மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வார இறுதியில் சிங்கப்பூரில் ஷங்ரா-லா உரையாடல் பாதுகாப்பு மன்றத்தில் நடந்த நிகழ்வுகள், அமெரிக்க அரசாங்கம், பேரழிவுகரமான அணுசக்தி மோதலின் அபாயத்தைப் பொருட்படுத்தாமல், சீனாவை எவ்வளவு தூரம் போரின் விளிம்பிற்கு தள்ளுகிறது என்பதற்கான எச்சரிக்கையாக உள்ளது, அதிலும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை அமெரிக்கா தீவிரப்படுத்தி வரும் நேரத்தில்.
பைடென் நிர்வாகம் சார்பில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் லொயிட் ஆஸ்டின் ஒரு மணி நேரம் ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தினார், அப்போது அவர், சீனா தைவானைச் சுற்றிலும் மற்றும் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளிலும் ‘மிரட்டல்,’ ‘ஆத்திரமூட்டல்,’ ‘ஸ்திரமின்மை,’ ‘ஆக்கிரமிப்பு,’ மற்றும் ‘வற்புறுத்தல்’ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சீனாவை குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கையில், ஆஸ்டினின் சீன சமதரப்பு ஜெனரல் வெய் ஃபெங்கே (General Wei Fenghe), அமெரிக்காவின் ‘மேலதிகாரத்தையும் அதிகார அரசியலையும்’ கண்டித்ததுடன், தைவான் உட்பட அதன் இறையாண்மையை பாதுகாக்க, தேவைப்பட்டால், சீனா போருக்கு தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார்.
ஆஸ்டினின் வசைமாரி, “அமெரிக்க இந்தோ-பசிபிக் வியூகத்திற்கான அடுத்த படிகள்” என்ற கருப்பொருளில் இருந்தது. முன்னாள் அமெரிக்க இராணுவ ஜெனரல், சீனாவுடனான அமெரிக்க மோதலின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார், இதை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முதன்மையான இருத்தலியல் அச்சுறுத்தலாக இந்த ஆண்டு வெள்ளை மாளிகை வெளிப்படையாக பெயரிட்டுள்ளது.
ஆஸ்டின் இந்த மூலோபாயத்தை 'நமது முன்னுரிமை அரங்கு' மற்றும் ‘அமெரிக்காவின் பெரும் மூலோபாயத்தின் மையம்’ என்று அழைத்தார். அவர் குறிப்பாக சீனாவின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தைவானை ஒரு முக்கிய வெடிப்புப் புள்ளியாக குறிப்பிட்டார். “குறிப்பாக தைவான் ஜலசந்தியில் பங்குகள் அப்பட்டமாக உள்ளன,” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், தீவுக்கும் சீனாவின் பிரதான நிலப்பரப்புக்கும் இடையே உள்ள குறுகிய, 160 கிலோமீட்டர் அகலம் கொண்ட குறுகிய தைவான் ஜலசந்தி உட்பட, சீனாவைச் சுற்றியுள்ள சர்வதேச கடல் பரப்புகளாக அமெரிக்கா கூறும் பகுதிகளில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தொடர்ந்து கப்பல்களைச் செலுத்தும் மற்றும் விமானங்களைப் பறக்க விடும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் வலியுறுத்தினார்.
“சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் எல்லாம் நாங்கள் பறப்போம், பயணிப்போம், மற்றும் செயல்படுவோம்,” என்றும், “நாங்கள் எங்கள் பங்காளிகளுடன் சேர்ந்து அதைச் செய்வோம்” என்றும் ஆஸ்டின் கூறினார்.
ஆஸ்டின் உக்ரேன் போருக்கும் நேரடி திட்ட வகுப்பாளராக இருந்தார், அதன்படி, அணு ஆயுத நேட்டோ இராணுவக் கூட்டணியை ரஷ்யாவின் எல்லைகளுக்கு விரிவுபடுத்துவதன் மூலமாகவும், மற்றும் கியேவில் ஒரு பாசிச ஆதரவு ஆட்சியை ஸ்தாபிக்க 2014 சதிக்கு ஏற்பாடு செய்வதன் மூலமாகவும், அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் விளாடிமிர் புட்டினின் ரஷ்ய அரசாங்கத்தை ஒரு பிற்போக்குத்தனமான படையெடுப்புக்கு தூண்டின.
