முன்னோக்கு

பிரிட்டிஷ் இரயில்வே வேலைநிறுத்தம்: ஜோன்சன் அரசாங்கத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவோம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டனில், ஒரு தலைமுறையில் இல்லாதளவில், 50,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மிகப் பெரிய தேசியளவிலான இரயில்வே வேலைநிறுத்தம் ஜூன் 21, 23, 25 இல் திட்டமிடப்பட்டுள்ளது. தசாப்தங்களாக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்கட்சியால் ஒடுக்கப்பட்ட பின்னர், அச்சுறுத்தும் வேலைநிறுத்த அலையின் தாக்குமுகப்பாக, இது, பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டங்களது மீளெழுச்சியைக் குறிக்கிறது. நாசகரமான பணவீக்க சுழலுக்கு மத்தியில் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் போராட்டத்திற்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இது நடக்க உள்ளது.

Workers maintain the track at Clapham Junction rail station (WSWS Media)

இந்த போராட்டத்தில் இரண்டு அடிப்படை பிரச்சினைகள் உள்ளன:

முதலாவதாக, பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகவும் பிற்போக்குத்தனமான, ஊழல் பீடித்த போரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கத்துடன் நேரடி மோதல் இல்லாமல், அங்கே எந்த முன்னோக்கிய பாதையும் இல்லை. இந்த வேலைநிறுத்தத்தை ஒடுக்கவும் குற்றமாக்கவும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக தாக்குப் பிடிக்கவும் வேண்டுமானால், தொழிலாள வர்க்கத்தின் ஒட்டுமொத்த பலமும் அணித் திரட்டப்பட வேண்டும்.

இரயில்வே தொழிலாளர்கள், கிரேட் பிரிட்டன் இரயில்வேக்கான ஜோன்சன் அரசாங்கத்தின் திட்டங்களை, அதாவது தனியார்மயமாக்கல் 2.0 என்ற தாட்சரிச திட்டநிரலை எதிர் கொள்கின்றனர். இந்த பெருந்தொற்றின் போது ஏற்பட்ட வருவாய் கட்டண இழப்பைச் சாதகமாக்கி, ஆனால் அப்போது இரயில் நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கில் பணம் பிணையாக வழங்கப்பட்டிருந்த நிலையில், டோரிக்கள் ஆயிரக் கணக்கான வேலைகளை வெட்டவும், கூலிகளைக் குறைக்கவும் மற்றும் வேலையிட நிலைமைகள், பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியங்களை மோசமாக்கவும் திட்டங்களை வெளியிட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு வர்க்கப் போர் தாக்குதலுக்கான தாக்குமுகப்பாக உள்ளது.

இரண்டாவதாக, தொழிலாளர்கள் அவர்கள் போராட்டத்தை இரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க காங்கிரஸில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் நாசமாக்காமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த அதிகாரத்துவவாதிகள் பிரிட்டிஷ் தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சிகரமான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் தணிக்கவும் அவற்றால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். இது தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும் பலமான சாமானிய தொழிலாளர் அமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை எழுப்புகிறது.

தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் வருகிறது

இந்த இரயிவே வேலைநிறுத்தத்தில், இங்கிலாந்தின் இரயில் தண்டவாளங்கள் மற்றும் பராமரிப்பு பிரிவுகளை நிர்வகிக்கும் நெட்வொர்க் இரயிவே நிறுவனம் முழுவதுமான தொழிலாளர்களும் மற்றும் 15 இல் 13 இரயில்வே சேவை வழங்குனர்களின் தொழிலாளர்களும் ஈடுபட உள்ளார்கள். இலண்டன் சுரங்க இரயில் சேவையின் 4,000 தொழிலாளர்கள் ஜூன் 6 இல் நடத்திய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜூன் 21 இல் மற்றொரு 24 மணி நேர வேலைநிறுத்தத்தை RMT தொழிற்சங்கம் (இரயில்வே, கடல்வழி மற்றும் பிற போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய சங்கம்) அறிவித்துள்ளது.

