TUC தொழிற்சங்கங்கள் பிரிட்டனின் இரயில் வேலைநிறுத்தங்களை நாசப்படுத்த கடைசி நிமிட முயற்சியில் ஈடுபட்டுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிறு மாலை 9.00 மணியளவில், இந்தவாரம் திட்டமிட்டுள்ள இரயில்வே வேலைநிறுத்தம் மேற்கொண்டு செல்வதை தடுக்கக் கோரி கடைசி நிமிட பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிட்டு கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் போக்குவரத்து செயலர் கிராண்ட் ஷாப்ஸுக்கு பிரிட்டனின் 14 பெரிய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை இண்டிபென்டன்ட் பத்திரிகை வெளியிட்டது.

இங்கிலாந்தில் எந்த ஒரு தொழிற்சங்க அதிகாரத்துவமும் நடைபெற விரும்பாத வேலைநிறுத்தத்தை நாசப்படுத்தும் முயற்சியாக அந்தக் கடிதம் இருந்தது. பல வாரங்களாக தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தும் போர்க்குணமிக்க அறிக்கைகளுக்கு மத்தியில், இரயில் ஊழியர்களின் அழுகிய காட்டிக்கொடுப்பை தடுக்கக்கூடிய ஒரே விஷயம், தொழிற்சங்கங்களின் சரணடைதல் நிபந்தனைகளை ஜோன்சன் அரசாங்கம் ஏற்க மறுப்பதுதான் என்பதை உறுதிப்படுத்தியது.

தொழிற் சங்க காங்கிரஸ் (TUC) இலண்டனில் பல்லாயிரக்கணக்கானோரை கவர்ந்த ஒரு பேரணியை நடத்தி, டோரி சிக்கன நடவடிக்கையை எதிர்ப்பதாக உறுதியளித்த ஒரு நாளுக்குப் பின்னர், விரைவில் ஓய்வுபெற உள்ள TUC பொதுச் செயலாளர் பிரான்சிஸ் ஓ'கிராடி 'இந்த மோதல்களில் தீப்பிழம்புகளை எரிப்பதை விட, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு நல்லெண்ணத்துடன் செயல்பட வேண்டும். இதைச் செய்ய அவர்களுக்கு அதிகாரம் உள்ளது” எனக் கூறினார்.

ஜூன் 18, 2022 அன்று லண்டனில் TUC 'நாங்கள் சிறப்பான வாழ்க்கையை கோருகிறோம்' ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரான்சிஸ் ஓ'கிராடி பேசுகிறார் [Photo: WSWS]

ஓ'கிராடி உடன் இணைந்து, Unite, GMB, Unison, தேசிய ஆசிரியர்கள் தொழிற்சங்கம் மற்றும் தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் தொழிற்சங்கம் ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள், கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் வேலைநிறுத்தங்களை அச்சுறுத்தி வருகின்றனர். தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் பிரிக்க முயல்வதை தொழிற்சங்க இயக்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என எழுதினர்.

'வீட்டுக் கட்டணங்கள் மற்றும் விலைகள் விண்ணை முட்டும் நிலையில், தொழிலாளர்கள் வேலை, ஊதியம் மற்றும் நிபந்தனைகளை பாதுகாக்க முற்படுவார்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் உரிமை ஒரு அடிப்படை பிரிட்டிஷ் சுதந்திரமாகும்” என்றனர்.

ஆனால் அவர்கள் பின்னர் ஷாப்ஸிடம், 'எங்கள் இரயில் தொழிற்சங்கங்கள் இந்த மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முயல்கின்றன. மேலும் நியாயமான தீர்வை வழங்குவதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் ஒரு மேசையில் அமருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்' என்றனர்.

வேல்ஸில் உள்ள இரயில் தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் வேலைப் பாதுகாப்பு தொடர்பாக இரயில் இயக்குனர்களுடன் ஏற்கனவே உடன்பாடுகளை எட்டியுள்ளனர் என்றும் ஸ்காட்லாந்தில் 'அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை' நடைபெற்று வருவதாகவும் TUC வாதிட்டது. இதே 'வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள அமைச்சர்களால் மற்ற இரயில் தொழிலாளர்களுக்கு இந்த வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. இரயில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருவருக்கும் நன்மை பயக்கும் இரயிலுக்கான எதிர்காலத்தை பேச்சுவார்த்தை நடத்துவதை விட வெட்டுக்களை சுமத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.'

