மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்த உள்துறை செயலர் பிரித்தி பட்டேல் ஜூன் 17 அன்று ஒப்புதல் அளித்தார்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அசான்ஜ் மீதான துன்புறுத்தலில் ஆபத்தில் இருக்கும் ஜனநாயக உரிமைகள் பற்றிய உண்மையான பிரச்சினைகளை அத்தகைய முறையீடு பேசத் தொடங்கும். அமெரிக்க அரசாங்கமும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களும் இது வரையிலான நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கத் திட்டமிட்டுள்ளன. அவரது மனைவி ஸ்டெலா மோரிஸ், அசான்ஜ் இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் புகலிடம் கோரியபோது அவருக்கு விஷம் கொடுக்க திட்டமிட்டது உட்பட, சிஐஏ படுகொலை சதித்திட்டத்தின் ஆதாரங்களை உள்ளடக்கியதாக இந்த முறையீடு இருக்கும் என்று கடந்த மாதம் ABC வானொலிக்கு தெரிவித்தார்.
அபெர்டீனில் உள்ள ராபர்ட் கார்டன் பல்கலைக்கழகத்தின் சட்ட அறிஞர் டாக்டர் போல் ஆர்னெல், Scotsman செய்தித்தாளுக்கு எழுதுகையில், வழக்கின் இந்த கட்டம் “அவரது கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை அவரை நாடு கடத்துவதைத் தடுக்க போதுமான முக்கியத்துவம் கொண்டுள்ளதா என்பதையும், அவரது அரசியல் கருத்துக்களின் காரணங்களுக்காக அமெரிக்கா அவரை கோருவதற்கு தூண்டப்பட்டதா என்பதையும்” ஆராயக்கூடும் என்று விளக்கினார்.
ஸ்பெயினில் ஒரு இணையான வழக்கில், அசான்ஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை அமெரிக்க உளவுத்துறை சேவைகள் சார்பாக உளவு பார்த்ததற்காக ஈக்வடோர் தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்கிய UC குளோபல் மீது அசான்ஜின் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த மாதம், நீதிபதி சாண்டியாகோ பெட்ராஸ், கடந்த செப்டம்பரில் யாஹூவால் வெளிப்படுத்தப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான கடத்தல் மற்றும் படுகொலை சதி தொடர்பாக முன்னாள் சிஐஏ இயக்குநரும் வெளியுறவுத்துறை செயலாளருமான மைக் பாம்பியோவை ஆஜாராக்க முயன்றார்.
நடந்துகொண்டிருக்கும் இந்த மனித வேட்டையில் பிரிட்டிஷ் அரசின் உடந்தை கடந்த வாரம் பொம்பியோவின் இங்கிலாந்து விஜயத்தின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டது. பட்டேல் அப்போது, “எனது நண்பரும் முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலருமான மைக் பொம்பியோவுக்கு உள்துறை அலுவலகத்தில் விருந்தளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்ற தலைப்புடன் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ட்வீட் செய்திருந்தார்.
இது குறித்து மோரிஸ், “பொம்பியோ பைடென் நிர்வாகத்தில் அங்கம் வகிக்கவில்லை, எனவே நெறிமுறை ரீதியாக பட்டேலின் ட்வீட் மிகவும் வித்தியாசமானது மற்றும் இராஜதந்திர ரீதியாக மோசமானது. இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அசான்ஜை படுகொலை செய்வதற்கான திட்டங்கள் குறித்து ஸ்பெயின் உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அவருக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற அழைப்பை பொம்பியோ தவிர்க்கிறார்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றவியல் போர்களை அம்பலப்படுத்தியதற்காக பொம்பியோ அசான்ஜ் மீது வழக்கு தொடர்ந்தார். அவர் மற்றொரு போரை அதிகரிக்க லண்டனில் இருந்தார். பட்டேல், “நமது பகிரப்பட்ட மதிப்புக்களை நிலைநிறுத்தவும் மதிக்கவும் நமது நாடுகள் தோளோடு தோள் நிற்கின்றன, மேலும் இப்போது புட்டினின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரேனுக்கான நமது உறுதியான ஆதரவைக் காட்டிலும் தெளிவாக இருக்க முடியாது” என தொடர்ந்து கூறினார்.
