ஜேர்மனி 100 பில்லியன் யூரோ "இராணுவத்திற்கான சிறப்பு நிதி" மூலம் மூன்றாம் உலகப் போருக்கு தயாராகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

100 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான 'இராணுவத்திற்கான சிறப்பு நிதி' இப்போது பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது ஜேர்மனியின் மறுஆயுதமயமாக்கலின் உந்துதலுக்கு பாரிய ஊக்கத்தை அளிக்கிறது. உலக சோசலிச வலைத் தளமும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei- SGP) இந்தப் போர் முன்னெடுப்பைக் கண்டிக்கின்றன. போர் பைத்தியக்காரத்தனத்திற்கு தொழிலாளர்கள் மத்தியில் உள்ள பாரிய எதிர்ப்பிற்கு குரல் கொடுப்பதுடன் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சோசலிச முன்னோக்கையும் நாம் வழங்குகிறோம்.

இந்த முடிவின் மூலம், நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆளும் வர்க்கம் மிகப் பெரிய மறுஆயுதமயமாக்கல் எழுச்சியில் இறங்கியுள்ளது. இதன் அரசியல், வரலாற்று மற்றும் சமூக தாக்கங்கள் பாரியளவிலானவை. ஏற்கனவே அதிக இராணுவ வரவு-செலவுத் திட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஜேர்மனி, சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸின் (சமூக ஜனநாயகக் கட்சி-SPD) வார்த்தைகளில், எதிர்காலத்தில் 'ஐரோப்பாவில் மிகப் பெரிய பாரம்பரிய இராணுவமாக' இருக்கும்.

மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மழலைகளின் பாடசாலைகள் உடைவின் விளிம்பிற்கு கொண்டு வரப்பட்டு, இன்னும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் கல்வி மற்றும் சமூக சேவைகளுக்கு பில்லியன்கள் நிதி வழங்கல் குறைக்கப்பட்ட பின்னர், ஆயுதப்படைகளுக்கு ஒரே இரவில் கூடுதலாக 100 பில்லியன் யூரோக்கள் வழங்கப்படவுள்ளது. போர் வரவு-செலவுத் திட்டம் ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுஆயுதமயமாக்கலின் அளவு மிகப்பெரியதாகும். 2 சதவீத இலக்கை அடைவது என்பது பாதுகாப்புச் செலவினம் இந்த ஆண்டு மட்டும் 50 பில்லியன் யூரோக்களில் இருந்து 70 பில்லியனுக்கும் அதிகமாக உயரும் என்பதாகும். இது 40 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த 'சிறப்பு நிதியின்' 100 பில்லியன் யூரோக்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்த ஆண்டின் மொத்த மத்திய வரவு-செலவுத் திட்டத்தை விட ஐந்து மடங்கு அதிகம்.

ஜேர்மனியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குழந்தைக்கு 5,000 யூரோக்கள் வழங்கவும், அதே நேரத்தில் கொரோனா வைரஸால் உத்தியோகபூர்வமாக இறந்த அனைவரின் உறவினர்களுக்கும் ஏற்பட்ட துயரம் மற்றும் துன்பத்திற்கான இழப்பீடாக 360,000 யூரோக்கள் செலுத்தவும் இந்த தொகை போதுமானதாக இருக்கும். மேலும், செவிலியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கும், அவர்களது மூத்த சக ஊழியர்களுக்கு 1,400 யூரோக்கள் மேலதிகக் கொடுப்பனவாக வழங்குவதற்கும் ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொகை பயன்படுத்தப்படலாம். அனைத்து வகுப்பறைகளிலும் கொரோனா வைரஸுக்கு எதிரான காற்று வடிகட்டிகளை நிறுவ ஒரு பில்லியன் மட்டுமே போதுமானது.

