மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலர் பிரித்தி பட்டேல் ஒப்புதல் அளித்துள்ளார். அவர் நாடு கடத்தப்பட்டால், அமெரிக்க போர்க்குற்றங்கள், சதித்திட்டங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இங்கிலாந்து மற்றும் பிற ஏகாதிபத்திய கூட்டாளிகளின் உடந்தையை செய்தித்துறை மூலம் அம்பலப்படுத்தியதற்காக உளவுச் சட்டத்தின் கீழ் அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறார்.
2010 டிசம்பரில் இலண்டனில் முதன்முதலில் கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக காவலில் வைக்கப்பட்டு, பின்னர் இலண்டனின் அதிகபட்ச பாதுகாப்புள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து பதினொன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், பிரிட்டிஷ் அரசாங்கம் அனைத்து சட்ட விதிமுறைகளையும் கைவிட்டு, அசான்ஜின் மரணத்திற்கு வழிவகுக்கும் உத்தரவில் கையெழுத்திட்டது.
உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “2003இன் ஒப்புதல் சட்டத்தின் கீழ், அதைத்தடுப்பதற்கு எவ்வித காரணமும் வழங்கப்படவில்லை என்றால் நாடு கடத்தல் உத்தரவில் மாநிலச் செயலாளர் கையெழுத்திட வேண்டும்.
“வழக்கின் பல்வேறு அம்சங்களைப் பரிசீலித்த பின்னர் அதைத் தொடரலாம் என நீதிபதி முடிவு செய்தவுடன், நாடு கடத்தல் கோரிக்கைகள் உள்துறைச் செயலருக்கு அனுப்பப்படும்.
“ஜூன் 17 அன்று, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் பரிசீலனையை தொடர்ந்து, திரு ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. திரு அசான்ஜ் இற்கு மேல்முறையீடு செய்வதற்கான சாதாரணமாக14 நாட்களே இருந்தன.
'இந்த வழக்கில், திரு அசான்ஜை நாடு கடத்துவது அடக்குமுறை, அநீதி அல்லது ஒழுங்கான வழக்கு நடைமுறை துஸ்பிரயோகம் செய்யப்பட்டது என்று இங்கிலாந்து நீதிமன்றங்கள் காணவில்லை.'
பட்டேலின் முடிவு ஜனநாயகம் மற்றும் உரிய வழக்கு நடைமுறை பற்றிய எந்த கருத்தையும் அழிக்கிறது. விக்கிலீக்ஸ் இந்த முடிவை 'தகவல் சுதந்திரம் மற்றும் பிரிட்டிஷ் ஜனநாயகத்திற்கான இருண்ட நாள்' என்று கண்டனம் செய்தது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்தது.
விக்கிலீக்ஸ் “இது பத்திரிகை சுதந்திரத்திற்கும் பிரிட்டிஷ் ஜனநாயகத்திற்கும் ஒரு இருண்ட நாள். ஜூலியன் அசான்ஜை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய அமெரிக்காவுக்கு அவரை நாடு கடத்துவதற்கு உள்துறைச் செயலர் ஒப்புதல் அளித்துள்ளதையிட்டு, கருத்துச் சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்ட இந்த நாட்டில் உள்ள எவரும் வெட்கப்பட வேண்டும்.
“ஜூலியன் எந்த தவறும் செய்யவில்லை. அவர் எந்த குற்றமும் செய்யவில்லை, குற்றவாளியும் அல்ல. அவர் ஒரு தகவல்துறையாளரும் ஒரு வெளியீட்டாளருமாவார். அவர் தனது வேலையைச் செய்ததற்காக தண்டிக்கப்படுகிறார்.
“சரியானதைச் செய்வது பிரித்தி பட்டேலின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. மாறாக, புலனாய்வு பத்திரிகையை ஒரு குற்றவியல் நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டத்தில் அமெரிக்காவின் கூட்டாளியாக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
'உள்துறை செயலர் ஜூலியனுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் செய்த குற்றச்செயல்களை மட்டும் மன்னிக்கவில்லை. மாறாக விக்கிலீக்ஸால் அம்பலப்படுத்தப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் குற்றங்களையும் மன்னிக்கின்றது'.
'ஜூலியனின் சுதந்திரத்திற்கான பாதை நீண்டது மற்றும் கடினமானது' என்ற உறுதிமொழியுடன் அறிக்கை முடிந்தது. இன்று மோதல் முடிவுக்கு வரவில்லை. இது ஒரு புதிய சட்டப் போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே. சட்ட அமைப்புமுறை மூலம் மேல்முறையீடு செய்வோம். அடுத்த மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும். நாங்கள் சத்தமாக போராடுவோம், தெருக்களில் பலமாக கத்துவோம். நாங்கள் எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்து ஜூலியனின் கதையை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.