கொள்கை பரிமாற்றத்திற்கான ஒரு உரையில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதரவளிக்குமாறு பொம்பியோ இங்கிலாந்துக்கு அழைப்பு விடுத்தார், மேலும் கோவிட் தொற்றுநோய்க்கு சீனா தான் பொறுப்பாளி என குற்றம் சாட்டும் வூஹான் ஆய்வக பொய்யை மீண்டும் வலியுறுத்தினார்.
இங்கிலாந்து உயர் நீதிமன்றம் அசான்ஜின் மேல்முறையீட்டை தொடர்வதற்கு முன் அவரை விசாரிக்க ஒப்புக்கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் நீதிபதிகள் ஏற்கனவே விக்கிலீக்ஸ் நிறுவனரை அவரின் வழக்கின் போது விசாரணை செய்ய மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் பட்டேலுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், அமெரிக்காவிற்கு ஆதரவான இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை எதிர்த்து அசான்ஜ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மார்ச் மாதம் வழக்கை விசாரிக்க ஒரு வரியில் மறுப்பை வெளியிட்டது, அதாவது வழக்கு நேராக பட்டேலின் கைகளுக்குச் சென்றது.
இந்த சமீபத்திய மேல்முறையீட்டிற்கும் உயர் நீதிமன்றம் அதேமாதிரி செய்தால், அசான்ஜின் சட்டக் குழு, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் வரை மற்ற வழிகளில் வழக்கைத் தொடரப்போவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் ஜோன்சன் அரசாங்கம் ஏற்கனவே இந்த வழியை மூடுவதற்கான முயற்சிகளில் மும்முரமாக உள்ளது. கடந்த மாதம் அது மனித உரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான கோரிக்கையை பாராளுமன்றத்தின் முன் வைத்தது, அதற்கு பதிலாக பிரிட்டிஷ் உரிமைகள் மசோதாவை கொண்டு வருவதற்கு அது தயாராக இருந்தது. மனித உரிமைகள் பாதுகாப்புக்களை பலவீனப்படுத்தும் டோரி முயற்சிகளின் ஒரு கூறு என்பது, பிரித்தானிய நீதிமன்றங்களின் முதன்மையை வலியுறுத்துவது உட்பட இறையாண்மைக்கான அதன் அர்ப்பணிப்பை மேற்கோள் காட்டி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஆணையத்தின் இன் அதிகாரத்தை மீறும் திட்டங்களாகும்.
ருவாண்டாவிற்கு புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கான சில உத்தரவுகளை இடைநிறுத்துவதற்கான மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஆணையத்தின் சமீபத்திய முடிவின் மீது கவனம் செலுத்திய சட்டத்திற்கு எதிரான பிரிட்டிஷ் நீதித்துறையின் மீளாய்வு செயல்முறை நிலுவையில் உள்ளது. ஆனால் அரசாங்கம் தனது குற்றவியல் நிகழ்ச்சி நிரலைத் தொடர முயற்சிக்கும் பல மனித உரிமைகள் (carte blanch) விவகாரங்களில் இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே, மற்றும் அசான்ஜை நாடு கடத்துவதற்கு முன்னோக்கி நகர்வது தான் அதன் விருப்பப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
மேலும், எந்த மேல்முறையீட்டின் போதும், அசான்ஜ் தற்போது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைக்கப்பட்டுள்ள, இலண்டனில் உள்ள உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட பெல்மார்ஷ் சிறையில் தொடர்ந்து அடைக்கப்படுவார், அது பல மாதங்கள் நீடிக்கும் சட்ட விவாதங்களுக்கும் விசாரணைகளுக்கும் இட்டுச் செல்லும் என்பதாகும். அரசாங்கம் வேண்டுமென்றே, அசான்ஜின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை சேதப்படுத்தும் வகையில், அவர் யாரையும் சந்திப்பதற்கும் அவர் வெளியுலகத்தை அணுகுவதற்கும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்ததுடன், ஆபத்தான கைதிகளை அடைத்து வைத்திருக்கும் ஒரு பிரிவில் ஒரு பத்திரிகையாளரான அவரை அடைத்து வைத்திருந்தது.
