மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
30 June 2022
அன்புடன் தோழருக்கு,
உங்களின் 28 ஜூன் கடிதத்திற்கும், துருக்கியில் அனைத்துலகக் குழுவின் புதிய பிரிவை ஸ்தாபிப்பதற்கான அதன் உற்சாகமான பதிலுக்கும் நன்றி. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணியின் முறையான விரிவாக்கம் ஒரு நாடாக அல்லது பிராந்தியமாகக இருந்தாலும், ஒரு முக்கியமான அரசியல் மைல்கல் ஆகும். ஆனால் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை ஒரு உலகளவிலும் மற்றும் நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்காக மிகத் தீர்க்கமான முறையில் அபிவிருத்திசெய்த இந்த நாட்டில் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது என்பது சிறப்பான திருப்தியை அளிக்கிறது. சோசலிச சமத்துவக் குழுவின் தோழர்களுடன் பிரின்கிபோ தீவிற்கு விஜயம் செய்த போது, ட்ரொட்ஸ்கியின் மகத்தான வரலாற்று சாதனை பற்றிய விழிப்புணர்வால் ஒருவர் ஆழமாக உந்தப்படாமல் இருக்க முடியவில்லை. ஆனால் பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி தொடங்கிய பணியை நாங்கள் தொடர்கிறோம் என்பதிலிருந்தும், அனைத்துலகக் குழுவின் அரசியல் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்துடன் ட்ரொட்ஸ்கி முழுமையாக ஐக்கியப்பட்டிருந்திருப்பார் என்பதிலிருந்தும் நாம் திருப்தி அடையலாம்.
நீங்கள் எழுதுவது போல், துருக்கியில் உள்ள எங்கள் தோழர்களின் அனுபவம், ரஷ்யாவிலும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் உள்ள அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நான்காம் அகிலத்தின் முழு வரலாற்று அனுபவத்தின் ஒரு ஒருங்கிணைந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில், ஒரு புதிய பிரிவை ஸ்தாபிப்பதற்கான ஒரு உறுதியான அடித்தளத்தை உருவாக்க நாங்கள் பொறுமையுடன் உழைத்தோம்.
சோசலிச சமத்துவக் குழுவின் தீர்மானம் மிகவும் கவனமாக ஆய்வு செய்யத் தகுதியானது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை சோசலிச சமத்துவக் குழு அங்கீகரிப்பதை வெறும் ஸ்தாபக ரீதியான அர்த்தத்தில் மட்டும் புரிந்து கொள்ளப்படக் கூடாது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமை, ட்ரொட்ஸ்கிசத்தின் அடித்தளக் கோட்பாடுகள் மற்றும் வேலைத்திட்டத்தை பாதுகாப்பதில் அதற்கிருந்த வரலாற்றுத் தொடர்பை அடிப்படையாகக் கொண்டது. சோசலிச சமத்துவக் குழுவின் தீர்மானம் ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியின் அத்தியாவசிய வரலாற்று உள்ளடக்கத்தை பின்வரும் புள்ளிகளில் எடுத்துக்காட்டியது:
4. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே உலக மார்க்சிச/ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் தொடர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தேசியவாத ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்காக 1923 இல் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் இடது எதிர்ப்பை ஸ்தாபித்தது வரை இந்தத் தொடர்ச்சி செல்கிறது. இந்த மூலோபாயமும் வேலைத்திட்டமும் தான் விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் ரஷ்யாவில் போல்ஷிவிக் கட்சியின் தலைமையிலான 1917 அக்டோபர் புரட்சிக்கு வழிகாட்டியது.
5. 1933 இல் ஜேர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்த கம்யூனிச அகிலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் 1938 இல் நான்காம் அகிலம் நிறுவப்பட்டது. மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான திருத்தல்வாத-கலைப்பு போக்கிற்கு எதிராக அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) ஜேம்ஸ் பி. கனனின் தலைமையிலான மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் 1953 இல் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது. ஜெர்ரி ஹீலி தலைமையிலான பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் அரசியல் போராட்டம் மற்றும் பிரிட்டனில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தேசிய-சந்தர்ப்பவாத சீரழிவுக்கு எதிராகவும், மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் அனைத்துலக் குழுவின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கும் 1982-86ல் டேவிட் நோர்த் தலைமையிலான அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் போராட்டமும் இந்த அரசியல் தொடர்ச்சியின் முக்கியமான திருப்புமுனைகளாக அமைந்தன.
