட்டவிரோதமாக்குவதற்காக, அத்தியாவசிய பாதுகாப்புச் சேவைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதமின்றி மோடி அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.
மார்ச் 28-29 பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்க கூட்டமைப்புகள் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறுதல், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் முறைப்படுத்துதல், அனைத்து முன்நிலை தொற்றுநோய் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உடல்நலம் மற்றும் ஆயுள் காப்பீடு வழங்குதல் மேலும் முறைசாரா துறை என்று அழைக்கப்படும் சிறு வணிகங்களில் பணிபுரியும் தினக்கூலிகளாக உள்ள 90 சதவீத தொழிலாளர்களுக்கு உலகளாவிய சமூக பாதுகாப்பு போன்ற தொழிலாளர்களின் குறைகளுக்காக பேசும் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பியிருக்கின்றன.
ஆனால் இந்த அமைப்புக்குள்ளும் மற்றும் பாராளுமன்ற அரசியலுக்குள்ளும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புகளை குறுகிய எல்லைக்குள் சிக்க வைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக தொழிற்சங்கங்களும் ஸ்ராலினிச 'இடது' கட்சிகளும் இந்தக் கோரிக்கைகளை எழுப்புகின்றன. குறிப்பாக ஸ்ராலினிஸ்டுகள் 'இந்து பாசிஸ்ட்' என்று முத்திரையை பிஜேபிக்கு எதிராக குத்துகின்றனர். ஆனால் அவர்கள் தொழிலாள வர்க்கத்தை போராட்டத்திற்கு அணிதிரட்டுவதற்காக அல்ல, மாறாக வம்சாவளியான நேரு-காந்தி குடும்ப தலைமையிலான காங்கிரஸ் தொடங்கி அவர்களை அரசு மற்றும் ஊழல் நிறைந்த மற்றும் முற்றிலும் வலதுசாரி 'மதச்சார்பற்ற' பெருவணிகக் கட்சிகளுடன் பிணைக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன.
இந்தியாவும் ரஷ்யா மீது அமெரிக்கா-நேட்டோ போரும்
ஸ்ராலினிச கட்சிகளுடன் இணைந்த CITU மற்றும் AITUC உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான நேட்டோ சக்திகள் ரஷ்யாவை உக்ரேன் மீது போரைப் தொடங்குவதற்குத் தூண்டியவைகளைப் பற்றியும் மேலும் இப்போது அவைகள் பொறுப்பற்ற முறையில் ரஷ்யாவை அடிபணியச் செய்யவும் மற்றும் சீனா மீது இராணுவ மூலோபாய அழுத்தத்தை தீவிரப்படுத்துவதைப் பற்றியும் முற்றிலும் மௌனமாக இருக்கின்றன.
ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ மறைமுகமாக தலையிடும் இந்தப் போர் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கும், தெற்காசியா மற்றும் உலக மக்களுக்கும் இரண்டுவகையில் அச்சுறுத்தலாக உள்ளது.
முதலாவதாக, ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவிற்கு எதிராக தொடுத்துக்கொண்டிருப்பது முழுமையான பொருளாதாரப் போராகும், அது உலகப் பொருளாதாரத்தில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எரிசக்தி, உரம் மற்றும் அடிப்படை உணவுப் பொருட்களின் விலைகளில் கூர்மையான அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டாவதாக, அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நாடுகளால் நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட இந்தப் போர், உலக மறுபங்கீடு செய்வதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய மூலோபாய மோதலாக அவர்களால் பின்பற்றப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் தற்போதைய நெருக்கடியை கடந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார், 'ஒரு புதிய உலக ஒழுங்கமைப்பு அங்கு இருக்கப் போகிறது, அதை நாங்கள் வழிநடத்தப் போகிறோம்.' என்று அவர் கூடுதலாக கூறியுள்ளார்.