ஹல் இரயில் சேவை மற்றும் கிரேட்டர் ஆங்கிலியா சேவை மற்றும் க்ராய்டன் டிராம்லிங்க் சேவை ஆகியவற்றில் இரயில்வே ஓட்டுனர்கள் சங்கமான ASLEF (Associated Society of Locomotive Engineers and Firemen) வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நிர்வாக பணியாளர்களின் சங்கமான TSSA (Transport Salaried Staffs’ Association), ஆவண்டி வெஸ்ட் கோஸ்ட் இரயில்வே சேவை நிறுவனத்தில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளது, அது தேசியளவில் நடவடிக்கை மேற்கொள்ள 6,000 உறுப்பினர்களிடையே வாக்குப்பதிவு நடத்தி வருகிறது.

இந்த வேலைநிறுத்தங்கள் அத்தியாவசிய சேவைகளின் முக்கிய தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் 'கோடை அதிருப்தியின்' போது வருகின்றன.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் தொழிலாளர்களில் 97 சதவீதத்தினர் தொழில்துறை நடவடிக்கைக்கு வாக்களித்துள்ளனர். ஹீத்ரோ விமான நிலையத்தில் யுனைட் சங்கம், GMB சங்கத்துடன் சேர்ந்து, நுழைவுச்சீட்டு சரிபார்ப்பு பணியாளர்கள் 500 பேர் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது.

இந்த வார இறுதியில் 114 கிரவுன் தபால் அலுவலகங்களில் தகவல் தொடர்பு தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். BT குழுமத்தின் (பிரிட்டிஷ் டெலிகாம்) பத்தாயிரக் கணக்கானவர்கள் ஜூன் 15 இல் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களிக்க தொடங்கி உள்ளனர், இது 35 ஆண்டுகளில் அந்த தொலைதொடர்பு நிறுவனத்தில் நடக்கும் முதல் தேசியளவிலான வேலைநிறுத்தமாக இருக்கும்.

ஓட்டுநர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தால் யார்க்சையரின் பெரும்பகுதிகளில் அரைவா பேருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. உள்துறை சேவை பணியாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பொது மற்றும் வணிகச் சேவைகள் சங்கம் (PCS) ஜூன் 15-17 இல், 20 சதவீத பணியாளர்கள் அல்லது 91,000 வேலைகளைக் குறைக்கும் திட்டங்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கிறது.

தொழிற்கட்சி தலைமையிலான வேலைநிறுத்த உடைப்பு நடவடிக்கையை முகங்கொடுத்துள்ள போதும் தொழிலாளர்கள் அவர்களின் நடவடிக்கையைத் தொடர்ந்து வரும் கோவென்ட்ரி நகரம் உட்பட, நாடெங்கிலும் ஒத்துழையாமை வேலைநிறுத்தங்கள் நடந்து வருகின்றன. ஸ்காட்லாந்தில், யூனிசன் மற்றும் GMB உறுப்பினர்கள் ஒரு பிரச்சினையில் வாக்களித்து வருகின்றனர், அது பள்ளிகள், அங்கன்வாடிகள் (மழலையர் மையங்கள்), குப்பை மற்றும் மறுசுழற்சி ஆலைகளை மூடி விடக்கூடும்.

Strikers on the refuse workers picket line at the Whitley depot in Coventry (Credit: WSWS Media) [Photo: WSWS]

ஸ்காட்லாந்தில் செவிலியர்கள் 10 சதவீத சம்பள உயர்வு கோருவதற்காக வேலைநிறுத்தம் செய்ய விரும்புகிறார்கள். பிரிட்டன் முழுவதும், அரசாங்கம் 3 சதவீத சம்பள உயர்வை சுமத்த முயன்றால், 500,000 சுகாதாரத் தொழிலாளர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப் போவதாக யூனிசன் சங்கம் அச்சுறுத்தி உள்ளது. ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப் போவதாக பிரிட்டிஷ் மருத்துவக் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். நெப்போலியன் காலப் போர்களுக்குப் பின்னர் இருந்து மிக நீண்ட காலமாக நடத்தப்பட்டுள்ள கூலி ஒடுக்குமுறைக்குப் பின்னர், குடும்ப வருமானங்கள் 11.1 சதவீத பணவீக்கத்தால் மிகக் குறைந்தளவுக்கு வெட்டப்பட்டு வருகின்றன. ஒரு சராசரி குடும்பத்தில் ஒரு காரில் எரிபொருள் நிரப்புவதற்கான செலவு 100 பவுண்டைத் தாண்டி விடுகிறது, இது ஜூலை 4 இல் ஐரோப்பா முழுவதும் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிரான போராட்டத்தைத் திட்டமிடத் தூண்டி உள்ளது. வாடகை செலுத்துபவர்கள் சராசரி வீட்டு வாடகையாக மாதம் 1,000 பவுண்டு செலுத்தி வருகிறார்.