“அமைதியான அண்டை நாடுகள் மீதான பாதுகாப்பற்ற தாக்குதல் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,” “மேலும் விதிகள் மற்றும் மரியாதையில் வேரூன்றிய ஒரு சர்வதேச ஒழுங்கைக் குறைப்பதன் ஆபத்துக்கள் அனைத்தையும் நமக்கு நினைவூட்டியது” என்று ஆஸ்டின் கூறினார். அவர் இதை வலியுறுத்தினார்: “தைவான் அருகே ஆத்திரமூட்டும் மற்றும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் வகையிலான இராணுவ நடவடிக்கைகள் நிலையாக அதிகரிப்பதை நாங்கள் கண்டுள்ளோம். அதில், PLA [சீன] விமானங்கள் தைவான் அருகே சமீபத்திய மாதங்களில், கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில், பெரும் எண்ணிக்கையில் பறந்து கொண்டிருந்தது அடங்கும்.”
பெய்ஜிங்கின் மிகவும் நம்பகமான ஊடகத் தளமான China Daily இன் தலையங்கம், அமெரிக்க ஆத்திரமூட்டல்களின் பின்னணியில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, அமெரிக்கா கடந்த ஆண்டு தனியாக அல்லது அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து, தென் சீனக் கடல் மற்றும் அருகிலுள்ள கடல் பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட இராணுவப் பயிற்சிகளை நடத்தியது என்று புகார் கூறுகிறது.
உக்ரேனுக்கு இணையானதாகக் கூறப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்ட, இலண்டனைத் தளமாகக் கொண்ட ஒரு ஏகாதிபத்திய இராணுவ சிந்தனைக் குழுவான, சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான நிறுவனம் (International Institute for Strategic Studies), உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை மன்றத்தில் உரையாற்ற அழைத்தது. அவர் ஆத்திரமூட்டும் வகையில் தைவான் ஜலசந்தியில் பெரியளவிலான சர்வதேச தலையீட்டிற்கும் மற்றும் தைபே அரசாங்கத்திற்கான இராணுவ ஆதரவிற்கும் அழைப்பு விடுத்தார், மற்றும் ஜலசந்தியை மேலும் இராணுவமயமாக்கவும் மற்றும் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து தைவான் தொடர்ந்து பிரிந்து இருப்பதை உறுதிப்படுத்தவும் சில நேட்டோ உறுப்பு நாடுகள் விடுத்த இதையொத்த அழைப்புக்களை அவர் எதிரொலித்தார்.
ஆஸ்டின் மற்றும் செலென்ஸ்கியின் பேச்சுகளுக்கு வெய் இவ்வாறு பதிலளித்தார்: “இதை நான் தெளிவுபடுத்துகிறேன்: சீனாவில் இருந்து தைவானை பிரிக்க யாராவது துணிந்தால், நாங்கள் போராடத் தயங்க மாட்டோம். என்ன விலை கொடுத்தேனும் போராடுவோம். இறுதிவரை போராடுவோம். இதுவே சீனாவின் ஒரே தேர்வாகும்.”
தைவானுக்குப் பொருந்தக்கூடிய, ‘ஒரே சீனா’ கொள்கைக்கான அதன் உறுதிப்பாட்டை அமெரிக்கா மீறிவிட்டதாக வெய் எச்சரித்தார். 1945-49 சீன உள்நாட்டுப் போரின் விளைவாகவே இந்த பிரிவு ஏற்பட்டது என்பதால், அது இறுதியில் சீனாவுடன் அமைதியாக மீண்டும் ஒருங்கிணைவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை, Bloomberg, “சமீபத்திய மாதங்களில் சீன இராணுவ அதிகாரிகள் அமெரிக்க சகாக்களுடனான சந்திப்புகளின் போது தைவான் ஜலசந்தியானது சர்வதேச கடல் பகுதி அல்ல என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அமெரிக்க நகர்வுகளால் ஊக்குவிக்கப்பட்ட தைபேயில் உள்ள ஆளும் கட்சியான ஜனநாயக முற்போக்குக் கட்சியில் உள்ள பிரமுகர்கள், சீனாவில் இருந்து முறையாகப் பிரிந்து ‘தைவான் குடியரசு’ என தைவானை பிரகடனப்படுத்த பரிசீலிக்கப்படக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். அது சீனாவின் இராணுவத் தலையீட்டை அங்கு தூண்டலாம், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவுக்கு எதிரான போருக்கான சாக்குப்போக்காக அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இரண்டு நெருங்கிய அமெரிக்க நட்பு நாடுகளான கனடா மற்றும் ஆஸ்திரேலியாவின் எரியூட்டும் இராணுவ நடவடிக்கைகளுக்கு வாஷிங்டனின் ஆதரவை ஆஸ்டின் வலியுறுத்தினார், அவை இரண்டும் தைவான் மற்றும் சீனா உரிமை கோரும் தீவுகளுக்கு அருகில் அவர்களது கண்காணிப்பு விமானங்களுக்கு ஆபத்தான முறையில் செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
சீனாவின் ‘தொழில்முறையற்ற மற்றும் அடிக்கடி தொடரும் குறுக்கீடுகள்’ பற்றி ஆஸ்டின் கண்டிப்பதானது, வாஷிங்டன் சீனாவைச் சுற்றி ஊடுருவும் அதிரடி இராணுவ படையெடுப்புக்கு களம் அமைக்கிறது என்ற உண்மையை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது.
ஆஸ்டின் ‘கூட்டாளிகளின் சக்தி’ மற்றும் இப்பிராந்தியத்தில் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க ‘கூட்டணிகளின் இணையற்ற வலையமைப்பு’ பற்றி பெருமை பீற்றினார். இவை ஆழமடைந்துள்ளன என்று கூறினார், மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) உடனான சமீபத்திய வாஷிங்டன் உச்சிமாநாடு, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாற்கர பாதுகாப்பு உரையாடல் (Quad) குழுவின் வளர்ந்து வரும் முக்கியத்துவம், மற்றும் ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியத்துடனான முத்தரப்பு AUKUS இராணுவக் கூட்டாண்மை ஆகியவை பற்றி குறிப்பிட்டார்.
வெய், பதிலுக்கு, வாஷிங்டனின் பசிபிக் மூலோபாயம் குறித்த ஆஸ்டினின் கருத்துக்கள், அமெரிக்கா “சுதந்திரமான மற்றும் திறந்த பசிபிக் என்ற பெயரில் ஒரு பிரத்யேக சிறு குழுவை உருவாக்கி, நமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளை கட்டுப்படுத்தி ஒரு குறிப்பிட்ட நாட்டை குறிவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது” என்ற சீன சந்தேகத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று கூறினார்.
அணு ஆயுதப் போரின் ஆபத்து குறித்து வெய் எச்சரித்தார். புதிய அணு ஆயுதங்களை உருவாக்குவதில் சீனா ‘பெரும் முன்னேற்றம்’ அடைந்துள்ளதாகவும், ஆனால் அவற்றை தற்காப்புக்கு மட்டுமே அது பயன்படுத்தும் என்றும், அவற்றை ஒருபோதும் முதலில் பயன்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
அதிகரித்து வரும் மோதலின் தீவிரம் ஜூன் 11 அன்று China Daily தலையங்கத்தால் எடுத்துக்காட்டப்பட்டது. அது, “மக்கள் விடுதலை இராணுவத்திற்கு வேறு வழியில்லை, ஆனால் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, தைவானை சீனாவில் இருந்து பிரிக்கும் எந்தச் செயலையும் என்ன விலை கொடுத்தேனும் நசுக்க அது போராடும், போருக்குச் சென்று கூட பாதுகாக்கும் என்பதை தனது அமெரிக்க சமதரப்பினருக்கு சந்தேகத்திற்கு இடமின்றி புரிய வைக்க” வெய் ஆஸ்டின் உடன் ஒரு பக்க சந்திப்புக்கான வாய்ப்பைப் பயன்படுத்தியதாகக் கூறியது.