பிரித்தானிய முறையிலான மதிப்பளிக்கும் முறையிலோ அல்லது ஒருவித பொதுவான பிரகடனத்தின் மூலம் ஒரு அமைப்பிற்கான தொடர்ச்சி வழங்கப்படுவதில்லை. இன்றைய காலத்தில் புரட்சிகர மார்க்சிசத்தின் எதிரிகளான ஸ்ராலினிச, பப்லோவாத, அரச முதலாளித்துவ, சமூக ஜனநாயக, தொழிற்கட்சி, குட்டி முதலாளித்துவ தீவிர, அராஜகவாத, முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் தாராளவாத சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முந்தைய வரலாற்றுடன் ஒரு இளம் அமைப்பு அதன் தொடர்ச்சியை நிறுவ வேண்டும். இந்த போராட்டம் ஒரு தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான அடித்தளத்தில் நடத்தப்படுகிறது. மேலும் முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து தொழிலாள வர்க்கத்தின் முழுமையான மற்றும் நிபந்தனையற்ற அரசியல் சுயாதீனத்தை நிறுவுவதை நோக்கி எப்போதும் போராடவேண்டும். இந்த நிகழ்ச்சிப்போக்கு எவ்வாறு கடினமானதாவும் மற்றும் முரண்பாடானதாகவும் இருந்தாலும் இந்தப் போராட்டத்தை நடத்தும் அரசியல் இயக்கம், ட்ரொட்ஸ்கிசத்தின் தொடர்ச்சியை எப்போதும் அதிகரித்து வரும் தெளிவுடன் வெளிப்படுத்துகிறது. அதன் மூலம் உலக சோசலிசப் புரட்சியின் புறநிலையான சுற்றுவட்டத்தில் ஒன்றிணைகின்றது.
நாம் இப்போது கடந்து செல்லும் நிகழ்வுகள் போன்ற மாபெரும் வரலாற்று நிகழ்வுகள், ஒரு அரசியல் அமைப்பின் முக்கிய வர்க்கத் தன்மையையும் அது சேவை செய்யும் நலன்களையும் வெளிப்படுத்துகின்றன. நிச்சயமாக, ஒரு பெரிய நெருக்கடிக்கு ஒரு அமைப்பின் பதில் அதன் முன்னைய வரலாற்றால் வரையறுக்கப்படுகின்றது.
ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரின் வெடிப்பு, அரசு-முதலாளித்துவ மற்றும் பப்லோவாத அமைப்புகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இழிவான முகவர்களாக விரைவாக அம்பலப்படுத்தியுள்ளது. அவர்களின் 'ரஷ்ய ஏகாதிபத்தியம்' கோட்பாடு (சாக்ட்மன் வாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு வகையான அரசு முதலாளித்துவ கருத்துக்கள்) இப்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் மற்றும் உக்ரேனிய ஆட்சியில் உள்ள அவர்களின் அடியாட்களுக்கு ஆதரவளிப்பதற்கான ஒரு கருத்தியல் நியாயப்படுத்தலாக செயல்படுகிறது.
அனைத்துலகக் குழு மீதான தாக்குதலில், உக்ரேனிய சோசலிச கழகத்தின் (USL) ஓலெக் வேர்னிக் (சர்வதேச சோசலிச லீக் - ISL இன் துணை அமைப்பு) எழுதுகிறார்:
மேற்கத்திய ஏகாதிபத்தியம் மற்றும் ரஷ்ய ஏகாதிபத்தியம் ஆகிய இரண்டு ஏகாதிபத்தியங்களுடனான இந்த மோதலில், உக்ரேன் பாதிக்கப்பட்டது என்ற ஒரே ஒரு பாத்திரத்தை மட்டுமே வகிக்கிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.
இதைவிட மிகவும் அபத்தமான மற்றும் வஞ்சகத்தனமான அறிக்கையை கற்பனை செய்வது கடினம். உக்ரேனிய 'பாதிக்கப்பட்டது' என்பது 2014 இல் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்ட ஒரு ஆட்சியாகும். இது அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டு, அதற்குத் தேவையான இராணுவ பலத்தை வழங்க உள்ளூர் பாசிச அமைப்புகளைப் பயன்படுத்தியது.
கடந்த எட்டு ஆண்டுகளில், ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான தயாரிப்பில் கியேவ் ஆட்சிக்கு அமெரிக்காவும் நேட்டோவும் பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கியுள்ளன. போருக்கு முந்தைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான உக்ரேனிய படையினர் அமெரிக்காவினால் நேரடியாகப் பயிற்சியளிக்கப்பட்டனர். ஜூன் 25 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், நியூ யோர்க் டைம்ஸ் பின்வருமாறு எழுதியது:
காங்கிரஸின் ஆயுத சேவைகள் மற்றும் புலனாய்வுக் குழுக்களின் கொலராடோ ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஜேசன் குரோ, ஒரு நேர்காணலில், கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் பிற சகாக்களுடன் வளர்க்கப்பட்ட உக்ரேனிய கமாண்டோக்களின் உறவு ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் விலைமதிப்பற்றதாக நிரூபிக்கப்பட்டதாக கூறினார்.
உக்ரேனுக்கான அமெரிக்க/நேட்டோ ஆதரவின் அளவு ஏற்கனவே பல பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் வரலாற்றில் முன் உதாரணமற்றது. டைம்ஸின் படி:
இந்த கமாண்டோக்கள் உக்ரேனிய துருப்புக்களுடன் முன் வரிசையில் இல்லை. அதற்கு பதிலாக நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தலைமையகத்திலிருந்து அல்லது மறைகுறியிடப்பட்ட தகவல்தொடர்புகள் மூலம் ஆலோசனை வழங்குகிறார்கள். பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்க மற்றும் பிற மேற்கத்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, நடவடிக்கை பற்றிய விஷயங்களை விவாதித்துள்ளனர். ஆனால் அவர்களின் திருட்டுத்தனமான போக்குவரத்துக்கள், பயிற்சி மற்றும் உளவுத்துறை ஆதரவு ஆகியவற்றின் அறிகுறிகள் போர்க்களத்தில் உறுதியானவை.
பல கீழ்மட்ட உக்ரேனிய தளபதிகள், சமீபத்தில் செயற்கைக்கோள் படங்களிலிருந்து பெறப்பட்ட உளவுத்தகவல்களுக்கு அமெரிக்காவிற்கு பாராட்டு தெரிவித்தனர். அவர்கள் நேச நாடுகளால் வழங்கப்பட்ட மடிக்கணணிகளில் இத்தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். மடிக்கணணிகள் போர்க்கள படவரைபு செயலியை இயக்குகின்றன. இதனை உக்ரேனியர்கள் ரஷ்ய துருப்புக்களை குறிவைத்து தாக்க பயன்படுத்துகின்றனர்.
கிழக்கு உக்ரேனில் கடும் போட்டி நிலவும் டொன்பாஸ் பகுதியில் உள்ள ஒரு நகரமான பக்முட்டில் உள்ள தெருவில், உக்ரேனிய சிறப்பு நடவடிக்கை படைகளின் குழு அமெரிக்கக் கொடியை தங்கள் வாகன விசை நெம்புகோலில் வைத்திருந்ததுடன் மற்றும் புதிய தரையிலிருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகள் மற்றும் பெல்ஜிய மற்றும் அமெரிக்க தாக்குதல் துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
'ஒரு கூறப்படாத கதை என்னவெனில், பல்வேறு நாடுகளின் சிறப்பு நடவடிக்கை படைகளுடனான சர்வதேச கூட்டு' என்று அமெரிக்க இராணுவ சிறப்பு நடவடிக்கை கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜொனாதன் பி. பிராகா ஏப்ரல் மாதம் செனட்டர்களிடம் திட்டமிட்ட அமைப்பை பற்றி விவரித்தார். உக்ரேனின் இராணுவம் மற்றும் சிறப்புப் படைகளுக்கு ஆதரிவளிப்பதற்காக 'அவர்கள் மிகவும் பெரியளவில் முற்றிலும் ஒன்றிணைந்துள்ளனர்' என்றார்.
இந்த உண்மைகளுக்கு முன்னால், 'உக்ரேன் ஒரே ஒரு பாத்திரத்தை வகிக்கிறது: பாதிக்கப்பட்ட பங்கு' என்று கூறுவது, ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்காக யதார்த்தத்தை அப்பட்டமான மற்றும் இழிவான பொய்யாக்குவதாகும்.
