இலங்கை பொலிஸ் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை கைது செய்தது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மத்திய கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக கட்டிடத்தில் அமைந்துள்ள திறைசேரி வளாகத்துக்கான நுழைவாயிலை மறித்ததாக குற்றம் சுமத்தி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் 21 பேரை இலங்கை பொலிஸார் நேற்று காலை கைது செய்தனர்.

நூற்றுக்கணக்கான கனமாக ஆயுதம் ஏந்திய பொலிசும் மற்றும் அதன் விசேட அதிரடிப் படை அதிகாரிகளும் கட்டிட வளாகத்தை சுற்றி வளைத்து, 16 ஆண் மற்றும் ஐந்து பெண் எதிர்ப்பாளர்களை கைது செய்து, அவர்களை பேருந்துகளில் அடைத்தனர். அவர்கள் கொழும்பு புறநகர்ப் பகுதியில் சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவிலுள்ள பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் கொடூரமாக கையாளுவதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

20 ஜூன் 2022 அன்று காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டத்தைத் தாக்க சிறப்பு அதிரடிப்படையின் கலகத் தடுப்புப் பொலிசார் குவிக்கப்பட்டனர் [Photo by Sudu Andagena Kalu Avidin/Facebook] [Photo: Sudu Andagena Kalu Avidin/Facebook]

கைது செய்யப்பட்டவர்கள் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து கொழும்பு காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பதவி விலக வேண்டுமெனக் கோரியும், உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை நிறுத்தக் கோரியும், நீடிக்கப்பட்டுள்ள மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

அரசாங்கத்துடன் 10 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தற்போது இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (ச.நா.நி.) குழுவுடனான சந்திப்பில் நிதி அமைச்சின் செயலாளர்கள் கலந்து கொள்வதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்ததாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தப் போராட்டமானது 'சட்டவிரோதமான ஒன்றுகூடல்' என்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கூறிக்கொண்டது.

கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்து பின்னர் ஒரு நீதவான் முன் கொண்டுவரப்பட்ட பின்னர், மாலையில் 500,000 ரூபாய் (டொலர் 1,390) பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது 'சட்டவிரோத ஒன்றுகூடல்' மற்றும் 'அத்தியாவசிய கடமைகளுக்கு இடையூறு' விளைவித்த ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம். இவர்களது வழக்குகள் ஜூலை 22 அன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வரவுள்ளது.

நான்கு நாட்களுக்கு முன்னர், பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது பேரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டார். அவர்கள் ரத்திந்து சேனாரத்ன, வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர, ஜகத் மனுவர்ண, தம்மிக்க முனசிங்க, எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி மற்றும் பௌத்த பிக்குகளான ரத்கரவ்வே ஜினரதன மற்றும் கல்வெவ சிறிதம்மா ஆகியோர் ஆவர்.

லஹிரு வீரசேகர போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) தலைவர்களில் ஒருவராவார். வசந்த முதலிகே, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) தலைவர் ஆவார். எரங்க குணசேகர மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கட்டுப்பாட்டில் இருக்கும் சோசலிச இளைஞர் சங்கத்தின் அழைப்பாளர் ஆவார்.

அவர்கள் அனைவரும் ஜூன் 9 அன்று கொழும்பு பொலிஸ் தலைமையகம் மற்றும் கல்வி அமைச்சின் வளாகத்திற்கு வெளியே 'வன்முறை' ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர். இந்த ஜனநாயக விரோத தாக்குதல்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான பரந்த அரசாங்க ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும்.

கடந்த ஒரு மாதத்தில், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, நாடு முழுவதும் 1,808 பேரை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது. இவர்களில் சுமார் 780 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (பார்க்க: இலங்கை பொலிஸ் அரச-விரோத செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வேட்டையாடலை தீவிரப்படுத்தியுள்ளது)

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், திங்களன்று பொலிஸ் கைதுகள் மற்றும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான பழிவாங்கலை கண்டிக்கின்றன.

எவ்வாறாயினும், காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் ஜே.வி.பி., மு.சோ.க., அ.ப.மா.ஒ. மற்றும் இதர மத்தியதர வர்க்க குழுக்களின் அரசியலை சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்று கூற வேண்டும்.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், ஆர்ப்பாட்டக்காரர்கள் தரப்பு பேச்சாளர், கைதுகளை கண்டித்த அதே வேளை, அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் குழு கலந்துரையாடலுக்காக திறைசேரிக்கு வருவதை தாம் அறிந்திருக்கவில்லை, என்று கூறினார்.

'யாரும் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை,' என்று அவர் கூறினார். 'சர்வதேச நாணய நிதிய குழு வருவதை அறிந்திருந்தால், நாங்கள் அவர்களுக்கு வணக்கம் செலுத்திவிட்டு சென்றிருப்போம். நாடு அராஜகமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்றும் அவர் கூறினார்.

பின்னர், போராட்டக்காரர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை, அவர்களின் நடவடிக்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு எதிரானது அல்ல என்று அறிவித்தது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதை வேண்டுமென்றே தாமதப்படுத்திய அரசாங்கம், இப்போது எதிர்ப்பாளர்களை குற்றம் சாட்ட முயற்சிக்கிறது, என்றும் அது பிரகடனம் செய்தது.

சர்வதேச நாணய நிதியம் கோரும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கும் மற்றொரு முதலாளித்துவ அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில், ஜனாதிபதி இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் அகற்றுவதையே 'கோட்டா கோகம' எதிர்ப்பாளர்கள் விரும்புகின்றனர் என்பதை இந்த அறிக்கைகள் மீண்டும் காட்டுகின்றன. இதுவே பாராளுமன்ற எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் ஜேவிபி மற்றும் மு.சோ.க. இனதும் அரசியல் வேலைத் திட்டமாகும்.

தற்போதுள்ள தீவிர பணவீக்கம், அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, சுகாதார அமைப்பின் சீர்குலைவு, அதிக வரிகள் மற்றும் பாரிய பொதுத்துறை வேலை வெட்டுகளுக்கான தயாரிப்புகள் போன்ற நிலைமைகளின் கீழ் இராஜபக்ஷ-விக்கிரமசிங்க நிர்வாகத்துடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய குழு இலங்கை வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளின் நோக்கம், மில்லியன் கணக்கான இலங்கையர்கள் எதிர்கொள்ளும் வாழ்வா சாவா பிரச்சினைகளை குறைப்பது அல்ல, மாறாக அரசாங்கம் இன்னும் பேரழிவுகரமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதை உறுதி செய்வதாகும்.

முதலாளித்துவ அமைப்பிற்குள் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் மிகப் பெரும் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடையாது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் மற்றும் சோசலிச கொள்கைகளுக்கான அரசியல் போராட்டத்திலேயே இவற்றுக்கு தீர்வு காணமுடியும்.

ஜூலை 3, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஏற்பாடு செய்துள்ள 'இலங்கையில் வெகுஜன எழுச்சியின் படிப்பினைகள்' என்ற தலைப்பிலான இணையவழி கூட்டத்தில் இந்த வேலைத் திட்டம் பற்றி கலந்துரையாடப்படும். இந்த இன்றியமையாத கூட்டத்திற்காகப் பதிவு செய்துகொண்டு பங்கேற்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் படிக்க

Loading