உலக சோசலிச வலைத் தளத்தின் அறிக்கையின்படி, இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற் சங்கத்தின் (RMT) பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச் ஜூன் 15 அன்று ஷாப்ஸ் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோரிடம் நேரடியாக மூன்று நாட்கள் வேலைநிறுத்தங்களைத் தவிர்க்க 'எந்த முன் நிபந்தனையும் இன்றி... அவசரக் கூட்டத்திற்கு' வேண்டுகோள் விடுத்தார். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் உள்கட்டமைப்பு நிறுவனமான Network Rail மற்றும் 13 இரயில் நிறுவனங்களின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது, கட்சியின் வலதுசாரி தலைமைக்காக தொழிற் கட்சியின் நிழல் மாநில செயலாளர் லூயிஸ் ஹை மற்றும் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பின் மற்றும் அவரது முக்கிய கூட்டாளியான முன்னாள் நிழல் சான்சிலர் ஜோன் மெக்டோனல் ஆகியோரின் ஆதரவுடன் இது மத்திய முறையீடு செய்யப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, தொழிற் கட்சியின் தலைவர் சேர் கீர் ஸ்டார்மர் அதே செய்தியின் தனது சொந்த பதிப்பை வழங்கினார். மேலும் தொழிற் கட்சி எதிர்த்த வேலைநிறுத்தத்தை ஷாப்ஸ் தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். “பேச்சுவார்த்தை மேசையில் இந்த வாரம் தங்கள் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதிலாக, அவர்கள் தாக்குதல் அறிக்கைகளை வடிவமைக்கிறார்கள். சூழ்நிலையின் சூடுபிடித்த நிலைமையை தணிப்பதற்கான கூடிய உரையாடல்களுக்குப் பதிலாக, அவர்கள் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுகிறார்கள். தேச நலனுக்காக மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் அரசியல் நலனுக்காக பிரிவினையைத் தூண்டுகிறார்கள்” என்றார்.

ஷாப்ஸுக்கு எழுதிய ஒரு தனிக் கடிதத்தில், ஹைக் பின்வருமாறு வலியுறுத்தினார், “இதைத் தீர்த்து வைப்பதற்கான ஒரே வழி உங்கள் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு மேசைக்கு வருவதுதான். இன்னும் 24 மணிநேரம் உள்ள நிலையில், வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க சில தலைமைத்துவத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது”.

ஷாப்ஸ் RMT உடனான எந்தப் பேச்சுக்களையும் நிராகரித்து, 'திடீரென்று முன்வந்து, 'நாம் இப்போது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' என்று கூறியது கடைசி நிமிடத்தில் தொழிற்சங்கம் செய்த ஒரு தந்திரம். மேலும் 'தொழிற்சங்கம் ஒரு வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்கின்றது' என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, லிஞ்ச் Sky News க்கு அவநம்பிக்கையுடன் பதிலளித்தார், “நாம் வேறு என்ன செய்ய வேண்டும்? நாம் மன்றாட வேண்டுமா? நாம் பிச்சை எடுக்கவேண்டுமா? எங்கள் எதிர்காலத்திற்காக பேரம் பேச விரும்புகிறோம். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம்”.

தொழிற்சங்க அதிகாரத்துவம் அதன் விருப்பப்படி நின்றால், பிரித்தானியாவில் மற்றொரு வேலைநிறுத்தம் இருக்காது. இப்போது அச்சுறுத்தும் தொழில்துறை நடவடிக்கை அலை ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் பெரிய பெருநிறுவனங்களின் சார்பாக வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கும் தொழிற்சங்கங்களின் திறன் கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது. டோரிகளின் எந்த சமரசத்தையும் தங்கள் உறுப்பினர்களுக்கு விற்க முடியாது என்ற உண்மையால் மட்டும் அல்ல, மாறாக தொழிலாள வர்க்கமும் கூட அரசு மற்றும் முதலாளிகளுடன் மோதலை விரும்புகின்றார்கள். லிஞ்ச் Sky News இடம் கூறியது போல், இந்த வார வேலைநிறுத்தங்கள் இப்போது தவிர்க்க முடியாததாகத் தோன்றுகின்றன. மற்ற தொழிலாளர்களும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களிக்கவுள்ளனர். ஏனெனில் 'மக்களால் இனி பொறுத்துக்கொள்ள முடியாது'.

ஆனால் போராட்டத்தை எதிர்பார்க்கும் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களை இப்போது நிகழ்ச்சி நிரலில் உள்ள போராட்டங்களின் பொறுப்பில் இருக்க அனுமதிக்க முடியாது. இல்லாவிடின் அவர்கள் தொழிலாளர்களை உருக்குலைத்து காட்டிக் கொடுப்பார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒவ்வொரு பணியிடத்திலும், தொழிற்சங்கங்கள் சாராமல், அதிகாரத்துவத்தால் கழுத்து நெரிக்கப்படுவதை உடைத்து, தொழிலாள வர்க்கத்தை அதன் சொந்த தலைவிதியின் பொறுப்பில் வைக்கக்கூடிய சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைக்க வலியுறுத்துகிறது. இரயில் தொழிலாளர்களும் மற்றும் ஜோன்சன் அரசாங்கம் பதவியிறக்கப்படுவதைக் காண விரும்பும் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading