மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரித்த விலை உயர்வு பாதிப்பால் அதிர்ச்சியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 'நாம் தொடர்ந்து இப்படி வாழ முடியாது' என்ற உணர்வு பெருவாரியான மக்களைப் பீடித்து வருகிறது.
அமெரிக்காவில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பணவீக்கம் மே மாதத்தில், பொருளாதார நிபுணர்களின் மதிப்பீடுகளையே விஞ்சி, 8.6 சதவீதமாக அதிகரித்தது. 40 க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னர், 1981 க்குப் பின்னர், நுகர்வு விலைகளில் இதுவே மிக வேகமான அதிகரிப்பாகும்.
எரிவாயு விலைகளே மிகவும் அதிகரித்தன, அது கடந்த ஆண்டை விட 48.7 சதவீதம் அதிகரித்தது, வெறும் ஒரே மாதத்தில் 7.8 சதவீதம் அதிகரித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஒரு கேலன் பெட்ரோல் விலை அதிகபட்ச சராசரியாக 5.01 டாலரில் விற்கப்பட்டது. நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட பல மாநகரப் பகுதிகளில், விலைக் குறிப்பிடத்தக்களவில் அதிகமாக உள்ளது, லாஸ் ஏஞ்சல்ஸில் சராசரியாக சுமார் 6.50 டாலர், சிகாகோ பகுதியில் கிட்டத்தட்ட 6.00 டாலர் மற்றும் அரிசோனா, பீனிக்ஸில் தோராயமாக 5.60 டாலராக உள்ளது.
தொழிலாளர்களின் சம்பளக் காசோலைகளில் கணிசமான பகுதியை, வேலைக்குச் செல்வதற்கான பயணச் செலவுகளே விழுங்கி விடுகின்றன. அமெரிக்காவில், தொழிலாளர்கள் வாரத்திற்குப் பலமுறை எரிபொருள் நிரப்பி, 50 மைல்கள் அல்லது அதற்கும் அதிகத் தொலைவிலிருந்து வேலைக்குச் செல்வது மிகவும் பொதுவான விஷயமாகும். ஒரு மணி நேரத்திற்கு 15 டாலர் கூலியில் ஒரு நாள் வேலைச் செய்தாலும், இப்போதெல்லாம் பல டிரக்குகள் மற்றும் பெரிய வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பக் கூட போதுமானதாக இருக்காது, இவற்றுக்கான செலவு சுலபமாக 100 டாலரைத் தாண்டிவிடும்.
எரிபொருளுக்கு அப்பாற்பட்டு, பல பொருட்கள் மற்றும் சேவைகளிலும் விலைகள் அதிகரித்து வருவது வாழ்க்கையை மேலும் மேலும் சாத்தியமற்றதாக ஆக்கி வருகின்றன. சமீபத்திய Moody’s பகுப்பாய்வு அறிக்கையின்படி, குடும்பங்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக மாதத்திற்கு 460 டாலர் கூடுதலாகச் செலவிட்டு வருகின்றன.
மே மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை மொத்தமாக 10.1 சதவீதம் அதிகரித்தது. இறைச்சி, கோழி, மீன் மற்றும் முட்டை விலை 14.2 சதவீதம் அதிகரித்தன; பால் பொருட்கள் 11.8 சதவீதம்; பழங்கள் மற்றும் காய்கறிகள் 8.2 சதவீதம் அதிகரித்தன. செயின்ட் லூயிஸ் பெடரல் ரிசர்வ் புள்ளிவிபரங்களின்படி, ஒரு கேலன் பால் இப்போது சராசரியாக 4.33 டாலராக உள்ளது, ஒரு டஜன் முட்டைகளின் விலை 2.86 டாலரை எட்டியது, இது ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட 1 டாலர் அதிகமாகும்.
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவது, நிறையப் பேர் இன்று எந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்றாலும் கூட, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் மில்லியன் கணக்கான குழந்தைகளை இன்னும் அதிகப் பசியில் தள்ளத் திட்டமிட்டு வருகின்றனர். காங்கிரஸ் சபை அதன் சென்ற செலவின மசோதாவில் வேண்டுமென்றே பள்ளிகளில் கோவிட் தொடர்பான இலவச மதிய உணவு திட்டங்களின் நீடிப்பை புதுப்பிக்கவில்லை. இதன் அர்த்தம், இந்த மாத கடைசியில் இருந்து ஒரு மதிப்பீட்டின்படி 10 மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு கிடைக்காது.
இதற்கிடையே, கட்டுபடியாகும் வீட்டு வசதி நெருக்கடி மோசமடைந்து வருகிறது. ரியல் எஸ்டேட் நிறுவனமான Redfin தகவல்படி, சராசரி வாடகைகள் ஓராண்டுக்கு முன்னர் இருந்ததை விட 15.2 சதவீதம் அதிகரித்துள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சராசரி மாத வாடகை மே மாதத்தில் அதிகபட்சமாக 2,002 டாலர்களை எட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
முன்பெல்லாம் பலருக்குச் சற்று எட்டாத தூரத்தில் இருந்த சொந்த வீடு என்பது, இப்போது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு எதிர்நோக்கத் தக்க எதிர்காலத்தில் முற்றிலும் சாத்தியமே இல்லை என்றாகி விட்டது. ஒரு வீட்டின் சராசரி பட்டியல் விலை மே மாதத்தில் 447,000 டாலரை எட்டியது, இது 2021 இல் இருந்து 17.6 சதவீதம் அதிகரித்துள்ளது, அதேவேளையில் சராசரி வீட்டுக் கடன் விகிதங்கள் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் அவற்றின் அதிகபட்ச மட்டங்களை எட்டி வருகின்றன.
விலைகள் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்கள் நிஜமான அர்த்தத்தில் ஒரு வருடத்திற்கு முன்னர் சம்பாதித்ததை விடக் குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்பதோடு, இன்னும் இன்னும் கூடுதலாக பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். மே 2021 மற்றும் மே 2022 க்கு இடையே நிஜமான கூலிகள் 3 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததாகத் தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இவ்வாறு பின்னுக்கு இழுக்கப்படுவதற்கான பிரதான பொறுப்பு பெருநிறுவன-சார்பு தொழிற்சங்கங்களையே சாரும், பணவீக்கத்தை விட மிகக் குறைவாக வெறும் 2-4 சதவீத கூலி உயர்வுகளில் அடைக்கும் ஒப்பந்தங்களுக்குள் அவை தொழிலாளர்களைத் தள்ளி உள்ளன, அதேவேளையில் கையிலிருந்து செலவிடும் மருத்துவச் செலவுகளையும் அவ்வப்போது அதிகரிக்க செய்துள்ளன. தொழிலாளர் புள்ளியியல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, தொழிற்சங்கத்தில் இணைந்துள்ள தொழிலாளர்களின் சராசரி கூலி உயர்வுகள் (3.5 சதவீதம் என்பது) உண்மையில் கடந்தாண்டு தொழிற்சங்கம் சாரா தொழிலாளர்களின் கூலி உயர்வுகளை விட (4.9 சதவீதம்) குறைவாகும்.