“எந்த தவறும் செய்யாதீர்கள், இது எப்போதுமே ஒரு அரசியல் விடயமாகியுள்ளது. ஜூலியன் அவரை நாடு கடத்த முயன்ற நாடு போர்க்குற்றம் செய்து அவற்றை ஏமாற்றியதற்கான ஆதாரங்களை வெளியிட்டு, சித்திரவதை செய்யப்பட்டமை, வெளிநாட்டு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டமை மற்றும் அமெரிக்காவின் தவறான நடவடிக்கைகள் பற்றி நீதித்துறை விசாரணைகளை திரிபுபடுத்தியதை அம்பலப்படுத்தினார். அவர்களின் இந்தப் பழிவாங்கல்கள், அரசாங்கங்களை குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைப்பதில் இருந்து மற்றவர்களைத் தடுக்கவும், அவரது வாழ்நாள் முழுவதும் அவரை சிறைச்சாலையின் இருண்ட இடைவெளிகளுக்குள் காணாமல் போக முயற்சிப்பதாகும்.
“அப்படி நடக்க விடமாட்டோம். ஜூலியனின் சுதந்திரம் நமது அனைத்து சுதந்திரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. ஜூலியனை அவரது குடும்பத்திற்குத் திருப்பி அனுப்பவும், நம் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுக்கவும் நாங்கள் போராடுவோம்”.
அசான்ஜ் தனது சட்ட முறையீடுகளில் வெற்றிபெறவில்லை என்றால், அவர் பைடென் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுவார். 2010 இல், ஏகாதிபத்திய சக்திகளால் திட்டமிடப்பட்ட உலகளாவிய மனித வேட்டைக்கு மத்தியில், பராக் ஒபாமாவின் துணை ஜனாதிபதியாக இருந்த பைடென், அசான்ஜை 'உயர்தொழில்நுட்ப பயங்கரவாதி' என்று விவரித்தார்.
ஒரு அரசியல் துன்பியலான இந்த உத்தரவில் கையெழுத்திடுவதற்கான பட்டேலின் முடிவு ஒரு முன்கூட்டிய எடுக்கப்பட்ட முடிவாகும். அவர் நாடு கடத்தப்படுவதை உறுதி செய்ய உறுதியான நீதித்துறையின் உதவி அவருக்கு இருந்தது. ஜனவரி 2021 இல், மாவட்ட நீதிமன்ற நீதிபதி வனேசா பரைட்சர், விக்கிலீக்ஸ் நிறுவனர் தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்தில் இருப்பதாக ஒப்புக்கொண்டு, மனநலக் காரணங்களுக்காக அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என்று தீர்ப்பளித்தார். ஆனால் அமெரிக்க அரசாங்கத்தின் மேல்முறையீட்டிற்குப் பின்னர் அவரது முடிவு நிராகரிக்கப்பட்டது. பிரிட்டனின் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அசான்ஜ் அடக்குமுறைமிக்க சிறைச்சாலை நிலைமைக்கு உட்படுத்தப்படமாட்டார் என்ற வெற்று 'உறுதிமொழிகளை' ஏற்றுக்கொண்டனர்.
35 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், அசான்ஜை நாடு கடத்துவதைத் தடுக்குமாறு உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதி, அவரை விடுவிக்கக் கோரிய ஒரு வாரத்தில்தான் பட்டேலின் முடிவு வந்தது. உத்தரவில் கையொப்பமிட்டதில் பட்டேல் அசான்ஜின் உடல்நிலை குறித்த அவர்களின் கடுமையான கவலைகளை நிராகரித்தார்.
அவர்களின் கடிதம், “அக்டோபர் 2021 இல், திரு அசான்ஜ் ஒரு 'கடுமையற்ற பக்கவாத' நோயால் பாதிக்கப்பட்டார். திரு அசான்ஜின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தான சீரழிவு, அவரது கடுமையான சிறைச் சூழல்களால் ஏற்படும் நீண்டகால மன அழுத்தமும், நாடுகடத்தப்பட்டால் அவர் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்த நியாயமான பயத்தினாலும், திரு அசான்ஜ் இருதய நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது என்ற மருத்துவ கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
டாக்டர்கள் தொடர்ந்தனர், “திரு அசான்ஜின் உடல்நிலையில் ஏற்பட்ட இந்த பாரியவ சீரழிவு, இதுவரை அவரின் நாடு கடத்தும் நடவடிக்கைகளில் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, உயர் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்க உத்தரவாதங்கள், எந்தவொரு ஒப்படைப்பு ஒப்புதலுக்கும் அடிப்படையாக அமையும், அவை காலாவதியான மருத்துவத் தகவலின் அடிப்படையில் நிறுவப்பட்டு, அவை வழக்கற்றுப் போய்விட்டன.