வெர்னிக் ஏகாதிபத்தியப் போருக்கு ஒப்புதல் அளித்ததன் அரசியல் அடித்தளம் பின்வருமாறு:
எவ்வாறாயினும், USL/ISL உறுப்பினர்களான எங்களின் அடிப்படைக் கொள்கையாக உக்ரேனை ஒரு அரசியல் அலகாகப் பாதுகாத்தலாகும். அதன் உழைக்கும் மக்களைப் பாதுகாத்தல், உக்ரேனிய மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான நிபந்தனையற்ற உரிமை மற்றும் அரசின் ஒருமைப்பாட்டை பாதுகாத்தலாகும்.
இந்த ஒரு பத்தி உக்ரேனிய சோசலிச கழகம் (மற்றும் அதன் ISL ஆதரவாளர்கள்) பிற்போக்கு தேசியவாதிகள் என்பதையும் அரசு தொடர்பான மார்க்சிச தத்துவத்தின் கசப்பான எதிர்ப்பாளர்கள் என்பதையும் அம்பலப்படுத்துகிறது. அரசு என்பது வர்க்க ஆட்சியின் கருவி என்பது மார்க்சிசத்தின் அரிச்சுவடாகும். அப்படியானால், 'அரசின் ஒருமைப்பாட்டிற்கான போராட்டம்' 'அதன் [உக்ரேனின்] உழைக்கும் மக்களின் பாதுகாப்போடு' எவ்வாறு சமரசம் செய்ய முடியும்? நிச்சயமாக, உக்ரேனிய முதலாளித்துவ ஆட்சி சோவியத் ஒன்றியத்துடன் இருந்த காலத்திலிருந்த தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குகளை ஒழிப்பதற்கு இந்தப் போரினால் வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்துகிறது என்ற உண்மையை வெர்னிக் குறிப்பிடவில்லை. கியேவ் அரசாங்கத்தால் வரைறுக்கப்படும் 'சுய நிர்ணயத்திற்கான நிபந்தனையற்ற உரிமை' ஏன் உக்ரேனுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஆனால், கிழக்கு உக்ரேனிலும் மற்றும் கிரிமியாவிலும் உள்ள ரஷ்ய மொழி பேசும் பெரும்பான்மை மக்களுக்கு ஏன் பொருத்தமற்றது என வெர்னிக் எப்பொழுதும் விளக்கவில்லை.
உக்ரேனிய ஆட்சி பிற்போக்குத்தனமான அடித்தளத்தில் வெர்னிக்கினால் பாதுகாக்கப்படுவது, உக்ரேனிய தேசியவாதிகளின் பாசிச அமைப்பு (OUN) மற்றும் அதன் இராணுவப் பிரிவான உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தை முற்போக்கான போக்குகளை உள்ளடக்கிய அரசியல்ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட இயக்கமாக மறுபெயரிடுவதற்கான அவரது முயற்சியில் மிகவும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. வெர்னிக் பின்வருமாறு எழுதுகிறார்,
உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் வலதுசாரி அரசியல் உருவாக்கத்தின் வரலாற்றில், முடிவில்லாத மாற்றங்கள், விரிசல்கள், அதன் முழக்கங்களில் தீவிர மாற்றங்கள், இடது மற்றும் வலதுபுறத்திற்கான சில சாய்வுகள், ஹிட்லருடன் ஒத்துழைப்பு மற்றும் இரண்டு முனைகளில் போர், பல நிகழ்வுகளுக்கு மத்தியில் நிகழ்ந்தன.
1943 இல் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் உருவாக்கம் மற்றும் 1939 இல் மேற்கு உக்ரேனின் கம்யூனிஸ்டுகள் ஸ்ராலினிச ஆட்சியின் முழுமையான அழிவிலிருந்து அதிசயமாக தப்பித்து அந்த அமைப்பில் பாரிய நுழைவு ஆகியவற்றை நாம் சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் உக்ரேனின் வரலாற்றின் ஒரு பகுதியாகும், இது பெரும்பாலும் மிகவும் சிக்கலான, சர்ச்சைக்குரிய மற்றும் தெளிவற்றதாக குணாதிசயப்படுத்தப்படுகிறது.
