மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
“பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் குறித்து சீனாவுக்கு ஏற்றுமதி தடைகளை விரிவாக்க அமெரிக்கா நோக்கம் கொண்டுள்ளது,” என்ற தலைப்பில் செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரை, கட்டுரை சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் பொருளாதாரப் போரின் விரிவாக்கத்திற்கும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க பினாமிப் போருக்கும் இடையே ஒரு வெளிப்படையான தொடர்பை ஏற்படுத்துகிறது.
நிர்வாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி, “பைடென் நிர்வாகம் உக்ரேன் போரின் போது ரஷ்யாவை கட்டுப்படுத்துவதில் இருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை கொண்டு சீனாவின் இராணுவ மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது” என்று கட்டுரை அறிவித்தது. மேலும், அமெரிக்காவின் ‘மிகப்பெரிய நீண்டகாலப் போட்டியாளர்’ என்று சீனாவை வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது என்று அது குறிப்பிட்டது.
அமெரிக்க வர்த்தகத் துறை அதிகாரி ஆலன் எஸ்டீவெஸ், ஒரு புதிய அமெரிக்க பாதுகாப்பு மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இவ்வாறு கூறினார்: “அமெரிக்கா தொழில்நுட்ப வலிமையில் தொடர்ந்து விஞ்சி இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்த விதமான மோதலிலும் அவர்கள் நமக்கு எதிராகவோ, அல்லது அவர்களின் அண்டை நாடுகளுக்கு எதிராகவோ அவர்கள் பயன்படுத்தக்கூடிய திறன்களை சீனாவால் உருவாக்க முடியாது.”
ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மேற்பார்வையிடும் வர்த்தக அமைச்சின் தொழில் மற்றும் பாதுகாப்பு பணியகத்தின் தலைவராக எஸ்டீவ்ஸ் உள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், அவர் ஒரு முன்னாள் பென்டகன் அதிகாரியும் ஆவார், இது பொருளாதார போருக்கும் இராணுவ போருக்கும் இடையிலான நேரடித் தொடர்பை வலியுறுத்துகிறது. கடந்த வாரம், வர்த்தகத் துறைக் கொள்கை குறித்த மாநாட்டில் எஸ்டீவ்ஸ் கூறினார்: 'சீனா தனது இராணுவத்தை முன்னேற்றுவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியாமல் தடுப்பதே எனது குறிக்கோள்'.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுடன் பைடென் நிர்வாகம் சீனாவை குறிவைக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மேலும் வெளிப்படையாக, ரஷ்யாவிற்கு எதிரான இராணுவப் போரையும், சீனாவுடனான வளர்ந்து வரும் மோதலையும் அமெரிக்கா மிகவும் பரந்த மோதலின் ஒரு பகுதியாக கருதுகிறது. சாத்தியமான போட்டியாளர்களை பலவீனப்படுத்துவதையும் அடிபணியச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதே அவர்களின் குறிக்கோள்.
அமெரிக்கா, நேட்டோ அங்கத்துவ உரிமையை நிராகரிக்க மறுப்பதன் மூலம் உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கு ரஷ்யாவைத் தூண்டியது போலவே, தைவானுடனான அதன் உறவுகளை வலுப்படுத்தி, தீவுக்கு ஆயுத விற்பனையை அதிகரிக்கிறது. சுதந்திரத்தை அறிவிப்பதை நோக்கமாகக் கொண்ட தைபேயின் எந்தவொரு முயற்சியும் சீன இராணுவத் தலையீட்டைத் தூண்டும் என்பது வாஷிங்டனுக்குத் தெரியும். உக்ரேனில் நடந்த போரில் ரஷ்யாவைப் போலவே, அமெரிக்காவும் தைவான் மீதான மோதலைப் பயன்படுத்தி சீனாவை குறைமதிப்பிற்கு உட்படுத்தி சீர்குலைக்கும்.
இந்தப் போர்த் திட்டங்கள் அனைத்தும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பாசாங்குத்தனமாக மறைக்கப்பட்டுள்ளன. வர்த்தகச் செயலர் ஜினா ரைமோண்டோ அதே துறைசார்ந்த மாநாட்டில், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் 'எங்கள் ஜனநாயகத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதன் இதயத்தில் உள்ளது' என்று கூறினார். ரஷ்யா மீதான உலகளாவிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அதன் குறைகடத்தி இறக்குமதியில் 90 சதவிகிதம் சரிவுக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும், விரைவில் அதன் வணிக விமானங்களின் கப்பற்படையை அழிக்கக்கூடும் எனவும் அவர் பெருமிதம் கொண்டார்.
சீனாவும் குறுக்கு வழியில் உள்ளது. பைடென் நிர்வாகம் கடந்த வாரம், ஐந்து சீன நிறுவனங்கள் ரஷ்யாவின் இராணுவ-தொழில்துறை வளாகத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும், அவற்றின் நடவடிக்கைகள் ‘அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கு முரணானவை’ என்றும் கூறி அவற்றிற்கு எதிராக மற்றொரு சுற்று பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. வணிகத் துறை தனது குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
Connec Electronic, King Pai Technology, Sinno Electronics, Winninc Electronic மற்றும் World Jetta Logistics போன்ற ஏற்றுமதி தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் உயர் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவையாகும். ரஷ்யாவிற்கு உதவியதாகக் கூறப்படும் சீனா மீதான முதல்கட்ட தடைகள், சீன அரசாங்கமும் பெரும்பாலான சீன நிறுவனங்களும் அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகளுக்கு இணங்கியுள்ளதை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டாலும் கூட அமல்படுத்தப்பட்டன.
இவையனைத்தும் ட்ரம்பின் கீழ் சீனா மீது விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் கட்டணங்களின் வெறும் ஒரு பகுதியாகும், இப்போது அதன் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் பைடெனின் கீழ் நீட்டிக்கப்பட்டுள்ளது. சீன இராணுவத்துடனான தொடர்புகள் முதல் ஜின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் வரை என்ன சாக்குப்போக்குகள் கூறப்பட்டாலும், இந்த நடவடிக்கைகள் குறிப்பாக உயர் தொழில்நுட்பத் துறைகளில் போட்டியிடும் சீனாவின் முயற்சிகளை முடக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
தடைகள் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மட்டும் பொருந்தாது, மாறாக பொருளாதார அபராதங்களின் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அவற்றை நீட்டிக்க பைடென் நிர்வாகம் முயல்கிறது. சீன உயர் தொழில்நுட்ப தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei உள்ளிட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கும் சில பொருட்களை வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா தடுத்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான பினாமிப் போரில் வாஷிங்டன் அதன் ஐரோப்பிய மற்றும் ஆசிய கூட்டாளிகளை ஒன்று திரட்டி ரஷ்யா மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார தடைகளில் சேர உள்ளது. எவ்வாறாயினும், சீனாவிற்கு எதிராக அதைச் செய்வதற்கான அதன் முயற்சிகள், இதுபோன்ற நடவடிக்கைகளின் பொருளாதார தாக்கம் மற்றும் சீனாவின் பதிலடிக்கு அஞ்சும் அமெரிக்க மற்றும் உலகளாவிய வணிக வட்டங்களில் சில எதிர்ப்பைச் சந்தித்துள்ளன.
அமெரிக்க வர்த்தக சபையின் துணைத் தலைவரான மைரான் பிரில்லியன்ட், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வணிகங்கள் ஆதரித்தாலும், சீனா மீதான பார்வைகள் ‘மிகவும் சிக்கலானதாகவும் நுணுக்கமானதாகவும்’ இருந்தன என்று நியூ யோர்க் டைம்ஸிடம் தெரிவித்தார். வர்த்தக சமூகம், சீனாவின் கொள்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது, “ஆயினும்கூட இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மிகவும் ஒருங்கிணைந்தவை என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்… எனவே சீனாவை பரந்தளவில் துண்டிப்பது அல்லது சீனா மீது விரிவான பொருளாதாரத் தடைகளை விதிப்பது என்பது மிகுந்த ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.