பழைமைவாத அரசாங்கத்தின் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் கீழ் உள்துறை அலுவலகத்தை பொறுப்பேற்றதிலிருந்து 2019 இல் அடைக்கலம் தேடிய ஈக்வடோர் தூதரகத்திலிருந்து அசான்ஜ் சட்டவிரோதமாக இழுத்துச் செல்லப்பட்டதைக் கொண்டாடிய பட்டேல் இன்னும் கடுமையான சட்டங்களை உருவாக்கியுள்ளார். ஜனநாயக உரிமைகள் மீதான அவரது சமீபத்திய தாக்குதல் தேசிய பாதுகாப்பு மசோதா மீதானதாகும். இது இராணுவத் தளங்களில் எதிர்ப்பை காட்டுவதையும் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பை தயாரிக்கவும் நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்படும் அரசாங்கப் பொய்களை அம்பலப்படுத்தும் தகவல்துறையை குற்றமாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சாசனமாகும்.
ஜூன் 6 அன்று அதன் இரண்டாவது வாசிப்பை நிறைவேற்றிபட்டபோது, அடுத்த ஆறு மாதங்களில் சட்டமாக்கப்படுவதற்கான ஒரு முக்கிய படியாகும், அசான்ஜூம் விக்கிலீக்ஸும் நாடாளுமன்றத்தில் டோரி அங்கத்தவர்களின் வெறித்தனமான கண்டனங்களுக்கு இலக்காகினர். அரசாங்கத்திற்கு தொழிற் கட்சியின் நிழல் உள்துறை செயலாளர் யவெட் கூப்பர் ஆதரவளித்தார். டோரி நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா வில்லியர்ஸிடம் 'விக்கிலீக்ஸ் போன்று தகவல்களை பொதுமக்களுக்கு பெருமளவில் கிடைப்பதைக் கண்டிப்பீர்களா' என்று கூப்பரிடம் கேட்கப்பட்டபோது அவர் 'ஆம், நான் கடுமையாகச் செய்வேன். ஏனென்றால் இதுபோன்ற கசிவுகளினால் எமது முகவர்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளதை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் நமது தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை உள்கட்டமைப்பின் முக்கிய பகுதிகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளமை மிகவும் பொறுப்பற்றது.
'வெளிநாடுகளில் ஏகாதிபத்தியப் போர் மற்றும் உள்நாட்டில் சமூக எதிர்ப்புரட்சிக்கான தீவிரமான திட்டங்களுக்கு ஏற்ப, பேச்சுசுதந்திரம், எதிர்ப்புத்தெரிவித்தல் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதான முன்னோடியில்லாத தாக்குதலுக்கு அசான்ஜின் துன்புறுத்தல் முன்னுதாரணமாக அமைகிறது' என்று இந்த சட்டத்தை இயற்றுவது பற்றி WSWS குறிப்பிட்டது.
பப்டேலின் உத்தரவின் அர்த்தம், அசான்ஜ் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதற்கான ஒரு முக்கிய படியை நெருங்குகின்றது. 2010 இலிருந்து பிரிட்டிஷ் நீதித்துறையின் வரலாறு மற்றும் வீரமிக்க தகவல்துறையாளரை அவமதிக்கும் வகையில் நடத்தப்பட்டதன் மூலம், இந்த உயர் நீதிமன்ற மேல்முறையீட்டிற்கு சாதகமான முடிவை எதிர்பார்க்க எந்த காரணமும் இல்லை.
இந்தத் தீர்ப்பு பற்றிய இன்றியமையாத அரசியல் பதில் என்னவெனில், அசான்ஜின் விடுதலையை கோருவதற்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை இரட்டிப்பாக்குவதாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க
- அசான்ஜ் விக்கிலீக்ஸை ஸ்தாபித்து பதினைந்து ஆண்டுகள்
- அசான்ஜை எந்த நாளிலும் நாடு கடத்த அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில், இலண்டனில் போராட்டம் நடத்தப்பட்டது
- உள்துறை செயலர் பட்டேலின் முடிவின்படி, ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது
- ஜூலியன் அசான்ஜ் இலண்டனின் பெல்மார்ஷ் சிறையில் ஸ்டெலா மோரிஸை மணந்தார்
- அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து ஜூலியன் அசான்ஜ் செய்த மேல்முறையீட்டை இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் நிராகரித்தது