வெர்னிக் இந்த 'சிக்கலான, சர்ச்சைக்குரிய மற்றும் தெளிவற்ற' வரலாற்றைப் பற்றிய விவாதத்தில் இருந்து உக்ரேனிய யூதர்களை இனப்படுகொலை செய்ததில் மற்றும் போலந்து மக்களின் படுகொலையில் நாஜிகளின் ஒத்துழைப்பாளர்களாக OUN மற்றும் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் ஆற்றிய முக்கிய பங்கைக் குறிப்பிடவில்லை. அரசியல் குழப்பத்தை விதைக்க முற்படும் வெர்னிக், 1948 இல் உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் முன்னணி சித்தாந்தவாதியாக இருந்த பெட்ரோ பொல்டாவாவால் (Petró Poltava) எழுதப்பட்ட மார்க்சிச எதிர்ப்பு தேசிய பேரினவாதப் பாதையை ஊக்குவிக்கிறார். இது OUN இற்கு அரசியல்ரீதியாக மறுவாழ்வு கொடுப்பதற்கான ஒரு மோசமான முயற்சியில், உண்மையான இடதுசாரிப் போக்குகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பாக சோசலிச சாயல் பூசிய தேசியவாதத்தை ஆதரிக்கிறது. பொல்டாவா 'ஜனநாயகமயமாக்கலுக்கான போக்கை' பிரதிநிதித்துவப்படுத்துவதாக வெர்னிக் கூறுகிறார். இப்போக்கு OUN (உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு) இனுள், இடதுசாரிகளின் கருத்துக்களை நோக்கி மற்றும் ஜேர்மன் தேசிய சோசலிசத்திற்கு எதிராக மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிராக ஒரே நேரத்தில் போரைத் தூண்டுவதை நோக்கி அபிவிருத்தியடைந்ததாக குறிப்பிடுகின்றார்”.
பொல்டாவாவின் பிரசுரம் 'உக்ரேனில் எந்தவொரு தேசியவாத விடுதலை இயக்கமும் தீவிர வலதுசாரி நீரோட்டமாகவும் நாஜிகளாகவும் கருதப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் தொடர்பான ரஷ்ய பிரச்சாரத்தினையும் மற்றும் அதன் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் (ICFI) அடியாட்களின் அனைத்து வாதங்களையும் செல்லுபடியற்றதாக செய்கிறது' என்று கூறும் அளவிற்கு வெர்னிக் செல்கிறார்.
வெர்னிக்கையும், USL/ISL ஐ ஊக்கப்படுத்திய பொல்டாவாவின் எழுத்தையும் மதிப்பாய்வு செய்வோம். இது, 'தேசிய அரசு பற்றிய நமது கற்பித்தல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தேசம் பற்றிய மார்க்சிச தத்துவத்தை 'தவறான மற்றும் போக்கு' என்று வெளிப்படையாகக் கண்டனம் செய்வதோடு பிரசுரம் தொடங்குகிறது. பொல்டாவா எழுதினார்:
அவர்களின் [மார்க்சிஸ்டுகளின்] கருத்து, எதிர்காலத்தில் அரசுகள் இல்லாமலேயே தேசங்களை நிர்வகிக்க முடியும் என்பது கற்பனாவாதமானது, அற்புதமானது, யதார்த்தத்தில் எந்த அடித்தளமும் இல்லாதது. அரசு பற்றிய அனைத்து மார்க்சிச தத்துவத்திலும், மக்களுக்கும் பொதுவாக மனித குலத்திற்கும் அரசுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதை மறுக்க ஒரு தெளிவான முயற்சி உள்ளது. அதேபோல் வரலாற்று என்பது ஒரு வர்க்கப் போராட்டத்தை தவிர வேறொன்றுமில்லை என முன்வைக்கும் முயற்சியும் உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் இவை முற்றிலும் தவறானது.
அரசின் முக்கிய இன அடிப்படையை வலியுறுத்தி, பொல்டாவா பல்தேசிய அரசுகளின் இருப்புக்கு எதிராக போராடினார். அவர் அறிவித்தார்: “வெளிப்படையாக இந்த வகையான அரசுகள் இருக்கக்கூடாது. அவை கூடிய விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். இந்த வாதத்தின் நடைமுறை தாக்கங்கள் OUN ஆல் யூதர்கள் மற்றும் போலந்துமக்கள் மீதான இனப்படுகொலை தாக்குதல்களில் நிரூபிக்கப்பட்டது.