ஆனால் அதற்கு பதிலாக, பணம் இராணுவத்திற்கு செல்கிறது. இணையத் தகமைகள் மற்றும் விண்வெளி அமைப்புகளுக்கு கூடுதலாக பாதுகாப்பு அமைச்சகத்தின் திட்டங்கள் விமானப்படைக்கு 41 பில்லியன் யூரோக்கள், கடற்படைக்கு 19 பில்லியன் யூரோக்கள் மற்றும் இராணுவத்திற்கு 16 பில்லியன் யூரோக்கள் அணு குண்டுவீச்சுகள், போர்க்கப்பல்கள் மற்றும் டாங்கிகளுக்கு செலவிடப்படவுள்ளது. 2018 இல் வெளியிடப்பட்ட 'இராணுவத்திட்டத்தின்' படி, 'மிகப் பெரிய' மற்றும் 'அதிக தீவிரமான' இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் ஒருமுறை இராணுவம் நடத்துவதற்கு இந்தப் போர்த்தளவாடங்களைப் பெறுதல் இலக்காக உள்ளது.

உள்நாட்டு அடிப்படையில், மறுஆயுதமயமாக்கல் என்பது மக்கள் மீதான போர்ப் பிரகடனமாகும். அரசியலமைப்பில் சிறப்பு நிதியை இணைத்து, 'கடன் தடை' என்று அழைக்கப்படுவதைப் பராமரிப்பதன் மூலம், ஆளும் வர்க்கம் போர் வரவு-செலவுத் திட்டத்தின் ஒவ்வொரு சதத்தையும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிழிந்தெடுக்கும் நிலைமையை உருவாக்குகிறது. அதே சமயம், மறுஆயுதமயமாக்கல் பற்றிய எந்த விமர்சனமும் சட்டவிரோதமானது.

2014 இல் ஒரு தீர்மானத்தில், அப்போதைய ஜனாதிபதி ஜோகாயிம் கவுக் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் ஜேர்மனியின் ஆக்கிரோஷமான வெளிநாட்டு மற்றும் பெரும் அதிகாரக் கொள்கைக்கு திரும்புவதாக மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அறிவித்தபோது, இந்த நிகழ்வின் நீண்டகால விளைவுகள் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு எச்சரித்தது:

ஜேர்மனி நாஜிகளின் கொடூரமான குற்றங்களில் இருந்து கற்றுக் கொண்டு 'மேற்கிற்கு வந்துவிட்டது' மற்றும் ஒரு சமாதான வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு ஒரு நிலையான ஜனநாயகமாக வளர்ந்துவிட்டது என்ற போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் பிரச்சாரம் பொய்யென அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் அது வரலாற்று ரீதியாக எவ்வாறு வெளிப்பட்டதோ அவ்வாறே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் அனைத்து ஆக்கிரமிப்புடன் அதன் உண்மையான நிறங்களை மீண்டும் காட்டுகிறது.

இப்போது முடிவு செய்யப்பட்டுள்ள இராணுவ மறுஆயுதமயமாக்கல், போருக்குப் பிந்தைய ஜேர்மனியின் வரலாற்றில் முன்மாதிரியல்லாத ஒன்றாகும். ஆளும் வர்க்கம் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி, மிகக் குறுகிய காலத்திற்குள் நாட்டை மறுஆயுதமயமாக்கி, இரண்டாம் உலகப் போருக்குத் தயார்ப்படுத்திய 1930களின் ஹிட்லரின் 'மறு ஆயுதமயமாக்கலுக்கு' இது சந்தேகத்திற்கு இடமின்றி இணையாக உள்ளது. இராணுவத்தின் மூலோபாய ஆவணங்கள் மற்றும் முன்னணி அரசியல்வாதிகளின் போர் பேச்சுக்கள் அரசாங்கம் மீண்டும் பழைய 'பெரும் சக்தி' இலக்குகளையே தொடர்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்பதைக் காட்டுகின்றன.