சில்லறை விலைக் குறியீடு (RPI) பணவீக்கத்தைப் பயன்படுத்தினால், கொடுப்பனவுகள் இல்லாமல், நிஜமான சம்பளம் இந்த ஏப்ரலில் 6.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது. பொதுத் துறையில் வீழ்ச்சி அதிர்ச்சியூட்டும் அளவில் 9.2 சதவீதமாக உள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் இதுவரை அவர்கள் ஒருபோதும் பார்த்திராத வகையில், குடும்பங்களுக்கு உதவியாக கூடுதல் நேர வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

உணவுச் செலவுகள், பயணச் செலவுகள், வெப்பமூட்டல் மற்றும் மின்சார பயன்பாடு ஆகிய செலவுகளை தொழிலாளர்கள் குறைத்து வருகிறார்கள். சுமார் ஐந்தில் ஒருவருக்கு உணவுப் பாதுகாப்பற்ற நிலை உள்ளது, இது இளம் குடும்பங்களில் 30 சதவீதத்திற்கு அதிகரித்து வருகிறது. ஆறில் ஒருவர் உணவு வங்கிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆளும் வர்க்கம் “உள்ளிருக்கும் எதிரியை' ஒடுக்க தயாராகிறது

அரசு-ஒழுங்கமைத்த வேலைநிறுத்த உடைப்பு அச்சுறுத்தல்களைக் கொண்டு விடையிறுத்துள்ள இந்த பழமைவாத அரசாங்கத்துடன் தொழிலாள வர்க்கம் ஒரு மோதல் போக்கில் உள்ளது.

பிரதமர் போரிஸ் ஜோன்சன், குறைந்தபட்ச சேவைக்கான அவசியப்பாடுகள் எதுவுமின்றி இன்றியமையா சேவைகளில் வேலைநிறுத்தங்களுக்குத் தடை விதிக்க சூளுரைத்தார். போக்குவரத்துத் துறைச் செயலர் கிராண்ட் ஷாப்ஸ் கூறுகையில், 'மார்க்சிஸ்டுகள்' நடத்தும் இரயில்வே வேலைநிறுத்தத்தைத் தோற்கடிக்க தொழிலாளர் வினியோக முகமைகள் கருங்காலிகளை வழங்க அனுமதிக்கும் வகையில் அவர் சட்டம் இயற்ற இருப்பதாக கூறினார். இரயில்வே வேலைநிறுத்தத்தால் தொழில்துறைக்கு இழப்பு ஏற்பட்டால், இது 'வழக்குத் தொடுக்க அனுமதிப்பதை' அர்த்தப்படுத்தும் என்று முன்னாள் டோரி தலைவர் சர் இயன் டங்கன் ஸ்மித் எச்சரித்தார்.

1984-85 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து நான்கு தசாப்தங்களாக இருந்த முன்னோடியில்லாத வர்க்கப் போராட்ட ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அச்சுறுத்தல் குறித்து ஆளும் வர்க்கம் பகிரங்கமாக விவாதித்து வருகிறது.

ஆண்டுக் கணக்கில் நீண்ட சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது மார்கரெட் தாட்சரின் முன்னாள் பத்திரிகைத் துறைச் செயலரான பெர்னார்ட் இங்காம் Express பத்திரிகைக்கு கூறுகையில், சுரங்கத் தொழிலாளர்களை 'உள் எதிரி' என்று அவர் விவரித்தமை இப்போது இரயில்வே தொழிலாளர்களுக்குப் பொருந்தும் என்று சீறினார்.

வேலைநிறுத்தங்களுக்கான எதிர்ப்பை உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போருடன் நேரடியாக இணைத்து, இங்காம் கூறுகையில், 'உக்ரேன் மீதான விளாடிமிர் புட்டினின் படையெடுப்பு குறித்து… கடும் இடது படையின்... மவுனமே பக்கம் பக்கமாக பேசுகிறது', அதேவேளையில் அவை 'அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை ஆதாயமாக்குகின்றன,” என்று குற்றஞ்சாட்டினார். “பொருளாதாரம், பொது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு சார்ந்த அனைத்து வரையறுக்கப்பட்ட பொது சேவை துறைகளிலும் வேலைநிறுத்தங்களுக்கு நாம் தடை விதிக்க வேண்டும்,' என்றவர் வலியுறுத்தினார்.