“சீன தரப்பிலிருந்து இதுவரை விடுக்கப்படாத இந்த வலுவான எச்சரிக்கை” “ஒரே சீனா கொள்கையை மீறும் அமெரிக்காவின் தொடர் நகர்வுகள் மீதான அதன் கோபத்தையும்… அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் ஒரு போரில் ஈடுபடுவதற்கு சீனாவால் துணிய முடியாது அல்லது ஈடுபட முடியாது என்று நினைத்தால், வாஷிங்டன் நிலைமையை தெளிவாக தவறாக மதிப்பிடுகிறது” என்பதையும் நிரூபிக்கிறது என்று தலையங்கம் கூறியது.
கடந்த மாதம் டோக்கியோவில் நடந்த குவாட் உச்சிமாநாட்டில், பதவியேற்றதில் இருந்து மூன்றாவது முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், ஐந்து தசாப்த கால அமெரிக்க கொள்கையை முறியடிக்கும் வகையில், சீனாவுடன் மோதல் ஏற்பட்டால் தைவானை இராணுவ ரீதியாக ஆதரிப்பதற்கு அமெரிக்கா ‘உறுதிப்பாட்டுடன்’ உள்ளது என்று அழுத்தமாக அறிவித்தார்.
1979 இல் அமெரிக்கா சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி, தைவானுடனான அனைத்து முறையான உறவுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தபோது, அது ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொண்டது — உண்மையில், தைவான் உட்பட ஒட்டுமொத்த சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கமாக பெய்ஜிங்கை அது அங்கீகரித்தது. மேலும் அது கொண்டிருந்த ‘மூலோபாய தெளிவின்மை’ தத்துவத்துடன் இருந்தது, இது சீனாவுடனான போரின் போது, தைவானின் பக்கத்தை எடுக்க திட்டவட்டமாக உறுதியளிக்க மறுக்கிறது.
அமெரிக்க கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று ஆஸ்டின் மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை, தைவானுக்கு உயர்மட்ட அதிகாரிகளின் தொடர் வருகைகள், தீவில் அமெரிக்க இராணுவப் பயிற்சியாளர்களின் வெளிப்படையான இருப்பு, ஆயுத விற்பனையை அதிகரித்தல், மற்றும் தைவான் ஜலசந்தி ஊடான அதிக போக்குவரத்துக்கள் ஆகியவை சீனாவுக்கு எதிரான கணக்கிடப்பட்ட அவமதிப்புக்களாகும்.
உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் இராணுவ மோதலுடன், சீனாவை முடக்குவதும், தனிமைப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மையக் குறிக்கோளாகும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் கடந்த மாதம் ஒரு முக்கிய அரசியல் உரையில் கூறினார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலின் கீழ், முதலாளித்துவம் ஒரு புதிய, இன்னும் பேரழிவுகரமான உலகப் போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
எவ்வாறாயினும், உக்ரேன் போரினால் ஏற்கனவே தூண்டப்பட்ட உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடியானது, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை விண்ணை முட்டும் வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் அத்தியாவசிய சமூகத் திட்டங்களை குறைத்து இராணுவச் செலவினங்கள் அதிகரிக்கப்படுவதற்கும் எதிராக போராடத் தூண்டுகிறது. இந்த உலகளாவிய எழுச்சியானது ஒரு தொழிலாள வர்க்கப் போராட்டத்திற்கான அடிப்படையை வழங்குகிறது, இது ஒரு புதிய உலகளாவிய மோதலைத் தடுக்கும் மற்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் ஆபத்துக்கு பொறுப்பான ஆளும் வர்க்கங்களை தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.