பொல்டாவாவின் உரையானது பிற்போக்கு தேசியவாத மாயவாதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது:
தேசியவாதிகளான நாங்கள், ஒரு சுதந்திரமான தேசிய அரசு என்பது ஒரு மக்களுக்கு அதன் ஆன்மீக மற்றும் பொருளாயாத வளங்களின் முற்றுமுழுதான வளர்ச்சிக்கான சிறந்த நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியல் அமைப்பின் ஒரே வடிவம் என்ற இந்த நிரந்தர உண்மையை நம்புகிறோம். அதன் சொந்த தேசிய அரசு இல்லாமல், அதாவது அதன் அனைத்து இனப் பிராந்தியத்திலும் விரிவடையும் ஒரு அரசு இல்லாமல், ஒரு மக்கள் முழுமையாக வளர்ச்சியடைய முடியாது.
உரையின் முடிவில், பொல்டாவா 'போல்ஷிவிக் சோவியத் ஒன்றியம் தனிப்பட்ட மக்கள் மற்றும் பொதுவாக மனிதகுலத்தின் ஒரு தவிர்க்கமுடியாத எதிரி' என்று அறிவித்தார்.
வெர்னிக் ஏன் இந்த பிற்போக்கு மார்க்சிச எதிர்ப்பு சித்தாந்தத்திலிருந்து உத்வேகம் பெறுகிறார்? அவரது நோக்கம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து கியேவ் ஆட்சி நடத்தி வரும் போருக்கு ஒரு முற்போக்கான உள்ளடக்கத்தை பொய்யாகக் காரணம் காட்டும் தற்போதைய உக்ரேனிய தேசியவாதிகளுக்கு ஒரு கருத்தியல் மற்றும் அரசியல் பாலத்தை உருவாக்குவது என்பது தெளிவாகிறது.
இந்த முடிவுக்கு, வெர்னிக் நேர்மையற்ற முறையில் ட்ரொட்ஸ்கியை உக்ரேனிய முதலாளித்துவ தேசியவாதத்தின் கூட்டாளியாக சித்தரிக்க முயற்சிக்கிறார். 1939 ஆம் ஆண்டு ட்ரொட்ஸ்கியின் 'உக்ரேனின் பிரச்சனை' என்ற கட்டுரையிலிருந்து ஒரு சுருக்கமான பத்தியை வெர்னிக் மேற்கோள் காட்டுகிறார். அதில் ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிராக, 'ஒரு ஐக்கியப்பட்ட, அடிமைப்படாத, சுதந்திரமான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உக்ரேன்' என்ற முழக்கத்தை அவர் பாதுகாத்தார். [சாய்வு எழுத்துக்களில் உள்ளது அசலில் உள்ளது].
ட்ரொட்ஸ்கியின் 1939 கட்டுரை பற்றிய தனது விவாதத்திலிருந்து வெர்னிக் வசதியாகவும் போலித்தனமாகவும், பிற்போக்குத்தனமான உக்ரேனிய முதலாளித்துவ தேசியவாதத்தின் அமைப்புகள் மற்றும் கட்சிகளுடன் எந்த ஒத்துழைப்பையும் விட்டுக்கொடுப்பையும் ட்ரொட்ஸ்கி கடுமையாகக் கண்டித்துள்ள எந்தப் பத்தியையும் விலக்கியுள்ளார். ட்ரொட்ஸ்கி அக்கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருந்தார்:
உக்ரேன் குறிப்பாக தேசிய விடுதலைக்கான தவறான போராட்ட பாதைகளில் மிகவும் வளம்மிக்க அனுபவத்தை கொண்டுள்ளது. இங்கே பின்வரும் முயற்சி அனைத்தும் செய்யப்பட்டுள்ளன: குட்டி-முதலாளித்துவ ராடா, மற்றும் ஸ்கோரோபாட்ஸ்கி, மற்றும் பெட்லூரா, மற்றும் ஜேர்மன் ஹோஹென்சோல்லர்ன்களுடன் 'கூட்டணி' மற்றும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுடனான கூட்டு. இந்த பரிசோதனைகள் அனைத்திற்கு பின்னரும், விடுதலைக்கான தேசியப் போராட்டத்தின் தலைவராக உக்ரேனிய முதலாளித்துவத்தின் ஒரு பகுதியினரின் மீது அரசியல் சடலங்களால் மட்டுமே தொடர்ந்து நம்பிக்கையை வைக்க முடியும். உக்ரேனிய பாட்டாளி வர்க்கம் மட்டுமே இந்தப் பணியை தீர்க்கும் திறன் கொண்டது. இது அதன் சாராம்சத்தில் புரட்சிகரமானதால் அதன் தீர்வுக்கான முன்முயற்சியையும் எடுக்கிறது. இந்த பாட்டாளி வர்க்கம் மற்றும் பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே தன்னைச் சுற்றி விவசாய மக்களையும் உண்மையான புரட்சிகர தேசிய புத்திஜீவிகளையும் அணிதிரட்ட முடியும்.