இப்போது போலவே அப்போதும், ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஐரோப்பாவை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவும், முன்னணி இராணுவ உலக வல்லரசாக வெளிவரவும் ஆசைப்பட்டது. 'ஜேர்மனியின் விதி: உலகத்தை வழிநடத்த ஐரோப்பாவை வழிநடத்துவது' என்பது 2014 இல் உத்தியோகபூர்வ வெளியுறவு அமைச்சக இணைய தளத்தில் ஒரு இடுகையின் தலைப்பாக இருந்தது. இப்போது இந்தத் திட்டங்கள் அவற்றின் அனைத்து விளைவுகளுடன் செயல்படுத்தப்படுகின்றன.

ஊடகப் போர்வெறியர்களும் வெளியுறவுக் கொள்கை மூலோபாயவாதிகளும் ஏற்கனவே ஜேர்மனினதும் மற்றும் ஐரோப்பாவினதும் அணு ஆயுதங்கள் ரஷ்யாவை 'கட்டுப்படுத்த வேண்டும்' என்றும், எதிர்காலத்தில் 'முன்னணி மேற்கத்திய வல்லரசான அமெரிக்காவுடன் நலன்களுக்கான மோதல்களை எதிர்த்துப் போராட முடியும்' என்றும் அழைப்பு விடுத்துள்ளனர். ஜேர்மனி 'ஐரோப்பாவில் பாதுகாப்புப் பொறுப்பை' ஏற்றுக்கொள்வதில் 'நூறு பில்லியன் யூரோக்கள் ஒரு தொடக்கமாக மட்டுமே இருக்க வேண்டும்' என்று Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையின் வர்ணனை எச்சரிக்கிறது.

லித்துவேனியாவில் ஜேர்மன் துருப்புக்கள் German troops in Lithuania (AP Photo/Mindaugas Kulbis)

இந்த மறுஆயுதமமாக்கல் ரஷ்யாவிற்கு எதிராக நேரடியாக இலக்காக உள்ளது. ஏறக்குறைய 30 மில்லியன் மக்களின் உயிர்களைக் கொன்ற சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஜேர்மன் அழிப்புப் போருக்கு எண்பத்தொரு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் போர் துருப்புக்கள் மீண்டும் கிழக்கு ஐரோப்பாவிற்குள் அணிவகுத்து வருகின்றன. அதே நேரத்தில், ஜேர்மனி தீவிர வலதுசாரி சக்திகளால் நிறைந்துள்ள உக்ரேனிய இராணுவத்திற்கு முழுமையாக ஆயுதம் கொடுத்துது, மேலும் ரஷ்யாவை தோற்கடிக்கும் என்ற அதன் அறிவிக்கப்பட்ட இலக்கைத் தொடர்கிறது.

உத்தியோகபூர்வ பிரச்சாரத்திற்கு மாறாக, 'காலத்தின் திருப்பம்' என்று அழைக்கப்படுவது உக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கான எதிர்வினை அல்ல. நேட்டோவினால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான படையெடுப்பை ஆளும் வர்க்கம் தனது, சொந்த மறுஆயுதமயமாக்கலையும் போர் திட்டங்களையும் செயல்படுத்த பயன்படுத்துகிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, இது 'மனித உரிமைகள்' மற்றும் 'ஜனநாயகம்' பற்றியது அல்ல. மாறாக ஆதிக்கம் மற்றும் மூலவளங்களின் பிராந்தியங்களைக் கைப்பற்றுவது பற்றியதாகும். அதே நேரத்தில், போர்க் கொள்கையானது வெடிக்கும் உள்நாட்டு வர்க்கப் பதட்டங்களை வெளியே திசை திருப்ப உதவுகிறது.

இராணுவவாதத்தில் மகிழ்ந்து இலாபம் பெறும் முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் போலல்லாமல், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் போரும் சர்வாதிகாரமும் ஆழமாக வெறுக்கப்படுகின்றன. இந்த நிலைமைகளின் கீழ் உத்தியோகபூர்வ கொள்கை வெளிப்படையான ஒரு சதியின் வடிவத்தை எடுக்கின்றது.