அசான்ஜை நாடு கடத்துவதற்கான தனது முடிவை பட்டேல் அறிவித்ததன் பின்னர் அவர் கொடூரமாக நடத்தப்படும் விதம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. அவரது உடல்நலம் குறித்தும் அவர் சுய-தீங்கு ஏற்படுத்திக் கொள்வதற்கான ஆபத்து குறித்தும் கவலைப்படுவதாகக் கூறி, பெல்மார்ஷ் சிறையில் அசான்ஜ் நிர்வாணமாக்கப்பட்டு ஒரு வெற்று அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். பின்னர் வார இறுதியில் அவரை சந்திக்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
2020 இல் நடைபெற்ற பிரதான விசாரணைகளின் போது, உளவியலாளர்கள் அசான்ஜின் மன ஆரோக்கியத்தின் சமரச நிலைக்கும் அவர் தற்கொலை முயற்சி செய்வதற்கான ஆபத்து குறித்தும் சாட்சியமளித்தமை, சித்திரவதை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சரும் மற்றும் அசான்ஜூக்கான பிரச்சாரக் குழு மருத்துவர்களும் அவர் மீதான உளவியல் சித்திரவதை குறித்து விடுத்த எச்சரிக்கைகளை உறுதிப்படுத்துகிறது. இந்த கூறுகள் ஒரு ஆரம்ப முடிவுக்கான அடிப்படையாக செயல்பட்டன, அவர் நாடு கடத்தப்படமாட்டார் என்ற அந்த முடிவு இப்போது தலைகீழாக மாற்றப்பட்டது, ஏனென்றால் அவ்வாறு செய்வது அசான்ஜை ‘அடக்குவதாக’ இருக்கும்.
நரம்பியல் மனநல பேராசிரியர் மைக்கேல் கோபல்மேன் செப்டம்பர் 2020 இல் நடந்த பூர்வாங்க ஒப்படைப்பு விசாரணையில், அசான்ஜ் ‘தற்கொலை செய்து கொள்வதற்கான மிக அதிக ஆபத்து’ இருப்பதாகவும், ‘அது ஒப்படைக்கப்படுவதற்கான உடனடி மற்றும்/அல்லது உண்மையான ஒப்படைப்பு முயற்சியைத் தூண்டும்’ எனவும் கூறினார். அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அசான்ஜ் தன்னிடம் ‘சமீபத்தில்’ கூறியதாக மோரிஸ் கடந்த மாதம் கூறினார்.
விக்கிலீக்ஸ் நிறுவனரின் 51வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், ஈக்வடார் தூதரகத்தில் அடைக்கலம் கோரி அவர் சிக்கியிருந்தாலும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், பிரிட்டனில் சில வகையான சிறைவாசத்தில் அவர் பத்தாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் வார இறுதியில் உலகம் முழுவதும் நிகழ்வுகள் நடந்தன.
ஆஸ்திரேலிய புலனாய்வு பத்திரிகையாளர் ஜோன் பில்ஜர் உட்பட நீண்டகால அசான்ஜ் ஆதரவாளர்கள் ஆதரவு செய்திகளை அனுப்பியுள்ளனர், அவர், “ஒரு தசாப்தத்திற்கு முன்னர் நான் ஜூலியனைச் சந்தித்ததிலிருந்து, இந்த வீர மனிதனை ஜனநாயக முகப்புகளுக்குப் பின்னால் தங்கள் தீவிரவாதத்தை மறைப்பவர்கள் பின்தொடர்ந்து துன்புறுத்தப்படுவதை நான் கண்டேன். அவர் அவர்களின் முகமூடியை அவிழ்த்தார், நாங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எனது நண்பரின் பிறந்தநாளில் நான் வாழ்த்துகிறேன்.” என்று ட்வீட் செய்திருந்தார்.
இத்தாலிய பத்திரிகையாளரும் அசான்ஜின் முன்னாள் சக பணியாளருமான ஸ்டெபானியா மவுரிசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், “நாளை ஜூலியன் அசான்ஜின் பிறந்தநாள். 2011 இல் அவர் தனது 40வது பிறந்தநாள் விழாவிற்கு என்னை அழைத்திருந்தார்: அப்போது அவர் வீட்டுக் காவலில் இருந்தார், பின்னர் 7 ஆண்டுகள் தூதரகத்தில் இருந்தார், இப்போது பெல்மார்ஷ் சிறையில் இருக்கிறார். எனது செய்தித்தாளுக்காக, நான் 2009 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸூடன் கூட்டு சேர்ந்துள்ளேன்: கடைசியாக 28 செப்டம்பர் 2010 இல் நான் அவரை ஒரு சுதந்திர மனிதனாக சந்தித்தேன்.”
Double Down News இற்கான அறிக்கையில், மோரிஸ் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்களை குற்றம் சாட்டினார்: “ஒவ்வொரு கட்டத்திலும், ஜூலியனை பலிக்கடா ஆக்குவதற்காக சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்தின் தற்போதைய நிலைப்பாடு என்னவென்றால், ஒரு செய்தி வெளியீட்டாளரை அவரைக் கொலை செய்ய சதி செய்த நாட்டிற்கு நாடு கடத்துவதாகும்.” மேலும் அவர், “இங்கிலாந்து அரசாங்கத்திற்கு எவ்வளவு தெரியும்? மைக் பொம்பியோவின் சிஐஏ வழிநடத்துதலின் கீழ் அமெரிக்க அரசாங்கம் வகுத்த திட்டங்களுடன் இங்கிலாந்து அரசாங்கம் எவ்வளவு தூரம் இணைந்து செல்லத் தயாராக இருந்தது? இவை இன்னும் விடை தெரியாத கேள்விகளாக உள்ளன” என்று தொடர்ந்து கூறினார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு, சோசலிச சமத்துவக் கட்சி (ஆஸ்திரேலியா), “பிரிட்டிஷ் நாடு கடத்தல் உத்தரவை எதிர்ப்போம்: ஜூலியன் அசான்ஜை விடுவிக்கப் போராடுவோம்!” என்ற தலைப்பில் ஒரு இணையவழி பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. அதாவது, “அசான்ஜ் மீதான துன்புறுத்தல் என்பது, இந்த போர்க் கொள்கைகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உள்ள பாரிய எதிர்ப்பின் மீதான தாக்குதலாகும். இது பரந்தளவிலான போலி குற்றச்சாட்டுக்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு ஒரு முன்னோடியாக உள்ளது. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பாரிய வேலைநிறுத்தங்கள் உட்பட தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சிக்கு எதிராக, சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புவதன் ஒரு பகுதியாக இது தொடரப்பட்டு வருகிறது” என்று SEP விளக்குகிறது.
மேலும், “இந்தக் கூட்டத்தில், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த சோசலிச சமத்துவக் கட்சியின் பேச்சாளர்கள் அசான்ஜின் சுதந்திரத்திற்கான தீவிர பிரச்சாரத்தின் அவசியத்தை கோடிட்டுக் காட்டுவார்கள். போருக்கு எதிரான போராட்டத்தைப் போலவே, அசான்ஜின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயக உரிமைகளை சார்ந்திருக்கும் ஒரே சமூக அடித்தளமான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது தேவைப்படுகிறது.” என்றும் SEP கூறியது.
மேலும் படிக்க
- ஜூலியன் அசான்ஜ் நாடுகடத்தலையும் அரசு கொலையையும் எதிர்கொள்ளும் அதேவேளை, அவர் அம்பலப்படுத்திய போர்க்குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிகின்றனர்
- ஆஸ்திரேலிய அரசாங்கம் துன்புறுத்தப்பட்ட ஊடகவியலாளரைப் பாதுகாக்க மறுப்பதால், அசான்ஜை நாடு கடத்தும் உத்தரவுக்கு உலகளாவிய கண்டனங்கள் விடுக்கப்படுகின்றன
- ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை செயலர் பட்டேல் ஒப்புதல் அளித்துள்ளார்