ட்ரொட்ஸ்கி தனது கட்டுரையை பின்வரும் சரியான நேரத்தில் எச்சரிக்கையுடன் முடித்தார்:
கடைசி ஏகாதிபத்தியப் போரின் தொடக்கத்தில், உக்ரேனியர்கள், மெலெனெவ்ஸ்கி ('பாசோக்') மற்றும் ஸ்கோரோபிஸ்-யெல்டுகோவ்ஸ்கி, உக்ரேனிய விடுதலை இயக்கத்தை ஹோஹென்சோல்லர்ன் தளபதி லூடன்டோர்ஃப்பின் பாதுகாப்பின் கீழ் வைக்க முயன்றனர். அவ்வாறு செய்யும்போது அவர்கள் தங்களை இடது சொற்றொடர்களால் மூடிக்கொண்டனர். ஒரே அடியில் புரட்சிகர மார்க்சிஸ்டுகள் இந்த நபர்களை வெளியேற்றினர். புரட்சியாளர்கள் எதிர்காலத்தில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். வரவிருக்கும் போர் அனைத்து வகையான சாகசக்காரர்கள், அதிசயங்களை வேட்டையாடுபவர்கள் மற்றும் தங்க கொள்ளையை தேடுபவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். குறிப்பாக தேசிய பிரச்சினைக்கு அருகாமையில் கைகளை சூடாக்கிக்கொள்ள விரும்பும் இந்த பெருமக்களை தொழிலாளர் இயக்கத்தின் பீரங்கி எல்லைக்குள் அனுமதிக்கப்படக்கூடாது. பாசிசமாகவோ அல்லது ஜனநாயகமாகவோ இருந்தாலும் ஏகாதிபத்தியத்துடன் சிறிதும் சமரசம் செய்து கொள்ளகூடாது! மதவாத-பிற்போக்குவாதிகளாக அல்லது தாராளவாத-அமைதிவாதிகளாக இருந்தாலும் உக்ரேனிய தேசியவாதிகளுக்கு சிறிதளவு சலுகையும் இல்லை! 'மக்கள் முன்னணி' இல்லை! உழைப்பாளர்களின் முன்னணிப் படையாக பாட்டாளி வர்க்க கட்சிக்கு முழுமையான சுதந்திரம்!
அரசியல்ரீதியாக திவாலாகிவிட்ட இந்த சந்தர்ப்பவாதியிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது போல், வெர்னிக் அனைத்துலகக் குழுவிற்கு எதிரான பரிதாபகரமான அவதூறுகள் மூலம் உக்ரேனிய முதலாளித்துவத்திற்கு அவர் சரணடைந்ததை மறைக்க முயற்சிக்கிறார். அவர் எழுதுகிறார், 'ஒரு அமெரிக்க குடிமகனான திரு. டேவிட் நோர்த் ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் நலன்களையும் உக்ரேன் தொடர்பான பிரச்சினைகளில் அதன் பிரச்சார எந்திரத்தையும் பாதுகாத்து வருகிறார். 'வெர்னிக்கின் கூற்றுப்படி, 'அதிகாரபூர்வ ரஷ்ய பிரச்சாரத்திற்கு அமெரிக்க ஊடகத்திலோ அல்லது மேற்கு சுற்றுவட்டத்தில் உள்ள வேறு எந்த நாட்டினிடமோ போதிய தகவல் தளம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தவுடன்' நான் இந்த வேலையை ஏற்றுக்கொண்டேன். அத்தகைய முட்டாள்தனத்தை யாராவது நம்புவார்கள் என்று வெர்னிக் உண்மையில் கற்பனை செய்கிறாரா?