உலக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீட்டின் மூலம் தடுக்கப்படாவிட்டால், ஏகாதிபத்திய போர் உந்துதல் பெரும் வல்லரசுகளுக்கு இடையே ஒரு பேரழிவுகரமான மோதலில் முடிவடையும், இதில் தெற்காசியாவும் இந்தியப் பெருங்கடலும் முக்கிய போர்க்களங்களாக இருக்கும்.
இந்திய முதலாளித்துவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதன் உலகளாவிய மேலாதிக்கத்தைப் பின்தொடர ஊக்குவித்து, தைரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சி அரசாங்கம் சுடர்விட்ட பாதையில் தொடர்ந்து, மோடி அரசாங்கம் இந்தியாவை சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் முன்னணி நாடாக மாற்றி, வாஷிங்டன் மற்றும் அதன் ஆசிய-பசிபிக் பிரதான கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-பாதுகாப்பு நடவடிக்கைகளில் எப்போதும் பரந்துபட்ட உறவை உருவாக்கியுள்ளது.
புது டெல்லி ரஷ்யாவை 'ஆக்கிரமிப்பாளர்' என்று முத்திரை குத்த வேண்டும் மற்றும் மாஸ்கோவுடனான அதன் நீண்டகால இராணுவ-பாதுகாப்பு உறவுகளை தரமிறக்குவதற்காக அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகள் கொடுத்து வரும் அழுத்தத்தை மோடி இதுவரை எதிர்த்துவந்துள்ளார். எவ்வாறாயினும், இந்திய முதலாளித்துவம் எவ்வாறு தனது சொந்த கொள்ளையடிக்கும் நலன்களை சிறப்பாக தொடர முடியும் என்பதற்கான கச்சா எண்ணை கணக்கீடுகளின் அடிப்படையில் மட்டுமே இது அமைந்துள்ளது. மேலும், மோடி, இந்திய முதலாளித்துவத்தின் ஆதரவுடன், சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர்க்குணத்துக்கு மேலும் கூடுதலாக அதற்கான ஆதரவை தெரிவிப்பதன் மூலம், ரஷ்யா மீதான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சக்திகளின் அழுத்தத்தை ஈடுகட்ட முயற்சிக்கிறார்.
தொற்றுநோய்களின் போது உயிர்களைக் காப்பாற்றுவதைவிட இலாபத்திற்கு வழங்கப்பட்ட அக்கறையானது, தொடர்ச்சியான வெகுஜன இறப்புகளை ஏற்படுத்திய அலைகளுக்கு வழிவகுத்திருக்கிறது மற்றும் ஒமிக்கிரான் துணை மாறுபாடு அடைந்து BA.2 போன்ற கடுமையான வடிவங்களை எடுத்திருப்பதைப் போன்று அச்சுறுத்தலாக எப்போதுமிருக்கும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இப்போது ஐரோப்பாவில் வெடித்துள்ள போர் வெடிப்பு, உலகம் முழுவதும் உள்ளதைப் போலவே இந்தியாவிலும் முதலாளித்துவ ஆட்சி உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத முரண்பாட்டில் மாட்டிக்கொண்டிருக்கிறது.
முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிரான அரசியல் தாக்குதலில் இந்திய தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்கள் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் வகுப்புவாத பிற்போக்குத்தனத்தை எதிர்க்கவும், பூஜ்ஜிய-கோவிட் ஒழிப்பு கொள்கைக்காக போராடவும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் அதன் போராட்டத்தை ஒன்றிணைக்கவும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துடன் ஒன்றிணைய வேண்டும்.
மேலும் படிக்க
- சிறப்பு குவாட் உச்சி மாநாட்டில் உக்ரேன் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யாவை கண்டிக்க இந்தியா மறுக்கிறது
- இந்தியா: வேலைநிறுத்தம் செய்யும் மகாராஷ்டிரா போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாநில அரசாங்கத்தின் சமீபத்திய இறுதி எச்சரிக்கையை மீறுகின்றனர்
- ஆறு வார கால மகாராஷ்டிர பொது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களின் நாசவேலைகளால் ஆபத்தில் உள்ளது