பணவீக்கமானது தொழிலாளர் கோபத்தின் மையப்புள்ளியாக உள்ளது. ஆனாலும் அதிகரித்து வரும் விலைவாசியும் வீழ்ச்சி அடைந்து வரும் கூலிகளும் தொழிலாள வர்க்கத்தில் கட்டமைந்து வரும் மொத்த சமூக மனக்குறைகள் பலவற்றில் ஒன்றாகும். இங்கே தரந்தாழ்ந்த கொத்தடிமை நிலைமைகள் உள்ளன, அதிகப் பணிச்சுமை, பணியாளர் பற்றாக்குறை, வாரத்திற்கு ஆறு அல்லது ஏழு வேலை நாட்கள், தொடர்ந்து கொண்டிருக்கும் பெருந்தொற்று மற்றும் உயிராபத்தான வேலையிட நிலைமைகள் உள்ளன. அதற்கடுத்து மிகவும் பரந்தளவில் பார்த்தால் குழந்தைகளுக்கான பால் பவுடரில் இருந்து பெண்களுக்கான டாம்பேன் பேட் வரையில் ஒவ்வொன்றிலும் நிலவும் பற்றாக்குறைகள் போன்ற, முதலாளித்துவ முறிவின் வெளிப்பாடுகளும் உள்ளன. இத்தகைய பிரச்சினைகள் மற்றும் இன்னும் பல பிரச்சினைகளும் மொத்தத்தில், நேரடியாகவோ மறைமுகமாகவோ, தொழிலாளர்களை போராட்டத்திற்குள் இழுத்து வருகின்றன.
CNH பண்ணை மற்றும் கனரக உபகரண உற்பத்தி தொழிலாளர்களின் ஆறு வாரக் கால வேலைநிறுத்தத்தில் இருந்து, கலிபோர்னியாவின் செவ்ரான் எண்ணெய் துறைத் தொழிலாளர்களின் ஆரம்ப வெளிநடப்புக்கள் வரை, கலிபோர்னியா மற்றும் நியூ ஜேர்சியில் செவிலியர்கள் வேலைநிறுத்தங்கள், மினெயாபொலிஸ் மற்றும் சாக்ராமென்டோ ஆசிரியர்கள் வரையில், அத்துடன் ஆர்கோனிக் அலுமினியம் தொழிலாளர்கள், க்ரோஜர் மளிகை அங்காடி தொழிலாளர்கள் மற்றும் இன்னும் பலரின் எதிர்ப்பு என இந்தாண்டு ஏற்கனவே தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க போர்கள் தொடங்கி உள்ளன.
தொழிலாளர்களின் புதிய பிரிவுகளும் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் போரில் இறங்க உள்ளனர். 12,000 க்கும் அதிகமான மினெயாபொலிஸ் மற்றும் செயின்ட் பால் செவிலியர்கள் தற்போது ஒப்பந்தம் இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள், 20,000 வெஸ்ட் கோஸ்ட் துறைமுகத் தொழிலாளர்கள், தெற்கு கலிபோர்னியாவின் 50,000 கட்டுமானத் துறைத் தொழிலாளர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூ யோர்க் நகரத்தின் பத்து ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் என இவர்களின் ஒப்பந்தங்கள் காலாவதி ஆகின்றன. ஏற்கனவே வேலைநிறுத்தத்திற்குப் பெருவாரியாக வாக்களித்துள்ள மூவாயிரம் கார் ஏற்றி செல்லும் ட்ரக் ஓட்டுநர்கள், டீம்ஸ்டர்ஸ் சங்கம் ஒப்புக் கொண்ட விட்டுக்கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் விபரங்களை வியாழக்கிழமை தெரிந்து கொள்வார்கள்.
வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியானது அமெரிக்காவின் எல்லைகளைக் கடந்து நீண்ட ஒரு சர்வதேச நிகழ்வு போக்காகும். அதிகரித்து வரும் எரிவாயு விலைகள் கடந்த வாரம் தென் கொரியாவில் ட்ரக் ஓட்டுநர்களின் வேலைநிறுத்தங்களைத் தூண்டியது. பிரிட்டனில், 50,000 இரயில்வே தொழிலாளர்கள், 1980 களின் பிற்பகுதியில் இருந்து நடந்த பல இரயில்வே வேலைநிறுத்தங்களிலேயே மிகப் பெரிய வேலைநிறுத்தம் ஒன்றில் இந்த மாத இறுதியில் ஈடுபட உள்ளனர். இலங்கையில், கட்டுப்பாட்டை மீறிய பணவீக்கம் மற்றும் அடிப்படை பண்டங்களின் பற்றாக்குறை பாரிய அரசாங்க-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளன மற்றும் இந்தாண்டு தொடர்ச்சியான பல ஒரு நாள் வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன.
ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தொழிலாளர்கள் அவர்களைப் பிரதிநிதித்துவ படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் தொழிற்சங்கங்களுடன் கடுமையான மோதலுக்கு வருகிறார்கள். அதே நேரத்தில், பெருநிறுவன மற்றும் அரசியல் ஸ்தாபகம், குறிப்பாக, பைடென் நிர்வாகம் 'தொழிலாளர் ஒழுக்கத்தை' அமல்படுத்துவதற்கு, அதாவது வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற தொழிலாளர் எதிர்ப்பு வடிவங்களை நசுக்குவதற்கோ அல்லது தனிமைப்படுத்துவதற்கோ, தொழிற்சங்க அதிகாரத்துவங்களை இன்னும் அதிக பலமாக நம்பியுள்ளது.
ஆளும் வர்க்கத்திற்கு அதன் கொள்கைகளின் வெடிப்பார்ந்த தாக்கங்களைக் குறித்து நன்கு தெரியும். 'மக்கள் அவர்களின் குழந்தைகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உணவளிக்க முடியாவிட்டால், பின்னர் அரசியல் அமைதியாக இருக்காது' என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத் தலைவர் டேவிட் பீஸ்லி கடந்த மாதம் CNN க்குத் தெரிவித்தார்.
பணவீக்கம் மீதான கோபத்தைத் திசைதிருப்பி, அதை ரஷ்யாவுக்கு எதிரான அதன் போர் முயற்சியின் பின்னால் திருப்பி விட வெள்ளை மாளிகை மிகவும் கொடூரமாக முயன்று வருகிறது, எரிவாயு விலை அதிகரிப்புகளை 'புட்டினின் விலை உயர்வு' என்று கூறுகிறது.
ஆனால் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பணவீக்கம் அதிகரிக்கத் தொடங்கி இருந்தது. அது பெடரல் ரிசர்வ் மற்றும் பிற மத்திய வங்கிகள் பணக்காரர்களுக்குப் பிணை வழங்குவதற்காகப் பாரியளவில் பணத்தை அச்சடித்த நடவடிக்கையின் விளைவாகும். இந்த நிதிக் கொள்கைகளின் விளைவு இப்போது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் வெடித்து வருகிறது.
போரைப் பொறுத்த வரை, உக்ரேன் மீது புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பை அமெரிக்க அரசாங்கம் தான் தூண்டிவிட்டு முடுக்கி விட்டது என்பதை உண்மைகள் எடுத்துக் காட்டுகின்றன. அந்தப் போர் வெடித்ததில் இருந்து, அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளும் உக்ரேனுக்குள் ஆயுதங்களைப் பாய்ச்சியும், பேச்சுவார்த்தை மூலமாக ஒரு தீர்வு ஏற்படுவதைத் தடுத்தும், பொறுப்பின்றி அந்தப் போரை விரிவாக்கி உள்ளன.
சமூகப் பாதுகாப்பு வலையத்தை விரிவாக்கி வழங்க நிதியப் பிரபுத்துவத்திடம் எந்த முற்போக்கான சீர்திருத்தங்களோ அல்லது முன்மொழிவுகளோ இல்லை. வெளிநாடுகளில் ஏகாதிபத்தியப் போர், உள்நாட்டில் வர்க்கப் போர் — இது தான் திட்டமிடப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம், பெடரல் ரிசர்வ் மற்றும் பிற மத்திய வங்கிகளின் முக்கிய நோக்கம் உள்ளபடியே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அல்ல, மாறாக ஒரு மந்தநிலையைத் தூண்டி, வேலையின்மையை அதிகரித்து, அதிகக் கூலிகளுக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளைத் திரும்பப் பெறக் கட்டாயப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
இதைப் பட்டவர்த்தனமாக எடுத்துரைத்து, FWDBONDS இன் நிதித் துறைப் பகுப்பாய்வாளர் கடந்த மாதம் ராய்ட்டர்ஸிடம் கூறுகையில், “நாடு முழுவதும் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன, ஆனால் வெகு சில தொழிலாளர்களே உண்மையில் அவர்கள் வேலையை இழக்கிறார்கள். இது இதுவரையில் பொருளாதாரத்திற்காக மென்மையான செய்வதோ அல்லது கடுமையாகச் செய்வதோ அல்ல. நிறுவன பணிநீக்க அறிகுறி எதுவும் இல்லை என்றால், பெடரல் அதிகாரிகள் எதிர்பார்க்கும் அந்தளவுக்கு தொழிலாளர் சந்தை இன்னும் தளரவில்லை என்று அர்த்தமாகிறது,” என்றார்.