இந்த வர்க்க வெறுப்பின் பேரலையைத் தொழிலாள வர்க்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர்கள் வெறுமனே இந்த அல்லது அந்த ஒரு பெருநிறுவனத்துடன் மட்டும் மோதலுக்கு வந்து வரவில்லை, மாறாக உக்ரேனிய போர் மற்றும் இந்த பெருந்தொற்றுக்காக அவர்களைப் பணம் செலுத்த செய்ய உத்தேசித்துள்ள ஓர் அரசாங்கத்துடனும், அவர்களுக்கு எதிராக ஈவிரக்கமின்றி நிலைநிறுத்தப்படும் ஓர் அரசு எந்திரத்துடனும் மோதலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

சிக்கன நடவடிக்கைகள், கோவிட்-19 க்கு 'பரவினால் பரவட்டும்' என்று விடையிறுப்பு காட்டிய மற்றும் சொல்லொணாத் துன்பங்களை உருவாக்கி உள்ள ஈவிரக்கமற்ற போர்வெறி ஆகியவற்றைக் கொண்ட ஓர் இழிவார்ந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து கீழிறக்க வேண்டுமென்ற பரந்த உணர்வு நிலவுவதால், நிஜமாகவே ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான சாத்தியக்கூறு உள்ளது. ஆனால் இது உருவெடுத்து வரும் இந்த இயக்கத்தின் நனவுபூர்வமான இலக்காக இருக்க வேண்டும்.

1984 இல் அவரின் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிரான எல்லா எதிர்ப்புக்கும் முடிவு கட்ட சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தாட்சர் முறிக்கத் தொடங்கிய போது, 1984 இல் தாட்சர் தொடங்கி வைத்த வேலையை ஆளும் வர்க்கம் முடிக்க விரும்புகிறது. அந்த தோல்விக்குப் பழி வாங்கவும் மற்றும் அதைத் தொடர்ந்து தசாப்த காலமாக நடந்த காட்டிக் கொடுப்புகள் மற்றும் இழப்புகளை மாற்றியமைக்கவும் தொழிலாள வர்க்கம் இந்த சந்தர்ப்பத்தை பற்றிக் கொள்ள வேண்டும்.

1974 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் அத்தியாவசிய படிப்பினைகள்

1974 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் என்பது ஆளும் வர்க்கத்தில் யாரும் பேச விரும்பாத ஒரு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வர்க்கப் போராட்டமாகும்.

உலக முதலாளித்துவத்தின் ஓர் ஆழ்ந்த நெருக்கடிக்கு மத்தியில், 1972 மற்றும் 1974 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களால் வழி நடத்தப்பட்ட மில்லியன் கணக்கான பிரிட்டிஷ் தொழிலாளர்கள், எட்வர்ட் ஹீத்தின் டோரி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கினர். அரசு அடக்குமுறை சக்திகளைக் கட்டமைத்தும், படைத்துறைச்சாரா திடீர் செலவுகளுக்கான துறைகளின் மீது அவசரகால அதிகாரங்களைக் கொண்டு வருவதற்கான பொறுப்பை நிலைநிறுத்தியும், ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதற்குத் தயாரிப்புகள் செய்தும் ஹீத் விடையிறுத்தார். 'பிரிட்டனை ஆட்சி செய்வது யார், அரசாங்கமா அல்லது தொழிற்சங்கங்களா?” என்ற முழக்கத்தின் கீழ் பின்னர் அவர் பெப்ரவரியில் ஒரு பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். அரசாங்க அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், அந்த தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் அந்த சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இருந்தனர், ஹீத் அவரின் பெரும்பான்மையை இழந்தார்.

நிலைமையை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வருவது, வரவிருந்த சிறுபான்மை தொழிற்கட்சி அரசாங்கத்திடம் விடப்பட்டது. சமூக எதிர்ப்பைத் தணிக்கவும், சுரங்கத் தொழிலாளர்களின் பாரிய சம்பளக் கோரிக்கையைத் தீர்ப்பதற்கும், டோரி வேலைநிறுத்த-விரோத சட்டத்தைத் திரும்ப பெறவும், ஓய்வூதியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு சலுகைகளை அதிகரிக்கவும் தொழிற்கட்சி தொழிலாள வர்க்கத்தில் அதற்கிருந்த அரசியல் செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தியது. பின்னர் அது சுய விருப்பத்தின் கீழ் கூலி கட்டுப்பாடு எனக் கூறப்பட்ட ஒரு சமூக ஒப்பந்தத்தை ஏற்படுத்த TUC உடன் இணைந்து செயல்பட்டது. அந்த அரசாங்கத்தின் காட்டிக்கொடுப்புகள் அதற்கு நான்காண்டுகளுக்குப் பின்னர் 1979 இல் தாட்சர் பதவிக்கு வர வழி வகுத்தது.