ஆயினும்கூட, சீனப் பொருளாதாரத்தைச் சுற்றியுள்ள பொருளாதாரக் கயிற்றை இறுக்குவதற்கான தனது முயற்சிகளை பைடென் நிர்வாகம் தொடர்கிறது. டச்சு பெருநிறுவனமான ASML Holding NV சீனாவுக்கு சில்லு தயாரிக்கும் (chip-making) தொழில்நுட்பத்தை விற்பதைத் தடுப்பதன் மூலம் வெள்ளை மாளிகை ‘சீனாவின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான அதன் பிரச்சாரத்தை விரிவுபடுத்துகிறது’ என்று புளூம்பேர்க் தொலைக்காட்சி இந்த வாரம் தெரிவித்தது.
ட்ரம்ப் நிர்வாகம், சீன நிறுவனங்களுக்கு அதிநவீன சில்லு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் வகையில் டச்சு அரசாங்கத்தை ஏற்கனவே தடுத்துவிட்டது. ASML என்பது கல் அச்சுக் கலை (lithography) அமைப்புக்களின் உலகின் தலைசிறந்த தயாரிப்பாளராகும், இவை குறைகடத்திகளின் உற்பத்திக்கு அவசியமான நுண்ணிய சுற்றுக்களை பொறிக்கும் முக்கியமான படியைச் செய்யும் இயந்திரங்களாகும்.
கார்கள் முதல் கம்ப்யூட்டர்கள், போன்கள் மற்றும் ரோபோக்கள் வரை பரந்தளவிலான சாதனங்களில் பயன்படுத்தப்படும் குறைந்த மேம்பட்ட சில்லுக்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் ஆழந்த புற ஊதா லித்தோகிராஃபி (DUV) எனப்படும் பழைய முக்கிய தொழில்நுட்பத்தை ASML விற்பனை செய்வதைத் தடுக்க இப்போது அமெரிக்க அதிகாரிகள் தங்கள் டச்சு சமதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
புளூம்பேர்க் விளக்கியது போல், அத்தகைய தடையானது, சீனாவிற்குச் செல்வதில் இருந்து இப்போது தடைசெய்யப்பட்டுள்ள சில்லு தயாரிக்கும் சக்கர நெம்புகோலின் வரம்பையும் வகையையும் கணிசமாக விரிவுபடுத்தும், இது Semiconductor Manufacturing International Corp முதல் Hua Hong Semiconductor Ltd. வரையிலான சீன சில்லு தயாரிப்பாளர்களுக்கு கடுமையான அடியாக இருக்கும்.
மேம்பட்ட கணினி சில்லுகள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய அணுகலைத் துண்டித்து, சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Huawei ஐ அழிக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டது போல, பைடென் நிர்வாகமும் பரந்த அளவிலான வணிக மற்றும் இராணுவ பயன்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த சீனாவின் உள்நாட்டு சில்லு தயாரிக்கும் திறனை அது மேம்படுத்துவதைத் தடுக்க முயலுகிறது. புளூம்பேர்க்கின் கூற்றுப்படி, அமெரிக்க அதிகாரிகள், சீனாவிற்கு சில்லு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய ஜப்பானுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
சீனாவின் ‘மனித உரிமை’ மீறல்கள், தைவான் மீது அது படையெடுப்பதற்கான அச்சுறுத்தல்கள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், ஆசியாவில் அமெரிக்க இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தை வலுப்படுத்துதல் ஆகியவை பற்றிய அமெரிக்க பிரச்சாரத்துடன், தற்போது அதிகரித்துவரும் பொருளாதாரப் போர், சீனாவுடனான மோதலுக்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேம்பட்ட திட்டங்களின் மற்றொரு எச்சரிக்கையாகும்.
கிழக்கு ஐரோப்பாவில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அத்தியாயமாக இல்லாமல், உக்ரேனில் அமெரிக்க பினாமிப் போரானது அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான உலகளாவிய மோதலாக வேகமாக உருவெடுத்து வருகிறது.
மேலும் படிக்க
- ரஷ்யப் போர் ஆக்ரோஷமடையும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் சீனாவை "மிகவும் தீவிரமான நீண்ட கால சவால்" என்கிறார்
- பைடென் நிர்வாகம் ரஷ்யாவுக்கு எதிரான போரை விரிவாக்கும் அதேவேளையில், அது சீனாவுக்கு எதிரான போரால் அச்சுறுத்துகிறது
- பைடெனின் ஆசியப் பயணம் சீனாவுடனான இராணுவ மோதலுக்குத் தயாரிப்பு செய்கிறது