அழுகிப் போன இந்த ஒட்டுமொத்த அமைப்புமுறைக்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தில் ஓர் இயக்கம் உருவாகி வருகிறது. பெருநிறுவனங்கள், முதலாளித்துவ அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் கூறுவதைப் போல ஒரு கண்ணியமான வாழ்க்கைத் தரங்களை வழங்க பணமில்லை என்ற கூற்றுக்களுக்கு எதிராகத் தொழிலாளர்கள் அதிகரித்தளவில் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள். இந்தக் கிளர்ச்சி, வொல்வோ ட்ரக்ஸ் ஆலையில் இருந்து கிரோஜர் ஆலை மற்றும் மிகச் சமீபத்தில் டெட்ராய்ட் டீசல் ஆலை வரையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறுவனத்திற்கு வசதியான பல ஒப்பந்தங்களைத் தொழிலாளர்கள் நிராகரித்திருப்பதில் அதன் ஆரம்ப வெளிப்பாட்டைக் கண்டுள்ளது.
ஆனால் இந்த ஆரம்ப நிலை இயக்கம், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு நிகராக அரசியல் வேலைத்திட்டம் மற்றும் அமைப்பு ரீதியிலான வடிவத்தைக் காண வேண்டும். பெருகிய எண்ணிக்கையிலான வேலையிடங்களில், தொழிலாளர்கள் அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகப் போராடுவதற்காக, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகளின் உதவியுடன், பெருநிறுவனச் சார்பு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாகத் தங்களை ஒழுங்கமைக்கத் தொடங்கியுள்ளனர். கடந்தாண்டு தொடங்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணி (IWA-RFC) என்ற கட்டமைப்பின் கீழ், இந்தக் குழுக்களின் வலையமைப்பு பரந்தளவில் விரிவாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
அதே நேரத்தில் தொழிலாளர்கள் முகங்கொடுத்து வரும் சிரமமான பொருளாதார நிலைமைக்கு மோதலான ஒரு வேலைத்திட்டம் தேவைப்படுகிறது. படிப்படியாகக் கூலிகள் உயர்த்தப்பட வேண்டும், பணவீக்கத்திற்கு எதிராகப் பாதுகாக்க வாழ்க்கைச் செலவு சீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், ஓய்வூதியங்கள் முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும் மற்றும் மருத்துவக் கவனிப்பு மீட்டமைக்கப்பட வேண்டும், ஆலைகளில் உற்பத்தி வேகம் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் மற்றும் வேலையிட பாதுகாப்பு கொண்டு வரப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளையும் மற்றும் இன்னும் பலவற்றையும் கைவரப் பெற, சமூகத்தின் ஆதார வளங்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதைத் தனியார் இலாபங்கள் அல்ல சமூகத் தேவைகளே தீர்மானிக்கும் வகையில், பில்லியனர்கள் மற்றும் நிதிய பிரபுத்துவத்தின் முறைகேடான செல்வங்கள் மற்றும் தனிச்சலுகைகள் மீது ஒரு நேரடியான தாக்குதல் அவசியப்படும்.