ஜேர்மன் இராணுவவாதத்தின் மறுபிரவேசம், ஒரு மூன்றாம் உலகப் போரின் ஆபத்தை பாரியளவில் தீ மூட்டுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக நாடாளுமன்றத்தில் பெயரளவுக்கு இடதுசாரி கட்சிகளால் இவை முன்னோக்கி தள்ளப்படுகிறது. ஷோல்ஸின் சமூக ஜனநாயகக் கட்சி மத்திய அரசாங்கத்தையும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலையும் நடத்துகிறது. 1998-99ல் சமூக ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து ஏற்கனவே சர்வதேச சட்டத்தை மீறி யூகோஸ்லாவியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரை ஒழுங்கமைத்த பசுமைக் கட்சியினர் மிகவும் ஆக்கிரோஷமான ஆத்திரமூட்டுபவர்களாகவும் போர்வெறியர்களாகவும் உள்ளனர்.

இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்களும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் முகாமில் இரு கால்களையும் கொண்டுள்ளன. நாடாளுமன்றத்தில், இடது கட்சி சிறப்பு நிதிக்கு எதிராக வாக்களித்தது. ஏனெனில் மற்ற அனைத்து கட்சிகளும் நிதியை ஆதரித்ததால் அதன் வாக்குகள் ஒரு பொருட்டானதல்ல. இருப்பினும், அரசியல் ரீதியாக அது போர்ப் நிலைப்பாட்டோடு ஒத்துப்போகிறது. முன்னணிக் கட்சிப் பிரதிநிதிகள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் உக்ரேனுக்கான ஆயுத விநியோகத்தையும் ஆதரிப்பதுடன் மேலும் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தக் கோருகின்றனர்.

ஒரு சமீபத்திய அறிக்கையில், செவிலியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஊதிய முடக்கம் மற்றும் உண்மையான ஊதிய வெட்டுக்களை சுமத்தியுள்ள வேர்டி தொழிற்சங்கம், 'இராணுவத்தின் நிலையான முன்னேற்றம்' மற்றும் ஆயுதப்படைகளின் 'இணைய பாதுகாப்பில் முன்னேற்றம்' ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஜேர்மன் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DGB) சமீபத்தில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவ வலிமைக்கு ஜேர்மனியிடமிருந்து 'கணிசமான பங்களிப்பை' வழங்கக்கோரியது.

ஜேர்மன் முதலாளித்துவத்தின் போர்க் கொள்கையை எதிர்க்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, ஒரு சக்திவாய்ந்த சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். அவ்வாறு செய்வதன் மூலம், 30 ஆண்டுகால போர் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னர் உலகெங்கிலும் வெளிப்படையான வர்க்கப் போராட்டங்களில் நுழையும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய எதிர்ப்பை நாங்கள் அடித்தளமாகக் கொள்கிறோம்.

ஜேர்மனியில் உள்ள ஆளும் வர்க்கம், அனைத்து நாடுகளிலும், இரண்டு உலகப் போர்களில் அதன் வரலாற்றுக் குற்றங்களுக்குப் பின்னர், மூன்றாம் முறையாக உலக அதிகாரத்தைப் பிடிக்க முடியும் என்று நினைக்கையில், அது தொழிலாள வர்க்கத்தையும் அதன் அரசியல் தலைமையையும் கருத்திலெடுக்காமல் அதன் கணப்பீடுகளைச் செய்துள்ளது. இந்த தலைமை இப்போது ஒரு வெகுஜன கட்சியாக கட்டப்பட்டவேண்டும். இன்றே சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினராகி, இராணுவவாதம், போர் மற்றும் அதன் மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவும். மீண்டும் ஒருபோதும் போரும் பாசிசமும் வேண்டாம்!

Loading