1984-85 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

1984-85 சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் நிஜமான படிப்பினைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு கொடூரமான அரசு தாக்குதலை முகங்கொடுத்தனர், அதன் போது 13,000 பேர் கைது செய்யப்பட்டனர், 200 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், மறியல் களத்திலேயே இரண்டு பேர் கொல்லப்பட்டனர், நிலக்கரி தோண்டி கொண்டிருந்த போது மூன்று பேர் இறந்தனர், 966 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இறுதியில் சுரங்கத் தொழில் துறையே அழிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாலும், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்கட்சியின் காட்டிக்கொடுப்பாலும் மட்டுமே அந்த தோல்வி சாத்தியமானது. உலகெங்கிலுமான தொழிலாளர் அதிகாரத்துவங்களைப் போலவே, அவை அவற்றின் தேசிய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்களைக் கைவிட்டதன் மூலமும், பெருவணிகத்தின் பகிரங்கமான கருவிகளாக மாறியதன் மூலமும் உற்பத்தி பூகோளமயமாக்கலுக்கு விடையிறுத்தன. டோரிகளில் இருந்து வித்தியாசமில்லாத ஒரு தாட்சரிச கட்சியாக புதிய தொழிற்கட்சி உருவெடுப்பதற்கு அந்த தோல்வி அடித்தளம் அமைத்தது. வேலைநிறுத்தங்களைச் செயலூக்கத்துடன் நசுக்கும் தொழில்துறை பொலிஸ் படையாக தொழிற்சங்கங்கள் மாறியது.

1970 களில், தொழிற்சாலை பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12.9 மில்லியன் நாட்கள் இழக்கப்பட்டன, 1978-79 'குளிர்கால அதிருப்தியின்' போது 29.4 மில்லியன் நாட்கள் இழக்கப்பட்டன. 1980 களில், ஆண்டு சராசரி 7.2 மில்லியனாக இருந்தது, முக்கியமாக சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இழந்த 27 மில்லியன் நாட்களே இதற்கு காரணமாக இருந்தன.

1990 களில், இழந்த சராசரி ஆண்டு வேலை நாட்கள் வெறும் 660,000 ஆக குறைந்தன, அதற்குப் பின்னர் உண்மையில் மீண்டும் அது ஒருபோதும் அதிகரிக்கவே இல்லை. தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளின் விளைவாக, 1984 இல் 11 மில்லியனாக இருந்த தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை வெறும் 6.6 மில்லியனாக சரிந்தது. தனியார் துறையில், 19 சதவீதத்திற்கும் குறைவான தொழிலாளர்களே ஒரு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்த பெருந்தொற்றின் போது, முதலாளிமார்களுடனும் மற்றும் அரசாங்கத்துடனும் தொழிற்சங்கங்கள் அவற்றின் ஒத்துழைப்பை ஒரு புதிய மட்டத்திற்குக் கொண்டு சென்றன, ஒரு வேலைநிறுத்தம் மாற்றி ஒரு வேலைநிறுத்தத்தை நசுக்கியதுடன், மிகப் பெரும் பெருநிறுவனங்களுக்கான ட்ரில்லியன் பவுண்டு பிணையெடுப்புகளில் கையெழுத்திட்டன, பின்னர் கோவிட்-19 கட்டுப்பாட்டில் இல்லாத போதும் கூட வேலைக்குத் திரும்ப நிர்பந்தித்தன. இப்போதைய அவற்றின் போர் குணமிக்க வாய்சவடால் எதையும் மாற்றப் போவதில்லை. அவை ஒரு விற்றுத் தள்ளலை வடிவமைக்கும் வரையில், அவற்றின் உறுப்பினர்கள் மீது அவை கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டியுள்ளது.