ஆனால், பப்லோவாதிகளின் பார்வையில், அனைத்துலகக் குழுவும் தனிப்பட்ட முறையில் நானும் குற்றவாளிகளான எமது 'முதன்மையான பாவம்', ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர குணாதிசயத்தை நாம் இடைவிடாமல் அம்பலப்படுத்தியதால், அவரது குற்றச்சாட்டு ஒரு எதிர்முரணான தன்மையைக் கொண்டுள்ளது என்பதை நான் கவனிக்க வேண்டும். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் முகவர்களை அம்பலப்படுத்திய பாதுகாப்பும் நான்காம் அகிலமும் பற்றிய நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழுவின் வேலைகளும் இதில் அடங்கும். மேலும், பப்லோவாதிகள் கோர்பச்சேவை புகழ்ந்து பாடும் நேரத்தில், அவரது கொள்கைகள் அக்டோபர் புரட்சி மீதான ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பின் உச்சக்கட்டத்தை அதாவது முதலாளித்துவ மறுபுனருத்தானத்தில் முடியும் என்று அனைத்துலகக் குழு எச்சரித்தது.
புட்டினின் ஆட்சி என்பது, 1991 சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து தோன்றிய ஒரு முதலாளித்துவ அரசின் பிற்போக்குத்தனமான உயிர்த்தெழுதல் ஆகும். ஆனால் இந்த ஆட்சிக்கு உக்ரேன் மீதான அதன் ஆக்கிரமிப்பு உட்பட, அனைத்துலகக் குழுவின் எதிர்ப்பானது சோசலிச இடதுகளிடமிருந்து வந்ததே தவிர, ஏகாதிபத்திய வலதுகளிடமிருந்து அல்ல.
புட்டின் ஆட்சிக்கு அதன் எதிர்ப்பு, ஸ்ராலினிசத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் முன்னோடியான போராட்டத்திலும், சோவியத் ஒன்றியம் பற்றிய பப்லோவாத மற்றும் 'அரசு முதலாளித்துவ' வேறுபட்ட திரிபுவாதங்களுக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்விலும் வேரூன்றியிருக்கிறது. இதனால்தான், தற்போதைய போரைப் பற்றிய அனைத்துலகக் குழுவின் ஆய்வு, உக்ரேனிய, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் பேரழிவு என்று நிரூபித்த சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் வரலாற்று உள்ளடக்கத்தில் செய்யப்பட்டதாகும்.
தற்போதைய போரிலிருந்து வெளிப்பட்ட இந்தப் பேரழிவிலிருந்து வெளியேறுவதற்கான வழி, அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியத்துடன் அல்லது புட்டினின் முதலாளித்துவ ஆட்சியுடன் கூட்டணி அமைப்பதில் இல்லை. ஆனால் போரிடும் அனைத்து அரசுகளுக்கும் எதிராக உக்ரேனிய, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலம் மட்டுமேயாகும். ரஷ்யாவிலும் உக்ரேனிலும் உள்ள தொழிலாள வர்க்கம் முக்கிய எதிரி உள்நாட்டில் தான் இருக்கின்றான் என்ற கொள்கையை கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும்.
வெர்னிக் பற்றிய இந்தக் கருத்துக்கள், ட்ரொட்ஸ்கிசத்தின் பாதுகாப்பை அனைத்துலகக் குழு எவ்வாறு கடைப்பிடித்திருக்கின்றது என்பதற்கான விளக்கமாக இருக்கலாம். மார்க்சிசத்தின் எதிரிகளை இடைவிடாமல் அம்பலப்படுத்துவதில், அனைத்துலகக் குழு நான்காம் அகிலத்தின் மாபெரும் வரலாற்றுப் பணியைத் தொடர்கிறது. இந்த அடிப்படையில், தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியறிவு அளித்து, அதன் புரட்சிகரப் பணிகளை நிறைவேற்ற அதைத் தயார்படுத்துகிறது.
துருக்கியிலுள்ள எங்கள் தோழர்களின் முன்முயற்சி, அனைத்துலகக் குழுவின் பணியை விரிவுபடுத்துவதற்கும், அவர்களின் நாடுகளிலும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் ட்ரொட்ஸ்கிசத்தின் பதாகையை உயர்த்துவதற்கும் ரஷ்யா மற்றும் உக்ரேனில் உள்ள சோசலிசவாதிகளின் முயற்சிகளுக்கு உத்வேகமாக அமையும் என்பது எங்கள் நம்பிக்கை.
ட்ரொட்ஸ்கிச வாழ்த்துக்களுடன்,
டேவிட் நோர்த்