தொழிற்கட்சியைப் பொறுத்த வரை, ஜெர்மி கோர்பின் தலைமையின் போது செய்யப்பட்ட நேர்மையற்ற இடது பாசாங்குத்தனங்கள் கூட முடிந்துவிட்டது. கோர்பின் எவ்வித சண்டையும் இல்லாமல் கட்சியைப் பிளேயரிசவாதிகளிடம் திரும்ப ஒப்படைத்து விட்டுள்ள நிலையில், தொழிற்கட்சி இன்று சிக்கன நடவடிக்கை, சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை மற்றும் உக்ரேன் போர் விவகாரங்கள் மீது டோரிக்களுடன் பகிரங்கமாக நல்லிணக்கத்துடன் நிற்கிறது. அது ஜோன்சன் எடுக்கும் எந்த விதமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் ஆதரிக்கும்.

சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்காக

இரயில்வே தொழிலாளர்களுக்கும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் அல்ல தொழிலாளர்களாலேயே கட்டுப்படுத்தப்படும், போராடுவதற்கான புதிய அமைப்புகள் அவசியப்படுகின்றன என்ற இன்றியமையா கேள்வியை இது முன்நிறுத்துகிறது. அவர்கள் தங்களின் பொதுவான நலன்களுக்காக போராட அனைத்து பிரிவுகள் மற்றும் தேசிய பிளவுகளை உடைத்து, ஒரு சர்வதேச வர்க்கமாக தங்களின் மிகப் பெரும் சமூக சக்தியை அணித்திரட்ட வேண்டும்.

பிரிட்டனில் வேலைநிறுத்தங்களும் வாக்குப் பதிவுகளும், அதே கடுமையான வாழ்வாதாரச் செலவு நெருக்கடியால் தூண்டப்பட்டு, சர்வதேச அளவில் வளர்ந்து வரும் போர்க் குணத்தின் ஒரு பகுதியாகும். பெப்ரவரியில் இருந்தே, கிரீஸ், இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் பொது வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. ஆம்ஸ்டர்டாம், புரூசெல்ஸ் மற்றும் பாரீஸ் விமான நிலையங்களிலும், மற்றும் இத்தாலியில் ஈசிஜெட் நிறுவனத்திலும், ஸ்பெயின், பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி மற்றும் போர்ச்சுக்கல் என விமானத் துறை தொழிலாளர்கள், தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தங்கள் உட்பட, ஐரோப்பா எங்கிலும் நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர். ஐரோப்பாவில் ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்லோவேனியா மற்றும் துருக்கியிலும்—மற்றும் இந்தியா, இலங்கை, நியூசிலாந்து, உகாண்டா, கென்யா, சூடான் மற்றும் அமெரிக்காவிலும் சுகாதாரத் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர் அல்லது வேலைநிறுத்தத்தில் இறங்க திட்டமிட்டுள்ளனர்.

நாடு தழுவிய வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் இலங்கை அரசாங்கத்தை உலுக்கி உள்ளது. துருக்கி, 1970 களுக்குப் பின்னர் அதன் மிக அதிகபட்ச தொழில்துறை நடவடிக்கைகளைக் கண்டு வருகிறது. அமெரிக்க மற்றும் ஜேர்மன் கப்பல்துறை தொழிலாளர்களின் மிகப் பெரும் போராட்டங்கள் அச்சுறுத்துகின்றன மற்றும் ஏற்கனவே தென் கொரிய ட்ரக் ஓட்டுனர்கள் மத்தியில் வெடித்துள்ளன.

Workers of TNT/FEDEX near Milan airport strike against 176 dismissals and the sell-out by the CGIL, CISL and UIL unions (Photo by S.I. Cobas Peschiera Borromeo)

தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இந்த உலகளாவிய இயக்கத்திற்கு உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தலைமை தேவைப்படுகிறது. ஏப்ரல் 2021 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்ட சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), இந்த இயக்கத்தை ஊக்குவிப்பதிலும் வழி நடத்துவதிலும் மைய அரசியல் மற்றும் அமைப்புரீதியிலான பாத்திரம் வகிக்கிறது. அதன் தலைமையின் கீழ் அமெரிக்கா, கனடா, இலங்கை, ஜேர்மனி, ஆஸ்திரேலியாவின் முக்கிய தொழில்துறைகளிலும், பிரிட்டனில் பேருந்து தொழிலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியிலும் குழுக்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன.

பிரிட்டனில் ஒவ்வொரு வேலை இடத்திலும் மற்றும் ஒவ்வொரு தொழில் துறையிலும் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை உருவாக்குவது, அவர்களின் திருப்பிப் போராடும் போராட்டங்களை நாசமாக்குவதற்கான தொழிற்சங்கங்களின் எல்லா முயற்சிகளையும் தோற்கடிக்கவும், எழுச்சி அடைந்து வரும் முன்னணிகளை ஐக்கியப்படுத்தவும், ஜோன்சன் அரசாங்கத்தைக் கீழிறக்கவும் அவசியமான நிலைமைகளை உருவாக்கும்.

பிரிட்டினில் தொழிலாளர் நடவடிக்கைக்கான ஒரு திட்டம்

சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளுக்காக போராடுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது:

பணவீக்கத்தைக் ஈடுசெய்ய இரயில் ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு! இதற்காக ஓட்டுனர்கள், நடத்துனர்கள், பராமரிப்பு மற்றும் நிலைய பணியாளர்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலமாக போராட வேண்டும். பொது போக்குவரத்து, கண்ணியமான சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு நிதி வழங்க 'பணம் இல்லை' என்ற கூற்றுக்களுக்கு எதிராக, இரயில்வே நிறுவனங்களைத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது உட்பட சோசலிச நடவடிக்கைகளுக்காக போராட வேண்டும்.

கிரேட் பிரிட்டிஷ் இரயில்வே திட்டத்தைத் தோற்கடிப்போம்!இரயில்வே தொழிலாளர் மீது திணிக்கப்பட்ட சம்பள உறைவு, 3 பில்லியன் பவுண்டுக்கு அதிகமான வெட்டுக்கள், ஆயிரக் கணக்கான வேலைகளை நீக்குவதற்கான அச்சுறுத்தல் மற்றும் வெறுங்கூடாக விடப்பட்ட ஓய்வூதியங்கள் ஆகிய அனைத்தும் கிரேட் பிரிட்டிஷ் இரயில்வேக்கான டோரி திட்டத்தின் பாகமாகும். இந்த திட்டத்தில் இரயில்வே மீட்புக் குழு மூலமாக RMT, ASLEF மற்றும் TSSA ஜோன்சனின் பங்காளிகளாக உள்ளன.

ஒவ்வொரு துறையிலும் நிலவும் பிரச்சினைகளை விரிவாக்கி ஒன்றாக்குவோம்!தொழிலாளர்கள் ஒரே மாதிரியான பிரச்சினைகளுக்காகவே வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களிக்கின்றனர், தீர்மானமாக உள்ள மிகப் பெரும் செல்வந்த முதலாளிமார்களை எதிர்கொள்கின்றனர். போராட்டங்களைப் பிளவுபடுத்தி ஒடுக்குவதற்கான தொழிற்சங்கங்களின் முயற்சிகளைக் கடந்து, ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஒழுங்கமைக்க தயாரிப்புகள் செய்தாக வேண்டும்.

ஜோன்சன் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்க ஓர் அரசியல் போராட்டத்தைத் தொடுப்போம்!பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களுக்குச் சார்பாக ஒவ்வொரு துறையிலும் வரலாற்று ரீதியான தாக்குதல்களை நடைமுறைப்படுத்தும் ஜோன்சன் அரசாங்கத்திற்கு எதிராக நேரடியாக ஓர் அரசியல் சவாலை முன்வைக்காமல் ஒரு பொது வேலைநிறுத்தத்தால் அதன் இலக்கில் வெற்றி அடைய முடியாது.

தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டி எழுப்புவோம்!ஜோன்சனின் டோரிக்களுக்கு மாற்றீடாக தொழிற்கட்சியிடம் எதுவும் இல்லை — எதேச்சதிகாரம், இராணுவவாதம், பாரிய நோய்தொற்று மற்றும் சிக்கன நடவடிக்கைகளில் அவை ஒன்றுக்கொன்று சமமான வலதுசாரி கட்சிகளாகும். தொழிலாளர்களுக்கு அவர்களின் நலன்களுக்காக போராட ஒரு சோசலிச சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைக் கொண்ட அவர்களின் சொந்த கட்சி வேண்டும்.

இத்தகைய ஒரு போராட்டத்தில் பங்கெடுக்க விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இன்றே சோசலிச சமத்துவக் கட்சியைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading